சமீபத்திய பதிவுகள்

"பந்த" பத்ரானந்தாவின் துப்பாக்கி ரவுசு!-கேரளாவில் பிடிபட்ட இன்னொரு சாமியார்

>> Tuesday, May 27, 2008

கேரளாவில் இது போலிச்சாமியார்களின் சீஸன் போலிருக்கிறது! கஞ்சா, கள்ளக்கடத்தல், கற்பழிப்பு... என சகல `கலை'களிலும் கரைகண்ட சந்தோஷ்மாதவன் என்கிற சாமியாரைத் தூக்கி `உள்ளே' போட்டுவிட்டு போலீஸ் நிமிர்வதற்குள், இதோ அடுத்த சாமியார் என்ட்ரி ஆகி யிருக்கிறார்.

சந்தோஷ்மாதவன் ஆசிரமம் அமைத்து அருள்(!) பாலித்த கொச்சியிலி ருந்து கூப்பிடு தொலைவிலுள்ள ஆலுவா என்ற இடம்தான் நம் புதிய சாமியாரின் ஸ்தலம். இவரது இயற்பெயர் பத்ரன். ஆனால் `பந்தா' பத்ரானந்தா.. என்று சொன்னால்தான் அந்த ஏரியாவாசிகளுக்கே இவரைத் தெரியுமாம். ஆள் காவி உடையில் இருந்தாலும் கையில் விலை உயர்ந்த செல்போனும், இடுப்பில் துப்பாக்கியும் (பிஸ்டல்) வைத்திருப்பார் இவர். தவிர, வீட்டை விட்டு வெளியே போனாலே இவரது காரில் சுழல்விளக்கு சுழன்றுகொண்டேயிருக்கும். ஐகோர்ட் நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தும் சுழல்விளக்கை இவர் பயன்படுத்துவது பற்றி எப்போதாவது போலீஸார் வழிமறித்துக் கேட்டால், `எனக்கு முதல் அமைச்சரைத் தெரியும்: போலீஸ் துறை அமைச்சரே என் ஃப்ரெண்ட்தான். புரமோஷன் வேணுமின்னா வாங்கித் தர்றேன்' என்கிற ரீதியில் கதைவிட்டு எஸ்கேப்பாகிவிடுவாராம் பத்ரானந்தா.

அண்மையில் சந்தோஷ்மாதவன் விவகாரம் கேரளாவில் பரபரப்பானதும், அவரைப் போன்ற போலிச்சாமியார்களின் அட்டகாசம் பற்றி `மங்களம்' என்கிற மலையாள நாளிதழ் குறுந்தொடர் வெளியிட்டது. அதில் பத்ரானந்தாவின் பராக்கிரமங்களையும் அந்த நாளிதழ் பிட்டுப் பிட்டு வைத் தது. இது பத்ரானந்தாவை ஆவேசப்படுத்திவிட்டது. செய்தி வெளியான உடனேயே ஆலுவாவிலுள்ள `மங்களம்' பத்திரிகை அலுவலகத்துக்கு தனி ஆளாகவே படையெடுத்த பத்ரானந்தா, காது கேட்கக் கூசும் வார்த்தைக ளால் அங்கு நின்று பத்திரிகை நிர்வாகிகளைத் திட்டியிருக்கிறார். அவர்கள் விஷயத்தை போலீஸுக்குச் சொல்லவும், `காக்கி'கள் வந்து `காவி'யை வளைத்துக்கொண்டு போயிருக்கின்றனர்.

அப்போது சாதாரண இரு செக்ஷன்களில் வழக்குப்பதிவு செய்துவிட்டு, பத்ரானந்தாவை அவரது சொந்த ஜாமீனிலேயே வெளியே விட்டிருக்கிறது போலீஸ். எனினும் மறுநாள் இந்த விவகாரம் எல்லா மலையாளப் பத்திரி கைகளிலும் செய்தியாகிவிட்டது. ஒரு பத்திரிகையில் செய்தி வெளி யானபோதே எகிறிக் குதித்த பத்ரானந்தா... எல்லா பத்திரிகைகளும் அவரைத் தோலுரித்தால் பொறுப்பாரா?!. அதனால் அவர் நடத்திய பரபரப்பான துப்பாக்கி ரவுசுதான் அடுத்த கட்டம்.

இதுபற்றிய விவரங்களை ஆலுவாவிலுள்ள பத்திரிகைத்துறை நண்பர் ஒருவரையே நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "கடந்த பதினேழாம் தேதி அதிகாலையில் பத்ரானந்தாவிடம் இருந்து எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன். அப்போது ஏதோ வெறி பிடித்தவர் போல கத்திப் பேசிய பத்ரானந்தா, `என் நற்பெயரை(!)யெல்லாம் நீங்கள் கெடுத் துவிட்டீர்கள். உங்களால் இப்போதே நான் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகப்போகிறேன். இங்கு வந்து நீங்கள் என் பிணத்தைத் தின்னுங்கள்' என்றார், படு ஆக்ரோஷமாக.

உடனே இந்தத் தகவலை ஆலுவா போலீஸ் டி.எஸ்.பி. உன்னிராஜுக்குத் தெரிவித்துவிட்டு, நாங்களும் ஸ்பாட்டை நோக்கிப் போனோம். ஆனால் அதற்குள் போலீஸ் படை அவரை ஆலுவா மத்திய போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தது. அங்கு நாங்கள் கண்ட காட்சியை எங்களாலேயே நம்ப முடியவில்லை. ஏதோ போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் போல கால்மேல் கால் போட்டுக்கொண்டு, தனது துப்பாக்கியைத் தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தார் பத்ரானந்தா. அதாவது பத்ரானந்தாவைப் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்த பிறகும்கூட அவர் கையில் இருந்த துப்பாக்கியை போலீஸ் பறிக்கவில்லை. அதோடு போலீஸ்நிலையத் திலேயே தனது செல்போனுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தார் பத்ரானந்தா.

இந்தக் கட்டத்தில் மொத்தமாக பத்திரிகையாளர்கள் அங்கே போனதும், மறுபடியும் பத்ரானந்தாவுக்குக் கோபம் தலைக்கேறியது. ` என்னைச் சாகவும் விடாமல் சுத்தித் சுத்தி வருகிறீர்களே!' என்றபடி ஆவேசமாக துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு எங்களைச் சுட வந்தார். கணநேரத்தில் சுதாரித்துக்கொண்ட ஆலுவா இன்ஸ்பெக்டர் பாபுகுமார் தனது கையில் வைத்திருந்த லத்திக்கம்பால் துப்பாக்கியைத் தட்டிவிட்டார். எனினும் அதற்குள் ஒரு குண்டு துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்து, `மாத்திமம்' பத்திரிகை நிருபரான பேபியின் தலைக்கு வெகு அருகாமையில் பறந்து சென்றது. அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் அந்த நிருபர். அந்த சமயத்தில் பத்ரானந்தாவின் டி65 வகையிலான அந்தத் துப்பாக்கியில் மொத்தம் ஆறு குண்டுகள் இருந்திருக்கின்றன.ஒருவேளை இன்ஸ்பெக்டர் இரு வினாடி தாமதித்திருந்தாலும் நான்கைந்து நிருபர்களைப் போட்டுத் தள்ளியிருப்பார் பத்ரானந்தா'' என பீதி விலகாம லேயே அந்தச் சம்பவத்தை விவரித்தார் அவர்.

முறைகேடாக துப்பாக்கியைப் பயன்படுத்தியது, பத்திரிகையாளரைக் கொல்ல முயன்றது... உள்பட பல செக்ஷன்களில் பத்ரானந்தா மீது தற்போது வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீஸார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அடுத்தடுத்து இரு சாமியார்கள் பிடிபட்டிருப்பதும், இருவருமே போலீஸ்துறையில் செல்வாக்குப் பெற்றுத் திரிந்திருப்பதும் தெரியவந்து மொத்த கேரளாவுமே அதிர்ந்துபோய்க் கிடக்கிறது.

இதுபற்றி, கேரள இடது முன்னணி அரசின் முதல்வர் அச்சுதானந்தனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, `பத்ரானந்தா நடந்துகொண்ட விதம் போலீஸுக்கு விடப்பட்ட சவாலாகத்தான் இருக்கிறது. போலீஸ் துறை மட்டுமல்லாது, அரசும் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இது. இந்த சாமியார்களின் பின்னணியை நிச்சயமாக விசாரித்து வெட்ட வெளிச்சமாக்குவோம். போலீஸ் துறையிலுள்ள சிலர் இவர்களுக்குத் துணை போனாலும், அது ஒட்டுமொத்த போலீஸாரின் அந்தஸ்தையுமே பாதிப்பதாகிவிடும்'' என, போலீஸுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியிலேயே பேசியிருக்கிறார் அச்சுதானந்தன். நிலைமை மாறுகிறதா? பார்ப்போம்! ஸீ

ஸீ
ச. செல்வராஜ்



நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP