சமீபத்திய பதிவுகள்

விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்?

>> Tuesday, September 15, 2009



annai-gunshoot

முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தம்மைக் கட்டமைத்துக்கொண்ட அளவிற்கு அரசியல் ரீதியில் தமது கொள்கைகளை வகுத்துக்கொள்ளவில்லை என்றும் சர்வதேச அரசியலைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிப் போக்கினால்தான் இன்று அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் பல்வேறு வகையான வியாக்கியானங்களை விடுதலைப்புலிகளை ஆரம்பம் முதலே எதிராக விமர்சித்துவந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் எல்லா வெற்றிகளுக்கும் சாமரம் வீசிய பலரும்கூட அவர்களுடன் கூடிநின்று தற்போது தடம் மாறி தத்துவம் பேசத் தலைப்பட்டுவிட்டார்கள்.

இந்நிலையில், முப்பதாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்மக்களின் உரிமைகளுக்கும் அவர்களின் அரசியல் வாழ்வுக்கும் அவர்களது அபிலாஷைகளுக்கும் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு எத்தகைய நிலையில் இன்று தமது ஆயுதப்போராட்டத்தை மௌனித்திருக்கிறது? அது எவ்வாறான பொறுப்பை யாருக்கு வழங்கிச் சென்றிருக்கிறது என்பது தொடர்பான ஆழமான பார்வை அவசியமாகிறது.

சர்வதேசம் என்று தம்மைக் கூறி தம்மை உலக மக்களின் மனசாட்சியாகவும் நிரந்தர நீதிவான்களாகவும் காண்பித்துக்கொள்ளும் பன்னாட்டுச் சமூகம், ஈழப்போராட்டம் தனது உச்சத்தைப் பெற்றுக்கொண்ட இந்த வருட இறுதியில் நடந்துகொண்ட விதம், அனைவரும் அறிந்த ஆய்வுக்கு உட்படுத்தத் தேவையற்ற  விடயம்.

ஒவ்வொரு நாடும் வன்னியில் இடம்பெற்ற பாரிய மனிதப்பேரவலத்துக்கு அறிக்கைகளில் அழுது வடித்ததே தவிர, செயல் ரீதியாக எதுவுமே செய்யத் துணியாத – செய்ய முடியாத – தன்நேச பின்னணி கொண்ட அரசியல் சிக்கலுக்குள் அந்நாடுகள் சிக்கிக்கிடந்தன.

மனச்சாட்சி உடைய சிறிய நாடு முதல் வல்லரசு வரை வரிசையில் நின்றவைகளில் ஒரு பகுதியினர் இந்தியாவை மீறி ஈழப்பிரச்சினையில் தலையிட்டு, விரிந்துகிடக்கும் அந்நாட்டின் வியாபாரச் சந்தைக்கு தம்மை வில்லனாக வரித்துக்கொள்ள விரும்பவில்லை. அதேவேளை, ஈழப்பிரச்சினையை நிரந்தரமாக பகைத்துக்கொள்வதன் மூலமும் சிறிலங்காவை ஆதரித்துக்கொள்வதன் மூலமும் தமக்குக் கிடைக்க கூடிய சகல ஆதாயங்களையும் உருவிக்கொள்வதில் இன்னோர் அணி நாடுகள் கவனமாகச் செயற்பட்டன.

தமது புகோள அரசியல் நலன் சார்ந்த பின்னணியை மட்டும் முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிநிரலுடன் ஈழப்பிரச்சினையைக் கையாளத்தொடங்கிய சர்வதேசத்தின் நோக்கங்கள், சிந்தனைகள் எப்போதுமே ஈழத்தமிழர் பிரச்சினையை நேரடியாகச் சந்திப்பதாக இருந்ததில்லை. தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு தருகிறோம் என்று வந்த நாடுகள் அனைத்துமே, "விபத்தில் அடிபட்டு தண்ணீர் தண்ணீர் என்று முனகியவனுக்கு புரியாணி வாங்கி தருகிறோம்" – என்று அருகே போய்நின்று ஆசை வார்த்தை காண்பிப்பதுபோல, முதலைக்கண்ணீர் வடித்துவிட்டு, தாம் வாரிச்சுருட்டுவதற்கு அங்கு என்ன கிடக்கிறது என்பதில் அவதானமாய் இருந்தனவே தவிர, தமிழர் பிரச்சினையின் உண்மையான வடிவத்தை உள்வாங்கிக்கொள்ள அவை தயாராக இருந்ததில்லை.

இதேவேளை, இந்தச் சர்வதேச சமூகம் தமக்குள் அடிக்கடி போட்டுக்கொண்ட அரசியல் கணக்குத்தான், ஈழத்தமிழர் பிரச்சினையையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் பயன்படுத்தி, தமது ஆதாயங்களை எவ்வளவுக்குப் பேரம் பேசிக்கொள்ளலாம் என்பது. இந்து சமுத்திரத்தின் ஆதிக்கப்பிடியை நாடி பிடித்துப்பார்த்து, அதற்கு ஈழத்தமிழர் பிரச்சினையைப் பகடைக்காயாக்கி உருட்டி விளையாடி தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலேயே சர்வதேசம் ஆரம்பம் முதல் ஒரேகுறியாக இருந்தது. இந்தத் திட்டத்தின் இன்னொரு வடிவத்தை ஈழப்போரின் இறுதிக்கட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த வருட இறுதியில் சர்வதேசம் இன்னொரு தடவை அரங்கேற்றிப் பார்த்தது.

தமது அரசியல் விடிவுக்காகப் போராடிய சிறுபான்மையினத்தின் முப்பதினாயிரம் போ் பெரும்பான்மையினத்தவர்களால் ஐந்து மாதத்தில் கதறக் கதறக் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களுக்காகப் போராடிய விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டது. இவை எவற்றையுமே தடுக்கவோ தட்டிக்கேட்கவோ நாதியற்ற ஈனப்பிறவிகளாக இருந்த நீங்கள், எமக்கு என்ன தீர்வைப் பெற்றுத்தரப்போகிறீர்கள்.

அதாவது, இவ்வளவு காலமும் தமது அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திவந்த ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு பயங்கரமான போரைக் கட்டவிழ்த்துவிட்டபோது, விடுதலைப்புலிகளை இந்தத் தடவையும் பிரதான விளையாட்டுப் பொருளாக மாற்றி, தமது திட்டத்தின் இன்னோர் அம்பை எய்தது. சிங்களப்படைகளின் கொடூரம் தமிழர் தாயகத்தின் எட்டுத்திக்கும் எம ராச்சியம் நடத்திக்கொண்டிருந்தபோது, பிரபாகரனையும் அவரது படைகளையும் சிங்கள இராணுவத்திடம் சர்வதேசம் சரணடையக் கோரியது. அது நடக்காது போனதால், பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையுமாவது ஏதாவது ஒரு நாட்டுக்கு எடுத்துவிடவேண்டும் என்ற நோக்கில் இறுதிக்காலப்பகுதியில் நோர்வேயின் ஊடாக தூது அனுப்பிப் பார்த்தது. பின்னர், முன்றாம் தரப்பிடம் சரணடையக்கோரும் படிமுறையையும் கேட்டுப்பார்த்தது. அதாவது, விடுதலைபுலிகளை தற்போதைக்கு அடக்கிவைத்திருந்துவிட்டு தமது தேவைகள் ஏற்படும்போது மீண்டும் ஒரு தடவை சிறிலங்காவிற்குள் அவர்களை ஏவி விட்டு, தமது காரியங்களைச் சாதிக்கலாம் என்று தமது இராஜதந்திர காய்களை நகர்த்தி பார்த்தது. (எழுபதுகளில் ஜே.வி.பி.க்கு எதிராக சிறிலங்கா அரசு கங்கணம் கட்டி கொலைப்படலத்தை அரங்கேற்றியபோது, இதேநோக்கத்துடன்தான் அதன் அப்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்கவைக் காப்பாற்றி லண்டனுக்கு அனுப்பிவைத்த இந்தியா, சிறிலங்கா பிற்கால கட்டத்தில் தன்னுடன் முரண்டுபிடிக்க ஆரம்பித்தபோது, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சிறிலங்காவிற்குள் அவரை அனுப்பிவைத்தது.)

ஒட்டுமொத்தத்தில், தமது அரசியல் விளையாட்டுகளுக்கும் ஆளை ஆள் மறைமுகமாக மடக்குவதற்கும் பலம்வாய்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயன்படுத்தி ஆண்டாண்டு காலத்துக்கும் அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்பது சர்வதேசத்தின் தீராத கனவாகியிருந்தது. அவ்வாறு தாம் மேற்கொண்டுவரும்போது, தமது இந்த நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, விடுதலைப்புலிகளை காரணம் காண்பித்தே, ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டு போவது சர்வதேசத்தின் இன்னொரு மனக்கணக்காக இருந்துவந்தது.

இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளிவைத்தாற்போல், தமிழ்மக்களின் பிரச்சினையைத் தொடர்ந்தும் பகடைக்காயாக வைத்து தமது நலன்களை முன்னெடுத்துவந்த சர்வதேசத்தின் மிகப்பெரிய திட்டத்தை உடைத்து, இராஜதந்திரம் என்ற போர்வையில் அவர்கள் சிறிலங்காவுடன் பேணிவந்த உலக ஒழுங்கைச் சிதைத்து, தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், சர்வதேசத்தை பாரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.

விடுதலைப்புலிகளை முன்வைத்து தமது நீண்ட நிகழச்சிநிரலை அரங்கேற்றலாம் என்ற கனவுடன் பயணித்த சர்வதேசம், இந்த முடிவை எதிர்பார்க்கவேயில்லை. பன்னாட்டுச் சமூகம் இன்று திகைத்துப்போய் நிற்கிறது. விடுதலைப்புலிகளின் முடிவினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னமும் மீளவேயில்லை. மாற்றுத்திட்டத்தைத் தேடிக்கண்டுபிடிப்பதற்குக் கூட இன்று வழியின்றித் திண்டாடிக்கொண்டிருக்கிறது சர்வதேசம். இன்றையநிலையில், தமிழ்மக்களின் விடிவுக்கு நிச்சயம் பதில் கூறவேண்டிய கட்டாயநிலைக்குள் சர்வதேசம் விடுதலைப்புலிகளால் தள்ளபட்டிருக்கிறது என்பதும் இதிலிருந்து சர்வதேசம் தப்பவேமுடியாது என்பதும்தான் உண்மை.

நாளை நோர்வேயோ இன்னொரு நாடோ, இனியொரு நாட்டில் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அனுசரணை வழங்கப்போவதாக போய்நின்றால் -

"தமது அரசியல் விடிவுக்காகப் போராடிய சிறுபான்மையினத்தின் முப்பதினாயிரம் போ் பெரும்பான்மையினத்தவர்களால் ஐந்து மாதத்தில் கதறக் கதறக் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களுக்காகப் போராடிய விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும் செய்த அரசு கைகளில் இரத்தக்கறையுடன் இன்றும் சுதந்திரமாக உலகவலம் வந்துகொண்டிருக்கிறது. இவை எவற்றையுமே தடுக்கவோ தட்டிக்கேட்கவோ நாதியற்ற ஈனப்பிறவிகளாக இருந்த நீங்கள், எமக்கு என்ன தீர்வைப் பெற்றுத்தரப்போகிறீர்கள்" – என்று முகத்தில் காறி உமிழ்ந்தால், அதற்கு "ஆபத்பாந்தவர்களான" இந்த அனுரசரணையாளர்களிடம் என்ன பதில் இருக்கப்போகிறது?

ஆகவே, இன்றைய நிலையில், தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டிய கட்டாயநிலைக்குள் சர்வதேசம் தள்ளப்பட்டிருக்கிறது. இராஜதந்திரம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் ஒற்றைச்சொற்களின் ஊடாக ஈழத்தமிழர் விவகாரத்திற்குள் ஒளித்து ஓடி விளையாடித்திரிந்த சர்வதேசத்தின் நோக்கங்களும் திட்டங்களும் தோலுரித்துக்காட்டப்பட்டு அதற்கு தற்போது மிப்பெரிய பணி விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருக்கிறது. தான் கொடுத்த மருந்தைத் தானே உட்கொள்ளவேண்டிய திரிசங்குநிலைக்குள் பன்னாட்டு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. எதற்குமே தொலைநோக்குத் திட்டத்துடன் சிந்திக்கத் தொடங்கும் உலக அரசியல் வட்டத்தில், பன்னாட்டுச் சமூகம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்று பெற்றுக்கொடுக்காவிடின், அதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதும் அதற்கு மிகத்தெளிவாகத் தெரியும்.

அதாவது, தமிழ்மக்களுக்கான புதிய காவலாளிகளாக சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

source:nerudal
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP