சமீபத்திய பதிவுகள்

எரிகிறது ஜம்மு-காஷ்மீர்!--------அமர்நாத் விவகாரத்தின் நிஜப்பின்னணி

>> Saturday, August 23, 2008

 
 21.08.08  ஹாட் டாபிக்

ரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுக்க. அதுவும் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு. மாநிலம் தழுவிய அளவில் கலவரம் வெடித்துக் கொண்டிருக்கிறது. 

எங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள். போராட்டங்கள். உண்ணாவிரதங்கள். இத்யாதி இத்யாதிகள். ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒருமாத காலமாக விடாமல் வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குக் காரணம் இரண்டு வார்த்தைகள். அவை, நிலம் மற்றும் மதம்.

அரசுக்குச் சொந்தமான வனப்பகுதியில் இருந்து சிறுபகுதியை எடுத்து அங்குள்ள கோயிலுக்கு வருகின்ற பக்தர்களும் பயணிகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக `ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட்' என்ற அமைப்புக்கு தாற்காலிகமாகக் குத்தகைக்கு வழங்கியது மாநில அரசு. கொடுத்தது குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதற்கு அங்கு பெரும்பான்மையாக வசித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்க, இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இந்தக் கூத்தில் மாநிலத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டது. தற்போது அங்கே ஆளுநர் ஆட்சி அமலில் இருக்கிறது. பிரச்னை வெடித்தபிறகு பழைய ஆளுநர் மாற்றப்பட்டு, தற்போது புதிய ஆளுநர் அதிகாரத்தில் இருக்கிறார். தொடர்ச்சியான மோதல்களில் இதுவரை பதின்மூன்று உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருநூறுக்கும் மேற்பட்டோர் அடிபட்டு, உதைபட்டு மருத்துவமனைகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஒரு மாநில அரசு, ஒரு மாநில ஆளுநர் மற்றும் பதின்மூன்று உயிர்களைக் காவு வாங்கும் அளவுக்கு ஜம்மு-காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

இஸ்லாமியர்களுக்கு மெக்கா எத்தனை புனிதமான தலமோ, அதைப்போலவே இந்துக்களுக்கு அமர்நாத். அங்கிருக்கும் பனி லிங்கத்தை ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் செய்வது இந்துக்களின் நடைமுறை. அதுவும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாத்திரமே இந்தப் பனி லிங்கம் காணக் கிடைக்கும். முன்பெல்லாம் ஆகஸ்ட் மாதம் மட்டுமே லிங்கத்தைத் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், லிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வருடா வருடம் ஏறுமுகத்திலேயே இருந்ததால், சமீபகாலமாக பார்வைக்கான கால அளவு ஒரு மாதம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது.

வெறும் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் என்ற அளவில் இருந்த பக்தர்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது லட்சங்களைத் தொட்டுவிட்டது. ஆனால், அவர்களுக்கான வசதிகள் எதுவும் அத்தனை போதுமானதாக இல்லை. குறிப்பாக, தங்கும் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் போன்றவை. போதாக்குறைக்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் வேறு. எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்ற நிலை. இத்தனை பிரச்னைகள் இருந்தபோதும் அமர்நாத்துக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை துளியும் குறையவில்லை.

இந்நிலையில், அமர்நாத் ஆலயத்தை நிர்வகித்துவரும் ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட் நிர்வாகம், மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தது. `ஆலயத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள வனப்பகுதியிலிருந்து கொஞ்சம் இடம் கொடுத்தால் வசதியாக இருக்கும்'. தலையசைத்த மாநில அரசு ஆகவேண்டிய காரியங்களைச் செய்தது.

இறுதியாக, கடந்த மே 26, 2008 அன்று நூறு ஏக்கர் நிலம் அமர்நாத் ஷ்ரைன் போர்டுக்கு வழங்கப்பட்டது.

அவ்வளவுதான். வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டனர் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள். அரசுக்கு எதிராக ஆளாளுக்குக் கூச்சல் போடத் தொடங்கினர். `எங்கள் நிலத்தை எடுத்து எதிரிக்குக் கொடுப்பதா?' என்று ஒருவர் கேட்டார். இன்னொருவர், `நிலத்தைக் கொடுத்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்' என்று பயமுறுத்தினார். முக்கிய எதிர்க்கட்சிகளான ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன நிலத்தைக் கொடுத்ததற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.

நிலத்தை விட்டுக்கொடுத்ததன்மூலம் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சிக்கே ஆபத்து நேர்ந்துவிட்டதாக பிரிவினை பேசும் இயக்கங்கள் உரத்த குரலில் உறுமத் தொடங்கின.

மேலும் இந்துக்களைக் கொண்டுவந்து ஜம்மு-காஷ்மீரில் குடியேற்றம் செய்யும் நடவடிக்கைக்கான முதல்படியே இந்த நில ஒதுக்கீடு என்ற கருத்தையும் சில அமைப்புகள் முன்வைத்தன. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அசுத்தப்படுத்திவிடுவார்கள் என்றும் அச்சம் தெரிவித்தனர்.

எதிர்ப்பு ஜோதியில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியாக இருந்த மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்தது. இத்தனைக்கும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான் மாநில துணை முதல்வர். `நிலத்தைத் திரும்பப் பெறு, இல்லையென்றால் அரசுக்கான ஆதரவு திரும்பப் பெறப்படும்' என்றார் மெஹ்பூபா. அரசின் பதிலை எதிர்பார்க்காமல் ஆதரவை வாபஸ் வாங்கினார். அரசுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போக, நிலைமையைச் சமாளிக்க நிலத்தைத் திரும்பப் பெற்றது ஆசாத் அரசு. ஆனாலும் அரசுக்கு மீண்டும் ஆதரவளிக்க முடியாது என்று மெஹ்பூபா அறிவித்ததால், பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் குலாம் நபி ஆசாத்.

இந்நிலையில், ஹூரியத் போன்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமர்நாத்துக்கு வந்த பக்தர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பா.ஜ.க. மற்றும் வி.ஹெச்.பி தொண்டர்கள் இஸ்லாமியர்களைத் தாக்கத் தொடங்கினர். சாதாரண மோதல் மெல்ல மெல்லக் கலவரமாக உருமாறியது. அடக்கப் பாய்ந்த காவல்துறை துப்பாக்கியைத் தூக்க, ஆறு பேர் பலியாகினர். எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆசாத் பதவி விலகியதையடுத்து, மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால்  நிலம் கொடுத்ததற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த மாநில ஆளுநர் எஸ்.கே. சின்ஹாவை உடனடியாக மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தலையசைத்த மத்திய அரசு, சின்ஹாவின் இடத்துக்கு என்.என். வோரா என்பவரைக் கொண்டுவந்தது.

இத்தனை அரசியல் மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தபோதும் போராட்டங்கள் நின்றபாடில்லை. ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு வன்முறை, போராட்டம், தீவைப்பு எல்லாமே வரிசைக்கிரமமாக நடந்துகொண்டே இருந்தன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது மத்திய அரசு. அதற்குள் நிலத்தை வாபஸ் பெற்றது தவறு என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடன் ஷ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பாரதிய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள், பார் கவுன்சில் உள்ளிட்ட இருபத்தெட்டு சமுதாய மற்றும் அரசியல் இயக்கங்கள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டன. 

உருவான வேகத்திலேயே நிலத்தைத் திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மறியலுக்கு அழைப்பு விடுத்தது இந்த சமிதி அமைப்பு. இதனால் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இந்து அமைப்புகளுக்கும்  இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தபோது ஒரு ஹூரியத் தலைவர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக, மேலும் மூன்று பேர் கலவரத்தில் உயிரிழந்தனர். நாட்கள் கடந்துகொண்டே போனாலும்கூட போராட்டத்தின் வீரியம் மட்டும் சிறிதும் குறையவில்லை. இதுவரை பதின்மூன்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்கிறது. நிற்க. 

குடியிருப்புப் பகுதிகளை அமைப்பதற்காகவோ அல்லது புதிய நகரை நிர்மாணிப்பதற்காகவோ நிலம் தரப்பட்டிருந்தால் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால் ஆலய நிர்வாகக் குழுவுக்குத் தரப்பட்ட அரசு நிலத்தில் செய்யப்படும் வசதிகள் அனைத்தும் நிரந்தரமாக அந்த இடத்திலேயே இருக்கப்போவதில்லை. தாற்காலிகப் பயன்பாடு என்பதால் எளிதில் அகற்றப்படும் வகையிலேயே அமைக்கப்படும். பயன்பாடு முடிந்ததும் பிரித்தெடுக்கப் பட்டுவிடும். ஆகவே, இதில் அச்சம் கொள்வது அவசியமற்றது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம் என்ற தனி அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கென்று தனி சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அவர்களுடைய புனிதத் தலமான மெக்காவுக்குச் செல்வதற்கு இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்தியா முழுக்க சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இத்தனை உரிமைகளை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமியர்கள் அங்கு வருகின்ற இந்துக்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய குறைந்தபட்ச உரிமைகளுக்குக்கூட முட்டுக்கட்டை போடுவது ஏன்?

நிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் நோக்கம் கீழ்க்காணும் இரண்டில் ஒன்றாக இருக்கலாம் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.

1. இந்துக்கள் தங்கள் பிராந்தியத்துக்குள் நுழையக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

2. இந்துக்களின் மதவழிபாடு எதுவும் தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் நடத்தப்படக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

அப்படிப்பட்ட எந்த எண்ணமும் தங்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஜம்மு_காஷ்மீர் வாழ் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது. அதேபோல, துப்பாக்கிப் பிரயோகமும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் அதிகம் இருக்கும் பிராந்தியத்துக்கு வந்து ஆலய தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் சரிவர நிறைவேற்றுவதற்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நிலைமையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது எப்படி என்றுதான் அரசு யோசிக்க வேண்டுமே ஒழிய, மிரட்டல்களுக்கு அடிபணிந்து, கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெறுவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

தற்போது அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வேறு போராட்டத்தில் குதித்துள்ளனர். விரைவில் கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கும் விதமாக இஸ்லாமிய மாணவர்கள் களத்தில் இறங்கக்கூடும். ஏற்கெனவே ஜிலீர் பிரதேசம் வேறு. போராட்ட நெருப்பை அணைப்பது அத்தனை சுலபமில்லை.

இறுதியாக ஒரு விஷயம். ஜம்மு_காஷ்மீரில் தற்போது வீறுகொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மத யானைகளை அடக்க அரசுக்குத் தேவை ஆயுதங்கள் அல்ல, அங்குசங்கள்!               ஸீ

ஸீ ஆர். முத்துக்குமார்

source:http://www.kumudam.com

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP