சமீபத்திய பதிவுகள்

இலங்கை இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் பனிப்போர்

>> Wednesday, June 17, 2009

 

இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் கடற்படைத் தளபதி வசந்த கருணாகொடவிற்கும் இடையில் பாரிய கருத்து முரன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதில் யாருக்கு கூடப் பங்கு இருக்கிறது, கடற்படைக்கா அல்லது இராணுவத்திற்கா என்ற வாக்குவாதம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதுவரை காலமும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் நடந்துவந்த இந்தக் கருத்து முரன்பாடு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனையடுத்து வசந்த கருணாகொட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பத்திரிகைகளில் எழுதும் 5 ஊடகவியலாளர்களை பழிவாங்க நேவி சம்பத் என்ற உயர் அதிகாரி ஒருவரை நியமித்திருக்கிறார்.

இந்த அதிகாரி குறிப்பிட்ட ஊடகவியலாளர்களை பழிவாங்க முனையும் முன்னர், வசந்த கருணாகொடவுடன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக நேவி சம்பத் என்பவர் தலைமறைவானார். இதனையடுத்து வசந்த கருணகொட நேவி சம்பத் ஒரு தேசத் துரோகி என்றும், புலிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், இரகசியப் போலீசாரிடம் கூறி அவரை கைதுசெய்யுமாறு பரிந்துரைத்துள்ளார்.

இரகசிய போலீசார் நேவி சம்பத்தை கைதுசெய்து, விசாரித்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் கசிந்துள்ளது. சாட்சியாக மாறியுள்ள நேவி சம்பத்தின் வாக்குமூலத்தினால் திடுக்குற்ற சரத்பொன்சேகா மேற்குறிப்பிட்ட அந்த 5 ஊடகவியலாளருக்கும் உடனடியாக இராணுவ அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்கியுள்ளார்.

ஆசியப் பத்திரிகையாளர் இன் கொழும்பு தொடர்பாளரும் மேலும் நான்கு பத்திரிகை எழுத்தாளர்களும் கண்காணிக்கப்பட்டு வந்தார்கள் என Asian Tribune அறிக்கை விட்டுள்ளது.

நேவி சம்பத் தன்மீது சாட்டப்பட்ட  குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில், போர்ப் பகுதிகளில் இருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பிய ஆசியப் பத்திரிகை தொடர்பாளரும், Bottom Line பத்திரிகை எழுத்தாளருமான  ருவான் வீரக்கோன்

உட்பட ஐந்து ஊட்கவியலாளர்கள் பற்றி துப்பறிந்து கூறும்படி  கருணாகொட பணித்திருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடந்த வெள்ளி பிலியந்தல காவல் நிலையத்தில் வீரக்கோன் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரில் மிரட்டல் விடுத்த கடற்படை அதிகாரியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.தானாகவே வந்து சரணடைந்த நேவி சம்பத்  தனது மேலதிகாரி குறிப்பிட்ட ஊடகவியலாளர்களைக் கண்காணிக்குமாறு தன்னைப் பணித்ததன் பேரில் தான் செய்த செயல்கள் பற்றியும், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் விதமாகவும் அறிக்கையையொன்றைத் தயாரிப்பதாக குற்றவியல் புலனாய்வுத் துறையின் சிரேஷ்ட அதிகாரி சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னர் Lake House  இலும் தற்போது Siyatha பத்திரிகையிலுமுள்ள பிரசன்னா பொன்சேகா, Rivira பத்திரிகையின் திஸ்ஸ ரவீந்த்ரா, Lakbima பத்திரிகையின் மிஹிரி பொன்சேகா, மற்றும் Rupavahini கூட்டுத்தாபனத்தின் அமல் சமந்த ஆகியோரே கண்காணிக்கப்பட்ட பிற ஊடகவியலாளர்கள்.இவர்கள் ஐவரும் உக்கிர சண்டை இடம்பெற்ற கடந்த மாதத்தில் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளனர்.

வீரக்கோன், 2008 டிசம்பரில் இரு சமயங்களில் படகுகளில் முல்லைத்தீவு சாலை கடற்கரைக்கு வந்த ஆயுத தளபாடங்கள் இறக்கப்பட்டதை செய்தியாக வெளியிட்டுள்ளார். ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் இதையறிந்த வான்படையினர் அந்த ஆயுதங்களை  சாலை கடற்கரையில் வைத்தே அழித்துவிட்டனர்.இலங்கைக் கடற்படையினர் கடல் வழிப்பாதைகள் அனைத்தையும் முடக்கி விட்டதாக அறிவித்த பின்னர், 9 குதிரைவலு சக்தியுள்ள இரு படகுகள் எவ்வாறு இந்தியா ராமேஸ்வரத்தை அடைய முடிந்தது என்று வீரக்கோன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கும் கடுமையான கெடுதல்கள் ஏற்படுத்தவே தனது மேலதிகாரி எண்ணியிருந்தார் எனவும் சரணடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

சில தமிழர்களை விடுவிப்பதற்காக லஞ்சம் வாங்கினார் என்ற குற்றத்துக்காக முன்னாள் இலங்கை வான் படை அதிகாரியும் ஸ்குவாட்ரன் தலைவருமான நிஷாந்த கஜநாயக்கேயை சிறைப்பிடித்த போது இந்த பாதுகாப்பு உத்தியோகத்தரையும் புலன்விசாரணைகளுக்கு உள்ளாக்கியபோதும், மேற்படி கடற்படை உயர் அதிகாரியின் செல்வாக்கினால் அவர் பாதுகாக்கப்பட்டுள்ளார் என்றும் அறிய வருகிறது.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்த முறுகல் நிலை காரணமாக ஜனாதிபதியும் கோத்தபாயவும், அதிர்ச்சியடைந்துள்ளதாக உள்ளகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. கடற்படைத் தளபதி வசந்த கருணகொடவுக்கு கட்டாய பதவி ஓய்வுகொடுத்து ஏதாவது ஒரு வெளி நாட்டுத் தூதுவராக நியமிக்க கோத்தபாய விரும்புவதாக விடையம் அறிந்த வட்டாரங்கள் அதிர்வு நிருபரிடம் தெரிவித்தனர்.

கோத்தபாயவின் மிக நெருங்கிய நண்பரான சரத் பொன்சேகாவை, பதவி உயர்த்தி முப்படைகளின் கூட்டுத் தளபதியாக நியமிக்க கோத்தபாய விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாய இராணுவத்தில் இருந்தபோது இவ் இருவருக்கும் பாலிய நண்பர்களாக இருந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்



NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP