சமீபத்திய பதிவுகள்

வேகமெடுக்கும் தொடர் தாக்குதல்களால் பேரழிவுக்குள்ளாகும் மக்கள்

>> Sunday, February 1, 2009

 

வன்னி நிலைமை என்றுமில்லாதளவுக்கு மிக மோசமடைந்துள்ளது. யுத்தத்தில் சிக்குண்டு தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்படுகின்றனர். மிகப் பெருமளவானோர் படுகாயமடைந்து வரு கின்றனர். refugee_20080719008விடுதலைப் புலிகளை அழித்து அவர்கள் வசமிருக்கும் மிகுதிப் பகுதியையும் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மேலும் தீவிரப்படுத்துகிறது. இதனால் பொதுமக்களுக்கான இழப்புக ளும் அதிகரித்து வருகிறது. புலிகளின் பகுதிக்குள்ளிருக்கும் மக்களை வெளியேற்று வதன் மூலம் புலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி அவர்களை முற்றாக அழித்துவிடலாமென அரசு கருதுகிறது. இந்தியாவின் பூரண ஆதரவு இலங்கை அரசுக்குக் கிடைத்திருப்பதால் இந்த யுத்தத்தை மிகவும் துணிவாக இலங்கை அரசு முன்னெடுத்துச் செல்கிறது.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, விசுவமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே யுத்தம் நடைபெறுகிறது. பரந்தன்முல்லைத்தீவு வீதியை (ஏ35) மையமாக வைத்து நடைபெறும் இந்த யுத்தம் முடிவுக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படைத்தரப்பு கூறுகிறது. 15 கிலோ மீற்றர்து15 கிலோ மீற்றர் பரப்பளவினுள் நான்கு இலட்சத்து எழுபதாயிரம் மக்கள் சிக்குண்டுள்ளனர். இந்தப் பகுதிக்குள்தான் தற்போது புலிகளும் உள்ளனர். இந்தப் பகுதியை நோக்கிய பாரிய படைநகர்வு அப்பாவி மக்களுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வன்னிக்குள் ஏவப்படும் ஒவ்வொரு ஷெல்களும் பலரைப் பலியெடுப்பதுடன் பலரையும் படுகாயப்படுத்துகிறது. தினமும் 24 மணிநேரமும் கண்மூடித்தனமாக ஷெல்களும் பல்குழல் ரொக்கட்டுகளும் மோட்டார் குண்டுகளும் ஏவப்படு கின்றன.

புலிகள் பதில் தாக்குதலை நடத்துகின்ற போதும் அது எதிர்பார்த்தளவுக்கு இல்லையெனப் படைத்தரப்பு கூறுகிறது. புலிகள் தற்போது மக்களை மனிதக் கேடயமாக்கி யுத்தம் புரிய முற்படுவதாகவும் அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. இதனால் புலிகள் வசமுள்ள மிகுதிப் பகுதிக்குள் படையினர் நுழைவதில் தாமதமேற்படுவதாகவும் படைத்தரப்பு கூறுகிறது. ஆனால், அந்தப் பகுதியில் நடைபெறும் ஷெல் தாக்குதலும், பல்குழல் ரொக்கட் தாக்குதலும், மோட்டார் தாக்குதலும் படையினர் தங்கள் தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருப்பது போல் தெரியவில்லை. மக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாதவாறே இந்த யுத்தத்தை தாங்கள் நடத்துவதாக அரசு வெளியுலகிற்கு கூறினாலும் அங்கு தினமும் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. படுகாயமடைந்தோரால் அந்தப் பகுதியிலுள்ள ஒரேயொரு ஆஸ்பத்திரியும் (புதுக்குடியிருப்பு) நிரம்பிவழிகிறது. படுகாயமடைந்த பெருமளவானோர் பலத்த சிரமத்தின் மத்தியில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மேலும் அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய நிலையில் 500இற்கும் மேற்பட்டோர் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையிலிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகின்றது.

தற்போது புலிகள் வசம் எஞ்சியிருக்கும் முக்கிய நகரான புதுக்குடியிருப்பை பிடித்து விட படையினர் முயல்கின்றனர். இந்த நகரைக் கைப்பற்றிவிட்டால் ஏ35 வீதியையும் கைப்பற்றி புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடிவிட முடியுமென படையினர் கருதுகின்றனர். அத்துடன் புலிகளின் பகுதியும் மிகவும் குறுகலாகி ஏ35 வீதிக்கு வடகிழக்கே செவ்வகம் போன்றதொரு பகுதிக்குள் முடங்கிவிடுமெனவும் கருதுவதால் எட்டு முனைகளிலிருந்தும் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்துகின்றனர். அதேநேரம், விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் அவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் தங்கள் நடவடிக்கையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிவேக டோரா பீரங்கிப் படகுகள், தாக்குதல் படகுகள், விரைந்து தாக்குதலை நடத்தும் படகு அணிகளென முல்லைத்தீவு முதல் வடமேற்கே சாலை வரையான கடற்பரப்பில் பலத்த பாதுகாப்பு வளையமொன்றை அமைத்துள்ளனர். தரையில் தற்போது படையினர் புலிகளின் பகுதியை "க்' வடிவில் சுற்றிவளைத்துள்ளனர். எஞ்சிய கடற்பகுதியில் கடற்படையினர் நிலைகொண்டுள்ளதால் மிகக் குறுகிய பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். சகல முனைகளிலிருந்தும் படையினர் தீவிர தாக்குதலை நடத்திவரும் அதேநேரம், புலிகளின் பகுதிக்குள் கடற்படையினர் தரையிறங்குவதையும் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதையும் தடுப்பதற்காக கடற்புலிகள் அடிக்கடி கடற்படையினர் மீது தாக்குதலை நடத்த முற்படுகின்றனர். கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்குமிடையே முல்லைத் தீவுக்கும் சாலைக் கடற்பரப்புக்குமிடையில் தற்போது அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை கூட கடும் மோதல்கள் நடை பெற்றுள்ளன.

கடல் வழியால் தாக்குதல் நடை பெறுவதையும் கடல் வழித் தரையிறக்க முயற்சிகளைத் தடுப்பதற்காகவும் கடற்புலிகள் அடிக்கடி கடற்படையினருடன் மோதுவதால் கடற்படைப் படகுகள் எதுவும் கரையோரத்தை நெருங்குவதில்லை. கரையிலிருந்து மிக நீண்டதூரத்திலேயே அவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடல்வழியால் வரும் ஆபத்தை புலிகள் தவிர்த்தவாறு சுண்டிக்குளம் முதல் விசுவமடு ஊடாக முல்லைத்தீவு வரையான பகுதிகளிலிருந்து எட்டு முனைகளூடாக, தேங்கா பாதியை கவிழ்த்தது போல் முன்நகர முயலும் படையினருடன் கடுமையாக மோதி வருகின்றனர்.

தற்போது நடைபெறும் மோதலில் ஏற்படும் இழப்புகள் குறித்து எந்தத் தரப்பும் எதுவும் கூறுவதில்லை. புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர்ந்து செல்லும் போது தாங்கள் கைப்பற்றிய இடங்களை மட்டுமே படையினர் கூறுகின்றனர். அதேநேரம், இந்தச் சமர்களில் பொதுமக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லையென்றே அரசும் படையினரும் கூறிவருகின்றனர். ஆனால், அங்கு தினமும் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லையென்றால், வவுனியா ஆஸ்பத்திரிக்கு இதுவரை படுகாயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் எவ்வாறு காயமடைந்தனர் என்பதற்கு அரசு என்ன பதில் கூறப் போகிறது? இதனால் வன்னிக்குள் தினமும் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டு வருவது வெளியுலகிற்கு தெரியத்தொடங்கிவிட்டது. ஆனாலும் இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியாவும் இதனை மூடி மறைத்து வருவதால் வன்னியில் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்கள் வெளி உலகை எட்ட தாமதமேற்படுகிறது.

இலங்கையைப் பொறுத்த வரை இந்த யுத்தத்தை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு இந்தியா பூரண உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையின் ஒவ்வொரு செயல்களையும் இந்தியா நியாயப்படுத்தி வருகிறது. இந்தியாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கும்வரை ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வில்லையென்பதை இலங்கை அரசும் அறியும். அதேநேரம், ஈழ விடுதலைப் போரை நசுக்கி விடுதலைப் புலிகளை ஒழிக்க தற்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசைவிட்டால் இனியொரு போதும் வாப்புக் கிடைக்காதென்பதை இந்திய அரசும் நன்குண ரும். இதனால்தான் அடுத்த இரு மாதங்க ளுக்குள் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடப்பதற்கிடையில் முடிந்தவரை புலிகளை அழித்து அவர்கள் பிரதேசத்தை கைப்பற்றிவிட வேண்டுமென இலங்கை அரசு மிகத் தீவிரம் காட்டும் அதேநேரம், இலங்கை அரசுக்கு சகல வழிகளிலும் உதவி புலிகளை அழித்துவிட வேண்டுமென்பதில் இந்திய அரசு பெரும் முனைப்புக் காட்டுகிறது. இதனாலேயே புலிகளது பதில் தாக்குதலும் தொடர்ந்தும் தாமதமடைந்து வருவதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா வில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரெ னக் கூறி உலகம் முழுவதையும் தனது காலடியில் வீழ்த்த முனைந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ், உலகமெங்கும் பேரிழிவுகளை ஏற்படுத்திவிட்டு எதனையும் சாதிக்காமல் அவமானத்துடன் பதவி விலகியிருந்தார். அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறி உலகெங்கும் பேரழிவுகளை ஏற்படுத்திய போர்களுக்கும் புதிய ஜனாதிபதி விடைகொடுக்க முனைந்துள்ளார்.

இந்தியாவிலும் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கும் ஆட்சி மாற்றம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தனது ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் காங்கிரஸ் உள்ள போதும் ஈழத்தமிழர் விடயத்தில் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது. இலங்கைப் பிரச்சினைக்கு சமாதானத் தீர்வே , அவசிய மெனக் கூறிக் கொண்டு இங்கு இராணுவத் தீர்வுக்கு ஆதரவளிக்கிறது. ராஜீவ் காந்தி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் மீது அரைகுறைத் தீர்வைத் திணிக்க காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முற்படுகின்றார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசு எப்போதோ தூக்கிவீசிவிட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு, விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நிலைப்பாட்டுக்கு முழு அளவில் ஆரதவு வழங்குவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நன் குணர்ந்துள்ளார். இதனால் தான் எந்த இந்தியத் தலை வர்கள் இலங்கைக்கு வந்தாலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமெனக் கூறி அவர்களை வெற்றிகரமாகத் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். ஆனால் இனவாதிகள் மத்தியிலோ ஒற்றையாட்சி முறைக்குள் தான் எதுவுமென்கிறார்கள். சர்வதேச சமூகத்தின் முன்போ சர்வகட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பிக்கும் யோசனையே தீர்வென்கிறார்கள்.

விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலமே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த முடியுமென இந்திய அரசு நம்புகிறது. புலிகளை அழித்து அவர்களது பகுதிகளைக் கைப்பற்றிவிட்டால், இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்கள் விரும்பும் தீர்வை அமுல்படுத்த முடியாதென்பது காங்கிரஸ் அரசுக்குத் தெரியும். அதனால்தான் அடுத்த இருமாதங்களுக்குள் தேர்தல் வருவதற்கிடையில் முடிந்த வரை இலங்கை அரசுக்கு உதவி விடுதலைப்புலிகளை அழிப்பதுடன், ராஜீவ் படுகொலை வழக்கிற்காக புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செவதற்காகவே இலங்கை அரசிற்கு இந்தியா உதவியது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் காங்கிரஸ் அரசு முற்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இன்று தோன்றியுள்ள நிலைமை எல்லை கடப்பதையே காட்டுகிறது. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக முத்துக்குமார் தனது உடலில் வைத்த தீ, முழுத் தமிழகத்திலும் பரவிவிட்டது. இதனை எவராலுமே அணைக்க முடியாதென்பது தெளிவாகியுள்ளது. இந்தத் தீக்குள் இம்முறை நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் பொசுங்கப் போகிறது. மதில்மேல் பூனை போலிருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸுடன் தொடர்ந்தும் கூட்டு வைப்பாரானால், அது தனது ஆட்சிக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடலாமென்றதொரு நிலையைத் தோற்றுவித்து விடுமென்ற அச்சமும் அவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியலில் ஏற்படும் மாற்றம் ஈழவிடுதலைப் போரிலும் மாற்றத்தை ஏற்படுத்துமெனக் கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் வன்னிப் போரில் திடீர் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டால் அதற்கு இராணுவ ரீதியில் பூரண உதவிகளை வழங்க காங்கிரஸ் அரசு தயாராகவே உள்ளது. ராஜீவ் காந்தியை மையப்படுத்தியதாகவே சோனியா இந்த அரசை வழிநடத்தி வருவதால் புலிகளை அழிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டுகின்றார். ஆனால் அங்கு ஆட்சிமாற்றம் ஏற்படும் போது அது இந்திய நலன் சார்ந்ததாகவே இருக்குமென்பதால், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தற்போதைய காங்கிரஸ் அரசு இராணுவத் தீர்வுக்கு சாதகமாயிருப்பது போல் புதிய அரசு இராணுவத் தீர்வுக்கு ஆதரவு வழங்காது. இதனால் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை காண முற்படும் இலங்கை அரசுக்கு அதன் ஆதரவு கிடைக்காது. இதனைப் புலிகளும் நன்குணர்ந்துள்ளதுடன் இலங்கை அரசுக்கும் இது நன்கு தெரியும். இதனால்தான் இந்திய ஆட்சியில் மாற்றமொன்றுக்காக விடுதலைப் புலிகள் காத்திருக்கையில் அந்த மாற்றத்திற்கு முன்னர் புலிகளை அழித்து அவர்கள் வசமிருக்கும் எஞ்சிய பகுதியையும் கைப்பற்றிவிட இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது.

அதேநேரம், வன்னியிலிருக்கும் 4,70,000 மக்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதிலும் தீவிர அக்கறை காட்டுகிறது. கடும் ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படும் போது, புலிகள் அவர்களை வெளியேறிவிட்டால் இந்த இழப்புகள் ஏற்படாதெனக் கூறி உலகளாவிய ரீதியில் புலிகளுக்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கவும் அரசு முற்படுகிறது. இதனால் வன்னியிலுள்ள மக்களின் உயிர்களுடன் விளையாட அரசு தயாராகிவிட்டது. பின் விளைவுகள் குறித்து சிந்திக்காது புலிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காக மக்களை பணயம் வைக்க முடியுமென்ற தத்துவம் இலங்கை அரசை திருப்பித் தாக்கினால் எப்படியிருக்குமென்பதை எவரும் உணரத் தலைப்படவில்லை.

தற்போதைய நிலையில் வன்னியிலி ருந்து மக்கள் வெளியேறும் சாத்தியமில்லை யென்றே கருதப்படுகிறது. இதனால் அங்கு படைநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் போது இழப்புகளும் பெரியளவில் ஏற்படலாம். இது விடுதலைப் புலிகளுக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்துவதுடன் மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த முற்படுகிறார்களென்ற பிரசாரத்தை மேலும் வலுப்பெறச் செயலாம். இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வந்த புலிகள் தொடர்ந்தும் அந்தச் சமரிலேயே ஈடுபடுவதால் தற்போது அவர்களது பகுதிகள் அனைத்திலும் ஷெல்கள் வீழ்கின்றன. மிகவும் குறுகிய பிரதேசத்திற்குள் நாலரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதால் தினமும் அங்கு இழப்புகள் ஏற்படப் போகின்றன.

 

http://www.nerudal.com/nerudal.71.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP