சமீபத்திய பதிவுகள்

இலங்கையில் தமிழினமே அழிகிறது- இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

>> Friday, January 23, 2009

இலங்கையில் தமிழினமே அழிகிறது- இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
 
இலங்கையில் அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை காப்பாற்ற இந்திய அரசாங்கத்துக்கு இறுதி வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில்  இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு  தீர்மானம் கொண்டு வந்தது.
தீர்மானம் மீது பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் உரையாற்றினர். இறுதியாக தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி உரையாற்றினார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் நடைபெறுகின்ற இனவெறிப் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த சபையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜி.கே.மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க.சார்பில் செங்கோட்டையன் ஆகியோர் தங்களின் கருத்துக்களை எடுத்துக்கூறியிருக்கின்றனர்.
இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்று இந்த மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்கு காரணமே - கடந்த காலத்தில் பலமுறை சட்டப்பேரவையிலும், அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சியின் பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் - எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழினத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒருமுறை இன்று மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான்.
இதை ஏன் கடைசியாக ஒருமுறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் - பலமுறை இந்த சபையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இதுதான் நேரம் என்று ஒருவரையொருவர் மறைமுகமாகவோ, ஜாடையாகவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நமது கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கின்றோம்.
இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையின் முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டும் என்று நான் காலையில் நமது நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக்கொண்டேன். சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட - தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவில் பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் - நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர்பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நமது கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.
ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939 ஆம் ஆண்டு - ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். "இந்தியன் இன் சௌத் ஏசியா" என்ற நூலில் - அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இந்தியாவுக்கு வெளியே வாழ்கின்ற இந்தியர்களைப் பற்றி - அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி.
"இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்று இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்" என்று நேரு அவர்கள் 1939 ஆம் ஆண்டு சொன்னதைத்தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன். நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு எந்த இந்தியாவில் முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ - அந்த இந்தியத் திருநாடு இப்போது முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி - நான் எனது தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.
"இலங்கையில் தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.
குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணியாக, பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.
ஐயோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே -பூண்டோடு அழிகின்றனரே
மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் - பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப் போகின்றோம்?
இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம். நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயற்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; - உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்கள் ஆட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.
கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!
இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி.
எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.
இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படாவிட்டால் ஆளும் கட்சியான தி.மு.க. பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டத்தில் விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால்தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது - இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் - அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழீழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி - மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் - "ஜயகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது - இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்" என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

 

http://www.puthinam.com/full.php?2aYQrNe0d1i4L0ecLC4Y3b4H8GK4d2e0j2cc2ImY3d435UO2b02YNm3e

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP