சமீபத்திய பதிவுகள்

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 3 நாட்களாக தொடர் பீரங்கித் தாக்குதல்: "அது ஒரு இராணுவ இலக்கு" என்கிறார் கோத்தபாய

>> Wednesday, February 4, 2009

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையை இலக்கு வைத்து கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினர் கடுமையான பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் சிறிலங்கா தாக்குதல்களில் படுகாயமடையும் வன்னி மக்கள் சிகிச்சை பெற முடியாத சூழலை ஏற்படுத்தி, தனது இனப் படுகொலை போரை விரிவுபடுத்துகின்றது சிறிலங்கா. அதேசமயம்,  புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நடத்தும் இந்த தொடர் தாக்குதலை, அது ஒரு இராணுவ இலக்கு என்று நியாயப்படுத்தி இருக்கின்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைக் கூடம் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் அது கடும் சேதத்திற்குள்ளானது.
புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணிமனையினை இலக்கு வைத்து நேற்று முன்நாள் திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில், அனைத்துலுக செஞ்சிலுவைச் சங்கத்தினதும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினதும் பணியாளர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கடும் பீரங்கித் தாக்குதலில் மருத்துவமனையின் பெண் நோயாளர் பகுதியில் பெருமளவிலான எறிகணைகள் வீழ்ந்து வெடித்து 9 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனை வளாகப் பகுதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியகங்களும் இருக்கின்றன என்பதும், மருத்துவமனை மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி உறுதிப்படுத்தியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதேவேளை, பிரித்தானிய "ஸ்கை" ஒலிபரப்பு நிறுவனத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் - "புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஒரு நியாயபூர்வமான இராணுவ இலக்கு" என்றும், அதன் நடத்தப்படும் தாக்குதல்கள் சரியானதுதான் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச, பொதுமக்கள் அங்கு இல்லை இருப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்தான் என்றார். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் புலிகள் தான் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் அங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும் என்ற தேவை இல்லை" என்று தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச, படையினரின் தாக்குதல் இலக்கு ஒருபோதும் தவறியது கிடையாது எனவும் கூறினார்.
இதேவேளை, கடந்த வாரம் உடையார்கட்டு மருத்துவமனை தாக்கப்பட்டு தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பி.பி.சி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நானயக்கார, புதுக்குடியிருப்பில் மருத்துவமனை இயங்கும் போது மக்கள் ஏன் உடையார்கட்டு மருத்துவமனைக்கு போக வேண்டும்? எனக் கேட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP