சமீபத்திய பதிவுகள்

வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-2

>> Tuesday, June 30, 2009

வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.

இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.

விஜயன்

இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

"வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

மக்கள் புகார்

விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.

அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.

அடைக்கலம் கொடுத்த அழகி

 

 

 

விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்'' என்று பொருள்.

இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்'')
குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய இளவரசி

விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்'' என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

குவேனியின் கதி

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு'' என்று கூறுகிறான்.

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

திருமணம்

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

தபால் தலை

 

 
1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.


தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP