சமீபத்திய பதிவுகள்

ஈழத்தில் உயிர்பலி புலம்பெயர்தேசத்தில் தினவெடுக்கும் துரோகிள்

>> Monday, January 26, 2009

 
நீங்களும் நாங்களும் நினைப்பது போல் யுத்தம் முடிந்தால் சரி எல்லாம் வழமைக்குத் திரும்பி விடும். யாழ்தேவியில் யாழ்ப்பாணம் போய் கசூரினாவில் குளித்து கூவிலில் கள்ளடித்து பருத்தித்துறையில் புட்டும் கணவாயக்கறியும் உண்ணலாம் என்பது சிந்தனைக்கு மட்டும் தான். புலிகள் தோற்றால் போதும் எல்லாம் கிடைத்துவிடும் என்று காத்துக்கிடக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் புலிகள் வெல்லும் வரை பொறுத்திருப்போம் என புலம்பெயர் தேசத்தில் தினவெடுக்கும் தோள்களுக்கும் இந்த மனித அவலங்கள் புரியாதவை.

முல்லைத்தீவு - பரந்து விரிந்த உலகின் கவனம் நிலைகுத்தி நிற்கும் பிரதேசம்:

வடக்கே காங்கேசன்துறை முதல் கிழக்கே பொத்துவில் வரை விரிந்து பரந்த தமிழீழ தனியரசுக்கான போரை முடிவுறுத்துவதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் புளகாங்கித அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

கள நிலமைகள் குறித்து பக்கச்சார்பற்ற அறிக்கைகள் கிடைக்காதமை ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் வழிசமைத்து விடுகின்றன.

தோற்கடிக்க முடியாத போராட்ட சக்தியாக தமிழ்த் தேசிய ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட புலிகள் எல்லாவற்றையும் இழந்து விட்டு போர்க்களத்தில் நின்ற இராவணனை ஒத்த நிலையில் இருப்பதாக, இராமாயணத்தில் இராமனுடன் சேர்ந்ததால் முதலில் உயிரிரையும் பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்க முடிந்த விபீசண வழித் தோன்றல்கள் கொக்கரித்து மகிழ்கின்றார்கள்.

ஆனாலும் தோற்றுப் போவதற்கான போர் அல்ல இது. தமிழினம் விடுதலை பெறுவதற்கான எழுச்சி என்று எஞ்சிய நம்பிக்கைகளுடன் வாதிடும் குரல்களையும் காணமுடிகின்றது.

என்ன நடக்கின்றது...இரு தமிழர்கள் சந்தித்துக் கொள்ளும் போது பரவலாக கேட்க முடிகின்ற வார்தைகள்.

பதில் தெரியாமல் அவரவர் எண்ண அலைகளுக்கேற்ப நிலைமைகளைப் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கும் போக்கே எங்களில் பலரிடம் இருக்கின்றது.

உலக இயங்கியல் பற்றிய அறிவினை பெறுவதற்கும் அல்லது அது குறித்து ஆய்வதற்கும் எமக்கு நேரமிருப்பதில்லை.

அதனால் கிடைக்கின்ற அவசர விடுமுறைகளில் ஆங்காங்கே முளைத்து முகிழ்ந்து கிடக்கும் இணையங்களில் மேய்ந்து நிலவரங்களை தேடுகின்றோம்

புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு என்ற இரு பிரிவுகளில் தமிழ் ஊடகங்களில் பெரும்பாலானவற்றை வகைப்படுத்த முடிவது தமிழனின் சாபம்.

கொழும்பு - அரசியல் பேதங்ளை மறந்து ஒன்றாய் எழுந்து வன்னிப் போருக்கான ஆதரவை பலமாய் பதிவு செய்து வருகின்றது

அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஹெல உருமய, என சிங்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒரணியில் திரண்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்தால் படுகொலை செய்யப்படும் அல்லது அச்சுறுத்தப்படும் சிங்கள ஊடகவியலாளரில் பலரும் கூட தமிழன் கொல்லப்படுவது சரியானது தான் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பது மஹிந்த அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி.

வெறுமனே அரசியல் கோட்பாட்டு வசனங்கள் மூலமும் அரசியல் சாணக்கியத்தனங்கள் மூலமாகவும் யுத்தத்திற்கு எதிரானவர்கள் என்ற ஆடை அணிந்திருந்த ஐக்கிய தேசிய கட்சி இன்று ஆடை களைந்து தமது நிர்வாணத்தில் நிஜம் காட்டி நிற்கின்றது.

வன்னியில் தினமும் 20 ற்கும் குறையாத உயிர்ப்; பலிகளும் 100ற்கும் அதிகமான காயமடைதல்களும் நடந்தேறி வருகின்றன.

அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்களில் 160 பேர் வரை இதுவரை பலியாகியிருக்கின்றார்கள.; மேலும் 700 பேர் காயமடைந்திருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 20ம் திகதி பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று 25ம் திகதி வரையான உயிர்பலி நிலவரங்கள்தான் இவை.

ஒரு குடும்பம் வாழக் கூடிய பிரதேசத்தில் ஆறு குடும்பங்கள் வாழும் மனித நெருக்கடி நிலை வன்னியில் தோன்றியுள்ளது.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் மட்டும் 400 பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் தோற்றால் போதும் எல்லாம் கிடைத்துவிடும் என்று காத்துக்கிடக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் புலிகள் வெல்லும் வரை பொறுத்திருப்போம் என புலம்பெயர் தேசத்தில் தினவெடுக்கும் தோள்களுக்கும் இந்த மனித அவலங்கள் புரியாதவை.

இந்தப் போர் வெறுமனே புலிகளையும் அதன் தலைமையினையும் அழிப்பதற்கான தொன்றல்ல என்பது இன்னும் எங்களில் பலருக்கு புரியாதிருப்பது தான் வேதனை.

புலிகளின் கதை முடிந்து விட்டதாக அறிவிப்பு வரும் பொழுதில் டக்ளசும், சங்கரியும், கருணாவும் பிள்ளையானும் சந்தோசத்தை கொண்டாட உயிரோடிருக்க மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம்.

தமிழ் இனத்திற்கான அனைத்து பிரதிநிதித்துவத்தையும் முதலில் அழிப்பது பின்னர் எழுச்சி பெற எவருமே இல்லாத வகையில் தமிழினத்தை முற்றாக அழிப்பது இது தான் தென்னிலங்கையின் அறிவிக்கப்படாத தீர்மானம்.

நீங்களும் நாங்களும் நினைப்பது போல் யுத்தம் முடிந்தால் சரி எல்லாம் வழமைக்குத் திரும்பி விடும். யாழ்தேவியில் யாழ்ப்பாணம் போய் கசூரினாவில் குளித்து கூவிலில் கள்ளடித்து பருத்தித்துறையில் புட்டும் கணவாயக்கறியும் உண்ணலாம் என்பது சிந்தனைக்கு மட்டும் தான்.

புலத்தில் இருந்து புலிகளின் தோல்விக்கான நாட்களை எண்ணி மஹிந்த அரசின் செய்திகளில் சிந்து பாடித்திரியும் தோழர்களே உங்கள் சிந்தனைகள் மனிதம் பற்றியவை என்றால் மாற்றுக் கருத்துக்கள் பற்றியதென்றால் இவை பற்றியும் ஆய்ந்து எழுதுங்கள்.

புலிகளின் தோல்விக்கான காரணிகளை சரியோ தவறோ நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கின்றோம், புலிகளின் தோல்வி என்று ஒன்று ஏற்பட்டால் அதற்கு பின்னரான நிலை குறித்து உங்கள் மனச்சாட்சிக்கு முரணாகாமல் கருத்து பகிர முடியுமா ?

இது புலிகளையும் யுத்தத்தையும் நியாயப்படுத்தும் நோக்கம் கொண்ட வாதம் அல்ல ஆனால் புலிகளுக்கும் யுத்தத்திற்கும் அப்பால் தமிழினத்தின் இருப்பு குறித்த விழி;ப்புணர்வு போதவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுந்த தேடல்.

அமெரிக்க யுத்த ஆலோசனைகள், ஜப்பானிய நிதி உதவிகள் இந்தியாவின் புலனாய்வுத் தகவல்கள், பாகிஸ்தானின் பல் குழல் எறிகணைகள், சீனாவின் யுத்த தாங்கிகள் சிங்கள ஏழைத் தாய்மாரின் ஆயிரம் ஆயிரம் பிள்ளளைகள், இன்னும் இன்னோரென்ன பல காரணிகளின் பலத்தோடு பொருதும் இலங்கைப் படையை எதிர்கொள்வது இயலாது என்பதுதான் யதாhத்தம்.

இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் ஒழிய தமிழினத்தின் அழிவை தள்ளிப்போட்டு விட முடியாது.

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உலக பரப்பில் விரிந்து வாழும் பலஸ்தீனியர்கள் ஒட்டுமொத்தமாய் குரல் கொடுக்கின்றார்கள். தாங்கள் வாழும் நாடுகளின் அரசாங்கங்களை அசைக்கும் வகையில் போராட்டம் நடத்துகின்றார்கள்.

ஆனால் நாங்கள்.. ஆங்காங்கே நடக்கும் போராட்டங்களையும் புலி ஆதரவு முத்திரை குத்தி நசுக்கி விடுகின்றோம்.

புலி எதிர்ப்பு மற்றும் மாற்றுக் குரல் பற்றி உரத்து பேசும் நண்பர்களே இவையிரண்டிற்கும் அப்பால் ஒரு இனத்தின் இருப்பு என மிகப்பெரிய விசயம் இருப்பதை நீங்கள் மிக இலகுவாக மறந்து விடுகின்றீர்கள்.

இன்று சிங்கள தேசம் எப்படி அரசில் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒருமித்து நிற்கின்றதோ அதேபோன்ற நிலை தமிழர்கள் மத்தியில் ஆகக்குறைந்தது இலங்கையில் பிறந்து ஈழத்தமிழர்கள் என்று அழைக்கப்படும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்.

80களில் இடம்பெற்ற ஜே.வி.பியின் புரட்சியும் அதனை சிங்கள அரசு கையாண்ட விதமும் எவரும் அறியாததல்ல.

எனது தலைவனை ஆயிரக்கணக்கான எனது தோழர்களை கொன்றது இந்த அரசு தான் என்று வெறுத்து ஒதுக்காமல் எவ்வாறு ஜே.வி.பி தனக்கான அரசியலை மாற்றி அமைத்துக் கொண்டதோ அதேபோன்று கடந்த கால கசப்புகளை மறந்து தமிழினம் ஒன்று படுவது மட்டுமே இனி தமிழினம் வாழ்வதா ? வீழ்வதா என்பதை தீர்மானிக்குமே தவிர வன்னியில் செத்துமடியும் சிங்கள சிப்பாய்களின் எண்ணிக்கைகளில் அல்ல.

தீபம் அணையாமல் இருக்க காற்று வீசமால் இருப்பது மட்டுமே போதுமானதல்ல தீபம் தொடர்ந்து எரிவதற்கு ஆகுதியாக எண்ணெயும் வேண்டும்.
http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232985133&archive=&start_from=&ucat=&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP