சமீபத்திய பதிவுகள்

ஈழத்தமிழர்களுக்கு இஸ்ரேல் கற்றுத்தரும் பாடம்

>> Monday, February 23, 2009

 

israel_flagஅரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து,இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது.

இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக்காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் டேவிட் பென் கூரியன், இந்த தீர்மானம் மீதான விவாதத்தை எப்படியாவது இழுத்தடிப்பது என்று தீர்மானித்தார்.

விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்ததற்கு அடுத்த நாள், வீரச்சாவடைந்த அமெரிக்க இராணுவத்தினரை நினைவு கூரும் நாள்.

அன்றைய நாள் நிச்சயம் ஐ.நா. சபை கூடாது என்பது பென் கூரியனுக்கு தெரிந்திருந்தது. அவரது திட்டத்தின் பிரகாரம் காரியங்கள் நடந்தன. வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிற்போடப்பட்டது. இந்த இடைவெளிக்குள் வேகமாக செயற்பட்டார் பென் கூரியன். உலகெங்கும் பரந்து வாழ்ந்திருந்த யூத இன மக்களுக்கு ஒரு அறைகூவலை விடுத்தார்.ben_gou_speech

கிடைப்பதற்கான கடைசிச் சந்தர்ப்பம் எமது கைகளுக்கு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள எமது தேசத்தின் தலைவிதியை முடிவு செய்யும் தீர்மானத்தை எமக்குச் சார்பாக நிறைவேற்ற உங்கள், உங்கள் நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுங்கள்" - என்று அவர் கூறினார்.

உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் சிலிர்த்தெழுந்தார்கள். தத்தமது நாடுகளிலுள்ள நாடாளுமன்றை நோக்கி புறப்பட்டார்கள். தனியாக அல்ல. அந்த நாட்டு மக்களையும் அணிதிரட்டிக்கொண்டு சென்றார்கள். டென்மார்க் என்றால் அங்குள்ள யூதன் பத்து டெனிஷ் குடிமக்களை அழைத்துக்கொண்டு சென்றான். இவ்வாறு உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் சென்று அந்தந்த நாட்டு நாடாளுமன்றங்களை முற்றுகையிட்டனர்.

'வளங்களை சுரண்டும் எண்ணத்துடன் செயற்பட்டு எமது தேசத்தின் தலைவிதியை மாற்றிவிடாதீர்" - என்று உலகெங்குமுள்ள யூதர்கள் தமது தேசபக்தியை பறைசாற்றினார்கள்.

அந்த ஒரே நாளில் நிலைமை தலைகீழானது. இஸ்ரேல் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, நிச்சயம் தமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரபு நாடுகள் எண்ணியிருந்த பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தன.முடிவு: இஸ்ரேல் தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விடுதலை வேண்டிப்போரிட்ட யூத இனம் தமக்கான நிலத்தை பெற்றுக்கொண்டது. உலகெங்கும் வாழ்ந்த யூத இன மக்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டிய பென்கூரியனின் முயற்சி மகாவெற்றி கண்டது. வல்லரசுகளின் தன் நேச திட்டங்கள் உடைத்தெறியப்பட்டன. அரபு நாடுகளின் சதி தவிடுபொடியானது.

அதாவது, புலம்பெயர்ந்து வாழ்ந்த யூத இன மக்களின் புரட்சி இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு பெரும் அடித்தளமானது.

இம் மாதிரியான ஒரு அடித்தளத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எமது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கி வருகின்றோமா?

இதுதான் எம்முன் வியாபித்து நிற்கும் கேள்வி.

02.

ஒற்றுமையின் பலம் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு எத்துணை முக்கியமானது என்பது வரலாறு எமக்களித்துள்ள மிகப்பெரிய பாடம். இதனை இன்று தாயகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் செவ்வனே செய்து வருவதால்தான் மற்றைய போராட்டங்களைப்போல தமிழ் மக்களின் போராட்டம் இலகுவில் நசுக்கி அழித்துவிட முடியாது பெரும் சக்தியாக நிலைத்து நிற்கின்றது.

சுதந்திர தாகத்தையும் விடுதலை வேட்கையையும் வெறுமனே நினைப்பில் கிடத்தி வைத்திருக்காது அவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியதே புலம்பெயர்ந்து வாழும் எம்முன் பரந்திருக்கும் பாரிய வரலாற்றுக்கடமை.

இன்று சிங்கள மக்கள் தமக்கு ஆதரவாக மட்டுமன்றி தமிழ்மக்களுக்கு எதிராகவும் எவ்வளவு வேகமாக பிரச்சார வேலைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று.

மகாவம்சத்தை காண்பித்து அதுவே இலங்கையின் வரலாறு என்றும் தமிழ்மக்கள் இந்த நாட்டுக்கு உரித்துடையவர்க்ள அல்லர் என்றும் விடுதலைப் புலிகள் படுபயங்கரமான ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் பிரசாரப்படுத்தும் பல நூற்றுக்கணக்கான சிங்கள மற்றும் ஆங்கில இணையத்தளங்கள் இன்று பல மட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு முழுவீச்சுடன் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் நோக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், சிங்கள மக்கள் தமது இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே தமது அடுத்த சந்ததியினரையும் வளர்ப்பதில் பெரும் ஆர்வம் காண்பிக்கின்றனர்.

இது எமக்கு ஒரு பெரிய படிப்பினை. பொய்யை பிரசாரப்படுத்துவதில் ஒரு இனம் காண்பிக்கும் வேகத்தை எமது இனம் உண்மையை பிரசாரப்படுத்துவதில் இன்னமும் காண்பிக்கவில்லை என்பது எமது பிரச்சார உத்தியில் காணப்படும் பின்னடைவே.

இன்று உலகெங்கும் எடுத்துப் பார்த்தால் சிறிலங்காவின் தூதரகங்கள் சுமார் 32 நாடுகளுக்கு குறைவாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலகங்கள் 60-க்கும் அதிகமான நாடுகளில் உள்ளதாக பிறிதொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தம்மாலான களத்தை அமைத்துக் கொடுத்து விட்டு, நடவடிக்கைகளை எதிர்பார்த்து களத்தில் உள்ள தமிழ்மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு இங்கு நிறைவேற்றப்படுகிறதா? எம்முள் எத்தனை பேர் எமது நாடுகளில் உள்ள ஒருங்கிணைப்புச் செயலகங்களுடன் தொடர்புகளில் உள்ளோம்?

எமது போராட்டம் பற்றிய கருத்து நிலையை முற்கொண்டு செல்வதில் எம்முன்னே கிடக்கும் தடைகளை உடைத்தெறிந்து எமக்கான சரியான பாதையை அமைத்துக் கொள்ளவேண்டும். போராட்டத்துக்கு மட்டுமன்றி போராட்டம் தொடர்பான பிரசாரத்துக்கும் இந்த வழி முக்கியமாகவுள்ளது.

எமது கருத்துக்களை முன்னெடுத்துச்செல்வதில் முதலில் எமக்குள் ஒற்றுமை வேண்டும். தனி மனித துதி பாடல், நீ முந்தி நான் முந்தி என்று தேவையில்லாத போட்டிகளின்பால் ஏற்படும் பொறாமை போன்ற விடயங்கள் நாம் ஆரம்பித்த முயற்சியை வேறு வழியில் திசை திருப்பிவிடுகின்றன. எமக்குள் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வேறொரு பிரச்சினைக்கு தீர்வுகாண்பது என்பது கனவிலும் நடைபெறாத ஒன்று.

தேசியத்தை முன்னெடுக்கும் முயற்சியுடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் ஆரம்பித்த எத்தனை தமிழ் வானொலிகள், பத்திரிகைகள் இன்று ஒற்றுமையுடன் செயற்படுகின்றன, எத்தனை ஒருவருக்கொருவர் சேற்றை வாரியெறியும் வேலையில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டுள்ளன என்பதை பார்த்தால் எமது மண்ணிற்கு விடுதலை கிடைத்தாலும் இவர்களுக்கு விடுதலை கிடைக்காது என்ற கவலையையே ஏற்படுத்துகின்றது.

தாயக மீட்புக்கான ஒரு புனிதப் பயணமாக புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது பிரசாரத்தை முன்னெடுக்கின்றோம் என்ற மனப்பாங்கு ஒவ்வொரு தமிழனிடமும் வரவேண்டும். மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட்டின் ஆட்ட நிலவரம் என்ன? யார் எத்தனை ஓட்டம் எடுத்தார்? என்று வெளியில் நின்று கேட்பது போல, என்ன சண்டை வருமோ? கிழக்கு மீள கிடைக்குமோ? யாழ். பிடிபடுமோ? என கேள்விகளை தொடுக்காமல், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சார்பான விடை கிடைக்கக்கூடிய வகையில் நீங்களும் போராட்டத்திற்கான பங்களிப்பை வழங்குவதில் முனைப்படைய வேண்டும்.

இதில் எமக்கு போட்;டி, பொய்யுரைத்து பிரசாரம் செய்யும் சிங்கள மக்களுடனேயே தவிர எமக்குள் அல்ல. இதனை உணர்ந்து தமிழ்த் தேசியம் தொடர்பான புரிதல் நிலையை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எமது உரிமைகளை பெறுவதைவிட தற்போது எமக்குள்ள தனிப்பட்ட கடமைகளே பெரியவை என்ற நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சமாவது கீழ் இறங்க வேண்டும். தமிழ்த்தேசியம் தொடர்பிலான எமது நிலைப்பாட்டில் எந்த புறச்சக்தியுடனும் சமரசத்துக்கு இடமில்லை என்ற திடம் எமக்குள் பிறக்கவேண்டும்.

எமது அடுத்த சந்ததியை தேசியத்தின்பால் செயலூக்கமுள்ள - ஆரோக்கியமான - சந்ததியாக வளர்ப்பதில் எவரும் பின்னிற்க கூடாது. எமது இனத்துக்கான அடையாளத்தை துணிந்து சொல்வதில் உள்ள அச்சம் துடைத்தெறிப்பட வேண்டும். தான் சார்ந்த இனத்துக்கும் அந்த இனத்துக்கான போராட்டத்துக்கும் ஆதரவளிப்பது எந்த நாட்டிலும் குற்றமாகாது.

வேகமாக மாறி வரும் உலக அரசியல் பாதையில் எமது போராட்;டம் எப்போதும் எந்தச் சவாலையும் சந்திக்கலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு புலம்பெயரந்துள்ள ஒவ்வொரு தமிழனும் தயாராக இருக்கவெண்டும். எம் ஒவ்வாருவருக்கும் அந்த தார்மீக கடமை உள்ளது என்பதை ஈழம் கிடைக்கும் வரை எவரும் மறக்கலாகாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் செய்யும் பிரசார நடவடிக்கைகளே அந்தந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையின் ஆன்மாவை உலுக்கும் அதிரடி நடவடிக்கையாக இருக்;கும்.

முகமாலையிலும் மன்னாரிலும் காவலரணில் நிற்கும் போராளியே இதையும் வந்து செய்யட்டும். நாம் மறுபடியும் ஏ-9 பாதை திறந்த பிறகு ஊருக்கு போகும்போது 'கொஞ்சத்தை" கொடுப்போம் என்ற எண்ணத்தில் இருப்போமானால், எமது போராட்டத்தில் நாங்கள்தான் சபிக்கப்பட்டவர்களாக இருப்போம். எதிரியை விட எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் ஆவோம்.

 -ப.தெய்வீகன்-

 

http://www.nerudal.com/nerudal.890.html

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP