சமீபத்திய பதிவுகள்

ஜுனியர் விகடன் கவர் ஸ்டோரி:'தாய் தமிழகம் எப்படியாவது தங்களைக் காப்பாற்றிவிடும்'

>> Sunday, February 15, 2009

இலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்?: 
''முல்லைத் தீவில் இருக்கும் தமிழர்களை யெல்லாம் கடலில் தள்ளுகிற நாளில் நீங்கள் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுங்கள்!'' என்று ராஜபக்ஷ சிங்களர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த நாளுக்கான ஏற்பாடுகளை இப்போது சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் உள்ள தமிழர்களில், படுகொலை செய்ததுபோக மிச்சம் மீதி இருப்பவர்களை வதை முகாம்களில் நிரந்தரமாகத் தங்கவைப்பதற்கு சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக ஐந்து வதை முகாம்கள் அமைக்கப்பட இருக்கின்றன. ஹிட்லர் உருவாக்கியது போன்ற இந்த வதை முகாம்களில், தமிழர்கள் நிரந்தரமாக சிறை வைக்கப்படுவார்கள். இதற்காக இரகசிய ஆவணம் ஒன்றைத் தயாரித்து சர்வதேச நாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் சிங்கள அரசு சுற்றுக்கு அனுப்பியிருக்கிறது. அதற்காக நிதி திரட்டும் முயற்சியில் அது ஈடுபட்டிருக்கிறது.

முல்லைத் தீவில் கடைசிக்கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு சிங்கள அரசு தயாராகிவிட்டது. அப்படி தாக்குதல் நடத்தப்பட்டால், குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் தமிழர்களாவது கொல்லப்படுவார்கள் என்று எல்லோருமே அச்சம் தெரிவிக்கிறார்கள். அவ்வளவு பேர் கொல்லப்பட்டால், அது சர்வதேச நாடுகளில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தும், அதனால் சிங்கள அரசுக்கு நெருக்கடி உருவாகும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு.

தமிழர்கள் கொல்லப்படுவது வெளியே தெரிந்தால்தானே பிரச்சினை. அதை மூடி மறைத்துவிட்டால், சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகிறது என்ற ரீதியில் ராஜபக்ஷ திட்டம் தீட்டி வருகிறார். முல்லைத்தீவில் நடப்பதை வெளியே தெரிவிக்கும் அளவுக்கு இப்போது புலிகளின் தகவல் தொடர்பு பலமாக இல்லை. சிங்கள இராணுவம் என்ன சொல்கிறதோ, அதுமட்டும்தான் இப்போது வெளியே வருகிறது. இதனால்தான் ராஜபக்ஷ தன்னுடைய கடைசி 'கவுன்ட் டவுனை' ஆரம்பித்திருக்கிறார்.

உண்மை பேசினால் உதை:

போர் நடக்கும் இடங்களில் செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிக்க வேண்டும் என்பது சர்வதேச விதி. அதைக்கூட இப்போது சிங்கள அரசு மதிப்பதற்குத் தயாராக இல்லை. வன்னியில் இருந்து காயம்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பலோடு, அங்கு தங்கியிருந்த செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் இரண்டு பேர் வந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். வன்னியில் சுமார் இருபது பேர் அளவுக்குத்தான் செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் இருந்தார்கள். தற்போது வெளியேறியுள்ள அந்த இரண்டு பேரைத் தவிர, மற்ற எல்லோரும் உள்ளூர்க்காரர்கள்.

இராணுவத்தின் தாக்குதல்களைப் பற்றி உள்ளூர்க்காரர்கள் எவ்வளவுதான் சொன்னாலும், அதை சர்வதேச சமூகம் நம்பாது. வெளிநாட்டவர்கள் சொன்னால்தான் உண்மையென்று நினைப்பார்கள். மருத்துவமனைகளில் குண்டு வீசப்படுவதை செஞ்சிலுவை சங்கத்தினர்தான் வெளியுலகுக்கு எடுத்துச் சொன்னார்கள். அதுவும், தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்துகிறது என்ற தகவல், அவர்கள் மூலம்தான் வெளி உலகுக்கே தெரிந்தது. இதே செய்தியை ஏற்கெனவே விடுதலைப் புலிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை சர்வதேச நாடுகள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. செஞ்சிலுவை சங்கம் இப்படி உண்மைகளை எடுத்துச் சொன்னதும் சிங்களவர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

ராஜபக்ஷவின் தூண்டுதலால் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகம் கொழும்பில் தாக்கி நொறுக்கப்பட்டது. இப்போது செஞ்சிலுவை சங்கத்தினரை இலங்கையை விட்டே விரட்டியடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கள அரசின் அச்சுறுத்தலால், இப்போது வன்னியைவிட்டு வெளியேறுவதென்று செஞ்சிலுவைச் சங்கம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் வெளியேறக்கூடாது என்று தமிழர்களெல்லாம் கெஞ்சிக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை சிங்களப் பத்திரிகையாளர்கள் சிலர் வெளியுலகுக்குத் தெரிவித்து வந்தார்கள். அதில் ஒருவர்தான் லசந்த. அவருடைய படுகொலைக்குப் பிறகு, அங்கிருந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேறி, அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.
நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த 'லங்கா டிசன்ட்' என்ற இணையத்தளம் மூடப்பட்டு விட்டது. இந்நிலையில், சிங்கள அரசின் இன அழித்தொழிப்பு பற்றிய செய்திகள், சர்வதேச செய்தி நிறுவனங்கள் மூலமாகத்தான் வெளியில் கசிந்து கொண்டிருந்தன.

அதிலும் குறிப்பாக பி.பி.சி., சி.என்.என் போன்ற நிறுவனங்கள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்தன. பி.பி.சி. 'தமிழோசை'யின் செய்திகள் இலங்கை வானொலி மூலம் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்ததால், இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள தமிழர்கள் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருந்தது. இதைத் தடுக்கவேண்டும் என்று முடிவு செய்த சிங்கள அரசு, இப்போது பி.பி.சி மறு ஒலிபரப்பை ரத்து செய்து விட்டது. அது மட்டுமல்லாமல் பி.பி.சி., சி.என்.என். போன்ற செய்தி நிறுவனங்களுக்கும் தடை விதித்து விட்டது.

சிங்கள இராணுவம் கொடுக்கின்ற செய்திகளைத் தவிர, இப்போது தனிப்பட்ட முறையில் யாரும் இலங்கையில் செய்தி சேகரிக்க முடியாது என்ற நிலை! அப்படி யாராவது முயற்சித்தால், அவர்களை காலி செய்வதற்கும் சிங்கள அரசு ஏற்பாடு செய்துவிட்டது. இந்தியாவிலிருந்து இலங்கை அரசாங்கத்தால் அழைத்துச் செல்லப்படுகிற பத்திரிகையாளர்கள்கூட, அங்கே சிங்கள இராணுவம் என்ன செய்தியைக் கொடுக்கிறதோ, அதை மட்டுமே வெளியிட வேண்டிய நிலை. இப்படி இப்போதே முழுமையான இருட்டடிப்பு. முல்லைத்தீவில் நடக்கவிருக்கும் மாபெரும் இனப்படுகொலை இனிமேல் வெளியுலகுக்கு தெரியவருவது என்பது சந்தேகமே.

'ஹிட்லரின் மறு உருவம்' என்று ராஜபக்ஷவை தமிழர்கள் வர்ணிப்பதுண்டு. அது பொய்யில்லை. அவர் தன்னுடைய டெக்னிக்குகளை ஹிட்லரிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறார். முல்லைத்தீவில் தற்போது சிக்கிக்கொண்டிருக்கும் தமிழர்களில் குறைந்தது ஐம்பதாயிரம் பேரையாவது கொல்வது... மிச்சமிருப்பவர்களை சிறைப்பிடித்து, நிரந்தரமாக வதை முகாம்களில் அடைத்து வைப்பது என்பதுதான் அவருடைய திட்டம். இதற்காக ஐந்து வதை முகாம்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். வவுனியா மாவட்டத்தில் நான்கு வதை முகாம்களையும், மன்னார் மாவட்டத்தில் ஒரு முகாமையும் அமைப்பதற்கு சிங்கள அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்காக வவுனியாவில் ஆயிரம் ஏக்கர் நிலமும், மன்னாரில் நூறு ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வதை முகாம்களில் முப்பத்தொன்பதாயிரம் தற்காலிக வீடுகள், ஏழாயிரத்து எண்ணூறு கழிவறைகள் மற்றும் தபால் அலுவலகம், வங்கி முதலானவற்றைக் கட்டப்போவதாக சிங்கள அரசு கூறியிருக்கிறது. நாற்பது பள்ளிகளை உருவாக்கப்போவதாகவும் அது சொல்லியிருக்கிறது. இந்தப் பள்ளிகளை கட்டுவதற்காக மட்டும் பதினான்கு மில்லியன் டாலர் நிதியுதவி தேவையென்று சிங்கள அரசு தொண்டு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

வதை முகாம் என்பது என்ன?

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரால் உருவாக்கப்பட்டதுதான் 'வதை முகாம்' என்ற திறந்தவெளிச் சிறைச்சாலை. யூதர்களையும், ரஷ்யர்களையும் சிறைப்பிடித்து அந்த முகாம்களில் ஹிட்லர் அடைத்து வைத்தான். முகாம்களைச் சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டது. அங்கிருந்து எவரும் வெளியேறவோ, தப்பித்துச் செல்லவோ முடியாது. அங்கு அவர்களிடம் கட்டாய வேலை வாங்கப்பட்டது. போதுமான உணவுகூட தரப்படவில்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த முகாம்களிலேயே செத்து மடிந்தார்கள். அப்படிச் சாகிறவர்களை குப்பை கூளங்களைப்போல அள்ளிச்சென்று மொத்தமாகக் குழியில் போட்டுப் புதைத்தார்கள். அங்கிருப்பவர்களில் யாரேனும் சிறிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர்களைப் பிடித்து விஷவாயுக் கிடங்குகளில் போட்டுக் கொன்றார்கள்.
உலக யுத்தம் முடிந்த பிறகுதான் ஹிட்லரின் இந்த கொடூரச் செயல் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. உலகமெங்கும் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத் தியது. அந்தப் படுபாதகமான டெக்னிக்கைத்தான் இப்போது ராஜபக்ஷே பின்பற்ற விரும்புகிறார்.

தமிழர்களுக்கான வதை முகாம்கள்:

ராஜபக்ஷ அமைக்கப்போகும் வதை முகாம்கள் 'மறுவாழ்வுக் கிராமங்கள்' என்ற பெயரில் அழைக்கப்படுமாம். 'அப்படிச் சொன்னால்தான் உலக நாடுகளிடமிருந்து உதவி பெறலாம்' என்பது அவருடைய நரித் திட்டம். இந்தத் திட்டத்துக்கு இந்தியாவின் ஏகோபித்த ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 'இந்த முகாம்களை நிர்வகிக்கப்போவது யார்?' என தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், இலங்கை அரசிடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அதற்கு பதிலளித்த இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ''அங்கே இருக்கப்போகிறவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்களால் எங்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நீங்கள் உணரவில்லையா? சிங்கள மக்களின் உயிர்களோடு நாங்கள் ஒருபோதும் விளையாட முடியாது. எனவே, இந்த முகாம்களை இராணுவம்தான் நிர்வகிக்கும்...'' என்று கூறியிருக்கிறார். இந்த முகாம்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்றும் அதற்காக நிதியுதவி வேண்டுமென்றும் சிங்கள அரசு கேட்டிருக்கிறது.

ஏற்கெனவே, இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாகத்தான் இருக்கிறார்கள். இனி அவர்கள் திறந்தவெளிச் சிறைகளான வதை முகாம்களில் நிரந்தர அடிமைகளாக வைக்கப்படப் போகிறார்கள். நமக்காக வாதாட யார் இருக்கிறார்கள் என்று பரிதவிக்கிறது தமிழினம்.

தற்போது பெயரளவுக்கு தமிழர் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டணியையும் தடை செய்து, அந்த எம்.பி-க்களையும் பதவியிழக்கச் செய்வதற்கு இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. 'தாய் தமிழகம் எப்படியாவது தங்களைக் காப்பாற்றிவிடும்' என்பதுதான் ஈழத்தமிழர்களுக்கு இப்போ திருக்கும் ஒரே நம்பிக்கை!

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7B3b4P9Ei4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

4 கருத்துரைகள்:

Anonymous February 16, 2009 at 2:07 AM  

இனி என்ன நடக்கும் ஈழத்தில் ?
ஈராக்கில் கால் உடைந்து(செருப்படிபட்டு ) பொருளாதார கையும் உடைந்து பரிதாபமாக படுக்கையில் இருக்கும் அமெரிக்கா இனி சர்வதேச விவகாரங்களில் தலையிடாது என கணித்து , தன் ஆதிக்கத்தை பரப்ப, பெளத்த தீவிரவாதம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது சீனா. பஞ்சசீலம் என்று பேசியே பாதி தேசத்தை தாரை வார்த்து தந்துவிட்ட ஒரு தேசம் மீதியையும் தொலைத்துவிட முடிவு செய்து அந்த வெறியர்களுக்கு விளக்கு பிடிக்கிறது. மூர்க்கன் கையில் ஆயுதம் தந்தவன் முட்டாளென்றால் வேடிக்கை பார்ப்பவன் மூடன் .
இப்படியான ஒரு சூழலில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுக்க யாரும் முன்வராததில் ஆச்சரியம் ஏதுமில்லை.போர்க்குணம் கொண்ட இனம் போரினால் அழிந்த்தாக சரித்திரமில்லை. போரடும் வரையில் அவர்களுக்கு அழிவில்லை.கூலிக்கு மாரடிக்கும் படை இலங்கை ரானுவம். கொள்கைக்கு போரிடும் படை எமது சகோதரம். இழப்பதற்கு ஏதுமில்லை எம்மக்களிடம். வாழ்ந்தால் வாழ்வோம் ஈழத்தில் பிரஜையாக,வீழ்ந்தால் அதன் விதையாக எனும் மக்களை வெல்ல முடியுமா மூடனே?

சர்வதேச நிர்ப்பந்தங்களுக்காக தமது தற்கொலைப்படை தக்குதல்களை நிறுத்திவைத்துள்ளது புலிகளின் பலவீனமல்ல. அவர்களது பலம் அதுவே. ஆனால் அங்கு எம் தமிழன் படும் துயரங்களையும் சந்திக்கும் அவலங்களையும் பார்த்து படும் வேதனை நாளை உருமாறி எம்மையும் எம் சகோதரங்களையும் போரளிகளாக்கினால் அதற்கும் இன்று வாய் மூடி நிற்கும் பீஷ்மர்களும் துரோனாச்சாரியார்களும் தான் காரணமாவார்கள்.
சீனனும் சிங்களனும் செய்யும் சதியை இந்திய வீனனும் பார்த்து பேசாமல் மெளனம் சாதிப்பது வேதனை.அவனும் சேர்ந்து சதி செய்வது சோதனை.அறிவும் ஆற்றலும் அர்ப்பனிப்பும் அத்தனையும் இருந்தும் தமிழன் உலகின் தலைமை நிலை அடையாமல் போக காரணம் ? காட்டிக்கொடுப்பதும் கோடாலிக்காம்பாய் மாறி எதிரிகளிடம் மாட்டிவிடுவதும்தான்.தமிழ் சகோதரங்களே !தியாக மறவர்களின் சரித்திரத்தை படிக்கும்முன் துரோகிகளின் வரலாற்றையும் படியுங்கள்.படித்தால் மட்டும் பிரயோஜனமில்லை அவனுக்கும் பாடம் புகட்டுங்கள். தாய் நாட்டை காட்டிக்கொடுப்பது தாயை கூட்டிக்கொ டுப்பதினுங்கேடானது.
முத்துக்குமாரின் வேள்வி அரசியலாக்கப்படுகிறதாம்… துரோகியே! நிறுத்திக்கொள் இத்தோடு !! புலிகளுக்காக பேசியதால் சிறுத்தை களை தடை செய்ய வேண்டுமாம். தமிழ் சிங்கங்களும் சிறுத்தைகளும் தான் புலிகளுக்கு குரல் கொடுக்க முடியும் .நாய்களும் நரிகளும் என்ன செய்யமுடியும்?
நாளை புலிகள் எரித்ரேயாவிலோ சோமலியாவிலோ தேசீய அரசை அமைத்து அங்கிருந்து அங்கீகாரம் கேட்பார்கள்.சோமாலியா கடற்கொள்ளையர்களின் கடலாதிக்கத்தில் இருந்து கப்பல்களை காப்பாற்ற தத்தமது பொருளாதார வர்த்தக நலன்களை முன்ன்னிட்டு அவர்களை அங்கீகரிப்பது நல்லதுஎன உலகம் உணரும்.அன்று ஈழம் ஏற்கப்படும்.

அதுமட்டுமல்ல பணக்காரர்களின் யுத்தத்தில்மட்டுமே பங்குகொண்டு மனித உரிமைகளை நிலை நாட்டிய (?) ஆதிக்கசக்திகளால் நிராதரவாய் விடப்பட்ட ஆப்பிரிக்க ஏழை நாடுகள் புலிகளின் தலைமையில் புதிய உலகு படைப்பார்கள். அமையப்போகும் மூண்றாவது அகிலம் தமிழனின் தலைமையில் தான் அமையும் . புதிய சரித்திரம் அவர்களின் தியாக வரலாற்றை பெருமையுடன் பதிவு செய்யும்.

மேலும் ஒரு உண்மை…தமிழன் என்றுமே மத வெறியனல்ல…தமிழன் என்றால் அதில் இந்து முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் அதில் அடக்கம்.ஆப்பிரிக்கவின் அமையபோகும் தமிழ் தேசம் இசுலாமிய பூமியில் அமைந்து மத இனக்கத்துக்கு உதாரணமாக இருக்கும்.அதில் அந்த முட்டாள் பெளத்தர்களுக்கும் இடமிருக்கும்.
அன்று ஆப்பிரிக்காவில் தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மாவின் தியாகம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழி வகுத்தது.இன்று அங்கு அமையப்போகும் தமிழ் ஈழம் பொருளாதார சுதந்திரத்துக்கு வழிகாட்டும். மலர்ந்துவிட்ட ஈழம் மணம்பரபட்டும்!

வாழ்க தமிழ்! வெல்க தமிழர் !! ஒங்குக தமிழர் ஒற்றுமை!!!

தெய்வமகன் February 16, 2009 at 4:35 AM  

நன்றி அனானிமோஸ்

Anonymous February 16, 2009 at 5:05 AM  

அனானி கலக்குரீரே ஐயா!

தெய்வமகன் February 16, 2009 at 5:32 AM  

//அனானி கலக்குரீரே ஐயா!//

இதுக்கும் அனானி தானா.வாருங்கள்

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP