சமீபத்திய பதிவுகள்

சி.பி.ஐ. தொடங்கிய திமிங்கில வேட்டை...

>> Saturday, August 8, 2009

முன்னாள் மத்திய அமைச்சர் - அந்த அரசியல் குடும்பம்!
சி.பி.ஐ. தொடங்கிய திமிங்கில வேட்டை...

''திமிங்கிலங்களை கடலில் பார்த்திருக்கிறோம். ஆனால்... தொடர்ந்து எங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் துறைமுகத் திலேயே இப்போது பார்த்துவிட்டோம்...'' - தங்கள் பிடிக்கு வந்துள்ள சென்னை, தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகங்களின் முன்னாள் தலைவர் சுரேஷ் பற்றி, சி.பி.ஐ. அதிகாரிகள் புருவம் உயர்த்திச் சொல்கிறார்கள் இப்படி!

''செல்வாக்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை விரல் சொடுக்கும் நேரத்தில் சந்தித்து பற்பல காரியங்கள் முடிப் பவர்!'' என சுட்டிக் காட்டப்படும் சுரேஷ், சி.பி.ஐ. வலையில் இப்படி வசமாகச் சிக்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சுரேஷ் மீது சி.பி.ஐ-யின் கரங்கள் நீளக் காரணம், சென்னை துறைமுகத்தில் பல மாதங்களாக நின்றிருந்த பழுத டைந்த கப்பல்தான். ஆனால், சுரேஷைப் பற்றி விசாரிக்கப் போனால்... அது கடலின் ஆழத்தை விடவும் அதிகமாக இருக்கும் போல!

தாதா வைத்த ஆப்பு!

''அண்ணா நகர் ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு வேண்டப்பட்ட தாதா ஒருவர்தான் சுரேஷுக்கு இவ்வளவு பெரிய ஆப்பு வைத்து விட்டார்!'' என்று சொல்ல ஆரம்பித்தார்கள் சென்னை துறை முகத்தில் அன்றாடம் நடமாடும் சில

ஏஜென்ட்கள். ''சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்திருக்கும் கப்பல் விவகாரம் தொடர்பாக... நாங்கள் பல முறை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் புகார் எழுதிப் போட்டோம். இத்தனை நாளும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, டெல்லியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பார்வை மாறத் தொடங்கியிருப்பதால், ஒருவழியாக சுரேஷ் மீது சி.பி.ஐ. பாய்ந்துள்ளது. முதல் கட்டமாக பழைய புகார் ஒன்றைத் தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள்!'' என்று கூறி... தற்போதைய ரெய்டுக்கு அடிபோட்ட விவகாரத்தைக் கூறுகிறார்கள்.

''சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான 'எம்.வி. சேன் ஜியோர்ஜியோ' (MV SAN GIORGIO) என்ற கப்பல் தென்னாப்பிரிக்காவிலிருந்து தேக்கு மரக்கட்டைகளை ஏற்றி வந்தது. அதில் இருந்த கட்டைகள் இந்தியர் ஒருவருக்கு சொந்தமானது. கப்பல், வரும் வழியிலேயே பழுதாகிவிட்டது. 'அந்த கப்பல் மேலும் பயணம் செய்யக் கூடாது. ஏதாவது துறைமுகத்தில் நிறுத்தி, கட்டைகளை இறக்கி விட வேண்டும்' என்று தகவல் வர... முதலில் அந்த கப்பலின் அதிபர் குஜராத் துறைமுகத்தை அணுகினார். அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்து இந்தியாவின் பல துறைமுகங்களும் அந்த கப்பலுக்கு இடம் தர மறுத்தன.

இந்த நிலையில், சுரேஷ் கொடுத்த யோசனைப்படி அந்தக் கப்பல் அதிபர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். மும்பை நீதிமன்றம் கொடுத்த ஒரு இடைக்கால தீர்ப்பின்படி, சென்னை துறைமுகத்தில் கப்பலை நிறுத்த ரூட் க்ளியரானது. அந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வந்தவுடன், அந்தக் கப்பலில் இருந்த கட்டைகளை துறைமுகத்துக்குள் இருக்கும் அம்பேத்கர் முனையத்துக்கு முன்பு இறக்கி வைத்து, மூடி வைத்தார்கள். கப்பலுக்கான வாடகை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு போக, கப்பல் அதிபர் எஸ்கேப் ஆனார். கப்பல் ஊழியர்களும் சென்னை வழியாக அவர வர் நாடுகளுக்குப் போய் விட்டார்கள். கடைசியில், கட்டைகளுக்கு சொந்தக்காரரை கப்பலுக்கான வாடகை கட்ட நிர்ப்பந்தம் செய்தார்கள். இதெல்லாம் பெயரளவுக்குத்தான். ஆனால், நிர்ப்பந்தமெல்லாம் எடுபடவில்லை...'' என மூச்சுவிட்டவர்கள், இந்த கட்டை விவகாரத்தில் பெரிய அரசியல் குடும்பத்தின் தொடர்பு களையும் அவிழ்க்க ஆரம்பித்தனர்.

 

''கப்பல் அதிபர் ஒரு பெரிய தொகையை சுரேஷ் மூலமாக அந்த அரசியல் குடும்பத்துக்கு செட்டில் செய்து விட்டார் என்று துறைமுகக் கழகத்துக்குள் பரபரப்பான பேச்சு எழுந்தது. இன்னொரு பக்கம் தேக்குக் கட்டைகளுக்கு சொந்தக்காரரும் எட்டிப் பார்க்க வில்லை. இது அந்த மூன்றெழுத்து சென்னை தாதாவுக்கு வசதியாகப் போனது. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டைகளை கடத்த ஆரம்பித்தார். இது வரை ஆயிரம் டன்களுக்கும் மேலான கட்டைகளை அந்த தாதா அப்புறப்படுத்தி விற்று விட்டார். ஒரு கொலை வழக்கு தொடர்பாக தன் தொழிலை மூட்டை கட்டி வைத் திருந்த அவர், மீண்டும் மூத்த அமைச்சரின் தம்பியின் துணையோடு தொழில் செய்ய ஆரம்பித்தார். இதை சுரேஷ் தட்டிக் கேட்க, அந்த தாதாவோ பழுதான கப்பல் அதிபர் பெரிய குடும்பத்துக்குக் கொடுத்த தொகைக்கான கணக்கைக் கேட்க ஆரம்பித்தார். அதாவது, கைமாறிய பணத்தில் சுரேஷ் ஒதுக்கிக்கொண்டது எவ்வளவு என்று புள்ளிவிவர சுத்தமாகக் கணக்கு கேட்டார்.

ஒருகட்டத்தில், குறிப்பிட்ட அரசியல் குடும்பத்துக்கு ஆகாத மற்றொரு குடும்பத்தின் இளைய தலைமுறை மூலமாக விஷயத்தை ஊதினார். இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பற்றியும் சேர்த்தே பல 'பிட்'டுகளைப் போட்டார். ஏற்கெனவே அந்த முன்னாள் அமைச்சர் மீது காட்டத்தில் இருந்த இந்த குடும்பத்துக்கு, கிடைத்த விவகாரங்கள் வாகான பிடியாக அமைந்துவிட்டன. அவ்வளவுதான்... தேக்கு மரக்கட்டையால் பெரிய குடும்பத்துக்குள் அதிகாரத் தீ பற்றிக் கொண்டது. ஆகாத குடும்பத்தின் ஆசியுடன்தான் சில முக்கிய ஆவணங்கள் சி.பி.ஐ. கைக்குப் போய்ச் சேர்ந்தது!'' என்கிறார்கள் இவர்கள்.

சுரேஷ், துறைமுக துணை பாதுகாப்பு அதிகாரி சின்ஹா, ஹரி அண்ட் கம்பெனி, சிங்கப்பூரை சேர்ந்த ஓலம் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத் தியதாக வழக்குப்பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. அந்த தாதாவால் சி.பி.ஐ. வளையத்தில் சிக்கிய சுரேஷ், இப்போது தாதாவின் கைங்கர்யங்களை விசாரணை அதி காரிகளிடம் கொட்டித் தீர்க்கலாமா என்ற ஆத்திரத்தில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மலைமலையாய் மர்மங்கள்!

இது ஒரு புறம் என்றால்... ''கப்பல் விவகாரமெல்லாம் ஜுஜுபிதான் சார்... ரெய்டுக்குப் பின்னணியில் எக்கச் சக்க மர்மங்கள் இருக்கின்றன. தோண்டித் துருவிப் பாருங்க சார்...'' என்று சி.பி.ஐ. வட்டாரத்துக்கு தாராளமாக தகவல் உபயம் செய்கிறார்களாம் அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரே!

''சுரேஷுக்கு ஆளும் தரப்பில் நிறைய தொடர்புகள் இருந்தன. அதனால் துறை ரீதியான சம்பாதிப்புகளை நடத்த அவர் தயங்கவே இல்லை. தூத்துக்குடி துறைமுகத்தின் பொறுப்பு சுரேஷுக்கு வழங்கப்பட்டதும், அங்குள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து சில ஒப்பந்தங்களைப் போட முயற்சித்தார். துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் முனையம் அமைப்பதற்கு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கும் அந்த ஒப்பந்தத்துக்கு தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார். அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தால், பலகோடி கைமாறி இருக்கும். துறைமுகத்தில் கப்பலை கொண்டு வந்து நிறுத்துவதற்கான பர்த் அலார்ட்மென்ட் ஒதுக்குவது தொடங்கி, டிராஃபிக் மேனேஜ்மென்ட்டுக்கு ஆட்கள் நியமிப்பது வரை வசூல் மழைதான்.

அதேபோல், இறக்குமதி பொருட்களை கையாளு வதற்கு டெண்டர் விடுவதிலும் நிறைய தப்புத் தண்டாக்கள் நடந்தன. ஆறு மாதங்களுக்கு முன்பு நிலக்கரி இறக்குமதிக்கும், கடல் கடந்த வாணிபத்துக்கும் சென்னை துறைமுகம் டெண்டர் விட்டது. இதில் எழுபது பேர் கலந்து கொண்டார்கள். தலா பத்து லட்சம் ரூபாய் என ஏழு கோடியை துறைமுக பொறுப்புக் கழகத்திடம் கட்டினார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச் சர் நின்ற தொகுதிக்கான தேர்தல் வேலைக்காக அவர் களிடம் பணம் கேட்டிருக்கிறார் சுரேஷ். ஆனால், அப்போதைய சமயத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளைப் பார்த்துவிட்டு, யாரும் பணம் தர முன்வரவில்லை. ஏற்கெனவே தேர்தல் செலவுக்காக கட்சி நிதி கொடுத்திருந்ததைச் சுட்டிக் காட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். இதைப் பார்த்து கோபம் அடைந்து, அந்த டெண்டர் அப்படியே கிடப்பில் போடப் பட்டது. இதில் எரிச்சல் அடைந்த சிலரும் சி.பி.ஐ. அதிகாரிகளை அணுகி பலமாகவே பற்ற வைத்தபடி இருக்கிறார்களாம்.

அரசியல்ரீதியாக பலமான சர்ச்சைக்கு ஆளான ஒரு நீர்வழி போக்குவரத்துத் திட்டத்திலும் ஆதாய வேலைகளை நடத்தினார் என்று சி.பி.ஐ-க்கு சுரேஷ் பற்றி புகார் போயிருக்கிறதாம். அந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு கடந்த ஆட்சியின்போதே ரகசிய மாக ஒரு டீமை அமைத்து விசாரணை நடத்தியது. கிடைத்த விவரங்களில் அதிர்ந்துபோயிருந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், அந்தத் துறைக்கு காங்கிரஸிலிருந்தே அமைச்சரை நியமித்து மேலும் விவரங்களைத் தோண்டியபடி உள்ளது. ஆக, சுரேஷை மையமாக வைத்து அந்த நீர்வழி போக்குவரத்துத் திட்டம் தொடர்பானவர்களையும் மத்திய அரசு பலமாகக் குறி வைக்கும் என்று இப்போது ஹேஷ்யங்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

 

அம்மாவும் சேமிப்புக் கிடங்குகளும்...

சுரேஷ் மீது சி.பி.ஐ. பிடியை இறுக்கி இருக்கும் நிலை யில் நம்மிடம் பேசிய சென்னை துறைமுக ஊழியர்கள் சிலர், ''துறைமுகத்தில் இறக்கு மதியாகும் பொருட்களை வைக்க முக்கியமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளுக்கு எப்போதும் படுகிராக்கியாக இருக்கும். அதன் வாடகை ஒரு நாளைக்கு சதுர அடிக்கு ஒரு ரூபாய்! மேற்கத்திய பெயர் கொண்ட ஒரு சென்னை ஏஜென்ஸிதான் இப்போது சென்னை துறைமுகத்தில் மிக அதிகமாக நிலக்கரியை இறக்கு மதி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலக்கரியைத்தான் தமிழக அரசும் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. அந்த ஏஜென்ஸி தொடர்பான அம்மா மீது சுரேஷுக்கு மிகுந்த பயபக்தி உண்டு! சுரேஷ் துறைமுக பொறுப்புக்கழக அலுவலகத்தில் இருந்ததை விட அந்தம்மாவின் பார்வை யில்தான் அதிகம் வளைய வருவார். பல சமயங்களில் மதிய உணவு நேரங்களில் அந்தம்மா பிறப்பிக்கும் கட்டளைகளை இவர் பின்பற்றி பல உத்தரவுகள் போட்டிருக்கிறார். ஒருமுறை, இரவோடு இரவாக இரண்டு சேமிப்புக் கிடங்குகளின் ஓடு வேயப்பட்ட கூரையை சில மர்ம மனிதர்கள் பெயர்த்தெடுத்த விவகாரம் நடந்தது. இதுபற்றி பெயரளவுக்கு ஒரு விசாரணை நடந்து, கடைசியில் ஒரு சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டது. அதேசமயம், 'இந்த கிடங்குகள் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், இவற்றைப் பயன்படுத்த வருவோர்க்கு வாடகையில் சலுகை' என்று ஒரு அறிவிப்பு வெளியானது. அந்தம்மா தொடர்பான நிலக்கரி ஏஜென்ஸிக்கு 'ஒரு சதுர அடிக்கு ஐம்பது பைசா' என்று பாதி ரேட்டுக்கு வாடகைக்கு அந்த கிடங்குகளைத் தந்துவிட்டார்கள்'' என்று சொல்லி தலை சுற்ற வைக்கிறார்கள்.

வலுவான உறவுகள்!

சுரேஷின் அரசியல் தொடர்புகளை அறிந்திருக்கும் சிலரிடம் பேசினோம். ''ஆளுங்கட்சியின் சகவாசங்களை சுரேஷுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவரே பொள்ளாச்சி ஏரியாவைச் சேர்ந்த ஒருவர்தான். இதன் பின்னணியில் சுரேஷுக்கு பக்கபலம் காட்டியவர் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய அமைச்சர் ஒருவர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்ச மாக அரசியல் சகவாசங்கள் பெருகி, பவர் ஸ்டேஷன்களில் ஒரு இடமான அதிகார வீட்டிலும் சுரேஷ் கொடி நாட்டத் தொடங்கினார். அந்த வீட்டுக்கு சுரேஷ் எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம். அந்தளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்த சுரேஷ், நிலக்கரி கப்பல்கள் வரும்போது அவற்றை இறக்குவதற்கான கான்ட்ராக்ட்டை அந்தக் குடும்பத்தினர் குறிப்பிடுகின்ற ஆட்களுக்கே வழங்கி இருக்கிறார். மத்திய அமைச்சர் ஒருவரின் ஆட்களுக்கும், மாநிலத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கும் சில ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கும் நிலக்கரியை இறக்கு வதற்கான கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற் கிடையில், தமிழகத்தில் இருக்கும் வடமாநில போலீஸ் அதிகாரிகளிடத்திலும் நட்பு பாராட்டத் தொடங்கினார் சுரேஷ்.

ரெய்டில் நடந்தது என்ன?

சுரேஷின் வீட்டில் ரெய்டு நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''நாங்கள் ரெய்டுக்காக வருவோம் என்பதை சுரேஷ் குடும்பத்தினர் கொஞ்சமும் உணர்ந்திருக்கவில்லை. வீட்டுக்குள் அதிகமாகக் கண்ணில் பட்டது வெளிநாட்டு மளிகைப் பொருட்கள்தான். சமையலுக்கான அரிசி கூட வெளிநாட்டு இறக்குமதியாக இருந்ததுதான் பெரிய ஆச்சர்யம். சில அறைகளில் டின் பீர் பாட்டில்கள் எக்கச்சக்கமாக கிடந்தன. பீரோவில் மூன்று கிலோ தங்கமும் 14 லட்ச ரூபாய் பணமும் இருந்தது. கூடவே 6,500 அமெரிக்க டாலரும் கிடைத்தது. எங்களின் அடுத்தகட்ட விசாரணையில் தி.நகர் ஏரியாவில் இருந்த வங்கி லாக்கர் ஒன்றில் மட்டுமே ஒரு கிலோ தங்கம் எடுக்கப்பட்டது. பெங்களூருவில் ஒரு வீடு, சூளைமேட்டில் இரண்டு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வீடு, தூத்துக்குடியில் ஏகபோக நிலபுலன்கள் என சுரேஷின் சொத்துகள் எங்களை மலைக்க வைத்து விட்டன. சுரேஷ் வீட்டில் இருந்த தங்கத்தை பரிசோதிக்க நாங்கள் ஒரு அப்ரைஸரை அழைத்துப் போயிருந்தோம். சுரேஷ் வீட்டில் இருந்த வெங்கடாஜலபதி படத்தைக் காட்டிய அவர், 'இந்த ஓவியம் தங்கத்தாலேயே வரையப்பட்டிருக்கிறது' எனச் சொன்னதைக் கேட்டு, நாங்கள் வாய் பிளக்காத குறைதான். சுரேஷ் வீட்டில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு தொப்பி எங்களை ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்தது. அதோடு, வீடு முழுக்க ஆயிரக்கணக்கான சென்ட் பாட்டில்களும் இறைந்து கிடந்தன. தினமும் சென்ட் ஊற்றிக் குளித்தால்கூட, அந்த பாட்டில்கள் முடிய பல வாரங்கள் பிடிக்கும். வெளிநாட்டு சென்ட் பாட்டில்களை ஏன் இந்தளவுக்கு சுரேஷ் வாங்கி வைத்திருந்தார் என்பது போகப் போகத் தெரியத்தானே போகிறது!'' எனச் சொன்னார்கள்.

குவைத்தில் இருக்கும் பிசினஸ் புள்ளி, தமிழகத்து கவிஞர் ஆகிய இருவரும் சுரேஷுக்கு மிக நெருக்கமான நண்பர்கள். அவர்களின் மூலமாக அறிமுகமான அரசியல் நண்பர்களுக்கு முதல் சந்திப்பிலேயே மொத்தமாக தொகையை தட்டிவிட்டு திகைக்க வைக்கிற காரியங்களும் நடந்துள்ளன!'' எனச் சொல்லி அதிரடிக்கிறார்கள் அந்த விஷயப்புள்ளிகள்.

தில்லுமுல்லு முன்னாள்!

''சுரேஷிடம் சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணை சரியான பாதையில் சென்றால் குறிப்பிட்ட ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் வசமாக சிக்குவார்!'' என்று வட சென்னை கட்சிப் பிரமுகர்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் வாயையும் கிளறினோம். ''இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கண்டெய்னர் கையாளும் தளம் சென்னை துறைமுகத்தை ஒட்டி இருக்கிறது. கண்டெய்னர்களை கப்பலில் ஏற்றி இறக்க முப்பது வருட குத்தகையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்திருக்கிறது. இதற்கு போட்டியாக வளைகுடா நாட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலிய நிறுவனத்தின் குத்தகையை கேன்சல் செய்ய இந்திய அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் முதலில் வளைக்கத் தொடங்கியது அந்த வளைகுடா நிறுவனம். எப்படியோ சுரேஷின் அருமைகளைத் தெரிந்து கொண்டு, அந்நிறுவன அதிகாரி கள் சென்னைக்கு பறந்து வந்தார்கள்.

அப்போது மத்திய அமைச்சராக இருந்த அரசியல் புள்ளி, அந்த நிறுவனத்தினரை சிங்கப்பூருக்குப் போகச் சொன் னார். அவர்கள் போன இடத்துக்கு பெரிய குடும்பத்துப் பெண்மணியும் அவருடைய வாரிசும் சிங்கப்பூர் சென் றார்கள். அங்கே என்ன பேசினார்களோ... அடுத்த சில நாட்களில் சென்னை துறைமுக பொறுப்புக்கழகம் ஆஸ்திரேலியா நிறுவனத்துக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியது. மத்திய அமைச்சரும் இதுகுறித்து ஆர்வம் காட்டினார். ஒரு வழியாக அந்த நிறுவனம் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேற, வளைகுடா நிறுவனம் கண்டெய்னர்களை கையாளத் தொடங்கியது. இந்த விவகாரத்தில், துறைமுகத்துக்கு வருடத்துக்கு நானூறு முதல் எண்ணூறு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்னொரு விஷயம் என்னவென்றால்... சுரேஷும், அந்த மத்திய அமைச்சரும் பதவியில் இருந்த வரை... துறை முக பொறுப்புக் கழகத்தின் அறிவிக்கப்படாத தலைமை அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் சொகுசான ஒரு கடைக்குப் பின்னால் இருக்கும் பங்களாதான். அந்த அலுவலகத்துக்குள் சி.பி.ஐ. தாமதமின்றி புகுந்தால், இன்னும் பலே பின்னணிகள் தெளிவாகும்!'' என்றார்கள்.

- வி.அர்ஜுன், எஸ்.சரவணகுமார், 
இரா.சரவணன், பி.ஆண்டனிராஜ்
   
     
 

 

நன்றி:ஜூனியர் விகடன்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP