சமீபத்திய பதிவுகள்

தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் நமது மக்களின் தேசியப் பங்களிப்பும்

>> Monday, March 2, 2009

 
 
உலகெங்கும் பரந்து வாழும் நம் தமிழ் பேசும் மக்கள் முன் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எழுந்துள்ள பல கேள்விகளுள் முதன்மையானது, நம் தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பங்களிப்பு பற்றியதுமாகும் என்பதனை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

 
எமது சுதந்திரப் போராட்டம் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் முளைவிட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகி முப்படைகளுடன் வெற்றிநடையிட்டும் வருகையில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுடன் சிங்கள சிறிலங்கா அரசு இறுதியாகச் செய்த "யுத்த நிறுத்த உடன்படிக்கை" தனது ஆறாவது அகவையைப் பூர்த்தியாக்கியுள்ள நிலையில் தாயகத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் நெருக்கடியும் பதட்டமும் மிகுந்துள்ள சூழல் நிலவும் இந்நேரத்தில் இத்தகைய வினா, தவிர்க்கப்பட முடியாததே.

 
இந்நிலையில், நமது தேசியப் பங்களிப்பு பற்றி நோக்க முன், நமது போராட்டத்துக்கான சிந்தனை பற்றி ஆராய்வது பொருத்தப்பாடானதாக இருக்கும் என்று கருதுவதால், அதுபற்றி சற்று ஆழமாக நோக்குவோம். மனித குலத்தின் நாகரிக வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வியே மூலாதாரமானது, ஆணிவேர் போன்றது என்பது நாம் யாவரும் அறிந்ததே.

 
இந்தக் கல்வியின் பிரதான நோக்கம், ஒரு தனி மனிதனின் ஆளுமைகளை வெளிக்கொணர்ந்து அவனை (/அவளை) சிந்தனை செய்யும் திறன் மிக்கவனாகவும் தன்நம்பிக்கையுள்ள நற்பண்பாளனாகவும் சமூக, தேசப்பற்றுள்ளவனாகவும் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் திறனுள்ள நீதியுணர்வுள்ளவனாகவும் வளர்ப்பதுவும் அதன் மூலம் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள தன் சமூகத்தவருக்கும் தன் தேசத்தவருக்கும் மட்டுமின்றி முழு உலகுக்குமே பயனுறச் செய்வதுமாகும்.

 
ஓரினத்தின் அல்லது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு நாட்டின் முன்னேற்றம் பிரதானமாக மக்களின் கல்வியறிவிலேயே தங்கியுள்ளது. அதனால், அக்கல்வியறிவு உயர்வதற்கும் உரிய, உயரிய பயனை அளிப்பதற்கும் கல்வி முறையும், அதாவது கல்வித் திட்டம் மற்றும் கல்விச் செயற்பாடுகள் யாவும் சிறப்பானதாக அமைய வேண்டியது அத்தியாவசியமாகிறது. ஆனால், இன்று நாம் நடைமுறையிற் காண்பதுதான் என்ன? ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுத் தூங்கிக் கிடந்த தமிழினம், படிப்படியாகத் தனது பிறப்புரிமைகளை இழந்து வந்த போதினும், சிங்கள அரசால் தரப்படுத்துதல் முறை கல்வியிற் புகுத்தப்பட்ட போதே விழித்து எழுந்தது; காலம் காலமாக, தான் எம்மாற்றுப்பட்டத்தையும் ஏமாறி வந்ததையும், நம்பி நம்பி நாசமாகிப் போனதையும் உணர்ந்து கொண்டது.

 

 
உயர் கல்வி வாய்ப்புகளுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் கதவுகள் அடைக்கப்பட்டதாலும் உரிமைகள் மறுக்கப்பட்டதோடல்லாமல் சாதாரண சலுகைகள் கூட மறுக்கப்பட்டதாலும் தமிழினப் பரம்பரை, ஆவேசம் கொண்டது. இதன் உச்ச விளைவாக அதுவரையான சாத்வீக ரீதியிலான உரிமைப் போராட்டம் முனைப்புற்று, சுயநிர்ணயத்துக்கான ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டமாகப் பரிணமித்தது.

 
இவ்வாறாக, எமது தேசிய விடுதலைக்கான தற்போதைய போராட்டத்தின் பிரதான தோற்றுவாய் மாணவர் தொடர்பான விடையங்களாய் அமைந்த போதினும், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போராட்டத்துக்கான சிந்தனையை இன்று வரை நடைமுறையில் உள்ள கல்வி ஊட்டுகிறதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாகவே இன்றும் நாம் உள்ளோம். இலங்கைத் தீவானது ஐரோப்பியரிடமிருந்து சுதந்திரமடைந்ததாகக் கொள்ளப்பட்ட காலம் முதலாக இன்று வரை கல்வியும் அவை தொடர்பான சகல விடையங்களுமே மாறி மாறி ஆட்சி செய்கின்ற சிங்கள அரசுகளாலேயே கையாளப்பட்டு வருகின்றன.

 
ஆயினும், தமிழரின் பூர்வீக நிலங்களில் அத்து மீறிய சிங்களக் குடியேற்றங்கள், தனிச் சிங்களச் சட்ட அமுலாக்கல் மற்றும் இனப்படுகொலைகள் என மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டு நீண்ட, குறுகியகால நோக்கங்களுடன் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்ட தமிழின அழிப்பு முயற்சியானது, பிரதானமாக 1980ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசு பாடநூல்களை அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கத் தொடங்கியது முதலாக எம்மால் புரிந்து கொள்ளவோ அன்றி இலகுவில் உணர்ந்து கொள்ளவோ முடியாதவகையிலும் முன்னர் மறைமுகமாகவும் தற்போது வெளிப்படையாகவும் தீவிர - துரித கதியிலான பல்வேறு வடிவங்களிலும் நடைபெற்று வருகின்றமையை எவருமே மறுக்க முடியாது.

 
உலக வரலாற்றின் புதிய குழந்தையான நாளைய தமிழீழ தேசத்தைக் கட்டி வளர்த்துத் தலைவர்களாகப் போகின்ற இன்றைய இளம் பரம்பரையினரை - குறிப்பாக மாணவர்களைக் குறிவைத்தே இராணுவத் தாக்குதல்களும் திட்டமிட்ட படுகொலைகளும் பொருளாதார, கல்வி, மருத்துவத் தடைகளுடன் கூடவே எமது தேசிய போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யக் கூடிய வகையிலான பாடப் பரப்புகளும் அமைந்துள்ளன. அத்துடன், தன்னம்பிக்கையற்ற, மொழி இனப்பற்றற்ற சமுதாயத்தை உருவாக்கியும் வரலாற்றையே உண்மைக்குப் புறம்பாகத் திரிபுபடுத்தி (சிங்கள மாணவர் மத்தியில் இனவிரோதத்தை வளர்க்கும் வகையில்) போலித் தகவல்களை வழங்கியும் உளவியல் ரீதியாகவும் பாதிப்புறும் வண்ணம் நிகழ்த்தப்படும் மறைமுகமான யுத்தமொன்றையும் தமிழ் மாணவ சமுதாயம் தம்மையுமறியாமலேயே எதிர்கொண்டு வருகிறது.

 

 
இன்றைய யதார்த்த நிலைமை இவ்வாறாகவெல்லாம் இருக்கின்ற பொழுது,போராட்டத்துக்கான சிந்தனையை இங்குள்ள கல்வி, இலங்கைத்தீவில் வாழும் தமிழ் பேசும் மாணவர் மத்தியில் ஊட்டுகிறதா என வினவினால், அதற்கு, இல்லை என்பதே, தவிர்க்க முடியாத பதிலாக அமைகிறது. இன்று நாம் எமது தாயக விடுதலைப் போராட்டத்தினை அளவற்ற அர்ப்பணிப்புகள், ஒப்பற்ற தியாகங்கள் மூலம் ஆயிரமாயிரம் இன்னுயிர்களை ஈந்து முன்னெடுத்து வருகின்றோம்.

 
அத்துடன் இந்தப் புனிதமான தேசியப் பணிக்கு எம்மையோத்த இளைஞர் அணியினரை எமது சமுதாயத்திலிருந்தே அணிதிரட்டுகிறோம். ஆனால், இவர்களில் கணிசமானவர்கள், இந்த துடிப்பு மிக்க இளம் வயதில் - கல்வி கற்கின்ற பராயத்தில் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ இப்பணிக்குத் தம்மைப் பங்காளிகளாக்கி அர்ப்பணிக்கும் தெரிவுக்கு முதன்மைக் காரணியாக அமைவது இன்றைய காலத்தின் தேவையின் அவசியமும் நடைமுறைப் பாதிப்புகளூடாகப் பெற்ற அனுபவ உணர்வுகளின் உந்துதலுமே அன்றி வேறொன்றுமல்ல என்பது கண்கூடாகும்.

 
எமது மக்கள் சக்தியின் கணிசமான வீதமான மாணவ சக்தியினை, எமது போராட்டத்துக்குச் சாதகமான பயனுள்ள முறையில் உபயோகிக்கக் கூடிய நிலை சிலகாலம் முன் வரை ஒப்பீட்டு அளவில் அரிதாக இருந்தமைக்கும் மாணவர் தாமாக முன் வந்து பங்களிப்பை முழுமையாக நல்குவதிலிருந்து ஒதுங்கியிருந்ததற்கும் கல்வியமப்பே காரணமாகும். எமது விடுதலைப் போராட்டம் எமது கல்விக்குக் கவசமாய் இருப்பது போன்று, நாம் கற்கும் கல்வி, எமது போராட்டத்துக்குரிய சிந்தனையை ஊட்டி வளர்த்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்துக்குக் காப்பரணாக அமைவதில் தனது பங்கைச் சரிவரச் செய்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

 

 
தாயக மீட்புக்கான போரொன்று இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாணவராகிய எமது பங்களிப்பு காலத்தின் தேவை - நேரத்தின் நிர்ப்பந்தம் - வரலாற்றுக் கடமை என்கின்றன உணர்வை இன்றுவரையான கல்வி எமக்கு எடுத்துக் கூறவில்லை. அத்துடன், எமது இனத்தின் சுதந்திரம், கலை, கலாசாரம், பொருளாதாரம், நிலம் மொழி, பாரம்பரியம், பாண்பாடு போன்றன உயிர்ப்புடன் இருந்தாலேயே எமது எதிர்காலமும் நிச்சயமானது என்பதயும் எமது இனத்தின் எதிர்காலமே நடைபெற்றுக் கொண்டிருக்கிற தேச விடுதலை போராட்டத்தின் முடிவில்தான், அதன் இறுதி வெற்றியில்தான் தங்கியுள்ளது என்கின்ற மறுக்க முடியாத உண்மையையும் எதிர்காலத்தின் விலையே நிகழ்காலம்தான் என்பதனையும் இன்றைய கல்வி எமக்குப் போதிக்கவில்லை.

 
மாறாக, பொதுவாக மாணவர்களைப் பரீட்சைகளுக்கும் சான்றிதழ்களுக்கும் தயார் செய்வதும், அதன் பலனாக குறித்த சிலருக்கு உயர் கல்விவாய்ப்பும் வெளிநாட்டு மேற்படிப்பும் வசதியான வாழ்க்கையும் தேடப்படக்கூடியதாக இருப்பதுமே இன்றைய கல்வியமைப்பின் முதன்மையான விளைவாகவுள்ளமை வெளிப்படையாகும். (ஆனாலும், இதிலும் எத்தனை வீதமானோர் உரிய பயனைப் பெறுகின்றனர் என்பது வேறு விடையம்.) தவணைத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாராக்கும் இன்றைய கல்வி, வாழ்க்கைத் தேர்விலும், அதற்கான தெரிவிலும் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்குரிய வழிகாட்டலை வழங்கத் தவறியே வருவதையும் கணக்கூடியதாகவுள்ளது.

 
மேலும், ஆண்டு ஒன்று முதல் பல்கலைக்கழகம் ஈறாக, சகல படிநிலைகளிலும் மாணவர் மத்தியில் சுயநலப் போக்கே மேலோங்குவதற்கும் இந்த மண்ணின் வளத்தில், மூலதனத்தில் படித்துப் பட்டம் பெற்ற பின்னர் வேலை வாய்ப்புகளுக்காகவும், பணம், பட்டம், பதவி என்பவற்றுக்காகவும் இந்த மண்ணுக்கும், அதன் மைந்தர்க்கும் அந்நியமாகும் மனநிலைக்கும் இன்றைய கல்வித்திட்டமே வழிவகுத்து ஊக்குவிக்கின்றது. இதற்குக் கல்விப் பணியுடன் தொடர்புடைய, தொடர்பு கொண்டிருந்த பலரும் தத்தமது சுயநல நோக்கங்களுக்காகத் தமது கடமைகளை, சமூக வழிப்படுத்துதல்களைச் சீராகச் செய்யத் தவறியமையும் முன்னுதாரணமாக வாழ்ந்து மாணவ சமுதாயத்தை உரிய முறையில் நெறிப்படுத்தாமையும் முக்கியமான துணைக் காரணிகளாக அமைந்துவிட்டமை, துரதிர்ஷ்டவசமானதே.

 

 
மாணவர் மத்தியில் பரவலான அளவில் விடுதலைப் போராட்டம் பற்றிய சிந்தனை ஏற்படவும் போராட்டவுணர்வு தோன்றவும் எமது மாணவர் மத்தியில் தேசியவுணர்வு ஏற்படுத்தப்படவேண்டியது அத்தியாவசியமாகிறது. இன்றைய கல்வியறிவு, சுதேச உணர்வைச் சரியாகப் போதிக்காமையே இன்று, (வன்னி மண்ணின் ஒரு சில பிரதேசங்களைத் தவிர தாயகத்தின் ஏனைய பகுதிகளில்) எமது சக மாணவர்கள் போராட்டச் சிந்தனையோ அன்றிப் போராட்டவுணர்வோ இன்றி அடிமை மனப்பாங்குடன் வாழக் காரணமாயிற்று. அத்துடன் எமது தேசத்தின் நிலவளத்தையும் மூல வளங்களையும் எமது மக்களின் மொழி, கலை, பண்பாட்டு, தொன்மைச் சிறப்பு போன்றவற்றையும் அழியாது பாதுகாத்தலும் அபிவிருத்தி செய்வதும், அதன் மூலம் சமூக மேம்பாட்டுக்கு உதவுதலும் அனைவருக்குமேயுரிய தேசியப் பணி என்பதையும், எமக்கு உரிமைகள் இருப்பது போல கடமைகளும் இருக்கின்றன என்பதையும் எமது கல்வி எமக்கு உணர்த்துவதில்லை என்பதும் தேசியவுணர்வு குன்றக் காரணமாகின்றன.

 
மேலும், தேசியப்பணி பற்றித் தெரியப்படுத்துவதுடன் மாணவர்களுக்குத் தமது அடிப்படை உரிமைகள் பற்றியும் உரிய முறையில் எடுத்துக் கூறி, தாம் பெறுகின்ற அறிவை அனுபவமாக்குகின்ற திறனை வளர்க்கும் வகையிலான திட்டம் ஏதும் நாம் கற்கும் கல்வித் திட்டத்தில் இல்லை. ஆதி காலம் முதலே மனிதன் நெருக்கமான சமுதாய உறவுடன் பிணைக்கப்பட்டு, கூட்டு வாழ்க்கையே வாழ்ந்து வருவதால், எமக்கும் எமது சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதற்குப் பொருத்தமான குணங்களைப் பெறும் மனப்பாங்கை எமது கல்வி ஊட்ட வேண்டியது அவசியமானது.

 
அவ்வாறே, ஒருவர் தனக்கும் தன் சமூகத்துக்கும் உள்ள தொடர்பை சரிவரப் புரிந்து தனது பிறப்புரிமைகளைத் தெரிந்து கொள்வதுடன் தன்னைப் போன்று மற்றையவர்களும் அவ்வுரிமைகளை அனுபவிக்கும் உரிமை உண்டு எனும் எண்ணத்தையும் அவற்றைச் சகலரும் அனுபவிக்க இடமளிக்கும் உளப்பாங்கையும் வளர்க்க வேண்டிய பாரிய கடமை கல்வி அமைப்புக்கு உண்டு.

 
அதே போன்று, இம்மனித உரிமைகளை அனுபவிப்பதில் எவ்விதத்திலாயினும் தடைகள் இருப்பின், அவற்றைத் தாண்டி தமதுரிமைகளைப் பெற முயல்கின்ற, தேவை ஏற்படுமிடத்தில் அவற்றுக்காகப் போராடுகின்ற மனப்பாங்கையும் அப்படிப் பெறுபவற்றை நிலைநாட்டும் சக்தியும் பாதுகாக்கும் ஆற்றலும் நமது மாணவரிடத்தில் உடல் மற்றும் உள ரீதியாக வளரவும் வழிகாட்டவேண்டியதும் நம் பெறும் கல்வியே. எனினும், இன்றுள்ள கல்வி இவற்றைச் சரியாகச் சுட்டிக் காட்டுவதில்லை என்பதே உண்மை நிலையாகும்.

 
இன்று எமதினம் வாழ்கின்ற உரிமைகள் மறுக்கப்பட்ட - இழந்த நிலையையும் தற்போதிய அரசியல், பொருளாதார நிலையையும் சீர்தூக்கி ஆராயவும் துரிதமாக மாறிக் கொண்டுவரும் புதிய உலக ஒழுங்கின் போக்கினைப் புரிந்து கொள்ளவும் எமது மாணவர்களுக்கு இந்த மண்ணின் பூர்வீக வரலாறு பற்றியும் இதன் உண்மை உரிமையாளர் பற்றியும், ஆதி முதல் எமது மூதாதையர் வாழ்ந்த சுதந்திரவாழ்வு, நாகரிகம் வளர்ந்த முறை, பொருளாதாரத் தன்னிறைவு போன்றன பற்றியும் எமதினத்தின் தனித்துவம், சிறப்பு பற்றியும் தெரியப்படுத்தப்பட வேண்டியதும் அத்தியாவசியமானது.

 
எமது மண், சிறிது சிறிதாக அந்நியனின் வல்வளைப்புகளால் அழிக்கப்பட்டும் ஆண்டாண்டு காலமாக நமது மூதாதையர் உழைத்து வாழ்ந்து வந்த எமது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நாம் எல்லோரும் இடம்பெயர்க்கப்பட்டு அகதியாகத் துரத்தப்பட்டு அவலவாழ்வு வாழும் நிலைக்கும், எடுத்ததற்கெல்லாம் அடுத்தவரை எதிர்பார்த்து நம்பிய, நம்பிக்கொண்டிருக்கிற மனப்பாங்கு மேலோங்கியமைக்கும், நமது பிரச்சினைகளுக்குத் நாமே ஆராய்ந்து சரியான தீர்வைக் காண்கிற பண்பு குன்றியுள்ளமைக்கும் சுயநம்பிக்கையின்மையும் அச்சவுணர்வுமே காரணம்.

 
இத்தகைய பயவுணர்வற்ற, தன்னம்பிக்கையுடன் கூடிய உளப்பாங்கை வளர்க்கக் கூடிய கல்வி வழிகாட்டல் நீண்ட காலமாகவே எமது முன்னைய தலைமுறைக்கும் எமதருமைச் சகோதர சகோதரியருக்கும் கிடைக்காமையே இன்றுள்ள இந்நிலைமைக்கு, தட்டிக் கேட்கின்ற - உரிமைகளைப் பெற இயல்பாகவே போராடுகின்ற நிலை இல்லாமைக்குக் காரணமாகும். இப்போதெல்லாம், எமது சுதந்திரத்துக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாமேதான் உழைக்க வேண்டும் என்பதும் நூற்றுக்கணக்கில் தினசரி கொல்லப்பட்டாலும் ஆயிரக்கணக்கில் காயப்பட்டு இரத்த ஆறு தேசமெங்கும் ஓடினாலும் நாம் போராடியாகவே வேண்டும் என்பதும் நிச்சயம் விரைவில் எமது தேசத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில் நாமாகவே முன்வந்து போராட வேண்டும் என்பதும் எம் எல்லோருக்கும் புரிகிறது.

 
வீட்டுக்கு ஒருவர், இருவர் என்றில்லாது, நமது நாட்டுக்காக நாம் எல்லோருமே வயது, பால் வேறுபாடின்றி ஒன்றிணைத்து செயற்படவேண்டியது காலம் நமக்கிட்டுள்ள கட்டளை என்பதும் தெரிகிறது. ஆனால், இவற்றையெல்லாம் அறிந்தும் புரிந்தும் இருப்பினும் நாம் இன்னும் ஏன் தயங்குகிறோம்? எதிரியானவன் எமது எல்லைகளை எம்மை நோக்கி வேகமாக நகர்த்தி வருகையில் கங்கணம் கட்டிக்கொண்டு கண்மூடித்தனமாக கொத்துக் கொத்தாக எம் மக்களைக் கொன்று ஒழிக்கையில் வெளிப்படையாகவே இனப்படுகொலையை பிறநாடுகளின் உதவி ஒத்தாசைகளுடன் அரங்கேற்றுகையில் - உடலால் புலம்பெயர்ந்திருந்தாலும், உள்ளதால் எம்முடனேயே இன்றுவரை பின்னிப் பிணைந்து நிற்கின்ற எமதருமை உறவுகள் அரசியல் ரீதியாக விழித்தெழுந்து வீதிக்கு வந்து நேரமோ காலநிலையோ பாராது, எமக்காகவும் குரல் கொடுக்கையில் - அயல் தேசத்திலுள்ள எமது தொப்பூழ்க்கொடியுறவுகள் தீக்குளித்தும் உண்ணாவிரதமிருந்தும் தடியடிக்குள்ளாகி காயப்பட்டும் எமக்காகப் பல்வேறு போராட்டங்களைத் தம்மால் முடிந்தளவு இரவு பகல் பாராது முன்னெடுக்கையில் - இங்குள்ள நாம், வடக்கில் - திறந்தவெளிச் சிறையில் ஒருவிதமான உணர்வுடனும் கிழக்கில் இன்னொருவிதமாகவும் நெருக்குவாரங்களுக்குள் உள்ளாகி பல்வேறுவிதமான அவமதிப்புகளுடன் அடிமை வாழ்வு வாழ்வதை அறிந்தும் - வந்தாரையெல்லாம் வாழ வைத்துக் கொண்டிருந்த வன்னி மண்ணில், நெருக்கடிகள் சதிகள் மிகுந்த வேளைகளில் எல்லாம் போராட்டத்தைக் கட்டிக் காத்து வளர்த்த பின், இத்தனை ஆயிரம் மக்களும் சரணடைந்து போகலாமா?

 
எதிரி இத்தனை நாட்களாக எதிர்பார்த்துள்ளது போல அடிபணிந்து வீணே வீழ்ந்து சாகலாமா? மண் மானம் காக்க தமது இன்னுயிரீந்த மானமாவீரரின் கனவுகளை நனவாக்காது, அவை சீரழிந்து சிதைந்து போக, நாம் காரணமானோம் என்ற வரலாற்றுப் பழிக்கு ஆளாகி அவமானப்படலாமா?

 
எனவே, எனதன்பு மாணவச் சகோதரரே! சகோதரியரே!! இவையெல்லாம் பற்றி வாசித்தும் கேட்டும் அறிந்துள்ள நாம் - இப்பொழுதெல்லாம் நன்கு பட்டும் அறிந்து வருகிறோம். இன்னும் கறிக்குதவாத ஏட்டுச் சுரக்காய் போல நாங்கள் இருந்தால், எமது இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பது நிச்சயம். விடுதலைப் போராட்டங்களுக்கு யாருமே காலவரையறை செய்து ஆரம்பித்து முன்னெடுப்பதில்லை. தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கையின் உள்நாட்டுப் போரில் கடந்த வருடத்தின் இறுதி மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக பத்துத் தமிழர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

 
இப்பொழுது நாள் ஒன்றுக்கு நூறு பேர் வீதம் கொலை செய்யப்படுவதை ஊடகச் செய்திகள் உறுதி செய்கின்றன. எனவே, இதற்கெல்லாம் நாமும் ஒருவகையில் காரணமாகிவிட்ட நிலையில், தற்போது களத்தில் நிற்கும் வீரருடன் தயக்கமோ தாமதமோ இன்றி வலுவுள்ள நாம் எல்லோரும் இணைந்து கொண்டால் மட்டுமே உலகின் கண்களுக்கும் அறிக்கைகளுக்கும் புள்ளிவிபரங்களாகிக் கொண்டு போகும் எமது மக்களின் எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்தலாம்; உலக வரைபடத்தில் தமிழீழ தேசத்தின் எல்லைக் கோடுகளையும் சரிவரப் பதித்து புதிய வரலாறு படைக்கலாம்.

 

 
"இயற்கையைத் நண்பனாகவும் வாழ்க்கையைத் தத்துவாசிரியனாகவும் வரலாறை வழிகாட்டியாகவும்" கொண்டு விளங்கும் எமது விடுதலைப் பேரொளியான தேசியத் தலைவரை வழிகாட்டியாகக் கொள்ளும் பெரும் பேறு பெற்றுள்ள நாம், நம்மை நம்பியுள்ள நம் நாட்டுக்கும் மக்களுக்கும் தலைவருக்கும் ஆற்றவேண்டிய பணிகளைச் செம்மையாகச் செய்து வரலாற்றின் வரிகளில் இணைந்து கொள்வோமாக.

 
-சங்கதிக்காக  ஆதவி
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP