சமீபத்திய பதிவுகள்

மீண்டும் உருவாகிறார் பிரபாகரன்!

>> Sunday, August 23, 2009

ழை எப்போதும் மகிழ்ச்சியின் அறிகுறி. ஆனால், ஈழத் தமிழர்க்கு அது இப்போது மரணத்தின் தூதுவன். குண்டுக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் இன்று மழைக்குள் சிக்கிக்கொண்டார்கள். இலங்கை ராணுவம் கொன்றவர் போக எஞ்சியவர்களை இயற்கை தின்கிறது.

'வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்' என்ற முடிவுடன், 3 லட்சம் மக்கள் இரும்பு முள்வேலிகள் சூழ... எழுந்து நின்றால் தலைதட்டும் கூடாரங்களுக்குள் முடக்கப்பட்டு, 'காப்பாற்ற இனி எந்தக் கடவுளும் வர மாட்டான்' என்ற இறுதி முடிவுடன் இருந்தார்கள். அதிலும் யார் கண்ணோ பட்டுவிட்டது. அந்தக் கூடாரத்து வாழ்க்கைக்கும் வினை மழை வடிவத்தில் வந்துவிட்டது.


அருணாசலம் ராமநாதன் கேம்ப்பில் (ஜோன் 2) 65 ஆயிரம் பேர், அனந்தகுமாரசாமி கேம்ப்பில் (ஜோன் 3) 43 ஆயிரம் பேர், ஜோன் 4-ல் 41 ஆயிரம் பேர் எனப் பல்லாயிரம் மக்கள் கட்டாந்தரையில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை காலையில் ஆரம்பித்தது மழை. மெள்ளத் தூறியபோது கூடாரத்துக்குள் நுழைந்தார்கள். மழை கொஞ்சம் பலமானதும் தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது. உட்கார முடியாமல் எழுந்தார்கள். நிற்க முடியாமல் தலை தட்டுகிறது. தண்ணீர் முட்டுக்கு மேலே அதிகமாக ஆரம்பித்ததும் கூடாரத்தைவிட்டு வெளியேறினார்கள். செம்மண் தரை, தண்ணீரால் சகதியானது. ஒதுங்க எங்காவது இடம் கிடைக்காதா என்று வாசலை நோக்கி ஓடுகிறார்கள். அங்கு துப்பாக்கியுடன் ராணுவம் நிற்கிறது. 'யார் வந்தாலும் சுட்டுவிடுவோம்' என்ற மிரட்டல் குரல் தடுக்கிறது. வானத்தில் இருந்து மழை விரட்ட... பூமியில் ராணுவம் மிரட்ட... எதுவும் செய்ய முடியாமல் கூக்குரல் மட்டுமே அந்த மக்களால் அப்போதைக்கு எழுப்ப முடிந்திருக்கிறது.

''ஓடி வர முடிந்தவர்கள் நிலைமை பரவாயில்லை. வயதான பெரியவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சகதிக்குள் விழுந்து எழவும் முடியாமல் தவித்தார்கள். குழந்தைகள் படும் அவஸ்தை சொல்ல முடியாதது. அதைவிட மோசமானது, காயம்பட்டவர்களின் அவலக் கதை. வயிற்றில் குண்டுகள் விழுந்து, காலில் காயங்கள் ஆறாமல், கைப்புண் சரியாகாமல் இருந்தவர்கள் மீது மழை பெய்தால் எப்படி இருக்கும்? இப்படியே 3 நாட்கள் இருந்ததில் பலரது காயங்கள் அழுக ஆரம்பித்துவிட்டன'' என்று தன்னார்வத் தொண்டர் ஒருவர் சொல்கிறார். ஜோன் 4-ல் அதிக அளவு காய்ச்சலில் படுக்கவைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகள் ஜன்னி வந்து, மொத்தப் பேரும் பார்த்துக்கொண்டு இருக்க... இழுப்பிலேயே உயிரைவிட்டன.

இந்த முகாம்களுக்குத் தற்காலிகக் கழிவறைகள்தான் அமைக்கப்பட்டு இருந்தன. அவை அப்படியே தேக்கிவைக்கப்பட்டு, பின்னர் வெளியேற்றப்படும். மழை நீர் அந்தத் தொட்டிகளில் நிறைந்து அனைத்துக் கழிவுகளையும் கூடாரங்களுக்குள் அடித்து வந்துவிட்டது. தேங்கிய தண்ணீருக்குள் அதிகம் மிதப்பது இத்தகைய கழிவுகள்தான். வெள்ளிக்கிழமை ஆரம்பித்த மழை சனி, ஞாயிற்றுக்கிழமையும் தொடர... மக்கள் வாழ்ந்த பகுதி முழுவதும் நாற்றம் குடலைப் புரட்டுகிறது. தண்ணீர் தேங்கி இருக்கும் பள்ளம் எது, கழிவறைத் தொட்டி எது என்று தெரியாமல் ஜோன் 2-ல் ஒரு குழந்தை விழுந்து இறந்தது. எல்லாரும் ஏதாவது ஒரு வேதனையுடன் நின்றுகொண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக, இவர்களுக்கான உணவு வெளியில் தயாரிக்கப்பட்டு இங்கு வந்து சப்ளை செய்யப்படும். ஆனால், 2 வாரங்களுக்கு முன்பு, இங்கேயே தாயாரித்துக்கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். பொருட்களைக் கொடுத்துவிடுவார்கள். மக்களே கூட்டமாகச் சேர்ந்து சமைத்துக்கொள்ள வேண்டும். மழை காரணமாகச் சமைக்கவும் முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை முதல் யாருக்கும் முறையான சாப்பாடு இல்லை.''இந்தப் பருவ மழை இன்னும் 2 வாரங்களுக்குத் தொடர்ந்தால், முகாமில் இருக்கும் மக்கள் தொகை பாதியாகிவிடும்'' என்று பதற்றத்துடன் சொல்கிறார்கள் செஞ்சிலுவைச் சங்கத்தினர்.

''இந்த முகாம்கள் அனைத்தும் ஐ.நா. சபையால் அமைக்கப்பட்டவை. எனவே, மழை ஒழுகுவதையும் தண்ணீர் பாய்வதையும் அவர்கள்தான் தடுக்க வேண்டும்'' என்று அமைச்சர் ரிசாத் பதியுதீனும், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்லசும் குற்றம் சாட்டியுள்ளனர் சிங்கள அரசியல் கட்சிகளுக்கே நாம் எவ்வளவு பெரிய பாவத்தின் பங்குதாரர்களாக மாறிக்கொண்டு இருக்கிறோம் என்பது இப்போதுதான் உறைக்கிறது. 'விருப்பத்துக்கு முரணாக இத்தனை லட்சம் மக்களைக் கொட்டடிகளில் அடைத்துவைக்கக் கூடாது' என்று பிரதான எதிர்க் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கே சொல்லி இருக்கிறார். சிங்கள இனவெறிக் கட்சிகளில் முக்கியமான ஜே.வி.பி. எம்.பி-யான கருணாரத்னா நாடாளுமன்றத்தில் பேசும்போது, 'முள் கம்பிகளால் அமைக்கப்பட்ட முகாம்களில் கம்பிக்கு இந்தப் பக்கம் அம்மாவும் அந்தப் பக்கம் மகளும் அடைத்துவைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து உரிமை மறுக்கப்பட்டால், முகாமுக்குள் இருந்து சத்தியாக்கிரகம் செய்வார்கள். மீண்டும் பிரபாகரனை உருவாக்கத்தான் அரசாங்கம் முயற்சிக்கிறது' என்று சொல்லி இருக்கிறார். ஜனாதிபதியின் ஆலோசகர்களுள் ஒருவரான வாசுதேவ நாணயக்கார, 'இந்தப் பாதாள நகரத்தில் இருந்து மக்களை விடுவிடுக்க வேண்டும்' என்று ஜனாதிபதிக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

சிறுகச்சிறுக செத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஆனால், அங்கு சுமூகநிலை நிலவுவதாக முதல்வர் கருணாநிதி சொல்லியிருக்கிறார். தனக்கு தவறான தகவல் தருபவர்களை அவர்தான் களையெடுக்க வேண்டும்!

நன்றி:ஆனந்த விகடன்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP