சமீபத்திய பதிவுகள்

சிங்களப் படையினர் தனியே மோதி இருப்பார்கள் ஆயின் சூழ்நிலை வேறுவிதமாக அமைந்திருக்கும் -விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன்

>> Saturday, May 9, 2009

முழுமையான உச்ச ஆயுதவலுவை பயன்படுத்தி சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல்: இளந்திரையன்
'மக்கள் பாதுகாப்பு வலயம்' அமைந்துள்ள பகுதிகள் மீது முழுமையான உச்ச ஆயுத வலுவைப் பயன்படுத்தி சிறிலங்கா படையினர் பொதுமக்களை படுகொலை செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் விபரம் வருமாறு:
 
உங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகள் குறித்து முதலில் தெளிவுபடுத்த முடியுமா?

நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போர்க்காலத்தில் மிகவும் முக்கியமான பணிகளில் நான் ஈடுபட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் உங்களுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தற்போதைய களநிலவரம் குறித்து கூற முடியுமா?

களத்தில் மிகவும் தீவிரமான சூழ்நிலைதான் காணப்படுகிறது.

களத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்பது என்பதைவிட, தருணம் கிடைக்கும்போது எல்லாம் பொதுமக்களை படுகொலை செய்வது என்ற கொலைவெறியோடு சிங்களப் படையினர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சுதந்திரமான நிலத்தில் சிங்களவர்களுக்கு அடிமைப்படாத வாழ்க்கை வாழ்வதை விரும்பி எமது போராட்டத்தோடு இணைந்து நிற்கின்ற மக்கள், சாவிற்கும் பட்டினிக் கொடுமைக்கும் மத்தியில் தமிழினத்தின் தலையை நிமிரவைத்துக்கொண்டு இங்கு இருக்கின்றனர்.

இந்த மக்களை பாதுகாப்பதற்காக எமது போராளிகள் மிகவும் தீரமுடன் - முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் - தலைவரின் வழிகாட்டலில் மிகவும் திறமையாகப் போராடி வருகின்றனர். 

மிகவும் குறுகிய பகுதிக்குள் புலிகளையும் மக்களையும் படையினர் நெருக்கியிருப்பது எதனைக் காட்டுகிறது?

நிலம் குறுகிவிட்டதை வைத்துக்கொண்டு நாம் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம், பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அப்படி கூறுவது பொருத்தமற்றது. நாம் நிலத்தை இழந்திருப்பினும் பலத்தை இழக்கவில்லை.

சிங்களவர்கள் இன்னமும் வெற்றியீட்டவில்லை, தமிழர்கள் இன்னமும் தோல்வியடையவில்லை. அதனையும் நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

இப்போதுள்ள சூழ்நிலை நெருக்கடிமிக்கதுதான். போராளிகளைப் போன்றே மக்களும் இந்த போரை எதிர்கொண்டுள்ளனர். பசிக்கொடுமை என்ற கொடிய நிலையை முன்னிறுத்தி ராஜபக்சவும் அவரது படைகளும் கொடிய போரை திட்டமிடப்பட்ட வகையில் நடாத்திக்கொண்டிருக்கின்றன.

எனினும் நாம் போராடுவதற்கான மன உறுதியை இழக்கவில்லை.

கனரக ஆயுதங்களை களத்தில் படையினர் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பில் கூறப்படுவது உண்மையானதா?

இத்தகைய கருத்துக்களை சிங்களத்தரப்பில் இருந்துவரும் ஒரு கேலிக்கூத்தாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், சிறிலங்கா படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஐக்கிய நாடுகள் சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கூறியிருக்கிறார்.

இங்கே முழுமையான உச்ச ஆயுதவலுப் பயன்பாட்டுடன்கூடிய போரைத்தான் சிறிலங்கா அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது.

களத்தில் சிறிலங்கா படையினரின் பலம் குறித்து?

மாவிலாற்றில் இருந்து இன்றுவரை நாங்கள் போரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். சிங்களப் படைகள் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாலும் எமது தரப்பில் இன்னமும் போரிடும் ஆற்றல் நிற்கவில்லை. சிங்களப் படைகள் முன்னேறி வந்த ஒவ்வொரு அங்குலத்திற்கும் பலத்த இழப்புகளைச் சந்தித்தன. பல டிவிசன்கள் நொந்து நூலாகி பின்களத்தில் ஓய்வில் விடப்பட்டுள்ளன, பற்றாலியன் கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு படையணிகளை முன்னே வைத்தே சிறிலங்கா அரசாங்கம் போரை தற்போது முன்னெடுத்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தமது வலிந்த தாக்குதல் திறனை இழந்திருப்பதாக கூறப்படுகிறதே?

வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு தாக்குதலை செய்யவேண்டுமா, இல்லையா என்ற முடிவு தலைமையால் எடுக்கப்படுவது. எனவே அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து தற்போதைய நிலையில் அனைத்துலக ரீதியில் பரப்பப்படும் கருத்துக்கள் குறித்து?

அவசரப்பட்ட - பக்கச்சார்பான - முடிவை அனைத்துலகம் பரப்புரை செய்வதாகவே தோன்றுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது இன்று உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஒரு பாரிய விடயம். எங்களின் விடுதலை சித்தாந்தம் என்பது இன்று உலகத் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற விடயம். பக்கச்சார்பான கருத்துக்களை சில ஊடகங்கள் தூக்கிப்பிடிப்பதால்தான் இத்தகையதொரு தோற்றப்பாட்டு நிலை ஏற்படுகிறது.

தரையால் மூன்று பக்கத்தால் படை நடவடிக்கைகள் இடம்பெறும்போது நான்காவது பக்கமான கடலில் கடற்புலிகளின் பலம் தற்போது எப்படியிருக்கிறது?

கடந்த வாரம் இண்டு தடவைகள் கடல்வழியாக தரையிறங்க சிறிலங்கா படை முயற்சி மேற்கொண்டது. கடற்புலிகள்தான் அந்த முயற்சியை வழிமறித்து நின்றார்கள். அந்த மோதல்களில் கடற்படையினர் பலர் உயிரழந்துள்ளனர். குறிப்பாக சிறப்பு படையணியைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு படையணியைச் சேர்ந்த இரண்டாவது நிலை கட்டளை அதிகாரியும் இதில் உயிரிழந்திருக்கிறார்.

கடல்பகுதியில் சிறிலங்கா கடற்படை அத்துமீறாத வகையில் கடற்புலிகள் இப்போதும் காவல் காத்து வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் புலிகள் பீரங்கிகளை வைத்திருந்து தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறதே?

சிறிலங்கா படையினர் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என்ற ஒன்றை தாங்களே அறிவித்து, அங்கே மக்களை வருமாறு கூறினர். அங்கு சென்ற மக்கள் மீது உலகில் மிக மோசமான ஆயுதங்கள் எனக்கூறப்படும் கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், இராசாயன விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஆனால், 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என்று கூறப்படும் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களையோ அல்லது தமது சேனைகளையோ வைத்திருக்கவில்லை. மாறாக, மக்களை பாதுகாப்பதற்காக எல்லைகளில் நின்று போராடிக்கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பலத்தை அழித்திருப்பதாக, தளபதிகளை அழித்திருப்பதான பரப்புரைகளால் புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒருவித சோர்வு ஏற்பட்டுள்ளமை குறித்து?

"சத்தியத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் சத்தியமே வெல்லும்" என ஒரு பழமொழி இருக்கிறது. இழப்புக்கள் ஏற்படுவது உண்மை. ஆனால் இந்த போராட்டம் எத்தனை நாட்களானாலும், எத்தனை ஆண்டுகளானாலும், ஏன் தலைமுறைகளானாலும் தொடரும்.

நாம் அடிமை வாழ்வு வாழப் போவதும் இல்லை, அதனை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை, மண்டியிடப் போவதும் இல்லை.

உலகத் தமிழர்கள் அனைவரும் எம்முடன் நிற்கும்வரை -

வன்னி மக்கள் பசிக்கொடுமைக்கு மத்தியிலும் எம்முடன் நிற்கும்வரை -  எமது போராட்டம் வீறுநடை போடும். தலைவர் அதனை வென்று முடிப்பார் என்ற நம்பிக்கையை நான் கூறுகிறேன்.

களத்தில் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்களை புலிகள் வெளியிடாமல் தவிர்த்து வருவதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு எறிகணைக்கும் பொதுமக்கள் செத்து மடிகின்ற கொடூரம் இங்கே நடக்கின்றபோது - பசியாலும் பஞ்சத்தாலும் இங்கே குழந்தைகள் வாடுகின்றபோது - நாங்கள் இறந்த சிங்களவர்களின் உடல்களை எண்ணிக்கொண்டிருப்பதைவிட வாழ வேண்டிய எமது மக்களின் நிலையில் கவனம் செலுத்த வேண்டிய காரணத்தினால்தான் மக்கள் குறித்த செய்திகளையே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

ஊடகங்கள் பெரும்பணியை இங்கே ஆற்ற வேண்டியுள்ளது. அவை பக்கச்சார்பின்றி உண்மையைச் சொல்ல வேண்டும், ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும், நியாயத்திற்கு குரல்கொடுக்க வேண்டும்.

உதாரணமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இங்குள்ள மக்கள் குறித்து தெரிவிக்கும்போது அவர்களை போரில் சிக்கியுள்ள மக்கள் என்றே கூறுகிறது. அது தவறு. அவர்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுகின்ற மக்கள். மக்கள் இங்கே படுகொலை செய்யப்படும்போது போரில் சிக்கி உயிரிழப்பதாகவே கூறுகிறார்கள். இது தவறு. சிங்களப் படைகளால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை ஊடகங்கள்தான் வெளிக்கொணர வேண்டும்.

சிறிலங்கா படைத்தரப்போடு மட்டும் மோதவில்லை என்று புலிகள் கூறி வருகின்றனர். இது குறித்து?

சிங்களப் படையினர் தனியே எம்முடன் மோதி இருப்பார்கள் ஆயின் சூழ்நிலை எப்பொதோ வேறுவிதமாக அமைந்திருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்வதற்கு எங்களிடம் செய்திகள் இல்லை. ஆனால் எமது உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்தான் உள்ளன. வன்னியில் உள்ள சிறிய குழந்தைகளினதும் மனதை தளராமல் வைத்திருக்கும் முதியவர்களினதும் அன்பை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள்.

எமது மண் விடிய வேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் நடத்துகின்ற போராட்டம்தான் இங்கே எம்முடைய கால்களை உறுதிப்படுத்தி எம்மை நிமிர்ந்து நடக்க வைத்திருக்கின்றது என்றார் இளந்திரையன்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP