சமீபத்திய பதிவுகள்

தினமும் அவன் என்னை தனியே அழைத்து செல்கின்றான்:பெண்ணின் அவலக்குரல்

>> Sunday, February 15, 2009

உயிர்காக்க அகதியாகி அடிமையாகிப்போய் அழும் ஒரு பெண்ணின் அவலக்குரல்


வன்னியில் சிறீலங்கா படையினர் பொதுமக்கள் மீது மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களாலும், அத்தியாவசியப் பொருள்களின் தடைகள் காரணமாகவும் விரும்பியோ, விரும்பாமலோ பலர் சிறீலங்கா படையினரிடம் தஞ்சம் கோரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு உயிர் தஞ்சம் கோரிய இளையோர்களில் பலர் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பல இளம் பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, அந்த அவலங்களை வெளியே சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இவ்வாறான பின்புலத்தில் உயர் தஞ்சம் கோரி, அகதி முகாமில் தங்கியுள்ள அவலப் பெண்ணொருவர் எமது பதிவு செய்தியாளருக்கு எழுதிக்கொடுத்துள்ள கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

 

வணக்கம்,


உயிர் காக்கவென்று கூறி காடு கடந்து உயிரை பணயம் வைத்து இன்று அகதி முகாமில் சிறைவைக்கப்பட்ட நிலையில் குடிக்கும் கஞ்சிக்கும், தண்ணீருக்கும் யாரையும் காத்திருக்கும் நிலையில் நான் யாரை நோவது.

 

உன்னில்தான் கோபம் தாயே. வேண்டாம் அவள் பாவம். அவள் வாழ்க்கை அடுப்பை சுற்றியும், வீட்டு வளவைச் சுற்றியும்தான் இருந்தது.

 

தந்தையே நீங்கள் தான் நாடறிந்தவர்கள். உலகம் புரிந்தவர். பல ஊர் தெரிந்தவர். கயவரையும் தெரியும் நல்லவர்களையும் தெரியும் என்று சொன்னவரும் நீங்கள் தான். இவ்வுலகில் நாம் நின்மதியாய் வாழ்ந்து சாவதற்கு பிறந்தவர்கள் என்று தத்துவம் பேசியதும் நீங்கள் தான்.

 

அன்றும் நீங்கள் சிங்களப்பிடிக்குள் இருந்ததும் தெரியும். அது இன்னும் முடியவில்லை எனவும் தெரியும். 50, 60, 70, 80 களில் என தொடரும் தமிழின அழிப்பும் தெரியும். பின்னர் உருவான தமிழரின் போர்படையும் அதனால் சிங்களவன் தமிழர் மீது கொண்ட காழ்ப்புணர்சியின் விளைவுகளும் நன்கு தெரியும்.

 

தமிழச்சியாய் பிறந்தது என் தவறா? இம்மண்ணில் உங்களின் பிள்ளையாய் பிறந்தது என் தவறா? அதனால்தானே எனக்கு தமிழச்சி என அடையாளம் வந்தது.

நான் பிறந்தபோது நீங்கள் மகிழ்ந்து சிரித்திருப்பீர்கள். பிரசவ வலிகண்டு அழுத அம்மாகூட சிரித்திருப்பார் எனது முதல் அழுகை கேட்டு.

 

நான் இன்றுவரை அழுகின்றேன். எனக்காக அல்ல உங்களுக்காகவும் அல்ல. யாருக்காக என்று தெரியாமல் எதற்காக என்றும் புரியாமல் அழுகின்றேன். இது தொடருமா அதுவும் தெரியாமல். அன்று முதல் தொடர்கின்றது எனது அழுகை மட்டுமல்ல. என்போல் தமிழராய் பிறந்த ஒவ்வொரு பிள்ளையின் அழுகையும் வாழ்க்கையும் தான்.

 

83 கலவரத்தில் தமிழனை கொன்றார்கள், எரித்தார்கள், புதைத்தார்கள், உயிருடன் புதைத்தார்கள், குழந்தையை எண்ணையிலிட்டு வறுத்தார்கள்... இது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்.

 

தன் ஒரு உரோமத்தினை கவர்ந்தாலும் இறக்கும் கவரிமான் என்று நீங்கள்தான் சொல்லிக் கொடுத்தீர்கள். இல்லாத ஒரு விலங்கு பற்றி எதற்கு சொன்னீர்கள்?.. அதன் தன்மானம் பற்றி எனக்கு கூறத்தானே!. நாம் காணாத கட்டைபொம்மனைப்பற்றி கூறி பெருமிதப்படடீர்கள், எதற்கு அவன் தன்மானத்தை எனக்கு சொல்லித்தரத்தானே.

 

இன்று என்மானம் கவர காத்திருப்பவன் காலடியில் நீங்களும் சரணாகதியடைந்து என்னையும் எங்கள் வழியில் இட்டுவிட்டீர்கள் நான் இருப்பதா இறப்பதா?

 

இருமணம் முடித்த எம் ஊர் விதானையின் வீட்டுப்பக்கமே என்னை செல்லவேண்டாம் எனப்பணித்தீர்கள் ஏன்?

 

மாணவியை கரம்பிடித்த ஆசிரியர் வீட்டு வகுப்புக்களை தடுத்தீர் எதற்கு? நீ அங்கு சென்றால் எம் மானம் போய்விடும் என்று கூறித்தானே. இன்று என் நிலையென்ன?

 

காமக்கண் கயவர் சுற்றிநிற்க, சந்தர்ப்பம் பார்த்து எம்மை அழிக்க காத்திருக்கும் முகாம் எனக்கூறப்படும் சிறையில் குடும்பமாய் நாம்..

 

விசாரணை என்று பத்து முறை தினமும் அவன் என்னை தனியே அழைத்து செல்கின்றான். பார்த்து சும்மாதானே இருக்கின்றீர்கள்?

 

அன்று சந்தியில் பரப்புரை நடக்கின்றது என்று எனக்கு காவலுக்காய் பலமுறை நடந்திருப்பீர்கள் நான் மறக்கவில்லை. இன்று அந்த சிங்களவன் தப்பாய் என்னை தொட்டிட முனைகையில் கூனிக் குறுகி ஏன் உள்ளுக்குள் அழுகின்றீர்.

 

ஏறிகணை வீழ பதுங்ககழியில் அங்கு இருந்தாலும் ஆறுதல் கூற சுற்றம் இருந்தது. மாமா, மாமி, மச்சான், மச்சாள் எறிகணை வீழ்ந்தபின் காயம் பட்டவர் உண்டா எனத் தேடிவரும் அண்ணன்கள், அக்காக்கள், மருந்து இல்லாவிடிலும் ஆறுதல் வார்த்தைகளால் மருந்திடும் அந்த வைத்திய குழுவினர் என இப்படி பலர்...

 

இங்கு பக்கத்தில் உள்ளவருடன் பேசுகிலும் அனுமதி வேண்டும். காலைக்கடன் கழிக்க காவலுக்கு அவன் வரவேண்டும். காயத்துக்கு மருந்து போடவும் கேட்க வேண்டும். காய்ச்சல் கடுமையானால் பெரியதுரை அனுமதி வேண்டும். மருந்தெடுக்க.. அதைக்குடிக்க தண்ணீர் எடுக்கவும்தான்.

 

எனது பாட்டி, பாட்டன் இன்புற வாழ்ந்திருந்த வீடு அது. அனாதையாய் நிற்கின்றது. நினைக்கவே நெஞ்சு அடைக்கின்றது. பூட்டன் விளைத்து விதைந்த நிலமது இன்று மலடாய் கருகிக்கிடக்கின்றது. அவர் சொன்னாரா அதை கருக விடச் சொல்லி. அல்லது இயற்கைதான் ஏமாற்றி நின்றதா விதைப்பை கைவிடச் சொல்லி.

 

தந்தையே நீ நம்பிய சிங்கள அரசுகளும் அரசியல் வாதிகளும்தான் காரணம். இப்போது புரிந்திருக்கும் உனக்கு. மாதச்சம்பளத்துக்காய் நீ ஏமாறிவிட்டாய் ஏமாற்றப்பட்டாய்.

 

அன்று அயல்வீட்டு எல்லை ஒரு இஞ்சி நகர்ந்துபோது காவல்துறைக்கு பல மாதம் நடையாய் நடந்தீர்கள். இன்று யாரோ எல்லை தாண்டி எம்மை வீட்டைவிட்டு கலைத்த பின்னரும் அமைதியாய் எம்மை நடுத்தெருவில் விட்டு நிற்கின்றீர் நீங்களும்.

 

வழி தவறி வயலுக்கு வந்த பசுக்கன்றைக் கட்டிவைத்து, காசு கேட்டு பலநாள் சண்டைக்கு அலைந்தீர்கள். இன்று என்னையே கட்டி வைத்து உங்களிடம் காசு கேட்க காத்திருக்கின்றார்கள் என்ன செய்ய போகின்றீர்.

எல்லாம் உனக்காக என இதுவரை சொல்லி வந்தீர்.. இன்று எனக்காக எது என எனக்கு புரியவில்லை...

 

இந்த அகதி முகாம் வாழ்க்கை..... எப்போது கொல்லுவார்கள் எனத் தெரியாது காத்திருக்கும் கசாப்புக்கடை ஆட்டின் வாழ்க்கையாக இருக்கின்றது. சூறையாடப்படுமா என மானம் என ஏங்கி நிற்கும் எனது வாழ்க்கை வெளியே புரிகிறதா?

 

இதுதான் நீங்கள் எனக்கு சேர்த்து வைத்த இறுதிச் சொத்தா. வீடு உண்டு விதைக்க நிலமுண்டு எனக்கு என்ன கவலை என அடிக்கொரு தடைவ சொல்லி வந்தீர்கள். இன்று அவை எல்லாமே சேர்ந்து கவலை தருகின்றது எங்களுக்கு. யார் நிலத்தில் யார் வாழ வந்தாய் என்று சிங்களவன் எமைப்பார்த்து கேட்கின்றான்.

 

உண்மையில் நீங்கள் வந்தேறு குடியா, இல்லை சிங்களவன்தான் விஜயனின் வழியா? உண்மையை கூறிவிடுங்கள். அவன் தன் வரலாற்றில் தெளிவாக விஜயனின் வழி என்று சொல்லிவிட்டு, நாட்டுக்காய் சண்டைசெய்ய..... இன்றும் வீட்டுக்குள் உயிர் காக்க வேண்டும் என்று நீங்கள் பதுங்கியிருக்கின்றீர். கேட்டால் வீண் வம்பு எதற்கு என்றும் சொல்லுகின்றீர்கள? நேற்றுவரை அது வீண் வம்பாக இருக்கலாம். அவன் எம் வீட்டில் இருந்து எம்மை கலைத்த பின்னரும்  அது ஊர் வம்பா?

 

உங்களுக்கு உங்கள் வாழ்க்கையின் முக்கால் பகுதி முடிந்து விட்டது. இனித்தான் என்வாழ்வு ஆரம்பிக்க உள்ளது. எந்த நம்பிக்கையில் நான் வாழ்வது. யாரை நான் நம்புவது.எதற்காக இனி வாழ்வது?

 

இறுதியாக ஒன்று சொல்லுகின்றேன். நாம் அன்று எறிகணையில் அகப்பட்டு இறந்திருந்தால், அல்லது விடுதலைப்புலிப் போராளியாக குண்டுபட்டு இறந்திருந்தால் வீரமரணம் ஆகியிருக்கும் எமது முடிவு. இன்று நிச்சயம் எம் மரணம் அடிமை மரணம் ,கோழைச்சாவு மறக்காதீர்.

 

இது நானாக தேடிக் கொண்டதல்ல... நீங்களாக, சிறியவள் எனச்சொல்லி உடன்பாடு இன்றி என்னிடம் திணித்தது. என்னை சிந்திக்கவிடாது தடுத்து நீங்கள் கொடுத்தது. எனது கருத்தை கேட்காது உங்கள் சொல்லுக்கு கீழ்ப்படியச் செய்து எனக்கு தந்துவிட்ட நான் வேண்டாத பரிசு.

 

இப்பூமியில் உயிரிழந்து வீழ்ந்தாலும் நாம் பிணம். ஏன் தற்போதும் நாங்கள் எல்லோரும் நடைபிணம்தான். குறிப்பாக உங்கள் போன்ற பெற்றோரால் பாசம் என்னும் போர்வையில் அடைகு வைக்கப்பட்டுள்ள நானும் என்போன்ற பல பெண் பிள்ளைளும், ஏன் ஆண்களும் கூடத்தான் இன்று நடை பிணங்கள்.

 

எம்மை சுதந்திரமாய் நீங்கள் செயற்பட விடவுமில்லை, நாம் செயற்பட்டதும் இல்லை. விடுதலைப்போராட்டத்தில் எங்களை துளிகூட பங்கெடுக்க நீங்கள் விட்டதும் இல்லை... இன்று முகாமில் நடக்கும் பதிவுகளில் என் பெயர் எங்கு இணைப்பட்டு்ள்ளது என உங்களுக்கு தெரியுமா? ..... பயிற்சி பெற்ற போராளியின் பட்டியலில்தான் நானும்.

 

ஏன் நீங்கள் சிங்களப் படைக்கு உண்மையைச் சொல்லவில்லை?  இதனால் தான் சொல்கின்றேன்... என்னை நீங்கள் சிங்களவனிடம் அடகு வைத்து விட்டீர்கள். என் இறப்பு உங்கள் முன்னால்தான் கோரமாக நிகழும். அதைப்பார்த்த பின்னராவது ஏனைய பெற்றோருக்கு சொல்லுங்கள்... எம் இனத்திற்கு விடிவு வேண்டும். அதற்கு உயிர்காத்து மட்டும் போதாது, உணர்வுடன் எமது எல்லையையும் காக்கவேண்டும் என்று.

 

யார் பிள்ளையும் எல்லை காத்து நிற்க, என் பிள்ளை மட்டும் வாழ வேண்டும் என எண்ணி உங்கள் பிள்ளைகளை தன்மானம் இழந்து காட்டுமிராண்டிகளிடம் அடகு வைக்காதீர். தயவுசெய்து உயிர் காக்கவென்று கூறி, உயிரை பணயம் வைத்து மிதிவெடிகளுக்குள்ளாலும், காடுகள் வழியாகவும் இனியும் உங்கள் பிள்ளைகளை அழைத்து வராதீர்கள்.

 

உயிரோடு வாழவென்று எண்ணி, உங்கள் பிள்ளைகளின் உயிரையும், தன்மானத்தையும் உயிரிலும் மேலாக போற்ற வேண்டும் என்று நீங்கள் சொல்லித்தந்த மானத்தினையும் அடகு வைக்காதீர்.

 

குறிப்பாக... எவனிடம் இருந்து எமக்கு அதிகம் துன்பம் வரும் என்று நீங்கள் கூறினீர்களோ, அவர்களிடம் எம்மை அடகு வைக்காதீர்கள்.

 

என் இனிய தமிழ் இளைய நண்பர்களே இனியாவது நியாத்தினை புரிந்து செயற்படுங்கள்.

 

இது எனது சுடலைஞானமாக இருக்கலாம். ஆனால் இதனால் நீங்கள் விழிப்படையுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எதிர்காலத்தினையும் காத்து, நின்மதியாய் வாழ வழி தேடுங்கள் தேடிச் செல்லுங்கள்.

 

இறுதி நாட்களை எண்ணி முகாமில் வாடும் ஒரு இளம் தமிழ் பெண்

http://www.pathivu.com/news/342/54/.aspx

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP