சமீபத்திய பதிவுகள்

puthinam.com எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!

>> Monday, July 6, 2009

  – நிலவரசு கண்ணன்

  •  
நுணலும் தன் வாயால் கெடும்

நான் எழுதிய முந்தைய இருகட்டுரைகளுக்கும் பரவலான வரவேற்பும் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன (பார்க்க: http://www.nerudal.com/nerudal.8375.html). எதிர்த்து கருத்துக்கூறிய ஒருசிலரும் அறிக்கையாளர்களை விமர்சிக்க வேண்டாம் என்ற ரீதியில்தான் கூறியிருக்கிறார்களே தவிர, யாரும் தலைவர் இறந்து விட்டார் என்று அறிக்கையாளர்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அச்செய்தி யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது.

செ. பத்மனாதன் கூறுவது போலவோ, வழுதி கூறுவது போலவே தலைவர் உண்மையிலேயே மறைவெய்தியிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாத தமிழர் சமுதாயத்திடம் அத்தகையதோர் கருத்தினை வலிந்து திணிப்பதாகவே உள்ளது.

அறிக்கையாளர்களின் பணி. செ. பத்மநாதன் சார்பில் கட்டுரை எழுதும் வழுதி 29–06–2009 அன்று வெளியிட்டுள்ள தனது 'பின்னாலே சென்றவரின் முன்னாலேசென்றவரின் வழியில்…' கட்டுரையின் இரண்டாம்பாகத்தில் தலைவரும் அவரது
மகளும் முடிவெய்தினர் என்ற கருத்தை ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார். அதேகட்டுரையின் முதல் பாகத்தில் தலைவரின் குடும்பத்தில் அனைவருமே களச்சாவுஎய்திவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் அக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் தலைவரும் அவரது மகளும் மட்டுமே களச்சாவு அடைந்திருப்பதாகவும் அவரது மனைவியும் இளையமகனும் இருக்குமிடம் தெரியவில்லை எனவும் அந்தர் பல்டி அடித்துள்ளார். (பார்க்க: வழுதியின் வரிகள் …வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார்.
http://www.puthinam.com/full.php?2b3cSVG4a44w9Fg04dcrOmYdb0eHaHE34d31…)

ஏன் இந்த அந்தர் பல்டி? ஏனென்றால் இடையில் கடந்த வாரம் தலைவரின் மனைவி கனடாவில் இருப்பதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதே காரணம். இந்த அந்தர் பல்டியே அறிக்கயாளர்கள் தமது யூகக்கருத்தினடிப்படையில் பொய்மையை ஏற்றுக்கொள்ள செய்து தமது தலைமையை திணிக்கின்றனர் என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறது. நுணலும் தன் வாயால் கெடும் என்பது இதனால் தானோ!

இரண்டாம் பாகக் கட்டுரையில் தனது முதற்கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தன்னை character assasination செய்வதாகக் கூறி தனது கருத்துக்களை நியாயப்படுத்தப்பார்க்கிறார். அவ்வாறு செய்யும் பணியை நாம் இங்கு வேறு சிலருக்கு விட்டு விடலாம். ஏனெனில் நாம் (குறிப்பாக நான்) அதற்கு தகுதியற்றவர்கள். என்னைப்பொறுத்த வரை திரு. வழுதியின் கருத்துக்களையும் தற்போதைய சூழல்கலையும் மட்டுமே அறிவேன். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாதாகையால் நான் அவரை character assasination செய்ய முடியாது. இதே காரணத்தினால் திரு. வழுதி முதலானோர் முன்னாளைய புலிப் பிரமுகர்களுடன் நிகழ்த்தியிருப்பதாக எடுத்துக்காட்டும் சொல்லாடல்களையும் என்னால் மறுக்க முடியாது. அச்சொல்லாடல்கள் மூலம் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதை இயக்கத்தை சேர்ந்தோர் மட்டுமே மறுக்க முடியும். வேரு யாரும் மறுக்க முடியுமா என்று தெரியவில்லை. நக்கீரன் அதற்கு மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நான் இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் அறிக்கையாளர்கள் உண்மையிலேயே இன்று இயக்கத்திற்கு தலைமை தாங்குபவர்களாக இருந்தால், அவ்வாறு தலைவராலும் பொட்டு அம்மானாலும் ஏற்கப்பட்டிருந்தால் அதை மறுக்க வேண்டும் என்பதல்ல. அவ்வாறு மறுப்பதை விட ஏற்றுக்கொள்வதே சிறந்தது. இருப்பினும் ஒரு தலைமையை ஏற்றுக்கொள்வதை விட, அது முன் வைக்கும் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் கடினமானது. எனவே திரு.வழுதி அவர்கள் தற்போது முன்வைக்கும் நிலைப்பாடுகளை யாரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. சிங்கள ஆட்சியாளர்கள்தான் தமிழர்களுக்கு சிந்திப்பதற்கான உரிமையைத் தரவில்லை.வழுதி கூடவா அந்த உரிமையை தமிழர்களுக்கு வழங்கக்கூடாது! எனவே அவரது கருத்துக்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை விட விமர்சனக்கண்ணோட்டத்தோடு சொல்லாடலுக்கு உட்படுத்த வேண்டுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகிறேன்.

எனது முந்தைய கட்டுரைக்கு பதிவான எதிர்ப்புகளில் ஒன்றிரண்டு புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு விமர்சிக்க நான் யார் என்ற ரீதியில் கேட்டிருந்தனர். நான் தொடர்ந்து எனது கட்டுரைகளில் தமிழகத்தின் ஆக்கபூர்வ பங்களிப்பு ஈழத்தமிழர்களுக்கு இல்லமல் போனதும், தமிழகத்தில் போராட்டக்களம் இல்லாமல் போனதாலும், ஓட்டுக்கட்சித் தலைவர்களே ஈழ ஆதரவு குரல் எழுப்ப
முடிந்ததேயன்றி புரட்சிகர தலைமை ஒன்று இல்லாததுமே புலிகளின் வீழ்ச்சிக்கு மற்றெந்த காரணத்தையும் விட பெருங்காரணம் என்பதை வலியுறுத்தி வருகிறேன். அது மட்டுமின்றி சிங்கள மற்றும் இந்திய அரசுகளின் விஷமப்பரப்புரை தமிழ்நாட்டில் வலுவுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பார்கள். அதற்கு காரணம் என்னவென்பதை எவரும் எளிதில் யூகிக்கலாம். எனவே ஒரு பொறுப்புள்ள தமிழ்குடிமகன் என்ற ரீதியில் இதுபோன்ற பரப்புரைகளுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள வேண்டிய கடமை எனக்குள்ளது.

இந்திய சிங்கள அரசுகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் பொய்பரப்புரைக்கு எடுத்துக்காட்டாக அண்மைக்காலத்தில் செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் தலைவர் இறந்து விட்டார் என்பதை மறைமுகமாக நிரூபிப்பது போல இருக்கின்றன.
ஜூலை 1-ம் தேதி ஜூனியர் விகடன் வெளியிட்ட கட்டுரையில் களம் முழுவதும் மயக்ககுண்டு வீசப்பட்டு மக்கள் அனைவரும் மயங்கி வீழ்ந்து தலைவர் பிடிக்கப்பட்டு அவரது மகனோடு சித்திரவதைக்காளாகி கொல்லப்பட்டார் எனவும் விளம்பியிருந்தது. அந்தக்கட்டுரையை நுணுக்கமாக ஆராய்ந்தீர்களென்றால் தலைவரும் அவரது மகனும், பிற தளபதிகள் அனைவரும் மே 17-ம் தேதியன்றே பிடிபட்டுவிட்டனர் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் நடேசன், புலித்தேவன் போன்றோர் எப்படி 18-ம் தேதி அதிகாலை களத்திலிருந்து வெள்ளைக்கொடியுடன் போனார்கள்? 17-ம் தேதியன்று களம் முழுதும் மயக்கக்குண்டு வீசப்பட்டிருந்தால் 18-ம் தேதி காலை வரை நடேசன், புலித்தேவன் மற்றும் சகாக்கள் எப்படி மயங்காமல் உயிருடன் இருந்தனர் என்பதை சிந்தித்தாலே அக்கட்டுரை பொய் பரப்புரை என்பதை தெரிந்துகொள்ளலாம்.

சொல்லாடல் மீதான சொல்லாடல்

வழுதியின் கட்டுரை மீதான் விமர்சனத்திற்கு போகுமுன் இன்று தமிழர் சொல்லாடல் அரங்கில் பரவலாக முன்வைக்கப்படும் ஒரு கருத்தை இங்கு திறனாய்வு செய்தல் இன்றியமையாதது. கடந்த ஜூன் 25-ம் தேதி இளந்தமிழர் இயக்கம் வெளியிட்ட ஓர் அவசர வேண்டுகோளில் தலைவரின் இறப்புச் செய்தியை ஒரு சொல்லாடல் களமாக்கி இந்திய, இலங்கை அரசுகள் தங்கள் கொடூரங்களை மறைத்து குளிர் காய்கின்றார்கள் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அத்தோடு புலிகள் அமைப்பின் மீது சேற்றை வாரி இறைக்கும் கட்டுரைகள் விமரிசனம் என்ற பெயரில் பல இணையதளங்களில் வெளியாவதையும், இவை இரண்டு அரசுகளின் சதி வலை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் வன்னி பெருமக்களின் அவலத்தை மறக்க ஏதுவாகிறது. உண்மையே.

ஆனால் இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். புலிகள் இயக்கத்தின் உள்ளக கலந்துரையாடல்கள் மற்றும் முடிவெடுக்கும் நிகழ்வுகள் முதலியவற்றை திறந்த வெளியில் சொல்லாடல்பொருளாக மாற்றிடல் கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. ஆனால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிய சொல்லாடல்கள் முழுவதையுமே தவிர்க்க வேண்டியதில்லை. மேலும் அணுகுமுறைகள் பற்றிய இன்றைய திறந்த சொல்லாடல்கள் இதன்முன் கண்டிராத ஒன்று. இதுவரை தமிழகத்தின் ஓட்டுக்கட்சித் தலைவர்களே ஈழத்தமிழர்களுக்காக பேசியது ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தது. இப்போது ஒவ்வொருவர் கூறுவதும் வெளியாகிறது. மேலும் பலர் சொல்லாடல் நிகழ்த்துவதனால்தான் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மற்றும் இப்போது முளைத்திருக்கும் உள்ளிருந்து கழுத்தறுக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் போன்றோரை அடையாளம் காண முடிகிறது.

அதே வேளையில் வன்னி துயரத்திற்கு தீர்வு காண வேண்டியது வேறெதை விடவும் இன்று முன்னணி கடமை என்பதை மறுக்க முடியாது. முகாம்களில் முடக்கப்பட்டுள்ள மக்கள், இழந்தவர்களின் துயரம், இயல்பு வாழ்க்கை முதலியவை வேகமாக தீர்க்கப்படவேண்டும். இதையொட்டி தலைமை குறித்த சொல்லாடலை ஒதுக்க வேண்டியதில்லை. ஒன்றை மட்டும் பற்றி நிற்கும் போது மற்றொன்றிலிருந்து நாம் அன்னியப்படுத்தப் படுகிறோம். அண்மையில் விகடன் இதழில் வன்னிப்பேரவலத்தை  எதிர்கொள்ள தேவையான கட்டங்கள் காட்டப்பட்டிருந்தன. விகடன் ஏதோ கரிசனம் காரணமாக அச்செய்தியை வெளியிட்டுள்ளது என்று எண்ணியிருந்த போது விகடன் குழு இதழான ஜூனியர் விகடன் தன் பூணூல் புத்தியை காட்டியிருப்பதை அதன் ஜூலை 1-ம் தேதி இதழில் காணலாம். ஒரே ஊடக நிறுவனத்தின் ஒரு இதழில் வன்னிப்பேரவலம் வெளிச்சம் போட்டுக்காட்டப்படுகிறது. அதன் மற்றொரு இதழில்  தலைவர் இறந்துவிட்டார் என்று 'நிரூபிக்க'ப்படுகிறது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

அறிகையாளர்களாயினும் சரி, வேறெவராயினும் சரி வன்னிபேரவலத்தை சுட்டிக்காட்டும்போதே தலைவர் இறந்து விட்டார் என்பதை 'உறுதிப்'படுத்தத் தவறுவதில்லை. அறிக்கையாளர்களுக்கு வேண்டுமானால் புலி அமைப்பின் மீதான தடையை நீக்கக்கோர இந்திய அரசை 'தாஜா' செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். ஆனால் சோழியன் குடுமிக்கு என்ன தேவை, தமிழக மக்களின் உணர்வுகளை இடித்து நொறுக்க வேண்டுமென்பதைத் தவிர? ஆகவே எந்த ஒன்றை முன்னிறுத்தினாலும் மற்ற ஒன்றை நாம் மறந்து விடுவோம் என்பது தெளிவு. எனவே இரண்டையும் சேர்த்தே சொல்லாடல் பொருளாக்க வேண்டும் என்பது என் கருத்து. வன்னிப்பேரவலத்திற்கான தீர்வைக்கோரும் அதே வேளையில் தலைவர் மற்றும் இயக்கத்தின் மீதான தமிழர்களின் உணர்வு சேதமாகவோ தளர்ந்து விடவோ விட்டு விடக்கூடாது. தலைமையின் மீதான உணர்வை தளர விட்டுவிட்டோமானால் பின்பு எந்த தீர்வும் கிடைக்காமலே போய் விடும்.

இங்கு கருத்து தளத்தில் எதிரியை எதிர்கொள்ளும் விதம் பற்றி லெனின் கூறியிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: "எதிரியை வீழ்த்த வேண்டுமானால் முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!" என்றார் லெனின். தற்போது இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் சித்தாந்தமே 'தலைவர் இறந்து விட்டார்' என்பதும் 'தலைமையின் கதை முடிந்து விட்டது' என்பதுமே.

தலைமையைப் பற்றியோ, இயக்கத்தைப் பற்றியோ பேசவேண்டாம் என்பவர்கள் ஏதோ ஒரு வகையில் எதிரியின் சித்தாந்ததிற்கு உரம் சேர்ப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள். வன்னிப்பேரவலத்திற்காக வாதிடும் அதே வேளையில் எதிரியின் சித்தாந்தத்தை வீழ்த்த வேண்டிய கடமையும் நமக்குள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

அந்த மூட நம்பிக்கை!

இந்தியாவின் சிற்றூரகங்களில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. ஒரு பெண்ணை ஒருவன் பாலியல் வன்முறைக்காளாக்கி விட்டால், அவனுக்கே அவளைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கமே அது. அவன் ஏற்கனவே கெட்டவன் என்பதால்தான் தகாத செயலில் ஈடுபட்டான். அத்தகைய அவனுக்கே அவளை மணம் முடித்துக்கொடுத்தால் ஓநாயின் வாயில் ஆட்டுக்குட்டியை கொடுத்தது போலாகி விடாதா? ஆனால் இந்திய பிற்போக்கு மரபானது ஒருவனால் கற்பழிக்கப்பட்டவள் இன்னொருவனால் மணமுடிக்க லாயக்கற்றவள் என்று சாதிய ரீதியாக மக்களை நம்ப வைத்திருக்கிறது. அதற்கு மேல் சிந்திக்கவோண்ணாத படி விலங்கு போட்டிருக்கிறது. இந்த மரபை முறியடிப்பதே புரட்சிகரம்.

இந்த எடுத்துக்காட்டை எதற்கு இங்கு குறிப்பிட்டேன் என்றால் ஈழத்தலைவர்களின் இந்தியா மீதான 'காதலை' வெளிச்சம் போட்டுக்காட்டத்தான். முன்பும் சரி, இன்றும் தாங்களே தலைவர்கள் என்று சொல்வோரும் சரி, இந்தியா செய்யாத துரோகங்களையெல்லாம் செய்த பின்னும், இந்தியா 'யேசு ரட்சகன்' 'எங்கள் கதிமோட்சம்' என்ற ரீதியிலேயே மன்றாடுகின்றனர். இன்றைய செ.பத்மநாதனின் குரலை அய்யப்படுவோர் உண்டு. முன்பு நடேசன் அவர்களும் இவ்வாறே கடைசி வரை கூறி வந்ததை எவரும் சொல்லாடலுக்குள்ளாக்கவில்லை.

இன்று (01 – 06 – 2009) கருணாநிதி தமிழக சட்டசபையில் என்ன பேசியிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். கருணாநிதி கூறியிருப்பதாவது: "தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும்.

எனவே சிங்களவர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்".

சிங்களவன் காலை ஈழத்தமிழர்கள் நக்கிக்கொண்டு கிடக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டாரே கருணாநிதி!  இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு அனைத்துலக நீதி மன்றத்தில் வழக்கு தொடர அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்திய போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் மன்றத்திலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.  ஒருசில நாட்லளுக்கு முன்பு திருமாவளவன் விடுத்த அறிக்கையில், "ஈழத்தமிழர்களை அன்னை சோனியாதான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அதனால்தானோ என்னவோ இணையதளங்களுக்கப்பால் தமிழகத்தின் அறிவுய்திகளும், புரட்சிகர குழுக்களும் விடுதலைப்புலிகளின் மீது இன்று சரமாரியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்தபடியே உள்ளனர். ஏனெனில் இன்று இந்திய அரசியல்வாதிகள் எடுக்கும் நிலைப்பாட்டிற்கும், தமிழக ஓட்டுக்கட்சி தலைவர்களின் போக்கிற்கும் புலிகளின் இந்தியாவை தாஜா செய்வது என்ற யுக்திக்கும் வேறுபாடு பெரிதாக ஒன்றும் கிடையாது. அதனால்தான் புலிகள் ஓட்டுக்கட்சித் தலைவர்களை நம்பியிருந்தனர் போலும்!.

அதே வேளையில் இலங்கை இனவாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதை இதோ ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க கூறுகிறார்: "அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை" என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள இனவாதிகளின் இந்த நிலைப்பாட்டை இந்தியா ஒருபோதும் மாற்ற முடியாது. அப்படியே இந்தியா மாற்ற முனைந்தாலும் இலங்கை சீனாவின் பக்கம் ஒரேயடியாக சாயும் நிலை தோன்றும், எனவே இந்தியா இந்த விடயத்தில் தலையிடாது. ஆனால் நாங்கள் இந்தியாவின் நட்புசக்தி என்று காட்டிகொள்வது இந்திய கிராமங்களில் காணபடும் மேலே சுட்டிகாட்டிய மூடநம்பிக்கையைப் போல உள்ளது. இதுவரை இந்தியாவின் நட்பு சக்தியாகக் காட்டிகொண்டதன் மூலம் புலிகள் என்ன அடைந்தார்கள்? இனி அடையக் காத்திருக்கிறார்கள்? இங்கு புலிகளின் போர்த்தந்திரங்களையும், உத்திகளையும் (strategies and tactics) சொல்லாடலுக்குள்ளாக்குவதன் மூலமே புதிய தலைமுறை பாடம் கற்றுக்கொள்ள முடியும். (இவை நான்கு சுவர்களுக்குள் விவாதிக்கப்பட வேண்டியவை அல்ல. உலக அரசியலின் ஒருபகுதியே. புலித்தலைமையின் உயர்மட்ட சொல்லாடல்கள், முடிவுகள் மட்டுமே நான்கு சுவர்களுக்குள் பேசப்பட வேண்டியவை).

திறனாய்வின் திறனாய்வு

நடந்து முடிந்த நான்காவது ஈழப்போரில் மாபெரும் இனப்படுகொலை பலநாடுகளால் நிறைவேற்றப்பட்டு விடுதலைப்புலிகளுக்கு பெரும் பின் தங்கல் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. இதுவரைப் போராடி பல வெற்றிகள் ஈட்டி தமிழீழத்திற்கான ஆளுகைக் கட்டுகோப்பையும் உருவாக்கிய புலிகளின் மீது பலதரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் வைப்பது இயல்பே. தமிழகத்தைப் பொறுத்தவரை புலிகளின் வீழ்ச்சி தொடங்கியவுடன் முதலில் குற்றச்சாட்டுக்களை அடுக்கத்தொடங்கியவர் கருணாநிதி. புலிகள் சகோதர யுத்தம் நடத்தியதாகவும், தவறான முடிவுகளை எடுத்ததாகவும் திரும்ப திரும்ப
கூறிக்கொண்டே இருந்தார் கருணாநிதி. வீழ்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த அவர்கள் பக்கம் தமிழகமக்களின் கரிசனம் சாய்ந்துவிடுவதை தடுத்து தனது சுயநல அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள கருணாநிதி அவ்வாறு கூறினார்.

முல்லைத்தீவு முழுவதையும் புலிகள் இழந்தபின்னர் இன்று பல ஆய்வாளர்களும் அறுவுய்திகளும், அமைப்புக்களும், புரட்சிகர குழுக்களும் புலிகளின் தவறுகளை தொடர்ச்சியாக கண்டுபிடித்து வெளியிட்டபடி உள்ளனர். இவை இணையதள விமர்சனக்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களை அடைந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தின் இடதுசாரி அறிவுய்தியாகவும் சிறந்த மனித உரிமை காப்பாளராகவும் கருதப்படும் பேராசிரியர் அ. மார்க்ஸ் கூறும் குற்றச்சாட்டுக்களை கவனிக்க வேண்டும். 'தீராநதி' ஜூன் 2009 மாத இதழில் 'புலிகள் செய்த கடைசித் தவறு' என்ற அவரது கட்டுரையில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக ஈழ ஆதரவாளர்களிடையே ஜெயலலிதா அணிக்கு சாதகமான ஆதரவுப் போக்கு தோண்றியதை புலிகளின் விருப்பத்தின் படி நடந்ததாகவும் தமிழக அரசியலில் புலிகள் தலையிடும் நிலையை எடுத்தார்கள் என்றும் கூறுகிறார் அ. மார்க்ஸ். இதைவிட மேலாக தேர்தல் நேரத்தில் பிரபாகரனின் குரலில் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று வதந்திகள் உலவியதாக கூறுகிறார் அ. மார்க்ஸ். இது யாருமே கேள்விப்படாத ஒன்று.

அ. மார்க்ஸ் தவிர புதிய ஜனநாயக  புரட்சிக் குழுவினர் (மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர ஜனநாயக முன்னணி போன்றன) புலிகளின் அரசியல் அறிவை மட்டமாக கணித்து 'புரட்சிகர' விமர்சனக்களை முன்னெடுத்துள்ளனர். மாவோயிஸ்டுகளின் விமர்சனம் இன்னும் கிடைக்க வில்லை. தமிழ் தேசிய விடுதலை இயக்கம் இந்த வாரம் சென்னையில் ஒரு நிகழ்சி நடத்தவுள்ளது. அதன்பின்னர் அவர்களது விமர்சனம் கிடைக்கப்பெறும். ஈழ ஆர்தரவாளர்களில் திரு.நெடுமாறன், திரு.சீமான் போன்றோரின் கருத்துக்கள் கிடைத்து வருகின்றன. ஜெயமோகன் போன்றோர் தமெக்கென மிகக்குறுகிய வட்டத்தையே வைத்திருப்பவர்கள். இவர்கள் இந்திய தேசியவாதிகள். பரவலாக மதிக்கப்படாதவர்கள். எனவே ஜெயமோகன் போன்றோரின் விமர்சனங்கள் சிந்திக்க அருகதையற்றவை. புலம்பெயர் தமிழர்கள் பொழுதொரு வண்ணமும் கட்டுரைகளை தீட்டிக்கொண்டிருந்தாலும் புலிகள் அமைப்பின் மீதான விமர்சனங்களை வைக்காததனால்தானோ என்னவோ தமிழகப் புரட்சிகர குழுவினரும் அ. மார்க்ஸ் போன்றோரும் புலிகளின் தவறுகளை கடுமையுடன் பட்டியலிட்டு வருகின்றனர்.

1) புரட்சிகர நோக்கில் பார்த்தால் புலிகள் கிளிநொச்சியை கட்டியெழுப்பியதில் காட்டிய அக்கறையை மக்கள் திரள் போராட்டங்களை
கட்டியெழுப்புவதில் காட்டவில்லை என்பது உண்மையே. ஆனால் ஈழத்தில் எண்பது விழுக்காடு புலிகளின் வசம் இருந்தபோது யாரை எதிர்த்து மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவது? நேபாளப்புரட்சியின் இறுதிக் கட்டத்தில் மன்னராட்சிக்கு எதிராக தலைநகர் காட்மண்டுவில் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் இலங்கை தலை நகர் கொழும்புவோ புலிகளின், ஈழமக்களின் போராட்டக்களமல்ல. ஈழமக்களோ கொழும்புவாழ் தமிழர்களோ அங்கு பெருந்திரள் போராட்டங்களை நடத்தியிருக்க முடியாது. ஈழத்தில் ராணுவ ஆதிக்கமிக்க பகுதிகளில் பெருந்திரள் போராட்டங்கள் வெடித்திருக்க முடியாது. தொலைவிலிருந்து ராணுவத்தை ஏவும் எதிரியை ராணுவ ரீதியாகவே எதிர்கொள்ள நேர்ந்தது புலிகளுக்கு.

2) ஆனால் புலிகள் ஆதிக்க நிலையிலிருந்த போதே தமிழகளுக்கென்று ஓர் அரசியல் கட்சியைத் தோற்றுவிக்க தவறிவிட்டனர். அவ்வாறு அரசியல் கட்சியைத் தோற்றுவித்திருந்தார்களானால் தங்கள் கை மேலோங்கியிருந்த நிலையில் தாங்களே ஈழத்தில் தேர்தலும் நடத்தி ஈழமக்களின் ஜனநாயக விருப்பங்களை உலகுக்கு பறைசாற்றியிருக்க முடியும். இன்று நாடு கடந்து அமையும் தமிழீழ அரசு அன்று ஈழத்திலேயே அமைந்திருக்கும். அதே வேளையில் சிங்கள அரசின் பாசிச போக்கினை எதிர்க்கும் சிங்கள குழுக்களை சாதகமாக பயன்படுத்தவும் புலிகள் தவறினர். ஆனால் சிங்கள அரசோ புலிகளுக்கு ஏதிரான தமிழர்களை திறம்பட
பயன்படுத்திக்கொண்டமை தெளிவு. சேனநாயகா தொடங்கி சிங்களம் பயன்படுத்திக்கொண்ட தமிழர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அன்று ஜி.ஜி.பொன்னம்பலம் முதல் இன்று கருணா வரையும் இன்னும் புலம்பெயர் நாடுகளிலும் அப்பட்டியல் நீளும்.

3) அடுத்தபடியாக பார்த்தால் எந்த ஒரு தேசிய இன விடுதலைப்போராட்டமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நீரோட்டத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும். புலிகள் ஏகதியபத்திய எதிர்ப்பை பின்பற்ற வில்லை என்று புதியஜனநாயகம் இதழ் குற்றம் சுமத்துகிறது. இக்குற்றச்சாட்டில் பொருள் இல்லாமல் இல்லை. புலிகள் உலக வரைபடத்தில் மேற்குலகின் ஆதரவை பெரிதும் நாடினர். இதனால் அமெரிக்காவின் எதிரணியில் இருக்கும் நாடுகளான – சீனா, ரஷியா முதல் சின்னஞ்சிறு கியூபாவரை புலிகளின் எதிர்முகாமில் சேர்ந்து கொண்டன. அதே வேளையில் எந்த ஏகாதிபத்தியத்தின் ஆதரவை புலிகள் விரும்பி வேண்டி நின்றனரோ அந்த மேற்குலகம் புலிகளை விட சிங்கள இனவாதிகளே தங்களுக்கு அதிக 'சேவை' புரியமுடியும் என்பதைக் கண்டனர். எனவே மேற்குலகு புலிகளை ஆதரிப்பது போல போக்குகாட்டி கழுத்தறுக்கும் வேலையை கச்சிதமாகச் செய்தது. புலிகளின் கை மேலோங்கியிருந்த போது பேச்சுவார்த்தை மேடையில் அவர்களை உட்கார வைத்தனர். பின் அனைத்து நாடுகளும் சேர்ந்து தடை விதித்தனர். இதனால் புலிகள்
பேச்சுவார்த்தையிலிருந்து விலகிய போது அனைத்து நாடுகளும் சேர்ந்து சிங்களத்துக்கு படை கட்டினர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக துணைக்கண்டத்தைப் பொறுத்தவரை கடைசிவரை இந்திய ஏகாதிபத்தியத்தின் நட்பு சக்தியாக தங்களைக் காட்டிக்கொள்ள புலிகள் பெரும்பாடு பட்டனர். கடைசி வரையிலும் அரசியற்பிரிவுத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,'இந்தியாவின் நட்புசக்தியாக விளங்குவது யாரென்று இதிலிருந்தே தெரியும்…….(புலிகள்தான் என்பது)' என்ற ரீதியிலேயே தெரிவித்திருந்தார். புலிகளின் தமிழக ஆதரவு அரசியல் தலைவர்களும் இந்துமாக்கடலில் புலிகள் இந்தியாவின் நட்புசக்தியாக விளங்குவர் என்பதை திரும்ப திரும்பச் சொல்லினர். அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்து விட்டது.
இந்தியா தொடக்க முதலே புலிகளை பகடையாக பயன்படுத்தவும், அது முடியாத போது அவர்களை அழிக்கவுமே நினைத்தது. இந்தியாவின் இப்போக்கினை நன்றாக அறிந்து அனுபவித்த புலிகள் தெரிந்தே திரும்ப திரும்ப இந்தியாவின் நட்பு சக்தி தாங்களே என்று நிரூபிக்க நினைத்தனர்.

எதனால் இந்த நிலைப்பாட்டை எடுத்தனர் புலிகள்? இந்தியாவின் ஆதரவு சக்த்தியாக தம்மை காட்டிக்கொண்டால் அமெரிக்காவின் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களா அல்லது தமிழகத்தின் ஆதரவை இழக்காமல் இருக்க முடியும் என்று நினைத்தார்களா? இந்தியாவின் எதிர்ப்பு சக்த்தியாக குரல் கொடுத்திருந்தால் குறைந்தபட்சம் சில மேலை நாடுகளும் சில கீழை நாடுகளும்
புலிகளை புருவத்தை தூக்கி பார்த்திருப்பார்கள். அதே வேளை தமிழ்நாட்டிலும் முரண்பாடுகள் கூர்மையடைந்திருக்கும். இந்தியாவின் போக்கினை எதிர்க்கும் (ஏகாதிபத்திய எதிர்ப்பு) முகாம் ஒன்று தமிழகத்தில் தெளிவாக தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறு தேர்தலை புறக்கணிக்கும் தீவிர முகாம் ஒன்றை தமிழகத்தில் ஏற்படுத்தாமல் விட்டமை புலிகள் செய்த பெருந்தவறாகும்.
இன்றைக்கு செ.பத்மனாதனும் ஜூலை 1-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் 'இவ்வளவும் நடந்த பிறகும் நாங்கள் இந்தியாவை வெறுக்க வில்லை' என்றும் 'இந்தியாவின் ஆதரவுடனும் ஆசிர்வாதத்தினோடும் தங்கள் லட்சியங்களை அடைவோம்' என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் இந்தியாவுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

4) புலிகளின் தலமையை பொறுத்தவரை அது இறுகிப்போன தலைமையாகவே இருந்தது என்பதை மறுக்க முடியாது. தலைவரை சுற்றியிருந்த நம்பிக்கையாளர்களின் தலைமையாக இருந்த அதற்கு வழிகாட்ட அரசியல் தலைமை இல்லை. அரசியற்பிரிவு
எவ்விதத்திலும் அரசியல் தலைமை கொடுக்க வில்லை. அதன் விளைவை இன்று பார்க்கிறோம். த்லைவர் புதிராக மாறிய சூழலில் ஒவ்வொருவரும் தலைமை கொடுக்கின்றனர். ராணுவத்தலைமை மட்டுமே புலிகளிடம் தங்கி நின்றது. எனவே ராணுவத்தலைமைக்கப்பால் இயக்கம் செயல் படமுடிய வில்லை. அரசியல் முடிவுகள் எடுக்க முடியவில்லை. இத்தகைய தலைமை தனக்காக பேச தமிழ்நாட்டில் ஓட்டுக்கட்சி பிரமுகர்களையே நம்பியிருந்தது. தமிழ்நாட்டில் பரந்த மக்கள் ஆதரவு தளமோ அதனை இயக்கும் தலைமையோ இல்லை. திரு. நடேசன் ஒருமுறை விடுத்த அறிக்கையில்," தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்கள் தம் சுண்டு விரலை அசைத்தால் போதும், ஈழ மக்களின் கண்ணீர் துடைக்கப்பட்டுவிடும்" என்று குறிப்பிட்டார். அது உண்மை. ஆனால் புலிகள் நம்பிய ஓட்டுக்கட்சித் தலைவர்களால் தமிழக மக்களின் சுண்டு விரலைக் கூட அசையச் செய்ய முடியவில்லை.

இந்த நிலைமைகளை தமது விமர்சனத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அறிவுய்தி அ. மார்க்ஸ் புலிகள் என்ன சொன்னார்களோ அதை ஓட்டுக்கட்சித் தலைவர்கள் செய்ததன்மூலம் புலிகள் தமிழக அரசியலில் தலையிட்டார்கள் என்ற ஒரு நகைப்புக்கிடமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் (தீராநதி, ஜூன் 2009). மேலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை புலிகள் மேற்கொண்டபோதும் ஓட்டுக்கட்சித் தலைவர்கள் அவர்களை எச்சரிக்க வில்லை என்கிறார். ஓட்டுக்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்காக புலிகள் மே 16-ம் தேதி வரை காத்திருந்தார்கள் என்ற புதியஜனநாயகத்தின் விமர்சனத்தை இது மறுதலிக்கிறது. தமது இடப்பரப்பு 500 சதுர மீட்டராக சுருங்கும் வரை காத்திருந்தார்கள் என்பதே உண்மை. அந்த நிலை மே 16-ம் தேதியோ, 17-ம் தேதியோ ஏற்பட்டது. அதுவும் இந்திய ஆட்சியாளர்களின் முன் திட்டத்தின் அடிப்படையில் ஏற்பட்டது.

மற்றபடி இந்தியாவில் ஆட்சி மாறும் என்று சாதாரண கிராமத்து மக்களே நம்பத் தயாரக இல்லாதபோது, அவ்வாறு நம்பிச் செயல்படுமளவிற்கு புலிகள் முட்டாள்களாக இருந்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதா கூட்டணி அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றிருந்தாலும் அவர் தனி ஈழக்கோரிக்கையை தொடர்ந்து உயர்த்திப் பிடிப்பார் என்பதற்கு எந்த உறுதிப்படும் கிடையாது. கால
சந்தர்பத்திற்கேற்ப அவரது குரல் பயன்பட்டது. அவ்வளவே. புலிகளின் வீழ்ச்சி முழுக்க முழுக்க இந்தியாவும் அதன் துணைக்கண்ட பகைநாடுகளும் வழங்கிய ஆயுதங்களால் ஏற்பட்டதே. அந்த நிலையை எதிர்கொள்ளுமளவிற்கு புலிகள் அனைத்துலக அரசியலை கையாளவில்லை என்பது தெளிவு. இது அவர்களது ஏகாதியபத்திய ஆதரவு போக்கினால் ஏற்பட்டது என்பதும் தெளிவு.

இதற்கு மாறாக கிளிநொச்சியிலிருந்து வெளியேறும் நிலைமை தோன்றியவுடனேயே கரந்தடிப்படையாக மாறியிருக்கலாமோ, அல்லது கிளிநொச்சியிலேயே மக்களுக்கு ஆயுதம் வழங்கி வீதிப்போர் நிகழ்த்தியிருக்கலாமோ என்றால் 'அவ்வாறு
செய்திருக்கலாம்' என்ற சொற்களுக்கு வரலாற்றில் இடமில்லை. முல்லைத்தீவு வரை அவர்கள் மக்களோடு மக்களாக இருந்ததற்கு என்னென்ன காரணங்கள் அவர்களைத் தள்ளின என்பது வெளிக்கொணரபட்டு 'ஒபாமாவிற்கான தமிழர்கள்' அமைப்பு வெளியிடப்போகும் 'வன்னிப்படுகொலை'யில் இடம்பெற வேண்டிய ஒன்று.

இந்த கருத்துக்களின் அடிப்படையிலான எண்ணவோட்டங்களை தமிழர்கள் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த கட்டுரை தொடரும்.

நிலவரசு கண்ணன்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP