சமீபத்திய பதிவுகள்

வன்னி பதுங்கு குழிகளைப் பார்த்து வரட்டும்

>> Monday, February 2, 2009

வன்னி பதுங்கு குழிகளைப் பார்த்து வரட்டும். அங்கே நடப்பது போர் அல்ல... தமிழின அழிப்பு என்னும் உண்மை புரியும்!

[ nts;spf;fpoik, 2 rdthp 2009 ] [ khtp]; ]

 

அங்கே அந்த இலங்கை அரசு தமிழீழ மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டு மழை பொழிவது வழக்கம். வீடுகள்தான் என்றில்லை, வயல்வெளிகள் எரிகின்றன. வழிபாட்டுத் தலங்கள் சிதைகின்றன. பள்ளிக்கூடத்திலும், மருத்துவமனையிலும்கூட குண்டுகள் விழுந்துள்ளன. எனவே, காட்டுப் பகுதிதான் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி, அந்தக் குடும்பங்கள் அங்கே கூடாரங்கள் அமைத்துள்ளன.
 
ஆனாலும், உணவுக்கு என்ன செய்வது?
 
கனிகளே உணவு. மழையே குடிநீர். பாதி வயிறு நிரம்பும். மீதி வயிற்றைப் பசி நிரப்பும்.
 
ஒரு நாள் தொலைதூரம் நடந்து நிவாரணமாகக் கிடைத்த கொஞ்சம் அரிசியை அந்தக் குடும்பங்கள் வாங்கி வருகின்றன. ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, 3 பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளின் பல நாள் பசியை அந்தத் தாய் அறிவாள். காட்டு விறகுகளைப் பொறுக்கி வந்து, நிவாரண அரிசியை உலையில் போட்டு அந்தக் குடும்பம் பொங்குகிறது. எத்தனை நாளாயிற்று... இன்று பசியாறலாம் என்று காத்திருக்கின்றனர் பிள்ளைகள்.
 
ஆயிற்று உணவு சமைத்து ஐவரும் வட்டமாக அமர்ந்து உண்ணத் தொடங்குகின்றனர். உணவு மட்டுமன்று, நெடு நாட்களுக்குப் பிறகு சிரிப்பும் அவர்கள் முகத்தில்!
 
வந்தோரை வாழவைத்த தமிழினம் இன்று சொந்த நாட்டில் சோறு கண்டு மகிழ்கிறது. ஓரிரு வாய் உணவுதான் உண்டிருப்பார்கள். அதற்குள் வானில் விமானங்கள் வட்டமிடும் சத்தம். 'இங்கடயும் வந்துட்டாங்களா பாவிகள்' என்று கலவரத்துடன் அப்பா வெளியில் வந்து பார்க்கிறார். சற்றுத் தொலைவில் குண்டுகள் விழத் தொடங்கிவிட்டன.
 
'ஓடுங்கோ... ஓடுங்கோ, பதுங்குகுழிக்கு ஓடுங்கோ பிள்ளையளே!' - தாய் அலறுகிறாள். 3 பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தகப்பன் பதுங்கு குழி நோக்கி ஓடுகின்றார். 'அம்மா நீங்களும் வாங்களேன்' என்கின்றனர் பிள்ளைகள். 'நீங்க ஓடுங்கோ... நான் இதோ வாரேன்' என்கிறார் அம்மா.


 


 
உணவை அப்படியே வைத்துவிட்டுப் போனால், நாய்களோ, பறவைகளோ வந்து அதனைச் சேதப்படுத்திவிடும். எனவே உணவை எடுத்து ஒழுங்குபடுத்திவிட்டுப் பிறகு பதுங்கு குழி நோக்கி ஓடுகிறாள் தாய்.
 
கூடாரத்துக்கும் பதுங்கு குழிக்கும் இடையே அவள் வந்துகொண்டு இருக்கும்போது ஒரு குண்டின் சிதறல் அவளை விரைந்து வந்து தாக்குகிறது. தகப்பனும் பிள்ளைகளும் பார்த்துக்கொண்டே இருக்க... துடிதுடித்துச் சாகிறாள் அவள். நால்வரும் கதறித் துடிக்கின்றனர். ஒருவேளை உணவைத் தன் பிள்ளைகளுக்குப் பத்திரப்படுத்த முயன்று தன் உயிரையே மாய்த்துக்கொண்ட தாய் அவள்! அதைப் பார்த்த பிள்ளைகளில் கடைசிப் பிள்ளையான மகளுக்கு மனநலம் பாதிக்கப் பட்டுவிட்டது


 

இது கற்பனைக் காட்சியன்று. ஒவ்வொரு நாளும்  பதுங்கு குழியை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. லி, ஜி ஆகிய வடிவங்களிலும் வட்ட வடிவிலும் அவை அமைக்கப்படுகின்றன. வான்வெளித் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவே இந்தக் குழிகள் உதவும். எனினும் தாழப் பறக்கும் விமானங்கள், பதுங்கு குழியைக் குறிவைத்தே குண்டுகள் வீசும். எனவே அவற்றின் பார்வையில் படாமல் தப்புவதற்காக மூடு பதுங்குகுழிகளை ஏற்படுத்துகின்றனர். குண்டுவீச்சினால் முறிந்துகிடக்கும் பனைமரங்களும், தென்னை மரங்களும் குழிகளின் மீது அடுக்கப்படுகின்றன. அவற்றின் மீது மணல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன. அப்போது பதுங்குகுழிகள் பார்வைக்குச் சட்டென்று தெரிவதில்லை. ஆனால், உட்பகுதி முழுவதும் இருட்டாகிவிடும். உள்ளே இருப்பவர்கள் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க முடியாது.


 
ஆதலால், சின்னச் சின்னத் துவாரங்களை ஏற்படுத்திக்கொள்கின்றனர். சுவாசிப்பதற்கும் சின்ன வெளிச்சத்துக்கும் அவை உதவுகின்றன. சில மணி நேரத் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்ளலாம். சமயங்களில் வாரக்கணக்கில் தாக்குதல் தொடர்ந்தால் மக்கள் உள்ளேயேதான் இருக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு மட்டும் வெளியே ஓடி வந்து, மீண்டும் உள்ளே சென்றுவிட வேண்டும். அந்தக் கொடுமையான நாட்களில் குழந்தைகளும் பெரியவர்களும் எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாவார்கள் என்பதை அவர்கள் விளக்கும்போது நம் கண்கள் கலங்குகின்றன. உட்புறத்திலேயே குழந்தைகள் பிறந்த நிகழ்வுகளும் சிறுமிகள் சிலர் பூப்படைந்த நிகழ்வுகளும் உண்டு என்கின்றனர்.
 
மழைக் காலங்களில் பதுங்கு குழிகளுக்குள் தண்ணீர் நிரம்பிவிடும். சின்னச் சின்ன பூச்சிகளில் இருந்து பெரிய பாம்புகள் வரை உள்ளே போய் அடைந்துகொள்ளும் அபாயமும் உண்டு. திடீரென்று விமானம் வரும் நேரத்தில் அதை ஒழுங்கு செய்ய முடியாது. இப்படி பதுங்கு குழிகளைப் பராமரிப்பதற்கே ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
 
இப்போதெல்லாம் 500 கிலோ முதல் 800 கிலோ வரையிலான குண்டுகள் போடப்படுகின்றன. அவை நேரடியாகக் குழிகள் மீதோ, குழிகளுக்கு அருகிலோ விழுந்தால் அனைவருக்கும் அதுவே சவக்குழியாக ஆகிவிடும். கல்லறையாகவும் மாறியுள்ளன.
 
சிங்கள அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தவில்லை. போராளிகள் மீது மட்டும்தான் போர் தொடுத்துள்ளது என்று பொய்யுரைப்போர், ஒரு முறை அங்கு சென்று அந்தப் பதுங்கு குழிகளைப் பார்த்து வரட்டும். அங்கே நடப்பது போர் அல்ல... தமிழின அழிப்பு என்னும் உண்மை புரியும்!
 

 http://www.nitharsanam.com/?art=26504

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP