சமீபத்திய பதிவுகள்

முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தை மீள திரும்ப விடுவதில்லை என்பதே தமிழீழ மக்களின் வைராக்கியம்: பா.நடேசன்

>> Friday, January 2, 2009

 
 
வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தினரை மீள திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தாயகத்தின் தற்போதைய களநிலமைகள் மற்றும் அங்குள்ள மக்கள் படும் இன்னல்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'செய்தி அலைகள்'  நிகழ்ச்சிக்கு கடந்த 9 ஆம் நாள் பா.நடேசன் அளித்த நேர்காணல்:
தாயக நிலைமையும் மக்கள் அவலமும்
 
கேள்வி: தாயக மக்கள்படும் அனுபவிக்கும் இன்னல்கள் குறிப்பாக தற்போதைய வெள்ள அனர்த்தத்தினால் அவர்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்தும் அவர்களுடைய தற்போதைய நிலமைகள் குறித்தும் கூறமுடியுமா? 
 
பதில்: எங்களுடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் மன்னாரிலிருந்து தொடர்ச்சியாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். சாதாரண மக்களாக அல்லாமல் எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாவும் உள்ளனர்.
 
சிறிலங்கா அரசினுடைய வான்குண்டு வீச்சுக்கள், எறிகணைத் தாக்குதல்கள், மோசமான பொருளாதார தடைகள், மருந்து தடைகள், அத்தியாவசிய உணவுத் தடைகள் போன்ற மிகவும் மோசமான இந்த சூழலில் - எமது மக்களை இயற்கை அனர்த்தமும் பெரிதளவில் பாதித்திருக்கிறது.
கடந்த வாரமும் அதற்கு முன்னரும் எமது பிரதேசத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வன்னிப்பெரு நிலப்பிரப்பில் - எமது கட்டுப்பாட்டில் இருக்கின்ற பிரதேசம் - அதிகளவு வெள்ளப்பெருக்கிற்கு முகம் கொடுத்திருக்கிறது. இங்குள்ள முதியோர் கூறிய கூற்றுக்களின்படி நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு வெள்ளப்பெருக்கு எங்களுடைய மக்களை பாதித்திருக்கிறது.
இடம்பெயர்ந்த எங்களுடைய மக்கள் இருந்த தற்காலிக கூடாரங்கள் மற்றும் வதிவிடங்கள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த மக்களை பாடசாலைகள், ஆலயங்கள், உறவினர்களின் வீடுகள் என பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவர்களை மீளவும் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை நாங்கள் தற்போது மேற்கொணடு வருகிறோம்.
 
தற்போதுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு மட்டும் எங்களுடைய மக்கள் முகம் கொடுக்கவில்லை.
சிறிலங்கா அரசு பாரியதொரு பொருளாதாரத் தடையை எங்கள் மக்கள் மீது மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் 400 பாரவூர்திகள் அடங்கிய பொருட்கள் வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 218 பாரவூர்திகளையே சிறிலங்கா அரசு வன்னிக்கு அனுப்பியுள்ளது.
அதேபோல் கடந்த நவம்பர் மாதமும் 400 பாரவூர்திகள் வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வரவேண்டும். ஆனால் 112 பாரவூர்திகளுக்கு அவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த புள்ளி விபரங்களை பார்த்தால் எங்களுடைய மக்களை பொருளாதாரத் தடையும் இயற்கை அனர்த்தமும் எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
மக்களின் வைராக்கியம்
 
எனினும், எங்களுடைய மக்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட போராட்ட அனுபவங்கள் - அவர்களின் நெஞ்சுரம் - போராட்ட வைராக்கியம் என்பன இத்தகைய சவால்களை கண்டு குறைந்து போகவில்லை. மாறாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிறிலங்கா இராணுவத்தை முன்னேற விடக்கூடாது, வந்தவர்களை மீளவும் அவர்களுடைய இடங்களுக்கு திரும்பிச்செல்ல விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் எல்லைப் படைகளாக- சிறப்பு எல்லைப் படைகளாக- பின் களமுனைகளில் பணி செய்கின்றவர்களாக - எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாக - போர் வீரர்களாக உருவாகி வருவதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
 
மக்கள் எழுச்சி, மக்கள் போராட்டம், இராணுவத்திற்கு எதிரான அடக்குமுறை அரசிற்கு எதிரான மக்கள் கிளர்ச்சி என்று வரலாற்று புத்தகங்களில் படித்திருக்கலாம். ஆனால் அதை நாங்கள் நேரடியாக பார்க்கும்போது அந்த மக்களுக்கான விடுதலையை விரைவாக வென்று கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் - எழுச்சி - எங்களை இன்னமும் பல மடங்கு வேகமாகச் செயற்பட வைத்திருக்கிறது.
 
கேள்வி: தாயகத்தில் இத்தகைய அவலங்களைச் சந்திக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை - உதவிகளை - யார் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்?
 
பதில்:
  இந்த மக்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம்தான் அழைத்துச் சென்று அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றி, அவர்களுக்குரிய உணவு, உறைவிடம், கல்வி, சுகாதாரம், சுகாதாரக் கல்வியூட்டல் போன்ற வசதிகளைச் செய்து வருகிறது. அது மட்டுமன்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் தமிழீழ சுகாதார சேவைப் பிரிவு, நலன்புரி அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து எங்களுடைய மக்களின் தேவைகளை - மிகப்பெரியதொரு மனிதாபிமானப் பணியை மேற்கொண்டு வருகின்றன.
 
இந்த இடத்தில் மிகவும் மனவேதனையுடன் அனைத்துலக சமூகத்திற்கு ஒன்றைக்கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை அனைத்துலக நாடுகள் பல தடை செய்திருக்கின்றன. ஆனால், வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வந்து பார்த்தால் அதனது பணி எவ்வாறானதென்பது அந்த நாடுகளுக்கு தெரிய வரும். அது மட்டுமன்றி தமிழீழ சுகாதாரச் சேவையினுடைய பணியும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
ஏனெனில், இவ்வாறான அனர்த்த காலங்களில் ஏனைய இடங்களில் தொற்று நோய்கள் பரவும் சூழல் காணப்பட்டுள்ளது. ஆனால் எங்களுடைய பகுதிகளில் தமிழீழ சுகாதாரச் சேவையினர் வீடு வீடாகச் சென்று சேவைகளைச் செய்வது மட்டுமன்றி சுகாதாரம் தொடர்பான கல்வியையும் ஊட்டி வருகின்றனர். உண்மையில் இதுவொரு அதிசயிக்ககூடிய விடயமாகத்தான் இங்குள்ளது.
தமிழகம் அனுப்பிய நிவாரணப் பொருட்களின் நிலை
கேள்வி: தமிழக மக்களின் உணர்வு அவர்களுடைய உதவியாக தாயக மக்களுக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இது தாயக மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது?
 
பதில்: தமிழக மக்களால் இந்திய மத்திய அரசின் ஊடாக தாயக மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்தப் பொருட்கள் இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விநியோகம் செய்யப்படுகின்றன.
எனினும், தமிழக மக்களால் அனுப்பப்பட்ட முழு உணவுகளும் இதுவரை இங்கு வந்து சேரவில்லை. தமிழக மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட உணவை சிங்கள அரசு சிறிது சிறிதாகவே இங்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் தமிழக மக்களால் அனுப்பி வக்கப்பட்ட உடு புடவைகளை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் வன்னிப் பகுதிக்கு எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கவில்லை. 
புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய அழுத்தப் பணிகள்
கேள்வி: தமிழக மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட உடுபுடவைகள் இதுவரை தாயக மக்களை வந்தடையாத விடயத்தில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் இதற்கான அழுத்தங்களை எந்த வகையில் கொடுக்க முடியுமென நீங்கள் கருதுகிறீர்கள்?
 
பதில்: தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உடுபுடவைகள் மட்டுமல்ல பொதுவாகவே தற்போது எங்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்குரிய எந்தவொரு உடுபுடவைகளையும் எடுத்து வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று அனுமதிப்பதில்லை.
குறிப்பாக, பாடசாலை மாணவர்களுக்குரிய துணிகளையே சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் வெளியுலகிற்கு ஒன்றை கூறிக்கொண்டு இங்கு படுமோசமான - உலகில் எங்குமே நடக்காத மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய மனித உரிமை மீறல்களை இங்குள்ள அனைத்துலக மனிதாபிமான நிறுவனங்கள் கூட சிறிது சிறிதாக வெளியுலகிற்கு சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளன.
 
சிங்கள அரசினுடைய மிக மோசமான - நாகரீக உலகம் வெறுக்கத்தக்க - இத்தகைய மனித உரிமை மீறல்களை எங்களுடைய புலம்பெயர்ந்த மக்கள் தத்தமது இடங்களிலுள்ள மனித உரிமை அமைப்புக்களின் உதவியுடன் அந்தந்த இடங்களில் உள்ள அரசுகளுக்கு எடுத்து விளக்கி - வெளிப்படுத்த வேண்டும். இது ஒரு வரலாற்றுப் பணி. புலம்பெயர் மக்கள் இத்தகைய பணிகளை தொடர்ச்சியாகச் செய்து வருவது எங்களுக்கு தெரியும். அதன் வெளிப்பாட்டை இங்கு நாங்கள் பார்க்ககூடிய வகையிலும் உள்ளது.
இருப்பினும், மனித உரிமை அமைப்புக்களின் உதவியோடு சிறிலங்கா அரசினுடைய இத்தகைய மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக தத்தமது நாடுகளிலுள்ள அரசுகளுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
 
அனைத்துலக சமூகம் எத்தகைய அழுத்தங்களைக் கொடுத்தாலும் சிறிலங்கா அரசு இறங்கி வருவது போன்று தெரியவில்லை. அத்தகைய நிலைப்பாடும் சிறிலங்கா அரசிடம் இல்லை. ஆகையால் இதனை ஒரு அரசியல் பிரச்சினையாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுடைய மக்களுக்கு இருக்கிறது.
வன்னிக் கள நிலைமை
 
கேள்வி: வன்னிப்பெரு நிலபரப்பில் தற்போதுள்ள களநிலமைகள் எந்த அளவில் உள்ளன?
 
பதில்: இராணுவம் பல முனைகளில் எங்களுடைய பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு வந்தாலும் - எங்களுடைய போர் வீரர்கள் சகல முனைகளிலும் கடுமையான எதிர்ச்சமர்களைச் புரிந்து சிங்கள இராணுவத்திற்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு - இந்த அரசாங்கத்தில் முன்னர் இருந்த மங்கள சமரவீர ஒரு இணையத்தளத்தை உருவாக்கியிருக்கிறார்.
இராணுவத்திற்கு ஏற்பட்டு வருகின்ற இழப்புக்கள், இராணுவத்தினுடைய மனநிலை - மனச்சோர்வு தொடர்பாக புள்ளி விபரங்களுடன் அவர் கொடுத்த வண்ணமிருக்கிறார்.
 
உண்மையில் இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை எதிர்நோக்கி மிகவும் பலவீனமான நிலையிலேயே சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கால நேரம் வரும்போது எங்களுடைய மக்களின் பலத்துடன் ஒரு பாரிய வெற்றியை - வரலாற்றில் என்றுமே சாதிக்காதளவு ஒரு பாரிய வெற்றியை - நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கை எங்களுடைய தலைவர், தளபதிகள், போர் வீரர்கள் மற்றும் எங்களுடைய மக்கள் என அனைவருக்கும் உள்ளது என்பதை இந்த நேரத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
 
கேள்வி:
சிறிலங்கா அரசாங்கத்தினால் புலிகளின் தலைமை குறித்தும் புலிகளின் மனவுறுதி குறித்தும் சில விசமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்து புலம்பெயர் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
 
பதில்:
சிறிலங்கா அரசாங்கமும் அவர்களுடைய ஊடகங்களும் இத்தகைய பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது குறித்து எங்களுடைய மக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. எங்களுடைய மக்கள் நீண்டகாலமாக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களைக் கண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு இடம்பெயர்ந்தபோதும் இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. புலிகள் முற்று முழுதாக அழிந்து விட்டனர். கடலுக்குள் சென்றுதான் அவர்கள் தற்கொலை செய்யவேண்டும் என்ற வகையிலான பொய்ப்பிரசாரங்களை  கடந்தகால வரலாற்றில் சிறிலங்கா அரசு மேற்கொண்டிருந்தது.
 
புலம்பெயர்ந்துள்ள மக்கள் எந்நேரமும் எங்களைப் பற்றிய சிந்தனையுடனும் பாசத்துடனும் இருப்பதால் இத்தகைய பொய்ப் பிரசாரங்களின் பிரதிபலிப்புக்கள் அவர்களுக்கு வருவது இயற்கை. ஆனால், புலம்பெயர் மக்கள் மிகவுறுதியுடன் - ஓர்மத்துடன் - வைராக்கியத்துடன் இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயம் எமது விடுதலைப் போராட்டத்தில் அதிசயிக்கத்தக்க வகையிலான திருப்புமுனையை ஏற்படுத்தி அதனூடாக வெற்றிப் பாதையில் செல்வோம் என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
 
கேள்வி: சிறிலங்கா படையினர் தற்போது பாரிய இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை அவர்களுடைய பலமாகக் கருதலாமா?
 
பதில்: இத்தகைய நிலை இராணுவ ரீதியாக அவர்களுக்கு மிகவும் பலவீனமான நிலையை ஏற்படுத்தும் என்பதுதான் அனைவரதும் எதிர்பார்ப்பு. இராணுவ ஆய்வாளர்களும் அதையே கூறி வருகின்றனர். களமுனையில் தற்போது ஏற்பட்டு வரும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இராணுவத்தினர் மிக விரைவாக பலவீனமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர் என்பதையே காட்டுகிறது.
 
கேள்வி:
கிளிநொச்சி தற்போது ஒரு சூனியப் பிரதேசமாகி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது ?
 
பதில்:
கிளிநொச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போதும் மக்கள் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் வயல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிறிலங்கா வான்படையின் குண்டுகளும் எறிகணைகளும் பீரங்கிகளும் இவ்வாறான குடிமனைகளையும் வயல் நிலங்களையும் நோக்கியே ஏவப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய தாக்குதல்களுக்கு இயைபாக்கம் அடைந்து - பழகிப்போய் - மக்கள் தொடர்ந்தும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
 
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் சில இடங்களில் இருந்து தந்திரோபாய பின்நகர்வை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்ற போதும் - புலிகள் பலமிழந்து விட்டனர் என்று சில இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு உங்களது பதில் என்ன?
 
பதில்: இவ்வாறான ஆய்வாளர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நாம் எவ்வாறான தந்திரோபாய நகர்வுகளை பின்பற்றி வருகிறோம் என்பதை அவர்கள் பின்னர் அறிவர். தந்திரோபாயங்களை முன்னரே அறிவிப்பது விவேகமான செயற்பாடாக இருக்குமென நான் நினைக்கவில்லை.
 
கேள்வி:
தற்போதைய இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசாங்கம் எதனை எட்ட விரும்புகிறது?
 
பதில்: தமிழ் மக்களின் பலமாக இருக்கும் எங்களை அழித்து முற்று முழுதான ஒரு இன அழிப்பை மேற்கொள்ளலாம் என்று சிறிலங்கா அரசு திட்டமிடுகிறது. ஏனெனில் இங்கு படையெடுப்பை நடத்திக்கொண்டு இருக்க - இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர். குறிப்பாக கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதும் தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பின் ஒரு பகுதியாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். சிறிலங்கா ஆட்சியாளர்கள் எங்களுடைய இனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தொடுதான் இன்று நேற்றல்ல கடந்த 50 வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றனர்.
 
கேள்வி:
தென்பகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இராணுவ ரீதியில் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டமுடியுமென்ற நம்பிக்கையை சிங்கள மக்கள் வெளியிட்டுள்ளனர். இது எதனைக் காட்டுகிறது?
பதில்: தமிழ் மக்களின் இன அழிப்பைக் கணக்காகக் கொண்டு சிங்கள மக்கள் பிழையான பாதையில் செல்கின்றனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
கிழக்கில் இன்னமும் எங்கள் போராளிகள் உள்ளனர்
 
கேள்வி: கிழக்கு விடுவிக்கப்பட்டு அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அதற்கு உதவுமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட பின்னணியில் தற்போது அங்கு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுடன் ஆட்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் என பயங்கர நிலை ஒன்று அங்கு உருவாகியிருக்கிறது. இது எதனை வெளிப்படுத்துகிறது ?
 
பதில்: கிழக்கில் இன்னமும் எங்களுடைய போராளிகள் இருக்கின்றனர். அங்கு இருக்கின்ற மக்கள் முற்று முழுதாக எங்களையே ஆதரிக்கின்றனர். எங்களுடைய வரவை அந்த மக்கள் எதிர்பார்த்த வண்ணமிருக்கின்றனர். கிழக்கிலுள்ள மக்கள் அங்குள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் ஒட்டுக்குழுக்களையும் முற்று முழுதாக நிராகரித்த வண்ணமே இருக்கின்றனர். இதனை சிறிலங்கா அரசாங்கத்தினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அங்குள்ள எமது ஆதரவாளர்களையும் எங்களுடைய மக்களையும் கடத்துவதும் கொலை செய்வதுமான செயற்பாடுகளில் சிறிலங்கா அரச படைகள் செயற்பட்டு வருகின்றன. 
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பு குறித்து வெளிநாடுகள் எதனையும் வெளிப்படுத்தாதது எதனைக் காட்டுகிறது?
 
பதில்: எங்களுடைய தலைவர் இதனைக் கருத்தில் கொண்டுதான் அனைத்துலக சமூகத்திடம் இந்தமுறை மாவீரர் நாள் உரையிலும் எங்களுடைய தடையை எடுக்க வேண்டும் - எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்து கொள்ளவேண்டும் - என்று அனைத்துலக சமூகத்திடம் கேட்டிருக்கிறார். இங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளையும் அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சிறிலங்கா அரசு வெளியேற்றியதன் பின்னணியில் தமிழ் இன அழிப்பு குறித்து அனைத்துலக சமூகத்திற்கு சிறிது சிறிதாக வெளிப்பட்டு வருவதாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.
 
ஏனைய இந்திய மாநிலங்களிலும் ஆதரவான எழுச்சி நிலை
கேள்வி: அனைத்துலக நாடுகளிலுள்ள தமிழ்மக்கள் குறிப்பாக மலேசியாவிலுள்ள தமிழர்கள், தென்னாபிரிக்காவிலுள்ள தமிழர்கள் என உலகெங்கும் உள்ள தமிழர்கள் தற்போது மேற்கொண்டு வரும் உணர்வெழுச்சி போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எத்தகைய நம்பிக்கையை தந்திருக்கிறது ?
 
பதில்: இது எங்களுக்கு மிகப்பெரிய ஆன்ம பலத்தை தருகிறது. உலகத் தமிழினம் ஒரே காலகட்டத்தில் ஒரே குரலாக - ஒரே ஒழுச்சியாக - ஒரே சக்தியாக ஒன்றுபட்டு நிற்பது எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிர்காலத்தில் கிடைக்கப்போகின்ற அங்கீகாரத்தையே எடுத்துக்காட்டுகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் எழுச்சியானது தமிழ்நாட்டை மட்டுமல்ல அதையும் கடந்து இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்களையும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் நிலையை உருவாக்கி வருகிறது.
குறிப்பாக, தமிழ் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் வழங்கக்கூடாதென இந்தியாவிலுள்ள மாணவர் அமைப்புக்கள் எல்லாம் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சென்று டில்லியில் இந்திய நாடாளுமன்றத்திற்கு முன்பாக பாரியதொரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் இந்திய சமூகம் கலந்துகொண்டது. இது எதனை எடுத்துக்காட்டுகிறதெனில் தமிழ்நாட்டினுடைய எழுச்சி தமிழ்நாட்டு எல்லையைக் கடந்து இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்களும் எமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் சூழல் உருவாகி வருவதையே எடுத்துக்காட்டுகிறது.
 
அதுபோன்றே வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களும் வெறுமனே தமிழ்மக்களின் ஆர்ப்பாட்டமாக மட்டுமன்றி எதிர்காலத்தில் அந்தந்த நாட்டு மக்களின் ஆதரவும் எமக்கு கிடைக்கப் போகின்றது என்பதையே காட்டுகிறது.
 
கேள்வி: தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்கள் குறித்து என்ன செய்தியைக் கூறவிரும்புகிறீர்கள்?
 
பதில்: எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை தமிழக மக்கள் உணர்வுபூர்வமாக உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார்கள். நிறைவு அளிக்கக்கூடிய வகையில் அவர்களது செயற்பாடுகள் இருந்து வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை - உதவிகளை - தொடர்ச்சியாக அந்தந்த நாட்டு மக்களுக்கும் அரசுகளுக்கும் எடுத்துச் சொல்லி - மிக விரைவாக எங்களுடைய போராட்டத்தை அங்கீகரிப்பதற்கான அந்த எழுச்சி நிலையை உருவாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கின்றது.
 
கேள்வி: தமிழ் மக்கள் இந்தியாவிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?
 
பதில்: தமிழ்மக்கள் தமது விடுதலை இயக்கத்தின் மீதான தடையை அகற்றி, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
 
கேள்வி: இந்தியாவிற்கு சிங்கள தேசம் நண்பர்களாக இருக்க முடியுமா?
 
பதில்: ஒருபோதும் இருக்க முடியாது. வரலாற்று ரீதியாக உண்மையான நண்பர்கள் நாங்கள்தான் என்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். வரலாறும் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றது. இன்று நேற்றல்ல பல ஆயிரம் வருடங்களாக இந்தியாவின் வரலாற்று நண்பர்கள் தமிழ்மக்கள்தான் என்பது இந்தியாவிற்கு நன்றாகத் தெரியும்.
 
கேள்வி: போர் நிறுத்தம் என்ற செய்திகள் தற்போது பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய போர் நிறுத்த அழைப்பு வந்தால் புலிகள் அதனை சாதகமாக ஏற்றுக்கொள்வார்களா? 
 
பதில்: போர் நிறுத்தம் குறித்து நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம். நோர்வேயின் அனுசரணையுடன் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசுதான் விலகிக்கொண்டது. நாங்கள் விலகிவில்லை.
 
சிங்கள அரசு அரசியல் தீர்வை விரும்பாது இராணுவத்தீர்வின் மூலமே தான் நினைத்ததனை அடைய முனைகின்றது என்பது அனைத்துலக சமூகத்திற்கு இன்று நன்றாகத் தெரிகிறது. உலகில் எந்தவொரு தேசியப் பிரச்சினையும் இராணுவ அடக்குமுறையினூடாகத் தீர்த்து வைக்கப்பட்டது என்பது உலக வரலாற்றில் இல்லை. அதை உலக நாடுகளும் புரிந்து கொள்ளும்.
 
கேள்வி: தமிழ் மக்களுக்கு எதிராக பரப்புரை ரீதியாக சிறிலங்கா அரசு தீவிரம் காட்டுவதாகவும் தமிழ் மக்கள் தரப்பில் பரப்புரை மந்தமாகவே இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது குறித்து?
 
பதில்: பொருளாதாரத் தடைகள், இராணுவ நடவடிக்கைகள் என பல தடைகளுக்கு மத்தியில் இருந்தே நாங்கள் இந்த பிரசார வேலைகளை முன்னெடுத்து வருகிறோம். எனினும் புலம் பெயர்ந்துள்ள மக்கள் அங்கே எங்களுடைய பிரச்சினைகளை சிறப்பாக எடுத்து விளக்கி வருகின்றனர்.
 
கேள்வி: புலம்பெயர் தமிழ் மக்கள் இன்னும் சிறப்பாக தமது பரப்புரையை எடுத்துச் செல்ல என்ன செய்யவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?
 
பதில்: மேற்கத்தைய உலகிற்கு அவர்களுடைய மொழியிலேயே பரப்புரையை எடுத்துச் செல்லவேண்டுமென நான் நினைக்கின்றேன். ஏனெனில் அவர்களுக்கு இலகுவாக விளங்கக்கூடிய வகையில் அவர்களது மொழியிலேயே - இலகுவாக விளங்கக்கூடிய சொற்பதங்களை - பிரயோகிக்க வேண்டும். சிங்கள அரசினுடைய தற்போதைய நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மனித உரிமைகளையும் மீறுகின்ற நடவடிக்கை என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.
 
கேள்வி: தேசியத் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் புலம்பெயர் இளையோருக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்திருந்தார். அதில் ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்திருந்தன. அந்த வகையில் புலம்பெயர்ந்துள்ள இளையோர் தமது பணிகளை எந்த வகையில் முன்னெடுக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?
 
பதில்:
புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் எமது இளையோர் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமது பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில் அது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் நம்பிக்கை தரக்கூடியதாகவும் இருக்கின்றது. ஆகவேதான் தலைவர் புலம்பெயர்ந்த இளம் சமுதாயத்திற்கு தனது நன்றியையும் தனது எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளார்.
 
கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு தாயகத்திலிருந்து நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
 
பதில்: புலம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த காலத்தைப் போன்றும் நிகழ்காலத்தைப் போன்றும் எதிர்காலத்திலும் சோர்வடையாது மிகவும் உற்சாகமாக - மிகவும் உறுதியுடன் - தொடர்ந்தும் அந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் நாம் இங்கு இருக்கின்றோம் என்று பா.நடேசன் கூறியுள்ளார்.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP