சமீபத்திய பதிவுகள்

தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது

>> Sunday, April 26, 2009

தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது: பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்
[
தொடர்ந்து போரிடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது என்று இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'த வீக்' ஆங்கில வார இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி, புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர், கொடுங்கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பயங்கரவாதி  எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம் அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும் அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.

பிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சாவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. 17 வயதிலிருந்தே அவர் சாவுடன் உறவாடி வருகிறார். அவர் சிறிதும் தளர்ச்சி அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில் இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.

எனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.

இந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச் செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ என்பது எனக்கு ஐயம்தான். அவர் தனது மக்களின் விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில்  அவர் மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக இருக்கிறார்.

வெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை இழப்பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள், தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக இருப்பார்.

இந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள் இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.

பிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச் சூழ்நிலைமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர் ஆக்கிக் கொண்டார்.

அமெரிக்கா மீது செப்ரெம்பர் 11 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜோர்ஜ் புஸ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது.

உலகில் அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப் படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் குறிக்கோள்களை அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப் பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்தான்.

அண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட பயங்கரவாதிகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.

இது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல, தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.

ஓராண்டுக்கும் மேலாக, அப்பாவிகளான தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய, அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.

மோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியே, தாக்குதல் நடத்தும் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.

வெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில் எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை, ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால் இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள், குருடாகிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.

இந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியுமா? ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்க
மக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா? சிறிலங்கா படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல்வதில் தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ் மக்களையும் அவர்களது தாயகத்தையும் சிறிலங்கா அரசு அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.

ஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும். விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

ஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது, குறிக்கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும் உணர்ச்சிமயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள் போர்ப்பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து, விடுதலைப் புலி போராளிகள் போரிடுவதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள். போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை 'கொல்லப்பட்டிருக்கிறார்' அல்லது 'கொல்லப்படும் நிலையை நெருங்கியிருக்கிறார்.' அவரது பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும் எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.

"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறிலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து கடைசித் துண்டு நிலத்தையும் சிறிலங்கா படை கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப் பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும் கொரில்லா போர்முறைக்குத் திரும்புவார்கள். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது வேறு என்பதையும், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு படைகள் உணர்ந்திருக்கின்றன.

பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார்  அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.

54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது. ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.

நிலைமைகள் மாறும். அமெரிக்கா மாறியிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டது. சோசலிசம் பின்வாசல் வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித்துப் போய்விட்டன. தலைப்புச் செய்திகளில் வளவாழ்வுச் செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள் இடம்பிடித்து வருகின்றன.

புதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள் பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன் உறவாடுவதற்காக காத்திருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP