சமீபத்திய பதிவுகள்

இதனை இவன் முடிப்பான் என்றால் …….? – சுவிசிலிருந்து தொல்காப்பியன்

>> Friday, July 17, 2009

 

  •  

•    வெறும் பானையை வைத்திருக்கும் மகிந்தவால் பசியாற்ற முடியுமா?

'விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்தும்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னர் கூறியிருந்தார்.

ஆனால், இப்போது அவரதும், அவரது அரசாங்கத்தினதும் கூற்றுக்கள்; அதற்கு முரணான வகையில் அமைந்திருக்கின்றன. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீங்கலாக) நியமித்த அரசாங்கம் இதுவரைக்கும் அதனைக் காரணம் காட்டியே காலத்தை இழுத்தடித்து வந்தது.

இப்போது, மக்கள் ஆணையின் பின்னரே அரசியல் தீர்வு என்ற புதியதொரு ஆயுதத்தைக் கையில் எடுத்து கவசமாகப் பாவிக்கத் தொடங்கியிருக்கிறார் மகிந்த.

காலத்தை இழுத்தடிப்பது, அரசியல் தீர்வு யோசனை என்ற மாயைக்குள் தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் நீண்டகாலத்துக்கு சிக்க வைத்திருப்பது ஆகியனவே அரசாங்கத்தினது இப்போதைய திட்டம்.

'பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்றொரு பழமொழி இருக்கிறது. உண்மையில் அரசாங்கத்தின் கைவசம் மானசீகமான அரசியல் தீர்வு என்று எதுவுமே கிடையாது. அதனால் தான் அது வெறும் பானையை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் நிறையவே குழம்பிப் போயிருக்கிறது. அத்துடன் அது மற்றவர்களைக் குழப்பவும் தவறவில்லை. சர்வதேசத்தை ஏமாற்றல் அல்லது மிரட்டுதல் ஊடாகவும் மறுபுறம் உள்நாட்டு இறைமை என்கின்ற பூச்சாண்டிப் பதங்களோடு காலத்தை இழுத்துச் செல்கையில் இந்தியாவும் தன்பங்குக்கு பாசாங்கு நிலையிலான நெருக்குதல்களை அதிகமாக்கிய போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவைக் கொண்டு, ஒரு இடைக்காலத் தீர்வு யோசனையை முன்வைக்கச் செய்தது அரசாங்கம்.

அந்த இடைக்காலத் தீர்வு யோசனை, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி பரிந்துரைத்திருந்தது. இந்த இடைக்காலத் தீர்வு யோசனை பற்றி இப்போது யாரும் கதைப்பதே கிடையாது. சர்வகட்சிக் குழுவின் இறுதி யோசனை தயாரிக்கப்பட்டு விட்டது என்று கடந்த பல வாரங்களாக கூறுகிறது அரசாங்கம். ஆனால், அது இன்னமும் ஜனாதிபதி மகிந்தவிடம் ஒப்படைக்கப் படவில்லை. தயாரித்து முடிக்கப்பட்டு விட்ட தீர்வு யோசனையை கையளிப்பதற்குத் தாமதம் ஏற்படுவது ஏன்? காரணம் இருக்கிறது.

இந்த தீர்வு யோசனையை அரசுக்குள் இருக்கும் தேசியவாத சக்திகள் நிச்சயமாக எதிர்க்கும். அது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற பயமே இந்தத் தாமதத்துக்குக் காரணம்.

13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வுக்கு அரசாங்கம் செல்லாது என்று அமைச்சர்கள் சிலர் கூறி வருகின்றனர். ஜனாதிபதி மகிந்தவும் கூட, 13 ஆவது திருத்தத்துக்கு அமைவான அரசியல்
தீர்வு ஒன்று பற்றியே பேசி வந்திருக்கிறார்.

ஆனால், கடந்த மாதம் புதுடெல்லி சென்றிருந்த ஜனாதிபதி மகிந்தவின் சகோதரர்களான பசில் ராஜபக்ஸ, கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோர் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்கத் தயாராக இருப்பதாக இந்தியாவிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

அப்படியானால், அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன? உண்மையில், அரசியல் தீர்வை எப்படி வழங்குவதென்ற குழப்பத்துக்குகு; கூட முடிவு காணமுடியாத நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது.

இதற்குள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்துக்குள்ளேயே முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கி விட்டன. ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, "13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம்" என்று பகிரங்கமாக எச்சரித்து இந்த விவகாரத்தை மீண்டும் பூதாகாரப் படுத்தினார். "தமிழ் மக்களுக்கு இப்போது எந்தக் குறையும் இல்லை. அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், தவிர வேறு எதுவும் தேவையில்லை. 13 ஆவது திருத்தம் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அது முழுமையாக அமுல்படுத்தப் படாததால்தான் நாடு மோசமான பாதிப்புகளில் இருந்து தப்பியுள்ளது." என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர், "அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதில்லை என்பதை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லையேல், வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

"தீர்வுத் திட்டம் தொடர்பான மௌனத்தைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி மகிந்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். நாட்டையும் மக்களையும் ஏமாற்ற முற்பட்டால் தேசிய பிக்கு முன்னணி மேற்கொள்ளும் போராட்டத்தால் ஆட்சியை விட்டே ஓட வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்படும்" என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

13 ஆவது அரசியல் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 20 இலட்சம் மக்களை கொண்டு வந்து கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் தனது பங்குக்கு மற்றொரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

13 ஆவது திருத்தம் தொடர்பாக சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயும் கருத்து முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன.
"வடக்குக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகக் கூடும்." என்கிறார் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்.

மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவோ, "13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இணக்கப்பாடு உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது யதார்த்தமாக அமையாது. இலங்கை சிறிய நாடு என்பதால் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கக் கூடாதென்று நாடளாவிய ரீதியில் ஒரு கருத்து நிலவுகின்றது. இவ்வாறான பின்னணியில் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது யதார்த்தமாக அமையாது." என்று கூறியிருக்கிறார்.

"13 ஆவது அரசியல் திருத்தத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை செயற்படுத்தும் சாத்தியம் தற்போதைக்கு இல்லை" என்று கூறியிருக்கிறார் கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த.

அமைச்சர்களின் கருத்துக்களின் படி பார்க்கும் போது பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு விட்டுக் கொடுக்கின்ற அளவுக்குக்கே, அரசாங்கம் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்காது என்பது உறுதியாகின்றது.

ஜாதிக ஹெல உறுமயவின் பகிரங்க எச்சரிக்கையை அடுத்து ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்றில் இது பற்றி நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது, 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு தீர்வுத் திட்டத்;தையும் கருத்துக்கணிப்பு மூலமான மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே  நடைமுறைப் படுத்துவது என்று தீர்மானிக்க வேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் "மகிந்த சிந்தனையில் அரசியல்தீர்வு குறித்து தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. தீர்வு யோசனை குறித்து சகல தரப்பினருடனும் பேசி இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்" என இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறார்.

ஜாதிக ஹெல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தினால் அவை அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறுகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் 20 உறுப்பினர்கள் இருப்பதால்; 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் முடிவை மகிந்த ராஜபக்ஸ ஒருபோதும் எடுக்கமாட்டார் என்பது உறுதி.

அரசியலமைப்பே ஒரு நாட்டில் மிகவும் உயர்வானது. அதை மீறிய எதுவும் இல்லை. ஆனால், நாட்டின் இறைமை, தேசப்பற்று குறித்து வாய் கிழியக் கத்தும் சிங்களத் தலைமைகள் இந்த அரசியலமைப்புக்கே தாம் துரோகம் செய்வதை கவனத்தில் கொள்வதில்லை. ஒரு அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப் படுத்தப் போவதில்லை என்று கூறும் கேவலமான அரசாங்கமும், அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாதெனக் கோரும் அரசியல் சக்திகளும் இலங்கையைத் தவிர வேறெங்கும் இருப்பதற்கே வாய்ப்பில்லை.

அதேவேளை, அண்மையில் 'ஹிந்து' நாளிதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 13 ஆம் திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பான கேள்விக்கு, "எனது மனதில் ஒரு தீர்வு யோசனை இருக்கிறது. அதை, நாளை நினைத்தாலும் அமுல்படுத்த முடியும். ஆனால் அதை பொது மக்களிடம் இருந்தே எதிர்பார்க்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

அதாவது, தனது மனதில் என்ன இருக்கிறதென்பதை வெளியிட அவர் தயாராக இல்லை. அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்வதற்கே தயாராக இல்லாத ஒருவரிடம் இருந்து தெளிவானதும் உறுதியானதுமான தீர்வுத் திட்டத்தை எதிர்பார்க்க முடியாது.

அதுபோன்றே அரசியல் தீர்வு பற்றிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், "எதை வழங்க வேண்டும், எதை வழங்கக் கூடாது என்பது எமக்குத் தெரியும். அந்த அதிகாரத்தை பொதுமக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். தீர்வுத் திட்டத்தைக் கோருபவர்கள், நாம் வழங்குவதைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையானது எதுவும் இங்கு கிடைக்காது. இலங்கையில் சம~;டி முறைமைக்கு இடமேயில்லை. அனைத்து சமூகங்களும் ஒன்றித்த வகையில் வாழக்கூடிய ஒரு தீர்வு முறைமையே முன்வைக்கப்படும்"  என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இங்கேதான் மகிந்த ராஜபக்ஸவின் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகள் தெளிவாகின்றன. எதை வழங்க வேண்டும், எதை வழங்கக் கூடாதென்பது தனக்குத் தெரியும் என்று கூறும் மகிந்த, அதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்கியிருப்பதாகவும் கூறுகிறார். ஆனால், அரசியல்தீர்வு யோசனையை, தான் தீர்மானிக்க மாட்டாராம். மக்களிடம் இருந்தே வர வேண்டும் என்கிறார்.

தீர்மானிக்கின்ற அதிகாரத்தை மக்கள் கொடுத்திருப்பது எதற்காக என்பதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத தலைவரா அவர் என்ற கேள்வி தான் எழுகிறது.

மக்கள் தனக்கு அதிகாரம் கொடுத்திருப்பதாகக் கூறும் அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொண்டு அரசியல் தீர்வை முன்வைக்கும் திராணி தனக்கு கிடையாது என்று கூறமுடியாது. அப்படிக் கூறுவது பொறுப்பில் இருந்து நழுவுவதாகவே இருக்கும். அதுமட்டுமன்றி அரசியல் தீர்வை இப்போதைக்கு நடைமுறைப்படுத்தும் எண்ணமும் அவருக்கு இல்லையாம்.

"தேர்தலின் மூலம் அதற்கான ஆணையை நான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பின்னரே அரசியல் தீர்வு நடைமுறைப் படுத்தப்படும்" எனவும் கூறியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. இது அவரது கையில் எந்தவொரு அரசியல் தீர்வும் கிடையாது என்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது. அதேவேளை இன்னொரு தேர்தலுக்குப் பின்னர் மக்களாணையைப் பெற்று அரசியல் தீர்வை நடைமுறைப் படுத்தப் போவதாக அவர் கூறுவதும் சுத்தப் பம்மாத்து. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் போவதாக மகிந்த ராஜபக்ஸ வாக்குறுதி கொடுத்திருந்தார். அதற்கு சிங்கள மக்கள் கொடுத்த ஆணையை இப்போது அவர் மறந்து விடடார். இன்னொரு தேர்தலில் ஆணைபெற வேண்டும் என அவர் கூறுவது தேர்தல் வரைக்கும் அரசியல் தீர்வு பற்றி யாருமே பேச முடியாமல் இருக்க வேண்டும் எனும் எதிர:பார்புடன் கூடிய காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு தந்திரோபாயமே.

சம~;டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்கும் ஜனாதிபதியால் எத்தகைய தீர்வு யோசனையை முன்வைக்கப் போகிறார் என்பதைக் கூற முடியாதிருக்கிறது.

அதாவது சம~டியை நிராகரிக்கத் தெரிந்த அவரால் சரியானது எது என்பதை தீர்மானிக்க முடியவில்லை என்று கூற முடியாது. அவரது முழுக் கவனமும் இப்போது சிங்களத் தேசியவாதிகளைத் திருப்திப் படுத்துவதிலேயே இருகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இருப்பதாகவே தெரியவில்லை. இந்த நிலை தொடருமானால் தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது ……?

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP