சமீபத்திய பதிவுகள்

அதிர்ச்சித் தகவல்கள்:அரசு ஹெலிகாப்டர்..

>> Friday, September 11, 2009



 

'வானில் பறக்கத் தகுதியற்றது', 'லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை...' என ஆந்திர முதல்வர் பலியான அந்த ஹெலிகாப்டரை சுற்றி சர்ச்சைக் காற்று வீசிக்கொண்டிருக்க... நம்ம ஊரு விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் லட்சணம் எப்படி இருக்கிறது? விசாரணையில் இறங்கினோம்.

மிழக அரசுக்கு சொந்தமாக ஒரு விமானமும் ஒரு ஹெலிகாப்டரும் இருக்கிறது. அமெரிக்க நாட்டுத் தயாரிப்பான அந்த விமானத்தின் பெயர் 'செஸ்னா சைடேஷன்.' V 560 அல்ட்ரா (VT-EUX) மாடலான இந்த விமானத்தில் ஒன்பது

பயணிகளும் மூன்று பைலட்டுகளும் பயணம் செய்யலாம். 'பெல் 412 EP' (VT-TNG) என்ற ஹெலிகாப்டரும் அமெரிக்கத் தயாரிப்புதான். இதில் மூன்று விமானிகள் உட்பட 12 பேர் பயணிக்கலாம். இந்த இரண்டிலும் தமிழக அரசின் கோபுர சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. செஸ்னா விமானம் 1995-ம் ஆண்டு வாங்கப்பட்டபோது அதன் விலை 13 கோடியே 8 லட்சத்து 78 ஆயிரம்ரூபாய். ஏற்கெனவே இருந்த பழைய ஹெலிகாப்டரை கொடுத்துவிட்டு 2006-ம் ஆண்டு 21 கோடியே 5 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு தற்போதைய புதிய ஹெலிகாப்டர் வாங்கப்பட்டிருக்கிறது.

அரசு விமானம் மற்றும் ஹெலிகாப்டரை தமிழக அரசின் பொதுத் துறை பராமரித்து வருவதால், அந்த துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம். ''யானையைக் கட்டித் தீனி போடுவதுதான் இந்த மேட்டர். ரொம்ப புள்ளி விவரங்கள் இருக்கு. ஆகவே மயக்கம் போட்டு விடாதீர்கள்..!'' என்றே பேசத் தொடங்கினார்கள்.

''கவர்னர், முதல்வர் போன்ற வி.வி.ஐ.பி-க்களின் வசதிக்காகவும் அவசரத் தேவைக்காகவும்தான் ஹெலிகாப்டரும் விமானமும் வாங்கப்பட்டன. இரண்டுமே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்டன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் பார்க்கிங் வாடகை உண்டு. இரண்டுக்கும் மாத வாடகையாக அரசு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வருகிறது. இதுவரை மொத்தம் விமான நிலைய வாடகைக்காக சுமார் ஒரு கோடியே அறுபது லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது.

இந்திய விமானப் படையில் டெபுடேஷன் முறையில் விமானத்துக்கு ஒரு பைலட்டும் ஹெலி காப்டருக்கு இரண்டு பைலட்டுகளும் பணியில் இருக்கிறார்கள். விமான பைலட்டான சுதீருக்கு படிகள் அலவன்ஸ் எல்லாம் சேர்த்து சம்பளம் ஒரு லட்சத்து 39 ஆயிரம். ஹெலிகாப்டர் பைலட்டு களான பண்டா, கேதர் ஆகிய இருவருக்கும் தலா ஒரு லட்சத்து 40 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது...'' என்று அவர்கள் சொல்லச் சொல்ல நமது குறிப்பேடு நிரம்பத் தொடங்கியது. அடுத்து எரிபொருள் குறிப்புகளைக் கொடுத்தார்கள்.

''விமானத்துக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும் ஹெலிகாப்டருக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் என... மொத்தமாக மாதத்துக்கு மொத்தம் மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் எரிபொருளுக்கு பணம் கொட்டப்படுகிறது. இரண்டும் இதுவரை 25 லட்சம் ரூபாய்க்கு மேல் பெட்ரோலை குடித்திருக்கின்றன. அடுத்து மெயின்டெய்ன்... விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக மட்டும் வருடத்துக்கு 64 லட்சத்து 8 ஆயிரத்து 316 ரூபாய் செலவு பிடிக் கிறது. இதுவரை பராமரிப்பு செலவு கணக்கைப் போட்டால் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் போகிறது.

தேய்மானம் மற்றும் பராமரிப்புக்காகவும் அடிக்கடி உதிரி பாகங்கள் மாற்றப்படுவது தனி செலவு. சிங்கப்பூர், அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இருந்துதான் பெரும்பாலும் உதிரிபாகங்கள் வாங்கப்படுகின்றன. இவற்றின் விலை கோடிகளில்! உதாரணமாக, 2005-ம் ஆண்டு ACAS - IIஎன்கிற சாதனத்தை அரசு விமானத் துக்கு வாங்கி பொருத்துவதற்காக 1.27 கோடி ரூபாய் செலவானது. இப்படி அடிக்கடி உதிரி பாகங்கள் வாங்கிய வகையில் 2003-ம் ஆண்டு முதல் இப்போது வரையில் 8 கோடியே 22 லட்சத்து

ஐந்தாயிரம் ரூபாய் செலவு...

அரசு ஹெலிகாப்டர் ஆங்காங்கே இறங்குவதற்காக தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் ஹெலிபேட்கள் உள்ளன. இதற்கு கட்டணமாக 19 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் ஒவ்வொரு ஆண்டும் செலவாகும் செலவுகளைப் பட்டியல் போட்டால் பலரும் அதிர்ச்சி அடைவார்கள். 2003-ம் நிதியாண்டில் இருந்து இப்போது வரை ஆன மொத்த செலவுகள் மட்டும் 17 கோடியே 46 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய். 1995-ம் ஆண்டில் இருந்து கணக்குப்போட்டுப் பார்த்தால் 35 கோடி ரூபாய்க்கு மேல் மொத்தமாக செலவாகியிருக்கும். ஆனால், விமான மும் ஹெலிகாப்டரும் வாங்குவதற்கு கொடுத்த பணம் 34 கோடி ரூபாய்!'' என்று சொல்லி முடித் தார்கள்.

சரி, கரன்ஸிகளை அசுரப் பசியில் விழுங்கிக் கொண்டிருக்கும் ஹெலிகாப்டரும் விமானமும் எந்த அளவுக்கு பயன்படுத்தப்படுகிறது? சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டின் உயர் அதிகாரிகள் வாயைக் கிளறினோம். ''அரசு ஹெலி காப்டர் 2003-ம் ஆண்டுல் இருந்து மொத்தம் 2,052 மணி நேரம்தான் பறந்திருக்கிறது. செஸ்னா விமானம் மட்டும் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இப்போது வரையில் வெறும் 158 மணி நேரம் பயணம் செய்திருக்கிறது. மற்ற விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் கணக்கிட்டால், இந்த அளவு ரொம்ப ரொம்ப சொற்பமே. சரியாகச் சொன்னால் விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் அதிக வேலை கொடுத்தது ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான். முதல்வர் கருணாநிதி விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ பயன்படுத்தவே இல்லை. கவர்னர் எப்போதாவது ஒரு முறைதான் பயன்படுத்துவார். ஆனால், வெளிமாநில முதல்வர் கள், மத்திய கேபினெட் அமைச் சர்கள்தான் இவற்றில் அதிக நேரம் பறந்திருக்கிறார்கள். இன்னொரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா? ஜெயேந்திரர் கைதானபோது, அவரை ஆந்திரா விலிருந்து அழைத்துவரவும், அந்தக் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அப்புவை ஆந்திராவிலிருந்து அழைத்து வரவும் விமானம் பயன்படுத்தப்பட்டது. தவிர இந்த வழக்கை விசாரித்த அப்போதைய எஸ்.பி. பிரேம்குமார் அடிக்கடி விமானத்தைப் பயன் படுத்தினார்...'' என்றார்கள்.

நேர்மையாக வரி கட்டும் பொதுமக்களின் நெற்றி அகலமாகத்தான் இருக்கிறது. அவர்கள் ரொம்பப் பாவம்தான்!

 

- எம்.பரக்கத் அலி
படம்: கே.ராஜசேகரன்
  
 
source:vikatan
--
www.thamilislam.co.cc


NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP