சமீபத்திய பதிவுகள்

பிரபாகரனின் அணையா தீபம், எதிரிகளை வீழ்த்த புது வியூகம் : நக்கீரன்

>> Thursday, January 15, 2009

 

இலங்கையில் தமிழர்களை பூண்டோடு அழிக்கும் இறுதி யுத்தத்தை துவக்கிவிட்டார் அதிபர் மகிந்த ராஜபக்சே. இதற்காக 8 வகையான சிறப்பு படைகளால் முல்லைத்தீவு முற்றுகையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஏற்கனவே இருக்கும் தமிழர்கள், மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள், தற்போது கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் என இப்போது 5 லட்சம் தமிழர்களின் புகலிடமாக இருக்கிறது முல்லைத் தீவு. நகரங்கள், காடுகள் அடர்ந்த வன பிரதேசங்களில் மக்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கான தற்காலிக வசதிகள் செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றன.

புலிகளின் கிளிநொச்சியை ஆக்ரமித்துக்கொண்டதை அடுத்து, ஆனையிறவுக்கான சண்டையை துவக்கியது இலங்கை ராணுவம். ஆனையிறவையும் புலிகள் இழந்தனர். அதேசமயம் எவ்வித மோதல்களும் இல்லாமல் முகமாலை, பளை பகுதிகளிலிருந்தும் புலிகள் பின்வாங்கினர்.

இதனை அடுத்து, முல்லைத்தீவிற்கான யுத்தம் இப்போது துவங்கியுள்ளது. இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா, ""பிரபாகரன் உள்பட ஒட்டுமொத்த புலிகளை யும் முல்லைத் தீவினுக்குள் முடக்கிவிட்டோம். முல்லைத்தீவு மட்டுமே அவர்கள் வசம் இருக்கிறது. பிற பகுதிகள் அனைத்தையும் மீட்டுவிட்டோம். முல்லைத் தீவை மீட்பது மட்டுமே பாக்கி. அதற்கான இறுதி யுத்தம் இது'' என்கிறார்.

இந்த இறுதி யுத்தத் திற்காக 8 படைகள் இறக்கி விடப்பட்டிருக்கிறது என்கிறார் ராஜபக்சே. யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவை கைப்பற்றி பரந்தனுக்கு வந்தி ருக்கக்கூடிய ராணுவத்தின் 53 மற்றும் 55-வது படை அணி, பரந்தனிலேயே நிற்கக் கூடிய 57-வது படையணி, பரந்தனிலிருந்து முல்லைத் தீவு நோக்கி செல்லும் வழியிலுள்ள முரசு மோட்டையில் 58-வது படையணி, கிழக்கு அம்பகாமம், மாங்குளம், ஒழுமடு, ஒட்டுசுட்டான் ஆகிய 4 பகுதிகளில் நிற்கக்கூடிய சிறப்புப்படை அணி... என 8 வகையான படை அணிகள் முல்லைத்தீவை சுற்றி முற்றுகையிட்டுள்ளன. இவர்களுக்கு உதவியாக, இலங்கை கப்பற்படையும் கடலில் நிற்கின்றன.

10-ந்தேதியிலிருந்து முல்லைத் தீவின் அடர்ந்த காடுகளில் விமான தாக்குதல்களும் ஷெல் தாக்குதல் களும் துவங்கிவிட்டன. முல்லைத் தீவு மீதான இறுதி யுத்தத்திற்காக மட்டுமே சீனாவிடமிருந்து 100 கோடி ரூபாய்க்கான ஆயுத கொள்முதலை செய்திருக்கிறார் ராஜபக்சே. ""ஒருநாடு தனது பகை நாட்டின்மீது போர் தொடுக்கும்போது, வெகு தூரத்தில் கடலில் நிலை கொண்டு அங்கிருந்து ஏவக்கூடிய நவீன எறிகணைகளும் இந்த ஆயுத கொள்முதலில் அடக்கம்'' என்கின்றனர் ராணுவத்தினர். இந்தச்சூழலில், ""தமிழர்களை பாதுகாக்கவும் ராஜபக்சேவின் இறுதி யுத்தத்தை எதிர்கொள்ளவும் தயாராகிவிட்டார் பிரபாகரன். இதற்காக 2 வித வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த வியூகங்களுக்கான செயல்வடிவம் கொடுக்கும் இறுதிகட்ட ஆலோசனைகளை முக்கிய தளபதி களுடன் நடத்திக்கொண்டிருக்கிறார் பிரபாகரன்'' என்கிற தகவல்கள் முல்லைத்தீவிலிருந்து கிடைக்கின்றன.

இதுகுறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களிடம் நாம் பேசியபோது, ""முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 5 லட்சம் தமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் புலிகளுக்கு இருக்கிறது. இதற்காக மக்களை பாதுகாக்கும் நிர்வாக நடவடிக்கைகளையும் ராணுவ நடவடிக்கைகளையும் ஒருசேர செய்வதற்கு முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபராக ராஜபக்சே வந்ததற்குப்பிறகு, இதுவரை வலிந்த தாக்குதலை புலிகள் நடத்த வில்லை. தற்காப்பு தாக்குதலை மட்டுமே நடத்திவந்தனர். தற்போது, முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக இறுதி யுத்தத்தை துவக்கி விட்டது இலங்கை ராணுவம். இனியும் தற்காப்பு தாக்குதலை நடத்துவதில் பய னில்லை என்று உணர் கிறார் பிரபாகரன். வலிந்த தாக்குதல் (தாங்களாகவே திட்ட மிட்டு முன்வந்து தாக்குதல்) மட்டுமே தம்மக்களை பாது காக்கும் என்கிற முடிவுக்கு வந்து, அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதாவது, கடந்த காலங்களில் இப்படிப்பட்ட வலிந்த தாக்குதல்களுக்கு "ஓயாத அலைகள்' ஒன்று, இரண்டு, மூன்று என பெயரிட்டு நடத்தி வெற்றி கொண்டிருக்கிறார் பிரபாகரன். "ஓயாத அலைகள்' ஆபரேஷன் இதுவரை தோல்வியை சந்தித்த தில்லை.

அந்த வகையில், தற்போது திட்டமிட்டிருக்கும் ஆபரேஷனுக்கு பெயர் "அணையாத தீபம்'. கடந்த காலங்களில் நடத்தப்பட்ட "ஓயாத அலைகள்' ஆபரேஷன் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உண்டு. மூன்று ஓயாத அலைகள் இணைந்து தாக்குதல் நடத்தினால் எப்படிப்பட்ட உக்கிரமான தாக்குதல் உருவாகுமோ அத்தகைய வலிமையை "அணையாத தீபம்' ஆபரேஷனில் காட்டுவதுதான் புலிகளின் முதல்வியூகம். இந்த உக்கிரமான தாக்குதல்களுக்குப் பிறகு புலிகளை பேச்சுவார்த்தைக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி ராஜபக்சே அழைக்கும் சூழல் உருவாகும்.

தற்போது, ராஜபக்சே முரண்டுபிடிப்பதுபோல, சந்திரிகா அதிபராக இருந்தபோது அவரும் முரண்டு பிடித்தார். அப்போது, தளபதி பால்ராஜ் தலைமையில் ஆனையிறவை நோக்கி இடைவிடாமல் 72 மணிநேரம் உக்கிரமான தாக்குதல் நடத்தி ஆனையிறவை மீட்டெடுத்தார் பிரபாகரன். மிரண்டுபோனார் சந்திரிகா. அந்தச்சூழலில் புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள் என்று கோரிக்கை வைத்தன சர்வதேச நாடுகள். ஆனாலும் முரண்டுபிடித்தார் சந்திரிகா.

அடுத்த ஓரிரு மாதங்களில் கட்டநாயகே விமான நிலையத்தின் மீது அட்டாக் நடத்தி, தங்களின் ராணுவ வலிமையை மீண்டும் புலிகள் நிரூபிக்க, அதன்பிறகே பேச்சுவார்த்தைக்கு நிபந்தனையின்றி அழைத்தார் சந்திரிகா. அதுபோன்ற சூழல்தான், "அணையாத தீபம்' ஆபரேஷனை பிரபாகரன் நடத்தும்போது ராஜபக்சேவிற்கு உருவாகும்'' என்று முதல் வியூகத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் நம்மிடம் பேசியவர்கள், ""சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய பிராந்தியத்தின் வல்லரசு நாடுகளின் ஆயுத உதவி மற்றும் ராணுவ வல்லுநர்களின் மதிநுட்பம் இரண் டையும் ஒருங்கே பெற்று வருவதால் தான் ராஜபக்சேவின் ராணுவ நடவடிக் கைகள் மனிதநேய மற்ற முறையில் போய்க் கொண்டிருக் கிறது. குறிப்பாக, இலங்கை மீதான ஆதிக்கம் சீனாவுக்கு அதிகம். இதற்குக் காரணம், திரிகோணமலையில் சீனா நிலை கொண்டிருப்பதும் சீனாவிற்குத் தேவையான எண்ணெய் சப்ளை ரூட் திரிகோணமலை துறைமுகம் வழியாக நடப்பதும்தான். இதற்காகவே, இலங்கை அரசோடு இணைந்து புலிகளை அழிக்கும் யுக்தியை கையிலெடுத்துள்ளது சீனா. புலிகளை அழித்துவிட்டால் இலங்கையில் தங்களது ஆக்டோபஸ் கால்களை எளிதாக பரப்பிவிட முடியும் என்பது சீனாவின் திட்டம்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஒபாமா இன்னும் பதவியேற்காததால், இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாமல் நிலைமைகளை மட்டும் கண்காணித்து வருகிறது அமெரிக்க அரசு. ஒபாமா பதவியேற்றுவிட்டால் அமெரிக்காவும் இலங்கை விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தும். அமெரிக்காவின் பகை நாடுகள் இலங்கைக்கு உதவுகிறபோது, மனித உரிமை மீறல் என்பதை மையமாக வைத்து புலிகளுக்கு ஆதரவு கரத்தை அமெரிக்கா நீட்டலாம். இதன்மூலம், தெற்காசிய பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை விரும்பாத சீனா, ஒபாமா பதவியேற்பதற்கு முன்பே புலிகளை ஒழித்துவிட்டு இலங்கையில் இன பிரச்சனையே இல்லை என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டால் அமெரிக்காவின் தலையீட்டினை தடுத்துவிட முடியும் என்கிற கண்ணோட்டத்தில்தான் இலங்கை அரசோடு இணைந்து இறுதி யுத்தத்தை நடத்துகிறது சீனா.

இந்தியா உட்பட இலங்கை அரசுக்கு ஆதரவாக நிற்கும் தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு எதிராக... எதிர்த்து நிற்க ஐரோப்பிய நாடுகளின் (பிரிட்டன், ஜெர்மனி, ஸ்விஸ், நார்வே போன்ற நாடுகள்) ஒட்டுமொத்த ஆதரவைப்பெறும் முயற்சியை எடுத்து வருகின்றனர் புலிகள். ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்கு தடை விதித்துள்ள போதிலும், விடுதலைபோராட்டத்திற்கான ஆதரவு, மனித உரிமைமீறல்களுக்கு எதிரான நிலை, ஜனநாயகத்தை வலுப்படுத்தவேண்டிய சூழல் ஆகிய கண்ணோட் டத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் செயல்படுவ தால், "தடை' ஒன்றும் தடையாக இருக்காது.

அதனால் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைப்பெறும் முயற்சியில் இறங்கியுள்ள புலிகள், ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டி புலம்பெயர்ந்த தமிழர் களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர். அதில் "களத்தில் நிகழும் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைப்பெறும் முயற்சி யில் அழுத்தம் கொடுங்கள்' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆக... ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு இலங்கை அரசின் இறுதி யுத்தத்தை முறியடிக்க திட்ட மிட்டுள்ளார் பிரபாகரன். இத்தகைய ராஜதந்திர நடவடிக்கைகள்தான் அவரின் இரண்டாவது வியூகம்'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள்.

ஆக... அரசியல்ரீதியான தீர்வினை ஏற்படுத்த விரும்பாமல், ராணுவ நடவடிக்கை களை நடத்திவரும் ராஜபக்சேவிற்கு, முதல்கட்டமாக கடிவாளம் போட...

"அணையாத தீபம்' ஆபரேஷனை துவக்கி அதன்மூலம் ஐரோப்பிய நாடு களின் ஆதரவைப்பெற இறுதிகட்ட ஆலோசனையில் முடிவு செய்துள்ளார் பிரபாகரன். அந்த வகையில், அணையாத தீபத்தின் முதல் இலக்கு... திரிகோண மலையை மீட்பதாக இருக்கும் என் கின்றது முல்லைத்தீவு தகவல்கள்.

நன்றி : நக்கீரன்

 

http://thamilar.blogspot.com/2009/01/blog-post_9136.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP