சமீபத்திய பதிவுகள்

அலை அலையாக தாக்கிய புலிகள்; முறியடிப்பினை நெறிப்படுத்திய சரத் பொன்சேகா: கொழும்பு ஊடகம்

>> Sunday, February 8, 2009

 
 
முல்லைத்தீவு பகுதியில் கடந்த வாரம் தமிழீழ விடுதலைப் புலிகள்  அலை அலையாக வந்து தாக்குதலை நடத்தியதாகவும் இத்தாக்குதலை முறியடிப்பதற்கு இராணுவத் தலைமையகத்தில் இருந்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்குதலை நெறிப்படுத்தியதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக "லக்பிம" வார ஏட்டில்  வெளிவரும் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
சிறிலங்கா அரசாங்கம் தனது  61 ஆவது சுதந்திர நாளை கொண்டாடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கையில் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் பாரிய தாக்குதலினை நடத்தினர்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை பொலித்தீன் பைகளில் பொதி செய்து வருகின்றனர். எனவே முல்லைத்தீவு நீரேரியை கடந்து தாக்குதலினை நடத்தக்கூடும் என கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறையினர் எச்சரித்திருந்தனர்.
59 ஆவது படையணியின் முன்னனி பாதுகாப்பு நிலைகள் கடல் நீரேரியை நோக்கியே அமைந்துள்ளன.
எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.09) அதிகாலை விடுதலைப் புலிகளின் 30 கரும்புலிகள் படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவியிருந்தனர். அவர்கள் படையினரை ஏற்றிச் சென்ற உழவூர்தி மற்றும் பேருந்து என்பனவற்றை முதலில் தாக்கியழித்தனர்.
இதனைத் தொடர்ந்து பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்கள் படையினரின் நிலைகள் மீது மழை போல பொழியப்பட்டன.
எறிகணைகள் வீழந்து வெடித்த போது ஏறத்தாழ 700 தொடக்கம் 1,000 வரையான விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடங்கினர்.
59-3 ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் இந்த மோதலில் சிக்கி கொண்டது.
இதனைத் தொடர்ந்து, படையினர் 3 கிலோ மீற்றர் தூரம் பின்நகர்ந்தனர். மோதல் நடைபெற்ற பகுதிக்கு மேலதிக படையணிகள் நகர்த்தப்பட்டன. 53 ஆவது படையணியின் வான்நகர்வு பிரிகேட்டைச் சேர்ந்த படையினரும் அங்கு நகர்த்தப்பட்டனர்.
 
முல்லைத்தீவு நகரத்தை கைப்பற்றுவதே விடுதலைப் புலிகளின் திட்டம்.

இராணுவம் பெருமளவில் பல்குழல் வெடிகணைகள் மற்றும் பீரங்கி எறிகணை தாக்குதல்களை நடத்தியதுடன் வான்படையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் முதலில் நடத்திய அதிர்ச்சிகரமான தாக்குதலைத் தொடர்ந்து பெருமளவிலான படையினர் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன படையினரின் எண்ணிக்கை சர்ச்சைக்குரிய தகவல் என்பதனால் அதனை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை கடல் நடவடிக்கைகளை வழிநடத்த, கேணல் பானு மற்றும் கேணல் சொர்ணம் ஆகியோர் தரை நடவடிக்கைகளை வழி நடத்தியிருந்தனர்.
 
59 ஆவது படையணியை முல்லைத்தீவு நகரத்தில் இருந்தும், நடவடிக்கை படையணி நான்கை ஒட்டுசுட்டான் வரையிலும் பின்நகர்த்துவதற்கு அவர்கள் முயற்சித்திருந்தனர்.
படையினரின் பதில் நடவடிக்கைகளை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தலைமையகத்தில் இருந்து நேரடியாக நெறிப்படுத்தினார்.
இரண்டாவது நாள் விடுதலைப் புலிகளின் கரும்புலிகள், படையினரின் முன்னணி நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் மூலம் தாக்குதலை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் அணிகள் தாக்குதலை உக்கிரப்படுத்தியிருந்தன. இராணுவம் தனது சிறப்பு அணிகளையும், கொமோண்டோ அணிகளையும் அங்கு நகர்த்தியது.
கடந்த புதன்கிழமை (04.02.09) அதிகாலை வரை மோதல்கள் தொடர்ந்தன.
இராணுவத் தளபதி கடந்த புதன்கிழமை அதிகாலை 3.00 மணிவரை கட்டளை தலைமையகத்தில் இருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார்.
 
எனினும் பாதுகாப்பு அமைச்சு தாக்குதல் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.
விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் தொடர்பாக மூன்று நாட்களாக தகவல் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.
விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்து வருகின்றது.
எனவே தான் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலினை நடத்தியதனை பொதுமக்கள் அறிவதை அரசாங்கம் விரும்பிவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP