சமீபத்திய பதிவுகள்

காந்தி சொன்னதைதான் பிரபாகரன் செய்கிறார்

>> Wednesday, November 5, 2008

 
 09.11.08  ஹாட் டாபிக்

ரே நாள் இரவில்  குபீரென தமிழ் உணர்வாளர்கள் இதயத்தில் குடியேறிவிட்டார்கள் இயக்குநர்கள் சீமானும் அமீரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர்கள், ஏழு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த இவர்களை தமிழ் இயக்குநர்கள் பட்டாசு கொளுத்தி, மலர்க் கிரீடம் சூட்டி வரவேற்று மகிழ்ந்து போனார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள். சிறை சென்று திரும்பிய அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர்களின் பேச்சில் முன்பிருந்ததை விட வீரியம் கூடியிருந்ததை உணர முடிந்தது. "நாங்கள் பேசியதில் தவறில்லை'' என்பதை அவர்கள் தொனியில் கேட்கமுடிந்தது. மதுரையில் ஒரு விடுதியில் தங்கியுள்ள சீமானைச் சந்தித்தோம். கேள்விகளை முன்வைத்தபோது அவரின் பதில்கள் அக்னியாக வந்து விழுந்தன.

சென்னையில் சினிமா நடிகர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

``இலங்கைத் தமிழர்களைக் காக்க பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராடும்போது, தங்களது திரைப்பட வர்த்தகத்தை விரிவடையச் செய்ததில் ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு என்பதை திரைப்பட நடிகர்கள் மறக்கவில்லை. அதற்கு நன்றிக்கடனாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் அது பாராட்டுதலுக்குரியதே. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே தங்கள் உணர்வைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

`அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் எழுந்தே தீரும்' என கமல் கூறியது சரியான வார்த்தை. `சர்வதேச ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு முப்பதாண்டுகளாகப் போராடியும் வெற்றி முடியவில்லையென்றால், உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்' என ரஜினி கூறியதும் சரியானதே. ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வரவேண்டும். அதாவது, ரஜினியின் கருத்தை இந்தியா உணரவேண்டும் என்பதே  என் விருப்பம். தமிழர்களின் உணர்வை இந்த உண்ணாவிரதம் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. நடிகர்களுக்கு சமூக அக்கறை இருப்பதை நிரூபித்திருக்கிறது.''

ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால், இலங்கைப் பிரச்னையில் இந்திய நிலைப்பாடு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

``ஒருங்கிணைந்த இலங்கை மீது இந்தியாவுக்கு ஏன் அவ்வளவு அக்கறை எனப் புரியவில்லை. இலங்கையில் தமிழீழம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை முடிவு செய்துவிட்டு, அதனடிப்படையில் இந்தியா செயல்படுகிறது. இலங்கையில் இருதரப்பினருக்கிடையே பிரச்னை. அப்படியிருக்கையில் இரு தரப்பினரிடையேயும் பேசுவதுதானே நியாயம். ராஜபக்ஷேவையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் ஏன் தமிழீழத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசுவதில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களிடமாவது பேசலாமே.

இலங்கையைப் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுக்கிறார்கள். இது குறித்துக் கேட்டால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியாவில் பயிற்சி கொடுப்பது வழக்கம் தான் என்கிறார்கள். அப்படியானால், பாகிஸ்தானைச் சேர்ந்தவனுக்கும் சீனாவைச் சேர்ந்தவனுக்கும் பயிற்சி கொடுப்பீர்களா? அவர்களுக்குக் கொடுப்பதும் சிங்களனுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான். இலங்கைப் பிரச்னைக்கு ராணுவத்தின் மூலம் தீர்வு காணமுடியாது என்று சொல்கிறீர்கள். அப்படியிருக்கையில் ஏன் ராணுவ உதவி செய்கிறீர்கள்? நீங்கள் கொடுத்த ஆயுதத்தை அவன் தமிழனை நோக்கித்தானே பிரயோகப்படுத்துகிறான். செஞ்சோலையில் குழந்தைகள் கொல்லப்பட்டபோது சிறு வருத்தம் கூட இந்தியா தெரிவிக்கவில்லையே. மனிதநேயம் இங்கு மரித்துப் போயிற்றா..?

சொந்த நாட்டில் ஐந்து லட்சம் தமிழ் மக்களை அகதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறது இலங்கை. தமிழர்கள் வாழும் பகுதிக்கு பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. அடிப்படைத் தேவைகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதை ஏதும் கண்டிக்காத ஒரு நாடு, எப்படி மனிதநேயம் மிக்க நாடாக இருக்கமுடியும்? பொற்கோயிலில் நடந்த ராணுவ நடவடிக்கைகளை சீக்கியர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்கிறார் மன்மோகன் சிங். அதேபோலத் தான் இலங்கையில் இந்திய அமைதிப்படை தமிழர்களுக்குச் செய்த அட்டூழியத்தை ஒருபோதும் தமிழன் மறக்கமாட்டான். மனித நேயத்தைப் புதைத்துவிட்டு  தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்கிறது இந்தியா. இந்திய தலைமை, தமிழினத்துக்கு எதிராக உள்ளது. இங்கு நடப்பது இந்திய அரசல்ல.''

தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நீங்கள் தொடர்ந்து பேசி வருகிறீர்களே?

``காந்தி சுடப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். தடைசெய்யப்பட்ட இயக்கம். அப்போது யாரும் பேசவில்லையா? தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்றால், அது சர்வாதிகார நாடாகத்தான் இருக்கமுடியும். இந்தியா சர்வாதிகார நாடு எனச் சொல்வீர்களேயானால் நான் ஏதும் பேசாமல் இருக்கத் தயார். ஆனால், இது ஜனநாயக நாடு. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேச ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு என நான் நம்புகிறேன்.''

விடுதலைப்புலிகள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறார்களே?

``அவர்கள் போரிடவில்லை. சர்வதேச ராணுவ உதவியுடன் தங்களைத் தாக்கும் இலங்கையிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவே போராடிக்கொண்டிருக்கிறார்கள்.. `ஜெயவர்த்தனே உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால், நாங்கள் ஆயுதம் தூக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது' என்பார் பிரபாகரன். அதுதான் உண்மை. தமிழர் பகுதியில் இலங்கை ராணுவம் ஆறாயிரம் முறை குண்டு வீசியிருக்கிறது. ஒவ்வொரு குண்டும் ஆயிரம் கிலோ எடை கொண்டது. சர்வதேச போர் முறைப்படி பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சிறார்கள்,  கர்ப்பிணிப் பெண்கள், நூலகம் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உள்ளது. இதில் எதையும் இலங்கை ராணுவம் கடைப்பிடிக்கவில்லை. இதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

ஆயுதத்தைப் பயன்படுத்தி, அச்சுறுத்தி தமிழ்ப் பெண்களை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களவன். அதைத் தடுக்க வேண்டுமானால், அவன் பயன்படுத்திய அந்த ஆயுதத்தை எடுப்பதைத் தவிர வேறு எது தீர்வாக இருக்கமுடியும்? அங்கு விடுதலைப்புலிகள் நடத்துவது வீரஞ்செறிந்த அறப்போர். மரணத்தை முன்னிறுத்தி விடுதலைப் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விடுதலைப்புலிகள், மனிதநேயம் கொண்டவர்கள். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்றும் நடப்பவர்கள். ஆனையிறவு போரில் நாற்பதாயிரம் சிங்களப் படைவீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்தார்கள். இந்தியா  போர் நிறுத்தம் செய்யக் கேட்டுக்கொண்டதால், அவர்கள் போர்நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை என்றைக்காவது இப்படி மனிதநேயத்தை வெளிப்படுத்தியதுண்டா?''

தமிழீழம் கேட்பதுதானே பிரச்னை?

``தமிழீழம் கேட்பதை யார் தீர்மானிப்பது? அங்கு வாழும் தமிழ் மக்கள்தானே முடிவு செய்யவேண்டும். அவர்களிடம் யாராவது கருத்துக் கணிப்பு நடத்தினார்களா? இல்லையே! வாடகைக்கு வந்தவன் வீட்டைக் காலி செய்யமாட்டேன் என்றால் எப்படி பொறுத்துப் போகமுடியும்?''

விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாகத்தானே கருதப்பட்டு வருகிறது?

``தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதைத் தீர்மானிப்பதெல்லாம் மக்களும் காலமும்தான். நான்கைந்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அறையில் உட்கார்ந்து கொண்டு அதைத் தீர்மானிக்கமுடியாது. நெல்சன் மண்டேலாவை எந்த நாடாளுமன்றம் தீவிரவாதி என்றதோ, அதே நாடாளுமன்ற வளாகத்தில் அவர் சிலை திறக்கப்பட்டது. எனவே காலம்தான் தீவிரவாதமா, பயங்கரவாதமா என்பதைத் தீர்மானிக்கும். இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரில் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்களை, உள்நாட்டு போராட்டக் குழுவான விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் பயன்படுத்துகிறது. இதற்கு பல நாடுகளும் ஆயுதங்களைத் தருகிறது. கொத்துக்கொத்தமாக ஓர் இனம் மடிய அது உதவுகிறது. இது ஒரு சர்வதேச பயங்கரவாதம். இதைக் கண்டிக்கத் துப்பில்லாத எந்த நாட்டினம் விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகள் எனச் சொல்ல அருகதையற்றவர்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் இனத்தின் விடுதலைக்கான இயக்கம். தமிழீழ மண்ணில் நடப்பது காந்திய வழியிலான போர்தான். `இனப் படுகொலை நடப்பதைப் பார்த்துக்கொண்டு அகிம்சையுடன் இருக்கமுடியாது. அதை அடக்க எந்த விதமான ஆயுதத்தையும் எடுக்கத் தயார்..' என காந்தி சொல்வார்.  காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கிறார். `உலகின் எந்த மூலையில் ஒரு நாடு விடுதலைக்காகப் போராடுகிறது என்றாலும், அதை இந்தியா ஆதரிக்கும்' என பிரகடனப்படுத்தினார் நேரு. ஆனால் இந்தியா ஏன் தமிழீழ விடுதலையை ஏற்க மறுக்கிறது எனத் தெரியவில்லை.''

உண்ணாவிரதத்துக்கு வந்த நடிகர் எஸ்.வி. சேகர் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது எனக் கூறியிருக்கிறாரே?

``எஸ்.வி. சேகரை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களை எண்ணித்தான் வேதனைப்பட வேண்டியிருக்கிறது. ஈழத்தின் உள்நாட்டுப் பிரச்னையில் ராஜீவ்காந்தி தலையிட்டதால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நானூறு தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்களே... அது எந்த நாட்டுப் பிரச்னை என்கிறார் சேகர். குறைந்தபட்சம் கருத்துச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டபோது சேகர் கேட்டிருக்கலாமே. அவருக்குப் புரிதல் அவ்வளவு தான்..''

சிறையில் இருந்த அனுபவம்..

``விருப்பத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்த பணி அது. சிக்கல் வரும் எனத் தெரியும். அதற்காகச் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் இருந்தால் என்னை என் தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது...'' என ஆவேசத்தோடு முடித்துக்கொண்டார் சீமான்.

ஸீ ப. திருமலை
படங்கள் : ராமசாமி

``என் குடும்பத்தாரின் குறை நீங்கிவிட்டது!''

-அமீர்

இயக்குநர் அமீர் மதுரைக்காரர். தனது வீட்டில் இருக்கிறார். இவர் தந்தை காங்கிரஸ்காரர். காமராஜருக்கு நெருக்கமானவராம். "நான் மதுரை வரமாட்டேங்கிறேன் என்கிற என் குடும்பத்தாரின் குறை இப்போது நீங்கிவிட்டது" எனச் சிரித்துக்கொண்டே பேசத்தொடங்கினார்.

சிறை அனுபவம் எப்படி?

``தவறு செய்துவிட்டு சிறைக்குச் சென்றிருந்தால் பயம் இருக்கும்.   தமிழர்களுக்காக, என் இனத்துக்காகச் செல்கிறேன் என்ற பெருமைதான் இருந்தது. எனவே சிறை குறித்தான கவலை ஏதும் இல்லை. என்றாலும், இது புதுமாதிரியான அனுபவம். ஒரு முகாமிற்குச் சென்றது போலிருந்தது. பாதுகாப்பு கருதி எங்களை தண்டனைக் கைதிகளோடு வைத்திருந்தார்கள். நாங்கள் எந்தச் சலுகைகளும் கேட்கவில்லை. முதலில் தரையில் படுத்தோம். எலி தொந்தரவு காலை கடிக்கும் அளவு வந்துவிட்டது. பிறகு கட்டில் கொடுத்தார்கள். காலையில் சப்பாத்தி - சட்னி, மதியம் அரிசிச் சோறு தந்தார்கள். இரவில் பெரும்பாலும் நாங்கள் பழங்கள் சாப்பிட்டுக்கொள்வோம். டீ, காப்பி குடிக்கும் பழக்கம் இருவருக்கும் (சீமான், அமீர்) இல்லை என்பதால் குடிக்கவில்லை. கைதிகள் பிரியத்துடன் தந்த பால் இல்லாத காபியைச் சாப்பிட்டோம். பத்திரிகைகளைப் பொறுத்தவரை குமுதம் ரிப்போர்ட்டர் உள்பட வாரம் இருமுறை இதழ்களைத் தருவதில்லை. நாங்கள் கொண்டு போன புத்தகங்களைப் படிக்கவே எங்களுக்கு நேரம் இல்லை. அந்த அளவுக்குக் கைதிகள் எங்களிடம் வந்து குறைகளைச் சொல்லி ஆறுதல் தேடுவார்கள்.
கைதிகள் கொடுத்த கத்தைகத்தையான மனுக்களை சிறைத்துறை அதிகாரியிடம் நடவடிக்கைக்காக கொடுத்துவிட்டு வந்தேன்!'' என்றார் அமீர்.

source:kumudam.com

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP