சமீபத்திய பதிவுகள்

பாம்!பே! மும்பைத் தாக்குதல் சொல்லித் தருகின்ற பாடம்

>> Friday, July 24, 2009

 

 

 

 


நவம்பர் 27ல் கடல் வழி பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மும்பையை களோபரப்படுத்தியதை வரிந்துகட்டிக் கொண்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டதால் மீண்டும் ஒருமுறை அவைகளை அலசத் தேவையில்லை. இந்தக் களோபரங்கள் சில உண்மைகளை மீண்டும் உரக்க அம்பலப்படுத்தி ஓய்ந்துள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட இழப்பு நாலாயிரம் கோடியென பொருளாதார வல்லுநர்கள் கணிப்புச் சொல்கின்றனர். இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 40 சதவீதம் மும்பையை மையமாகக் கொண்டுள்ளது என்பதால் வெளிநாட்டு முதலீடுகள் குறையும் என்று அஞ்சுகின்றனர்.

சர்வதேச அளவிலான நெருக்கடிகளால் பங்குச் சந்தை குறியீட்டு எண் வீழ்ச்சி கண்டு தொழில் துறை சக்கரங்கள் காற்று இறங்கிக் கிடக்க மும்பைத் தாக்குதல் அந்த சக்கரங்களைப் பஞ்சராக்கிவிட்டது என வர்ணிக்கின்றனர், பொருளாதார வல்லுனர்கள்.

வெளிநாட்டினர் வந்து தங்கிச் செல்லும் நட்சத்திர விடுதிகளான தாஜ் மற்றும் ஓப்ராய் ஹோட்டல்கள் தாக்குதலுக்கு உள்ளானது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரத்தை வெகுவாய் குறைத்துவிடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

இப்படி மும்பைத் தாக்குதலை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டும் அளந்து பார்த்து ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு என்று சொன்னார்களேயொழிய அந்த தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களைப் பற்றியும், காயப்பட்டவர்கள் பற்றியும் யாரும் அதிகம் பேசாதது அதிர்ச்சி தரும் ஒரு விஷயம்.

ஹோட்டல் தாஜ், ஓப்ராய் மற்றும் நாரிமன் ஹவுஸ் ஆகியவற்றில் இறந்துபோன தன்வந்தர்கள் மற்றும் வெளிநாட்டவர் பற்றி குறிப்பிட்ட மீடியாக்கள் மும்பை மத்திய ரயில் நிலையத்தில் பலியான அப்பாவிகளைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் உயிர்பலிகள் (78 பேர்) அங்கு தான் அதிகம்.

பலியானவர்கள் உயர் தரப்பினர் என்றால் முக்கியத்துவம் பெறுவதும் பாமரர்களின் சாவு சர்வசாதாரணமாக பார்க்கப்படுவதும் ஜனநாயக இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் அதிர்ச்சிக்குரிய விஷயங்களாகும்.

சோமாலியாவுக்கும் சூடானுக்கும் அடுத்து பட்டினிச் சாவுகள் இந்தியாவில் தான் அதிகம் என்பது பாமரரைப் பற்றி கவலைப்பட இங்கு ஆட்களே இல்லை என்தைதானே வெட்ட வெளிச்சமாக்குகிறது.

ஊழல், லஞ்சம் இவைகளுக்கு அடுத்து இன்று இந்திய எதிர் நோக்கி வரும் முக்கியப் பிரச்சனை தீவிரவாதம். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் (2008ல்) 300 பேர் தீவிரவாதத்திற்கு பலியாகியுள்ளனர். 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கோடிவரை பொருளாதார சேதாரம் மற்றும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கில் மனித நேர உழைப்புகள் விரயமாகியுள்ளது. தவிர தாக்குதலில் நேரடியாக சிக்கிக் கொண்டதின் மூலம் பலர் அச்சத்துக்கும், மன அச்சத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இப்படி தீவிரவாதம் விளைவித்த சேதாரப்பட்டியல் நீள்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதம், இந்துத்துவா அடிப்படை வாதம் இவை இரண்டும் தான் இன்று இந்தியரை அச்சுறுத்தும் முக்கிய விஷயங்கள்.

இந்தியாவி;ல் தீவிரவாதம் தலைதூக்கும் போதெல்லாம் மதத்தோடு அது சம்பந்தப்படுத்தப்பட்டு அந்த குறிப்பிட்ட மதத்தினர் அனைவருமே தீவிரவாதிகள் என்பது போல சித்தரிக்கும் தவறுகள் இன்று துணிந்து அரங்கேற்றப்படுகிறது. உண்மையில் தீவிரவாதிகள் எந்தவொரு மதத்திற்கோ அல்லது இனைத்திற்கோ ஒட்டு மொத்த பிரதிநிதிகள் அல்ல. அவர்கள் சர்வதேச துரோகிகள்.

மதவாதிகள் மத்தியில் தீவிரவாதத்திற்கான ஆதரவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் பெருகத் தொடங்கி இருந்தாலும் எல்லா இந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல. அதேப் போல் எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் அல்ல.

ஒரிசாவில் மதக்கலவரம் வெடித்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடமையாக நிவராண உதவி கிடைக்கும்படி புவனேஸ்வரில் இந்துக்கள் போராடியதும் மும்பை சமீபத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு என சர்வதேச சமுதாயம் அதனை ஒதுக்கி வைக்க வேண்டுமென மும்பைவாழ் இஸ்லாமியர் பதாகை பிடித்து போராடியதும் இதற்கு போதுமான சான்றுகள்.

ஆன்மீகத்தில் அரசியல் கலப்புதான் இந்தியாவில் தீவிரவாதம் பெருகுவதற்கான முக்கிய காரணம். மாட்டுத் தீவனம் போல இன்று இந்தியாவிலும் மதம் என்பது அரசியலுக்கு தீணியாகி வருகிறது. அதாவது சமயம் சாரா இந்தியாவிலே மதம் அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியலில் இந்த ஆன்மீகக் கலப்புதான் இன்று இந்தியாவில் தீவிரவாதம் திமிறுவதற்கான முதற்காரணம்.

பாகிஸ்தானில் ராணுவம் அட்டகாசம் புரிகிறது. இந்தியாவில் அரசியல்வாதிகள் அத்துமீறல் புரிகிறார்கள். பாகிஸ்தானில் ஆட்சியாளர்களால் ராணுவத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தியாவில் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜனநாயக ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் இரு நாடுகளிலும் காணப்படும் முரண்பாடே இது.

கட்சியை வளர்க்கவும் ஆட்சி கட்டிலை கைப்பற்றவும் இன்று சில அரசியல் கட்சிகள் அடிமட்ட காட்டுமிரண்டித் தனத்தை கூட கடைபிடிக்கத் துவங்கிவிட்டன.

ஒரிசாவில் தொழுநோயாளிகளின் சமூக சேவகர் கிரஹாம் ஸ்டேன்ஸ் தீயிட்டுப் பொசுக்கிய தாராசிங், டாங் மாவட்ட ஆலய இடிப்பிற்கு காரணமான சுவாமி அசிமானந்தா சமீபத்திய மாலேகாவ்ன் குண்டு வெடிப்பின் முதல் கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் துறவி பிரயாக் சிங் தாக்கூர், மாடாதிபதி தாயனந்த பாண்டே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ரோகித் சர்மா மற்றும் டுபே இவைகளெல்லாம் ஆன்மீகத்தில் அரசியல் கலப்பு வந்து விட்டதற்கான தீர்க்கமான அடையாளங்களாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்!

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் குண்டு வெடிப்புகளும் மதக் கலவரங்களும் பற்றிக் கொள்ளும் பட்டியலை பார்க்கும்போது தீவிரவாதம் அரசியல்வாதிகளின் மறைமுக ஆதரவு பெற்றிருப்பதை தோலரித்துக் காட்டுகிறது.

1993ல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு பின் நிகழ்ந்த பாராளுமன்றத்திற்கான பொது தேர்தலில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி 5 இடங்கள் வென்றதும்.

2002ல் குஜராத்தில் கோத்ரா சம்பவத்தை தொடாந்து நிகழ்ந்த வன்முறையை அடுத்த நடத்தப்பட்டு சட்ட மன்றத் தேர்தலில் பி.ஜே.பி பெரும்பாண்மை பலம் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதும்

2008ல் கர்நாடகாவில் பெங்களுரில் தேசிய அறிவியல் கல்வி கழகத்தில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதலை தொடர்ந்து அம்மாநிலத்தில்
பி.ஜே.பி வெற்றி பெற்றதும் ஒவ்வொரு தீவிரவாத செயலை தொடர்ந்து கட்சிகளுக்கு அரசியல் லாபம் கிடைப்பதையே காட்டுகிறது.

இவைகளை வைத்து அரசியல் நோக்கர்கள் தீவிரவாதத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் மறைமுக கூட்டு இருக்கிறது என ஆருடம் சொல்கிறார்கள்.

ஐந்தாண்டு காலம் தாங்கள் ஆட்சியில் அமர்ந்து உல்லாச வாழ்வு புரிய வேண்டும் என்பதற்காக இந்தியர்கள் மத்தியில் நிரந்தரப் பிரிவிiனை ஏற்படுத்த அரசியல்வாதிகள் முனைவது கேட்பதற்கே அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்லா உலகில எங்கெல்லாம் தீவிரவாதம் கொடிகட்டிப் பறக்கிறதோ அங்கெல்லாம் ஆட்சியாளர்களின் அரவணைப்பு துவக்க காலங்களிலாவது தீவிரவாதிகளுக்கு கிடைக்கவே செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானத்தில், ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்க்க அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற பின்லேடன் தான் பின்நாளில் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தாக்கி அழித்து தீவிரவாதத்திற்கு முக்கிய காரணமானான்.

இந்திரகாந்தி அம்மையரால் வளர்ந்து விடப்பட்ட பிந்தரன்வாலேதான் மத்திய அரசுக்கு சவால் விடுத்து சீக்கியத் தீவிரவாதத்திற்கு வித்திட்டார்.
இந்தியாவிற்குள் ஊடுருவி நாச செயல்களை விளைவிக்க ஊக்கப்படுத்திய பாகிஸ்தான் இப்போது அதன் தேசிய எல்லைக்குள் நிகழும் தீவிரவாதச் செயல்களால் திணறிக் கொண்டிருக்கிறது. பட்டயத்தை எடுப்பவர்கள் பட்டயத்தாலே சாவார்கள் என்ற வேத கூற்று ஒருபோதும் பொய்த்து போகாதே.

நாம் எல்லோரும் இந்தியர் என்ற பொது அடையாளம் மறக்கப்பட்டு, இந்துக்கள, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் என மத அடையாளங்களங்களை தேவைக்கு மிஞ்சி வெளிப்படுத்துவதும் இன்று அதிகரித்து வரும் அவலம். என்னை பொருத்தமட்டில் இது இந்தியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனை.

ஈ.வெ. ராசாமி பெரியார் போன்றவர்களின் தாக்கத்தினால் ஜாதி மத அடையாளங்களை பெரிதுபடுத்தி வெளிப்படுத்தாது வாழ்ந்த காலம் போய் மக்கள் இன்று தங்களது தனி சமூக மத அடையாளங்களை வெளிப்படுத்தி அவைகள் கொண்டாடும் அவலம் மீண்டும் தலைதூக்கி விட்டது. அது பெரும் வேதனைக்குரியது!

பிரித்தாளும் சூழ்ச்சியினால் இந்தியர்கள் சமூக மற்றும் மத ரீதியாக தனித் தீவுகளாக உடைத்து காலம் காலமாக ஆட்சி சுகத்தை தாங்கள் மட்டும் அனுபவிக்க இந்தியாவின் ஒரு சாரார் செய்யும் சூழ்ச்சி இது. இதனை இந்தியர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அது இனக் கலவரம் என்றாலும் சரி அல்லது மதக் கலவரம் என்றாலும் சரி மேல் தட்டு ஜாதியினர் எவரும் சாவதில்லை. சாமானிய ஏழைகள் தான் தங்களை கூறுபோட்டுக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கின்றனர்.

எனவே இனமத ரீதியாக துவேஷம் விதைத்து இந்தியரைத் துண்டாட இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்க முயற்சி செய்யும் எவருக்கும் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

அது மதமோ, இனமோ துவேஷம் எப்போதும் நெருப்பைத் தேடும், தோழமை அன்பைத் தேடும்.
தீவிரவாதம் எங்கு நிகழ்ந்தாலும் அது ஒரு மனித ஜாதிக்கு எதிரான துரோகம். தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மனுக்குல கொலை பாதகர்கள்.

இஸ்லாம் மற்றும் இந்துத்துவம் ஆகிய இரண்டிலும் உள்ள தீவிரவாத அமைப்புகள் எல்லாம் அழிவுத் தொழிலை கைவிட்டு ஆக்கல் சக்திகளாக உருவெடுக்கும் என்றால் நம் நாட்டில் மாபெரும் மலர்ச்சி ஏற்பட்டுவிடும். இதை அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அரசியல்வாதிகள் தங்கள் கட்சியினருக்கு சூலாயுதம் வழங்குவது, மக்கள் தங்கள் கட்சித் தலைவருக்கு வீரவாளை பரிசாக அளிப்பது போன்றவை எல்லாம் இந்தியரைக் காட்டு மிராண்டிதனத்திற்கும் கற்காலத்திற்கும் இழுத்துச் செல்லும் முயற்சியே தவிர அவை முன்னோக்கி அழைத்துச் செல்லும் செயல்களல்ல.

இன்று இந்தியா இளைஞர்கள் பெருத்த ஒரு நாடாக இருக்கிறது சுமார் 65 சதவீதம் இளைஞர்கள் இருக்கிறார்கள். கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் சொல்கேட்டு ஆடும் மகுடி பாம்புகாளகவே இவர்களில் பலர் உள்ளனர். இந்த அடிமைத் தனத்திலிருந்து இந்திய இளைஞர்கள் மீண்டாலேபோதும் இந்தியா சுபிட்சம் பெற்றுவிடும் தீவிரவாதம் அதன் எல்லைகளிலிருந்து தீவிரமாய் ஓடி ஒழிந்துவிடும்.

தேர்தல் காலத்தில் உங்கள் வாக்கினை பயன்படுத்தி சரியான அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாக தெரிந்தெடுப்புச் செய்யுங்கள் அதனை தவிர்த்து அவர்கள் பின்னால் ஒரு போதும் போகாதீர்கள். இந்தியரை மத இனப் பெயரால் துண்டாட உங்களை அடியாட்களாகவோ தங்களது ஆதரவாளர்களகவோ அவர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்ள ஒரு போதும் இடம் தராதீர்கள்.

மும்பையில் உள்ளுர்காரர் உதவிகளின்றி இவ்வளவு பெரிய தீவிரவாதச் செயலை திட்டமிட்டு நிகழ்த்தியிருக்க முடியாது என்பது இந்தியாவின் உளவுப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி ஒருவரின் கூற்று. மும்பை தாக்குதலில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் இந்தியராக கண்விழிப்பு பெற்று விட்டால் எந்த நாசகாரிகளும் இந்தியாவை அழிக்க முடியாது.

2001 செப்டம்பர் 11ல் நியூயார்க் பட்டணத்தின் இரட்டை கோபுரங்கள் சிதைக்கப்பட்டதைத் தொடாந்து அப்பட்டணத்தின் மேயரான ரூடி கொய்லானி தனது அதிரடி நடவடிக்கை மூலம் அந்த நகரையே அழகுபடுத்தி விட்டார். போதை மருந்து கடத்தலின் சர்வதேச தலைமையிடமாக விளங்கிய அந்நகரின் சீர்கேட்டினை சீழ்பிதுக்கி ஊழல் அதிகாரிகளை ஒழித்துக் கட்டி நியுயார்க் நகரில் பசுமையும், சுத்தமும் பூத்துக் குலுங்கச் செய்து அழகு படுத்திவிட்டார்.

மும்பையிலும் இது நிகழ வேண்டும் சர்வதேச நிழல் உலக தாதாக்களின் அடிவருடிகளாக இருப்போர் அகற்றப்பட வேண்டும். சொற்ப காசுக்காக நாட்டைக் காட்டி கொடுக்கும் துரோக அதிகாரிகள் மற்றும் ஆன்மீகப் போர்வையில் மக்களை கொன்று குவிப்போர் அடையாளம் காணப்பட்டு அப்புற்ப்படுத்தப்பட வேண்டும். அதற்கு எல்லா மதத்தினரும் ஒத்துழைப்பு தர, இந்த மதவேலி கடந்த ஒற்றுமையினால் இந்தியாவையே பாதுகாக்க முடியும்.

ஒரு நாடு நாகரீகம் பெற்றுள்ளது என்பது அது எந்த அளவு தொழில் வளம் பெற்றுள்ளது என்பதாலோ அல்லது பணப் புழக்கத்தாலோ அளக்கப்படுவதில்லை. அதின் குடிமக்கள் எத்தனை புனிதமானவர்கள் என்பதினாலேயே அளக்கப்படுகிறது. இந்த அளவுகோலின்படியே இந்தியாவும் நாகரீக நாடாக விரைந்து மிளிரட்டும்.

மும்பை தீவிரவாத தாக்குதலின் போது மஹாராஷ்டிரா காவல்துறை ஊழியர்களும் புதிய அதிரடிப்படை வீரர்களும் துணிவாக தீவிரவாதிகளிடம் சண்டையிட்டு அமைதிக்காத் தங்கள் உயிரையும் பொருட்டுப்படுத்தாது இந்த நாட்டினை காக்க முன்வந்துள்னர். அவர்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள். இவர்கள் விட்டுச் சென்ற காலியிடத்தை நிரப்புவதற்கு நேர்மையும் துணிவும் கொண்ட இந்தியக் கிறிஸ்தவ இளைஞர்கள் முன்வரட்டும்.

மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்காக ஒட்டு மொத்த பாகிஸ்தானியரும் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்துவது முட்டாள்தனம் இந்தியாவோடு கைகோர்க்க வேண்டும், இந்தியாவைப்போல ஜனநாயக நாடாக பாகிஸ்தானும் மாற வேண்டும் என்ற ஆதங்கம் கொண்ட பாகிஸ்தானியரும் அங்கு நிரம்பவே உள்ளனர். எனவே தீவிரவாதத்தை எதிர்க்கும் பெரும்பான்மை பாகிஸ்தானியரோடு கைகோர்த்து பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்துவிடுவதின் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாதமே இந்தியாவில் இல்லாமல் பண்ணிவிடலாம். அன்புக்கும் சகோதரத்துவத்துக்கும் வேலிகள் இல்லையே! 

வானமுதம் ஜனவரி 09

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP