சமீபத்திய பதிவுகள்

கர்நாடகாவின் இந்துத்துவ போலீஸ்-மனதை உறைய வைக்கும் படங்கள்

>> Wednesday, December 10, 2008

கர்நாடகாவின் இந்துத்துவ போலீஸ் ‍- அ.மார்க்சுடன் ஒரு சந்திப்பு


ஒரிசாவைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் இந்துப் பயங்கரவாதிகள் கிறித்துவர்களின் வழிபாட்டிடங்களின் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினர். இந்துத்துவ அமைப்புகள் மட்டுமில்லாது கர்நாடகப் போலீசும் சிறுபான்மைக் கிறித்துவர்களுக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் கிறித்துவர்கள் மீதான இந்தத் தாக்குதல் குறித்து அறிய மனித உரிமை அமைப்புகள் பங்கேற்ற உண்மையறியும் குழு சென்று வந்தது. தென்னிந்தியாவிலிருந்து ஏழு அமைப்புகள் பங்கேற்ற இந்த உண்மை அறியும் குழுவில் தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.மார்க்ஸ், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கேசவன், புதுச்சேரியிலிருந்து கோ.சுகுமாரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கர்நாடகாவில் நடந்த அநீதிகள் குறித்து தோழர் அ.மார்க்சிடம் உரையாடியபோது அவர் விவரித்தது இது.

''புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் பாலகோபால் தலைமையேற்று நடத்திய இந்த உண்மை அறியும் குழுவின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினோம். தட்சணக் கர்நாடகம் என்று அழைக்கப்படும் தெற்கு கர்நாடகத்தில் சர்ச்சுகள் மீது மதவாதச் சக்திகள் ஒருபுறம் மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தியது கொடுமை என்றால், இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய போலீசும் கிறித்துவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது துயரத்தின் உச்சம்.
இந்துத்துவ அமைப்புகள் தாக்குதலுக்கு இரண்டு முக்கியக் காரணங்களைச் சொன்னார்கள். ஒன்று கிறித்துவர்கள் கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது. இரண்டாவது, நியூ லைப் சர்ச் என்னும் சர்ச் இந்துமதத்தை இழிவுபடுத்தும் வகையில் நோட்டீஸ்களை அச்சடித்து வினியோகித்தது என்பது. இதில் முதல் காரணம் வழக்கமாகச் சொல்லப்படுவதுதான். ஆனால் இரண்டாவது காரணம் உண்மையில் கேலிக்குரியது. ஏனெனில், அந்த துண்டறிக்கைகள் சமீபத்தில் வினியோகிக்கப்பட்டவை அல்ல. பத்து வருடங்களுக்கு முன் வினியோகிக்கப்பட்டவை என்று எங்கள் விசாரணையில் தெரியவந்தது. எங்கள் கைக்குக் கிடைத்த நோட்டீஸ்களைக் கொண்டு அச்சடித்த இடத்தை தேடிப் போய்ப் பார்த்தால் அந்த அச்சகமே இப்போது இல்லை. அப்படியானால் அவை உண்மையில் அந்த சர்ச்சால் வினியோகிக்கப்பட்டதா, அல்லது கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சமூக விரோத சக்திகள் தாங்களாகவே அச்சடித்ததா என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. டி.ஐ.ஜி அதித் மோகன் பிரசாத்திடம் நாங்கள் பேசிய போது, ''கட்டாய மதமாற்றம் தொடர்பாக எந்த புகார்களும் போலீசுக்கு வரவில்லை'' என்றார். மேலும் இந்தியாவில் கிறித்துவர்களின் மக்கள் தொகை 2.4 சதவிகிதம் என்றால் கர்நாடகாவில் வெறுமனே 1.9 சதவிகிதம்தான். எனவே மதமாற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல.

இந்த கலவரங்களுக்கான ஒத்திகை ஏற்கனவே பார்க்கப்பட்டதுதான். தாவண்கரே என்ற இடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பே சர்ச்சின் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. புகார் கொடுக்கச் சென்ற கிறித்துவர்களிடமே, '' நீங்கள்தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுவீர்களே, அப்புறம் ஏன் புகார் கொடுக்க வந்தீர்கள்?'' என்று போலீசாரே கேலி செய்திருக்கின்றனர். அதேபோல் சென்ற அக்டோபர் மாதம் பச்சநாடி மலை என்ற இடத்திலும் இத்தகைய போக்குகள் தொடர்ந்திருக்கின்றன. அங்கு சிலுவைப்பாதை என்னும் ஒரு இடம் இருக்கிறது. யேசு சிலுவை சுமந்து சென்றபோது நிகழ்ந்த சம்பவங்கள் அங்கு ஓவியங்களாக வரையப்பட்டிருக்கும். அந்த பச்சநாடி மலையில் ஆகஸ்ட் 8ந்தேதி காவிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்த மேரி மாதா சிலையையும் காணவில்லை. காவல்துறையிடம் இதுகுறித்துப் புகார் செய்தால், நீதி கிடைப்பதற்குப் பதிலாக அங்கு நடந்ததோ வேறு. அந்த இடத்தையே 'சர்ச்சைக்குரிய இடம்' என்று அறிவித்த காவல்துறை கேட்டை இழுத்து மூடிவிட்டது.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்ற ஒத்திகைகள் செப்டம்பர் 14ம் தேதியிலிருந்து உச்சத்தை அடைந்தது என்று சொல்லலாம். செப்டம்பர் 14, காலை 10.15 மணி, மங்களூருக்கு அருகிலுள்ள மிலாகரஸ் என்னும் இடத்தில் உள்ள அடோரசன் சென்டர் என்னும் சர்ச் தாக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சின் சிறப்பு என்னவென்றால் இது 1680ல் கட்டப்பட்டது. இந்தியாவிலுள்ள பழமை வாய்ந்த சர்ச்சுகளில் ஒன்று. மேலும் கிளாய்ஸ்டர்ட் கம்யூனிட்டி என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்த சர்ச் நடத்தப்பட்டு வருகிறது. கிளாய்ஸ்டர்ட் கன்னியாஸ்திரிகள் தாங்கள் துறவு ஏற்ற நாளிலிருந்து இறக்கும் வரை ஒரு அறையிலேயே தங்கி இறைவழிபாடு நடத்துவார்கள். அறையை விட்டு வெளியே வரமாட்டார்கள். செப்டம்பர் 14 கிறித்துவர்களுக்குப் புனித தினமும் ஆகும். யூகரிஸ்ட் என்னும் சிலுவையில் யேசு இருப்பதாக நம்பி கிறித்துவர்கள் வழிபாடு செய்வர். இந்த யூகரிஸ்ட் சிலுவையும் உடைக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அங்கு வந்த போலீஸ், '' நீங்கள் உள்நாடா, வெளிநாடா, லைசென்ஸ் இருக்கிறதா?'' என்று கிளாய்ஸ்டர்ட் கன்னியாஸ்திரீகளிடம் கிண்டலாகக் கேள்விகள் தொடுத்துள்ளனர்.

செப்டம்பர் 14ந்தேதி காலையே 14 இடங்களில் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடந்துள்ளதன் மூலம் இது திட்டமிட்ட தாக்குதல்தான் என்பதை அறியலாம். இதில் கொடுமை என்ன வென்றால் அன்று மாலையே பஜ்ரங்தள் மாநிலத்தலைவர் மகேந்திரகுமார், ''தாக்குதல் நடத்தியது நாங்கள்தான். இனியும் இது தொடரும்'' என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். ஆனால் 19ம் தேதி வரை மகேந்திரகுமார் கைது செய்யப்படவில்லை.
பெரமணூர் என்னும் இடத்தில் செவத்தியார் ஆலயம் என்னும் சர்ச்சின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோது சர்ச்சுகளில் கிறித்துவ இளைஞர்கள் ஆவேசத்தோடு குவிந்திருக்கின்றனர். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் காதரும், அங்கிருந்த பாதிரியார்களும் இளைஞர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் போலீஸ் 144 தடை உத்தரவு போட்டு 'சர்ச்சுக்குள் யாரும் நுழையக்கூடாது' என்று ஆணையிட்டுள்ளது. பொதுவாக தெருக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில்தான் 144 போடப்படும். ஆனால் சர்ச் போன்ற வழிபாட்டுத் தலங்களில் தடையுத்தரவு போடுவது சட்ட நடைமுறையே இல்லை.
குலசேகர் என்னும் ஊரிலுள்ள புனித சிலுவை ஆலயம், வாமஞ்சர் என்னும் இடத்திலுள்ள புனித ஜோசப் ஆலயம் ஆகியவற்றின் மீதும் தாக்குதலும் தொடர்ந்திருக்கிறது, கிறித்துவர்களின் மீது போலீசின் தடியடியும் நிகழ்ந்திருக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் போலீசோடு பஜ்ரங்தள் ஆட்களும் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சதீஷ்குமார் என்னும் எஸ்.பியும் ஜெயந்த்ஷெட்டி, கணபதி என்னும் இரண்டு இன்ஸ்பெக்டர்களும் நேரடியாகத் தாக்குதலில் பங்கேற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். கிறித்துவர்களின் தாக்குதலையட்டி மத்திய அரசால் கர்நாடக அரசு கலைக்கப்படலாம் என்னும் சூழ்நிலை ஏற்பட்டவுடனே, ''சர்ச்சுகள் மீது தாக்குதலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்'' என்று மாநில அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை யாரும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்படவில்லை. மாறாக கிறித்துவர்கள் 160 பேரும்
இந்து ஜக்ரண வேதிகே, பஜ்ரங்தள், ஸ்ரீராமசேனே ஆகிய தாக்குதலில் ஈடுபட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 60 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களையே அதிகளவு கைது செய்வது விசித்திரமான முரண்பாடு இல்லையா?'' என்னும் அ.மார்க்ஸ் 61 வயதான செல்மா, 71 வயதான பெனீசியா மற்றும் குழந்தைகளும் போலீசால் கொடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதைக் கவலையுடன் பகிர்ந்துகொள்கிறார்.

'' கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடந்த அதே மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இந்திய முகாஜிதீன்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று முகமது அலி, ஜாவீத் அலி, (இருவரும் தந்தை, மகன்), நௌஷாத், அகமத் பாவா ஆகிய நான்கு முஸ்லீம்களைக் கைது செய்திருக்கிறது போலீஸ். உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களைக் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட சி.டிக்கள், குர்&ஆன் போன்றவற்றிற்கான ரசீது வழங்குவது போன்ற அடிப்படை சட்ட நடைமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை. இந்த கைது நடவடிக்கை கூட 'பிரச்சினையைத் திசைதிருப்பும் அரசின் செயல்' என்று பாதிக்கப்பட்ட கிறித்துவர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ, சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களே பயங்கரவாதச் செயல்களுக்கு வழிவகுக்கின்றன என்பதைக் கடந்தகால வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கின்றது. இந்தப் பாடத்தை இனியாவது அரசும் போலீசும் ஒழுங்காகக் கற்றுக்கொள்ளுமா என்பதுதான் முக்கியமான கேள்வி'' என்கிறார் அ.மார்க்ஸ்.

இத்தகைய கொடூரமான வன்முறை வெறியாட்டங்களை கிரீஷ்கர்னாட் போன்ற கலைஞர்களும் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற எழுத்தாளர்களும் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராகப் பேரணியும் நடத்தியது ஒரு ஆறுதல். இந்தப் போலீசை இந்துத்துவப் போலீசு என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிடுவது?

http://sugunadiwakar.blogspot.com/2008/11/blog-post.html

 

கர்நாடகத்தில் கிறித்துவர்கள் மீதான போலீசின் தாக்குதல் ‍‍‍ மனதை உறைய வைக்கும் படங்கள்











கிறித்துவர்கள் மீதான கர்நாடகப் போலீசின் தாக்குதல்  

 

 

 

 

 

 

\suguna2896.blogspot.com/2008/11/blog-post.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP