சமீபத்திய பதிவுகள்

உலகிலேயே மிக ஆபத்தான நாடு சிறிலங்கா-பத்திரிகையாளர் அமைப்பு அறிவிப்பு

>> Friday, June 5, 2009

பத்திரிகையாளர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு
பத்திரிகையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நிகழும் இலங்கைதான் உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடாக உள்ளது என்று சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் (IFEX) கண்டனம் செய்துள்ளது.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கூடிய சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் (International Freedom of Expression Community - IFEX) அமைப்பு, இலங்கையில் சமீபத்தில் பத்திரிகையாளர் போத்தல ஜயந்த தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சிறிலங்கா  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

பன்னாட்டு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட 30 கருத்துச் சுதந்திர அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு "பத்திரிகையாளர்கள் மீதான போரை நிறுத்து" என்று தலைப்பிட்டு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"சுதந்திரமாக செயல்பட்டு செய்திகளை அளித்துவரும் பத்திரிகையாளர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி, சிறிலங்கா அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அறிக்கை விட்டு நேரடியாக மிரட்டி வருவதைக் கண்டு பத்திரிகைச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் காப்பாற்றுவதற்கான சர்வதேச சமூகமும் கவலை கொள்கிறது.

உங்களுடைய அரசின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருவதாக சில நாட்களுக்கு முன் உங்கள் அரசாங்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்ட மூத்த பத்திரிகையாளரும், பத்திரிகைச் சங்க நிர்வாகியுமான போத்தல ஜயந்த, ஜூன் 1ஆம் தேதி கடத்தப்பட்டு காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்பட்டதை சர்வதேச பத்திரிகைக் கூட்டமைப்பும் (IFJ), மற்ற சர்வதேச கருத்துச் சுதந்திர அமைப்புகளும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இரும்புக் கம்பிகள், கட்டைகளையும் கொண்டு ஆறு பேர் ஜயந்தவை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை இனி பத்திரிகையாளராக செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவருடைய கையை அடித்து நொருக்கியுள்ளனர்.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு, அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட வேண்டாம் என்று உங்களது அரசு அலுவலர்களை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசின் ஜனாதிபதியாக உள்ள தங்களை மிகுந்த மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களின் சமூக, அரசியல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம், பாதுகாப்போம் என்று உறுதி கூறும் சர்வதேச உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights - ICCPR) கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையில் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருடைய கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை காப்பாற்றும் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி கையெழுத்தான ஜெனிவா உடன்படிக்கையும், 1977ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் கூடுதல் நெறிமுறை விதிகளையும் (Additional Protocol on the Protection of Victims of Non-International Armed Conflicts (Protocol II)) ஆகியன சிறிலங்காவை கட்டுப்படுத்துகின்றன.

"அப்பாவி மக்கள், தனி நபர்கள் ஆகிய எவராயிருப்பினும் அவர்கள் தாக்குதல் இலக்குகளாக்கப்படக்கூடாது. மக்களை அச்சுறுத்தக்கூடிய, அவர்களிடையே அச்சத்தை பரப்பம் முதன்மை நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் ஆகியன தடுக்கப்படவேண்டும்" என்று அந்த உடன்படிக்கையின் கூடுதல் விதிமுறை 13 கூறுகிறது.

"பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரை போரில் சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட கடமை என்பதன் அடிப்படையில் பாதுகாக்க வேண்டிவர்கள்" என்று வலியுறுத்தி, ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1738 ஐ சிறிலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்றைக்கு பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான இடமான இலங்கை உள்ளது. உங்களுடைய அரசில் பத்திரிகையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் மிகச் சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமானவர்கள் என்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படவுமில்லை.

1) ஜனவரி 8ஆம் தேதி கொழும்பில் பட்டப்பகலில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.

2) மார்ச் 11ஆம் தேதி சிறிலங்கா எதிர்க்கட்சியின் ஊடக ஆலோசகராக இருந்த தன்மிக கங்காநாத் திசநாயக கடத்திச் செல்லப்பட்டார்.

3) பெப்ரவரி 26ஆம் தேதி கொழும்பில் இருந்து வெளிவரும் சுடரொளி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியரான என். வித்தியாதரன் வெள்ளை வான் ஆட்களால் கடத்தப்பட்டார். பிறகு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக காட்டப்பட்டது.

4) மே 22ஆம் தேதி தி நேஷன் பத்திரிகையின் பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் கெய்த் நோயாஹர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இப்படி கடத்திய, தாக்கிய நபர்களின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத சிறிலங்கா அரசின் அதிகாரிகளின் நடத்தை குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.

பத்திரிகையாளர்களை துரோகிகள் என்று கண்டனம் செய்து உங்கள் அரசின் மூத்த உறுப்பினர்களும், இராணுவ அதிகாரிகளும் பேசி வருவது குறித்தும் அச்சப்படுகிறோம். பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது நடத்தப்படும் இத்தாக்குதல்களுக்கு அரசும் பொறுப்பு என்றே கருதுகிறோம்.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரை தேச சட்டங்களின்படியும், சர்வதேச சட்டங்களின்படியும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், அதே நேரத்தில் அவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்துமாறும் உங்கள் அரசின் அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும்.

ஜனநாயக செயல்பாடுகளை ஆதரிக்கும் கருத்துரிமைச் சுதந்திரம் அடிப்படையானது என்பதை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட செயல்பாடுகள் உங்கள் அரசிற்கு எதிராக இருந்தாலும், எல்லா விதமான கருத்துகளும் வெளியிடும் சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது என்ற அடிப்படையை நீங்கள் ஏற்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

இதுவரை பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வழக்குத் தொடர்ந்து சீரிய முறையில் புலனாய்வு செய்து அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து மக்களின் மனித உரிமைகள், கருத்துரிமை, ஆகியவற்றை பாதுகாக்கும் அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா ஜனாதிபதியாகிய உங்களிடம் பணிவுடன் கோரிக்கை வைக்கின்றோம்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள அமைப்புகளின் பெயர்கள் :

International Federation of Journalists (IFJ)
Canadian Journalists for Free Expression (CJFE)
Cartoonists Rights Network International (CRNI)
Centre algérien de défense de la liberté de la presse (CALP)
Center for Journalism in Extreme Situations (CJES)
Centro Nacional de Comunicación Social (CENCOS)
Centro de Periodismo y Etica Publica (CEPET)
Center for Media Studies and Peace Building (CEMESP)
Comité por la Libre Expresión (C-Libre)
Foro de Periodismo Argentino, (FOPEA)
Freedom of Expression Institute (FXI)
Globe International
Institute for Reporters' Freedom and Safety (IRFS)
Independent Journalism Center (IJC), Moldova
Instituto Prensa y Sociedad (IPYS)
Journaliste en danger (JED)
Media Foundation for West Africa (MFWA)
Media Institute
Media Institute of Southern Africa (MISA)
Media Watch
Mizzima News
National Union of Somali Journalists (NUSOJ)
Observatorio Latinoamericano para la Libertad de Expresión (OLA)
Observatory for the Freedom of Press, Publishing and Creation in Tunisia
(OLPEC)
Pacific Freedom Forum (PFF)
Pakistan Press Foundation (PPF)
Public Association "Journalists"
Sindicato de Periodistas del Paraguay (SPP)
South East European Network for Professionalization of Media (SEENPM)
Southeast Asian Press Alliance (SEAPA)
World Association of Newspapers (WAN)

சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட இச்செய்தியை மக்கள் சமூக உரிமைக் கழகம் (PUCL) அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ளது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP