சமீபத்திய பதிவுகள்

ரோஜர் பேகன்: மதக் கூடத்தில் ஒரு மதி ஒளி

>> Thursday, October 9, 2008

புகழ்பெற்ற மனிதர்கள்-3 - ரோஜர் பேகன்:
மதக் கூடத்தில் ஒரு மதி ஒளி - கு.வெ.கி. ஆசான்

 

இங்கிலாந்து வரலாற்றில் புகழ்பெற்ற இருவரின் பெயர்கள் பேகன் (Bacon) என முடிகின்றன. ஒருவர் ரோஜர் பேகன்; வரலாற்றின் இடைக்காலத்தில் வாழ்ந்தவர். இரண்டாமவர், சர்.ஃபிரான்சிஸ் பேகன்; நவீன வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந் தவர். இருவருமே அறிவியல் வளர்ச்சிக்குத் தொடக்கம் செய்த வித்தகர்கள் ஆவர்.

படிப்பு - பணி

இங்கிலாந்தில் சோமர்செட் எனும் பகுதியில் இல்செஸ்டர் எனும் இடத்தில் 1214 இல் பிறந்தவர், ரோஜர் பேகன். இவருடைய பெற்றோர்கள் வசதியாக வாழ்ந்தார்கள். ஆனால், இங்கிலாந்து மன்னன் மூன்றாம் ஹென்றியின் காலத்தில் அக்குடும்பத்தின் சொத்துகள் குலைக்கப்பட்டன; பலர் வெளிநாடுகளில் குடியேறினர்.

தமது 13ஆவது வயதில் ரோஜர் பேகன் (Roger Bacon) மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்ற அவர், அங்கு ஆசிரியர் பணியை ஏற்றார். பின்பு, பாரிஸ் பல்கலைக் கழகத்தில் 1237 முதல் 1245 வரை ஆசிரியராக இருந்தார். அதற்குப் பின்பு பத்து ஆண்டுக் காலம் அவர் செய்த வேலையைக் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை.

சந்நியாசி

படிப்பது, பரிசோதனைகள் செய்வது, எழுதுவது ஆகியவற்றில் ரோஜர் பேகனுக்கு இயல்பான ஈடுபட்டிருந்தது. அந்தக் காலத் தில், அவர் வாழ்ந்த 13 ஆம் நூற்றாண்டில், படிக்கவும், எழுதவும் சாதகமான இடம் துறவிகள் வாழ்ந்த மடாலயங்கள் ஆகும். அதன் காரணமாகவோ, என்னவோ ரோஜர் பேகன் 1256 ஆம் ஆண்டு வாக்கில், கிறிஸ்தவ மதத்தில் உள்ள, ஃபிரான்சிஸ்கான் பிரிவைச் சேர்ந்த சந்நியாசி (Franciscan monk or friar) ஆனார்.

வித்தியாசமானவர்

அதே நேரத்தில் மற்ற சந்நியாசிகளைப் போல் அல்லாமல் ரோஜர் பேகன் வித்தியாசமாக நடந்து கொண்டார். பழைய நூல்களைப் படித்து, அவற்றை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வில்லை; பழைய முறையி லேயே சிந்திக்கவில்லை. நடைமுறை வாழ்வுக்கு அவை ஒத்துப்போகின்றனவா எனச் சிந்தித்தார். புதிய பரிசோதனைகள் செய்தார். ஒரு முறை வெடிமருந்துப் பரிசோதனை ஒன்றில், கிட்டத்தட்ட இவர் உயிருக்கே ஆபத்து நிகழ இருந்தது. இதை எல்லாம் கண்ட பிற துறவிகள், இவர் மதக் கொள்கைகளையும், துறவிகளுக்கான கட்டுப்பாட்டையும், மடங் களின் விதிகளையும் மீறுவதாகக் குற்றம் சுமத்தினார்கள். ஆகையால், இவர் நூல்களை எழுதக்கூடாது எனத் தடை விதித்தார்கள்.

இன்னல்கள் பல

தடையை நீக்கக் கோரி, ரோஜர் பேகன், போப் நாலாவது கிளிமண்ட் என்பவருக்கு வேண்டுகோள் விடுத்தார். மத இயலுக்குள் (theology), மெய் இயலின் (philosophy) இடம் எத்தகையது என்பது குறித்து விளக்கம் தருமாறு போப் பணித்தார். இவரும் அவ்வாறே செய்தார். ஆனால், போப் கிளிமண்ட் 1268 இல் மறைந்தார். இவருக்கு இருந்த பாதகமான சூழல் நீங்கவில்லை. நீண்ட காலம் தனிமையில் வைக்கப்பட்டார், பட்டினிக்கு ஆளானார், வன்முறைக்கு இலக்கானார், பிறருடன் இயல்பாகத் தொடர்புகொள்ள வழியில்லை, இவரைச் சுற்றிக் காவல் இருந்தவர்கள், இவர் எழுதியவற்றை வெளியாருக்குத் தெரிய விடவில்லை.

பரிசோதனை

முன்னோர் எழுதியவற்றை அடிப்படை உண்மைகளாக எடுத்துக்கொண்டு, அவற்றின் வழி சிந்திப்பதும், வாதிடுவதும் அவர் காலத்தில் இருந்த படிப்பாளிகளின் போக்கு ஆகும். இந்த முறைக்கு மாறாக, உற்று நோக்கியும், பரிசோ தனைகளைச் செய்தும் உண்மைகளை அறிய வேண்டும் என ரோஜர் பேகன் வலியுறுத்தினார்.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நியூட்டன், ஒளிக்கற்றையைப் பட்டகத்தின் (prism) வழியே செலுத்தி நிறப் பிரிகையை (வண்ணச் சிதறலை) ஏற்படுத்தினார்; மற்றொரு பட்டகத் தின் வழியே அவற்றைச் செலுத்தி மீண்டும் வெண்மையான ஒளிக்கற்றையை வரச் செய்தார். இதே பரிசோதனையை, நியுட் டனுக்குச் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, நீர் நிரம்பிய கண்ணாடி டம்ளரைக் கொண்டு, ரோஜர் பேகன் செய்து காட்டினார்.

எழுத்துகள் தெரிவித்தன

பல மொழிகளைத் தெரிந்திருந்த ரோஜர் பேகன், விவிலியத்தையும், பிற நூல்களையும் அவற்றின் மூலமொழியில் படித்தார். தவறான மொழிபெயர்ப்புகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டினார். அவர் எழுதிய நூல்களில் ஒபஸ் மேஜஸ் (opus majus), ஒபஸ் மைனஸ் (opus minus), என்பவை குறிப்பிடத்தக்கவை. இவருடைய எழுத்துகள், பிற்காலக் கண்டு பிடிப்புகளை முன்கூட்டியே சொல் கின்றன : கப்பல்களைத் துடுப்புகளைக் கொண்டு உந்தாமல், எந்திரங்களைக் கொண்டு செலுத் தலாம்; பெரிய கப்பல்களை ஒரே மனிதன் வேகமாகச் செலுத்த முடியும். எந்த விலங் கையும் பூட்டி ஓட்டாமல் தானாக ஓடும் வண்டி களைச் செய்ய முடியும், அவற்றில் நிறையப் பேரை ஏற்றிச் செல்ல இயலும். அவை மிக வேகத்தில் ஓடும். பறக்கும் எந்திரங்களைச் செய்யலாம், மையத்தில் ஒருவர் அமர்ந்து கொண்டு, செயற்கை இறக்கைகளை இயக்கிப் பறந்து செல்லலாம், என எழுதியுள்ளார்.

கணக்குப் பாடம்

பார்வை, மற்றும் ஒளியைப் பற்றி, (optics) அறிவியல் முறையில் சோதனை செய்து, தாம் அறிந்ததையும் அரேபிய விஞ்ஞானிகள் எழுதியதையும் சேர்த்து விளக்கி எழுதினார், ரோஜர் பேகன். அனைவரும் கணக்குப் பாடத்தை நன்கு கற்கவேண்டும் என்றார். எல்லா அறிவியல்களுக்கும், நுழை வாயிலாகவும், திறவுகோலாகவும் இருப்பது கணக்கு, என எழுதினார்.

எண்பது ஆண்டுகள் வாழ்ந்து 1294 இல் மறைந்த ரோஜர் பேகன், இருண்டிருந்த மதக் கூடத்தில் ஒளியைப் பாய்ச்சினார். ஆனால், மற்றவர்களின் கண்கள் அந்த அறிவு ஒளியில் கூசின; ஆகையால், வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள்!
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP