சமீபத்திய பதிவுகள்

மதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு வழியனுப்பு விழா கோலாகலம்

>> Sunday, March 30, 2008

இந்து மதத்தில் சாதிப்பாகுபாடு இருக்கிறது .சரி! .கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு மட்டும் என்ன வாழுதாம் ? அங்கேயும் தானே சாதி பாகுபாடு இருக்கிறது .அங்கேயும் சில இடங்களில் தலித் கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றரே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது .இதற்கு பதில் சொல்லும் சில கத்தோல்லிக்கர்கள் ,இது கத்தோலிக்க மதத்தால் கொள்கை அடிப்படையில் ,கோட்பாடு படி அங்கீகரிக்கப்படவில்லை .திருச்சபை இதை ஒரு போதும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க முடியாது .ஆனால் பன்னெடுங்காலமாக சாதி அமைப்பில் ஊறியவர்கள் கத்தோலிக்கரான பின்னரும் சாதி வேறுபாட்டை நடைமுறையில் கடைபிடிக்கின்றனர் .இது கத்தோலிக்க மதத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல .ஆனால் அதை பின்பற்றுபவர்களின் கோளாறு என்று வாதிடுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை கத்தோலிக்க மதம் வழிபாடுகளில் ,பங்கு நடைமுறைகளில் சாதிப்பாகுபாட்டை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க மறுப்பது மட்டுமல்ல ,அந்த விதிமுறை நடைமுறையில் மீறபடும் போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் திருச்சபைக்கு உள்ளது .எங்கள் சட்டதிட்டங்களில் சாதி பாகுபாடு கிடையாது ,அந்தந்த பகுதியிலுள்ள மக்களின் சில தவறான நடைமுறைகளும் பின்பற்றுதலுமே இதற்கு காரணம் என்று சொல்லி திருச்சபை தப்பித்துக் கொள்ள முடியாது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

விழுப்புரம் மாவட்டம் இறையூர் கிராமத்தில் ஒரே பங்கில் உறுப்பினர்களாக இருக்கும் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் ,தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழிபாடு மற்றும் சில நடைமுறைகளில் பாகுபாடு பல காலமாக இருந்து வந்திருக்கிறது . தலித் கிறிஸ்தவர்கள் இறந்தால் அவர்கள் சவ ஊர்வலம் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாது .சடலத்தை சுமந்து வரும் வண்டி சமமாக உபயோகப்படுத்தப்படவில்லை .இத்தகைய சாதி வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவது இத்தகைய சூழலில் வளராத என்போன்றவர்க்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது . கிறிஸ்தவர்களிடையே சாதிப்பாகுபாடு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை .நான் வளர்ந்த சூழலில் திருமணம் போன்றவற்றில் சாதி இன்னும் இருக்கிறது , சாதி சார்ந்த உள்ளடி வேலைகள், அரசியல் இருகிறது என்றாலும் ,அதை இவ்வளவு வெளிப்படையாக வழிபாட்டு முறைகளிலும் ,நடமுறையிலும் கடைபிடிப்பதை பார்த்ததில்லை . ஆனால் சில இடங்களில் தலித்களுக்கு தனிக்கல்லறைகள் இருப்பதாகவும் ,வெளிப்படையாகவே கோவில்களில் சமத்துவமின்மை கடைபிடிக்கப்படுவதாகவும் வரும் செய்திகள் மிகவும் அவமானத்துக்குரியவை ..கத்தோலிக்க மதம் எந்த காரணத்தைக்கொண்டும் இத்தகைய நடைமுறைகளை தொடர்வதற்கு அங்கீகரிப்பதோ ,அல்லது கண்டுகொள்ளாதிருப்பதோ மிகவும் கண்டிக்கத்தக்கது .

எறையூரைப் பொறுத்தவரை பெரும்பான்மை வன்னியர்கள் தங்கள் பங்கிலுள்ள தலித்துக்களை ஆலய விஷயங்களிலும் சமமாக நடத்த விருப்பவில்லை என்பது கண்கூடு .தாங்கள் சாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த தலித்துக்கள் தனியாக ஒரு கோவிலை கட்டி எழுப்பி அதற்கு மறைமாவட்ட அங்கீகாரத்தை கோரியிருக்கிறார்கள் .தங்களுக்கு தனியாக ஒரு பங்குத்தளத்தை உருவாக்கி தருமாறு கோரியிருக்கிறார்கள் .மறை மாவட்டம் இது வரை அதனை அங்கீகரிக்கவில்லை ..அங்குள்ள வன்னிய கிறிஸ்தவர்களும் அதை எதிர்த்திருக்கிறார்கள். அது இப்போது பூதாகரமான பிரச்சனையாக வெடித்து ,கலவரம் துப்பாக்கிச்சூட்டில் போய் முடிந்திருக்கிறது.

இப்போது மறைமாவட்ட ஆயர் இது குறித்து விடுத்த அறிவிப்பில் தனிப்பங்கு அவசியமில்லை எனவும் ,தொடர்ந்து ஒரே பங்காக செயல்பட வேண்டுமெனவும் ,வழிபாடுகளில் ,கோவில் நடைமுறைகளில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது எனவும் ,தலித்துகளுக்கு சம உரிமை உண்டு எனவும் அறிவித்திருக்கிறார்.

அதன் பின்னர் தலித் ஒருவர் இறந்து போக அவர் ஆயரின் அறிவிப்பின் அடிப்படையில் வன்னியர்கள் பயன்படுத்தும் சவ வண்டியில் உடலை வைத்து பொது வழியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது . அதையும் வன்னியர்கள் சிலர் எதிர்த்திருக்கிறார்கள் .எனவே காவல் துறையின் துணையுடன் இது நடந்திருக்கிறது .இதன் பின்னர் வன்னியர் ஒருவர் இறந்து போக ,தலித்துக்கள் பயன் படுத்தியது என்ற காரணத்திற்காக அந்த சவ வண்டியை உபயோகிக்காமல் தாங்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள் .

இப்போது இதை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது ? வன்னியர்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறார்கள் .இதற்கு திருச்சபையும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் .இதைவிட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது . சரி! சம உரிமை கிடைக்காத தலித்துக்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயத்தை அமைத்து எங்களை பிரித்து விட்டு விடுங்கள் என கோருகிறார்கள் ..அதையும் வன்னியர்கள் விரும்பவில்லை . தங்கள் சாதி ஆதிக்கத்தை தொடர முடியாது என்பது காரணமாக இருக்கலாம் ..ஆனால் தலித்துக்களின் அந்த கோரிக்கையை மறைமாவட்டம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ? அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டியது தானே ? என்ற கேள்வி எழலாம் .என்னைப் பொறுத்தவரை ஒரு பங்கின் மக்கள் தொகை அதிகரிப்பால் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கலாமே தவிர ,சாதி அடிப்படையில் ,அதுவும் ஆதிக்க சாதித் திமிருக்கு பயந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பயந்து தனியாக செல்ல வேண்டும் என்று திருச்சபை தீர்ப்பு வழங்க கூடாது .மாறாக எந்த காரணத்தைக்கொண்டும் சாதிப்பாகுபாட்டை அங்கீரரிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல , கோவிலில் ,வழிபாட்டு முறைகளில் சாதிப் பாகுப்பாகுபாடில்லாத சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டியது மறைமாவட்டத்தின் கடமை .கொள்கை அடிப்படையில் மறைமாவட்டம் அதைத் தான் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விடயம் . ஆனால் நடைமுறையில் அதனை அமல் படுத்த மறைமாவட்ட நிர்வாகம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கப் போகிறது என்பதில் தான் அதன் யோக்கியதை தெரிய வரும் .

தொடக்கத்தில் தலித்துக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை மறைமாவட்டம் கண்டுகொள்ளவில்லை என்று அதிருப்தி காட்டினார்கள் .ஆனால் மறைமாவட்டத்தின் இந்த அறிவிப்புக்கு பின்னர் வன்னியர்கள் கோபமடைந்து தாங்கள் மதம் மாறப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் . சன் தொலைக்காட்சியில் இது குறித்து பேசிய ஒரு வன்னியர் சமத்துவம் என்ற பெயரில் காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வரும் நடைமுறைகளை எங்களை மாற்ற சொல்லுவது சரியல்ல .. நாங்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் தான் .எனவே நாங்கள் அந்த மதத்துக்கே போகிறோம் என்று குறிப்பிட்டார் .

காலம் காலமாக கடைபிடித்து வருவதை மாற்ற விருப்பாவிட்டால் இந்த ஆள் இந்து மதத்திலிருந்து ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு வர வேண்டும் ? அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே ? சரி! இப்போது காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வந்த ஏற்றத் தாழ்வையும் , சாதி ஆதிக்கத்தையும் இப்போது கட்டிக்காக்க கிறிஸ்தவ மதம் அனுமதிக்கவில்லையாம் .அதனால் அத்தகைய சுதந்திரத்தை வழங்கக்கூடிய இடத்துக்கு அவர்கள் போகிறார்களாம் .. என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ! தயவு செய்து போய் தொலையுங்கள் ஐயா ! உன்னை மாதிரி சாதி வெறிபிடித்தவர்கள் ,மதத்தின் பெயரால் சக கிறிஸ்துவனை சமமாக மதிக்க தெரியாதவனெல்லாம் கிறிஸ்தவ மதத்தை விட்டு போவது தான் உண்மையான சமதர்மத்தை விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்பதை உன்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ..உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கும் மதமாற்ற முடிவுக்கும் மனமார்ந்த நன்றி!

தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது .. நடைமுறை ஓட்டைகளையும் ,அந்தந்த பகுதியில் உள்ள சாதி ஆதிக்கத்தையும் சாக்காக வைத்து ஆலயங்களில் வெளிப்படையாக சாதிப் பாகுபாடு பார்க்கும் கிறிஸ்தவர்களுக்கெதிராக உறுதியான கொள்கையை அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு மறைமாவட்டம் தள்ளப்பட்டிருக்கிறது .ஆலய நடைமுறைகளில் சாதிப் பாகுபாடு பார்ப்பவர் பாதிரியராக இருந்தாலும் அவர்கள் கத்தோலிக்க மதத்தில் நீடிக்க தகுதியில்லாதவர்கள் . அத்தகைய உறுதிப்பாட்டை மறைமாவட்ட நிர்வாகங்களும் ஆயர்களும் மறு உறுதிப்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் .தவறினால் ஆயராய் இருந்தாலும் சரி ..தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ளும் தார்மீகத் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்பதே உண்மை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்க முடியும் .

"ஒரு உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது " என்ற பைபிள் வாசகப்படி ,சாதி மேலாண்மையை விரும்புபவர்கள் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியேறுவதே கத்தோலிக்க மதத்துக்கு நல்லதாக இருக்கும் .
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP