சமீபத்திய பதிவுகள்

பல ஆண்களை ஏமாற்றிய நவீன கண்ணகி

>> Tuesday, April 7, 2009

இதுதான் எனக்கு முதல் கல்யாணம் .......
11 பேரை ஏமாற்றி மணந்த பெங்களூர் அழகி கைது
கோடிக்கணக்கில் நகை, பணம் சுருட்டியது அம்பலம்


மும்பை, ஏப்.7-

பணத்துக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து 11 பேரை மணந்து கோடிக்கணக்கில் நகை, பணத்தை சுருட்டிய பெங்களூர் அழகியை போலீசார் கைது செய்தனர்.

இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு-

16 வயதினிலே...

நான் அவனில்லை... என்று கூறி பல பெண்களை மணந்து பணத்துடன் தலைமறைவாகும் கல்யாண மன்னர்களை பற்றி பல முறை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் அதே போன்ற துணிகர மோசடியை ஒரு பெண் செய்வாள் என்பதை நமது கலாசாரத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது.

இருந்தாலும் `கலி' முற்றி வரும் இந்த காலத்தில் ஒரு பெண்ணாலும் பலபேரை ஏமாற்றி திருமணம் செய்ய முடியும் என்று செயலில் காட்டி ஒட்டு மொத்த ஆண்குலத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார் பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர்.

அந்த மோசடி திலகத்தின் பெயர் கவுசர் பேகம். 26 வயதே ஆன இவர் பார்ப்பதற்கு சினிமா நட்சத்திரம் போல அழகாக இருப்பார். இவருக்கு உம்மே கவுசர், கவுசர் சல்மா என்ற புனை பெயர்களும் உண்டு. பெங்களூர் எச்.பி.ஆர். லே அவுட் 2-வது பிளாக்கில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதிலேயே கல்யாண மோசடியை ஆரம்பித்து விட்டார். இதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக இருந்தனர்.

வலை வீசுவது எப்படி?

கவுசர் பேகத்துக்கு மும்பை ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கவுசரின் போட்டோக்கள் அடங்கிய ஆல்பம் இருக்கும். அந்த படங்களில் பெற்றோருடன் சேர்ந்து கவுசர் அடக்க ஒடுக்கமாக கல்லூரி மாணவி போல போஸ் கொடுத்து இருப்பார். திருமணத்துக்கு பெண் பார்த்துக்கொண்டு இருக்கும் தொழில் அதிபர்களை கவுசரின் ஏஜெண்டுகள் சந்தித்து, ``இந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்''. வசதி குறைவுதான் என்றாலும் உங்களுக்கு பிடித்து இருந்தால் பேசி முடிக்கலாம் என்று சொல்வார்கள்.

கவுசரின் போட்டோவை பார்த்தவுடனேயே மயங்கி போய்விடும் தொழில் அதிபர்கள் கவுசரின் ஏஜெண்டுகள் விரிக்கும் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். ``பணம் என்னய்யா பணம் இப்படிப்பட்ட அழகியைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் உடனே பேசி முடி'' என்று உடனே பச்சைக்கொடி காட்டுவார்கள். அடுத்த சில நாட்களில் திருமண விழா அமர்க்களமாக நடந்து முடியும்.

மிரட்டல்-சுருட்டல்

புதிய கணவருடன் கவுசர் தேனிலவுக்கு செல்வார். நாட்கள் இன்பமாக கழியும். கவுசரின் அன்பில் உருகிப்போகும் கணவர், பணத்தை தண்ணீராக செலவழித்து நகைகள், விலை உயர்ந்த துணிகள் என்று கேட்டதையெல்லாம் வாங்கிக்குவிப்பார். மனைவியை நடமாடும் நகைக்கடையாக மாற்றுவார்.

ஒரு நாள் காட்சி மாறும். கணவர் ஆபீசுக்கு சென்று இருக்கும் நேரத்தில் நகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் ரொக்கப்பணத்தை ஒட்டுமொத்தமாக சுருட்டிக்கொண்டு கவுசர் அம்மா வீட்டுக்கு ஓடி விடுவார். அதோடு இந்த நாடகம் முடிந்து விடாது.

கவுசரின் பெற்றோர்கள் தங்களுடைய மருமகனுக்கு போன் செய்து லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பார்கள். என் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறாய். இதைப்பற்றி போலீசில் புகார் செய்து உன்னை கம்பி எண்ண வைத்து விடுவோம். நாங்கள் கேட்கும் பணத்தை கொடுப்பதோடு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுத்தர வேண்டும் அதன் பிறகு என் மகளின் வாழ்க்கையில் தலையிடவே கூடாது என்று எச்சரிப்பார்கள்.

சம்பந்தப்பட்ட நபர் சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ள பணக்கார தொழில் அதிபராக இருப்பார். போலீசுக்கு போனால் பெயர் கெட்டு விடுவதோடு ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம் என்று பயந்து போய் பணத்தையும் கொடுத்து விவாகரத்தும் வழங்கி விடுவார்.

11 கல்யாணம்

முதல் மோசடி முடிந்த சில நாட்களில் கவுசரின் அடுத்த கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் தொடங்கி விடும். இதுதான் எனது முதல் கல்யாணம் என்று கூறிக்கொண்டு பல ஆண்களை இப்படி அடுத்தடுத்து திருமணம் செய்து எல்லோரையும் ஏமாற்றி பணம் பறிப்பதை வெற்றிகரமாக நடத்தி வந்தார் கவுசர். தனது அழகை பயன்படுத்தி 11 பேரை மணந்தார்.

இதில் மும்பை, ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு தொழில் அதிபர்களும் ஏமாந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றனர். மோசடியாக சம்பாதித்த பணத்தில் கவுசரின் பெற்றோர் ரூ.2 கோடி மதிப்புள்ள வீடு வாங்கினார்கள். வங்கியிலும் லட்சக்கணக்கில் பணம் போட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்தை சேர்ந்த நவாப் ஒருவர் கவுசரின் வலையில் விழுந்து ரூ.50 லட்சத்தை பறிகொடுத்தார். கவுசரின் தங்கை நசியாபேகமும் இதே போன்ற கல்யாண மோசடியில் ஈடுபடுத்தப்பட்டார். அக்காவும் தங்கையும் சேர்ந்து பெங்களூரில் மட்டும் 4 பேரை ஏமாற்றினார்கள். துபாயை சேர்ந்த ஒருவரை கவுசர் திருமணம் செய்து சில நாட்களிலேயே அவரை ஏமாற்றி விட்டு நகை பணத்துடன் பெங்களூருக்கு ஓடி வந்து விட்டார்.

பிடிபட்டார்

பல நாள் திருடி ஒருநாள் அகப்படுவாள் என்பதற்கு இணங்க கவுசரும் இப்போது அகப்பட்டுக்கொண்டார். மும்பையை சேர்ந்த சையத் ஹசம் அகமது என்பவர் சமீபத்தில் கவுசரை திருமணம் செய்து ஏமாற்றப்பட்டார். அவர் மும்பை போலீசில் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி கவுசரின் மோசடியை கண்டு பிடித்தனர்.

மும்பையில் இருந்து சிறப்பு போலீஸ் படை ஒன்று பெங்களூருக்கு சென்று கவுசரையும் அவருடைய பெற்றோரையும் கைது செய்தனர். அவர்களை மும்பைக்கு கொண்டு சென்று கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்க வைத்தது எப்படி ?

கவுசரை போலீசில் சிக்க வைத்தது எப்படி என்பது பற்றி அவருடைய முன்னாள் கணவர் ஹசம் அகமது கூறியதாவது:-

முதலில் கவுசரின் ஏஜெண்டு ரகமது உல்லா பெல்ட் என்பவர்தான் என்னை சந்தித்து கவுசரின் போட்டோவை காட்டி திருமணம் பற்றி பேசினார். கவுசரின் அழகில் மயங்கிய நான் தீவிர முயற்சி செய்து என் பெற்றோரின் சம்மதத்தை பெற்று அவரை மணந்தேன். 2006-ம் ஆண்டு ஜுன் மாதம் எங்கள் திருமணம் நடந்தது. ஒரு நாள் அவள் நகை பணத்துடன் மாயமாய் மறைந்து விட்டாள். பின்னர் சில நாட்கள் கழித்து அவளுடைய பெற்றோர்கள் நான் கவுசரை கொடுமைப்படுத்தி விரட்டியதாக கூறி போனில் திட்ட ஆரம்பித்தனர். பணம் கேட்டு மிரட்டினார்கள். ஆள் வைத்து என்னை தாக்கினார்கள். அதில் என் கை விரல் ஒன்றை இழந்தேன்.

இறுதியில் ரூ.20 லட்சம் பணத்தை கொடுத்து சமாதானம் செய்து கொண்டேன். அதன் பிறகும் கவுசர் வரதட்சணை புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்ய வைத்தார். இதனால் கோபமடைந்த நான் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் துப்பு துலக்கி உண்மையை கண்டு பிடித்து போலீசில் புகார் செய்தேன். போலீஸ் விசாரணையில் கவுசரின் மோசடி நிரூபிக்கப்பட்டு குடும்பத்தோடு சிக்கிக்கொண்டார். இப்போதுதான் நான் மட்டுமல்ல அவரால் ஏமாற்றப்பட்ட பலருக்கும் நிம்மதி திரும்பி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP