சமீபத்திய பதிவுகள்

பிரபாகரன் விடுத்த வேண்டுகோள்

>> Monday, September 7, 2009

 

P_Anna

 ப் பிரச்னைகளுக்கு நடுவே, 25-9-1987 அன்று பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் பிற இயக்கங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:

""அன்றும் சரி, இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்தச் சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன்.

தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசுச் சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு புலிகளோடு வந்து சேருங்கள்;

புலிகளாக மாறுங்கள்;

புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள்.

நீங்கள் எந்த லட்சியத்துக்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ அந்த லட்சியப்பாதையில் எமது விடுதலை இயக்கமே வீறுநடை போடுகிறது.

ஆகவே, தமிழீழ லட்சியப்பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளத்தயார். உங்களை எமது அணியில் சேர்த்துப் போராளிகளாக கெüரவிக்கத் தயார். எமது தோழர்களாகப் பராமரிக்கத் தயார்"

என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

பிரபாகரனின் வேண்டுகோள் பிற இயக்க உறுப்பினர்களைச் சிந்திக்க வைத்தது. சிலர் துணிந்து இயக்கத்தில் சேர்ந்தனர். பலர் இயக்கத் தலைமை என்ன செய்யுமோ என்று பயந்து புலிகளுடனும் சேராமல், தாங்கள் இருந்த இயக்கத்திலும் இருக்க முடியாமல் வெளியேறினார்கள்.

இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடனான ஒரு மோதலில் சுரேஷ் என்பவர் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டம் ஒன்று அவ்வியக்கத்துக்கு இருப்பதாகத் தெரியவந்ததையொட்டி, அந்த இயக்கத்தையும், "பிளாட்' இயக்கத்தையும், தமிழீழ ராணுவத்தையும் தடை செய்வதாக 14-12-1987 அன்று புலிகள் இயக்கம் அறிவித்தது.

இந்த அறிவிப்பையொட்டி, "பிளாட்' இயக்கமும் தமிழீழ ராணுவமும் தனது இயக்க வேலைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கும் புலிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் எழுந்து கொண்டே இருந்தன. ஆக, ஈ.என்.எல்.எஃப். என்கிற அமைப்பு திம்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரே ஆண்டில் சிதைந்துவிட்டது.

பிரபாகரனின் தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகள் எப்போதும் சிங்களவர்களிடம் விரோதம் பாராட்டியதில்லை. அப்பாவி சிங்கள மக்களைத் தாக்குவதில்லை என்கிற கொள்கையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.

தமிழர் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவ முகாம்களில் சிங்களச் சிப்பாய்கள் பலமாதம் அடைபட்டுக்கிடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டான குடிநீர்த் தேவைகள், உணவு சமைக்க விறகு முதலியவற்றை அவ்வீரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அளித்து உதவியிருக்கிறார்கள்.

இலங்கை மக்கள் கட்சித் தலைவரான விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணத்துக்கு இருமுறை வந்தார். முதல் தடவை யாழ் கோட்டையில் அடைபட்டுக்கிடந்த சிங்கள ராணுவக் கைதிகளைப் பார்க்க வந்தார். யாழ் தளபதியாக இருந்த கிட்டு அவரை அனுமதித்தார். சிங்களக் கைதிகளுடன் தாராளமாகப் பேச அவர் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோன்று இரண்டாவது முறையும் சில புத்தபிக்குகள், பத்திரிகையாளர்கள் சகிதம் அவர் வர விரும்பினார். சிங்கள அரசு அவர்கள் யாழ்ப்பாணம் செல்லத் தடை விதித்ததே தவிர, விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை வரவேற்றது.

அவர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தின் தளபதி கிட்டு பேசும்போது, ""நாங்கள் எங்களது உரிமைக்காகவே போராடுகிறோம். எந்த சிங்களப் பகுதியையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எங்களது இயக்க வீரர்கள் தாமாக முன்வந்து உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.

ஆனால் ராணுவத்தினர் தங்கள் உழைப்புக்காகச் சம்பளம் பெறுகிறார்கள். அதற்காகவே ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். போர் நடவடிக்கைகளில் வீரர்கள் கைது செய்யப்படுவது நடக்கக்கூடியதுதான். யாழில், மன்னாரில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை நிபந்தனை எதுவுமின்றி நாங்கள் விடுவித்தோம்.

ஆனால் எமது உறுப்பினர்கள் 19 பேரும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் இன்று சிறையில் வாடுகிறார்கள். அவர்களில் இரு வீரர்களை விடுவிக்கும்படி கேட்கிறோம். யுத்தக் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது நடைமுறையில் உள்ளது. ராணுவத்தில் ஒவ்வொரு சிப்பாயும் மரியாதை இழக்கின்றனர். முன்பு விஜயகுமாரணதுங்கா இங்கு வந்த பின்னர்தான் தெற்கில் உள்ள மக்களுக்கும் உலகுக்கும் இந்தப் பிரச்னை தெரியவந்தது. நாங்கள் குருமாரையும் உங்களையும் கேட்பது என்னவென்றால், நீங்கள் அரசை நிர்ப்பந்தித்து வீரர்களை விடுவிக்கச் செய்யுங்கள்" என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த விஜயகுமாரணதுங்கா, ""தமிழ்ப் போராளிகளின் மீது நம்பிக்கை வைத்து, வடக்கிலும் தெற்கிலும் இருக்கக்கூடிய உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பொதுப்போராட்டத்தில் வடக்கு-தெற்கு பாலம் ஒன்றை அமைப்பதே எமது பிரதான நோக்கம்" என்றார்.

இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இரு சிங்களக் கைதிகளான லெப்டினன்ட் சந்திரஸ்ரீ, பாந்தரா ஆகிய இருவரையும் டிசம்பர் 19, 1986, காலை 8-10 மணிக்கு சிங்கள கேப்டன் கொத்லவாலாவிடம் ஒப்படைத்தனர். பதிலுக்கு சிங்களத் தரப்பில் மேஜர் அருணா மற்றும் ஒரு போராளி ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சி யாழ் கோட்டைக்கு வெளியே நடைபெற்றது. இதில் கையளிக்கப்பட்ட மேஜர் அருணா, கடற்படைத்தாக்குதலில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது மரணத்துக்கு இரங்கல் மற்றும் வேலைநிறுத்தம் எல்லாம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது. அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது முகமும் தீக்காயங்கள் ஏற்பட்டு கருகிய நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் அவர் கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது, அவர் தன்னைப் படகோட்டி என்று கூறியதுடன், தனது பெயர் செல்வசாமி செல்வகுமார் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வகையாகப் பிடிபட்ட அனைவரும் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பல வாரங்கள் கழித்து அருணா இறக்கவில்லை என்று தெரியவந்ததும், கைதிகள் பரிமாற்றத்தில் எந்தக் கைதியை விடுவிக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது "செல்வகுமார்' என்று தெரிவிக்கப்பட்டார். அருணா உயிருடன் இருக்கிறார்; அவர் பெயர்தான் செல்வகுமார் எனத் தெரியவந்தால் சிங்களப்படை மறுக்கும் என்று தெரிந்தே இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றது.

அதே போன்று விடுதலைப் புலிகள் தரப்பில் கையளிக்கப்பட்ட லெப்டினன்ட் சந்திரஸ்ரீயும் மன்னாரில் நடைபெற்ற தாக்குதலில் இறந்துபோனதாக முன்பே அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்களக் கைதிகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியே வந்திருந்தார். (ஆதாரம்: பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்).

சிங்களவர்களின் போக்கு எப்போதும் தமிழருக்கு எதிராகவே இருந்தது. இதுகுறித்து பிரபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த காலத்தில் எல்லாம் எங்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அக்கறை காட்டவில்லை.

எங்களின் ஆயுதப் போராட்டம் விரிவடைந்ததே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக்காலமான 1972-ஆம் ஆண்டில்தான். அப்போது அவர் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினார். அந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஏற்கெனவே தமிழர்கள் அனுபவித்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டன.
இடதுசாரிகளை நாங்கள் நம்பலாம் என்றால் அதற்கும் சாத்தியமில்லாது போயிற்று.

1972-ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்கள் முட்டுக் கொடுத்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் இருவரும் ஸ்ரீமாவோ ஆட்சியில், கூட்டணி அரசின் அங்கமாக இருந்தபோதுதான் இந்த அநியாயம் நடந்தது. இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவரே பழம்பெரும் இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வாதான். இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம் என்று தமிழர் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தார்கள். இதற்கு ஒத்துழைத்த ஒரு சில தமிழ்த் துரோகிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர் மத்தியில் ஒரு சிங்களவர் அல்லது ஒரு கட்சி ஆதரவு நிலை எடுத்தால், அங்கே அந்தக் கட்சியும் அவரும் இயங்க முடியாது என்று காட்டினார்கள். இதற்கு விஜயகுமாரணதுங்காவின் கட்சியே சாட்சியாக இருக்கிறது. அவர்கள் மேடையிட்டுப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. விஜயகுமாரணதுங்காவே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இதர சிங்கள அரசியல் கட்சிகளை நாம் மட்டும் எப்படி நம்பமுடியும்' என்றார். (இந்து நாளிதழ் பேட்டி, 4,5 செப்டம்பர் 1986).

கேள்வி :
எதிர்காலத் தமிழீழத்தில், "ஒரு கட்சி ஆட்சிதான் இருக்கும். சர்வாதிகாரம் தலைதூக்கும்' என்றெல்லாம் கூறி உங்களது இயக்கத்தை ஆதரிக்கலாமா என்று ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பிரபாகரன் :
"எமது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து எமது அரசு அமையும். மக்களுக்கு விருப்பமான கட்சியை அவர்கள் தேர்வு செய்வார்கள். இந்தியாவில் மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்தது. போராட்டத்தில் பங்குகொள்ளாதவர்களே இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்களிப்பு எதுவும் செய்யாது, அதே நேரத்தில் களத்தில் விலகி நின்றுகொண்டு, தலைமைப் பதவியை அடையக் கனவு காணும் சிலரின் மனதிலேயே இந்த அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளன.'

கேள்வி :
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தம் என்ன?

பிரபாகரன் : சோசலிசமும் – தமிழீழமும். இவை குறிக்கோள், அடிப்படைக் கோட்பாடு.

கேள்வி :
தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ இரண்டும் தேசியவாதக் கோட்பாட்டில் இயங்கும் கட்சிகள் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் இரண்டும்தான் சோசலிச சித்தாந்தத்தில் பிறந்தவை என்றும் வேறுபாடு உள்ளதே?

பிரபாகரன் :
சித்தாந்த ரீதியில் எல்லா இயக்கங்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால், நடைமுறையில்தான் அதன் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சோசலிசம் என்பது இன்று பல ரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. சோசலிசத்திற்கு ஒருவர் அளிக்கும் விளக்கத்திலிருந்தும் அதை நடைமுறைப்படுத்தும் தன்மையிலிருந்தும் அதன் வேறுபாடுகள் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

இன்று எல்லோரும் தம்மை ஒரு சோசலிசவாதி என்றே கூறிக்கொள்கிறார்கள். ஜெயவர்த்தனா கூட ஒரு காலத்தில் அப்படிக் கூறிக்கொண்டு, இடதுசாரி நூல்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர்தான். ஆக, சோசலிசம் பேசுகிற ஒருவர் அதை நடைமுறைப்படுத்தும்போதுதான், தன்மை வெளியாகும்.

எமது மக்களின் விருப்பங்களையும், நலன்களையும் முழுமையாகப் பேணும் ஓர் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கட்டியமைப்பதே எமது லட்சியம். எமது கலாசாரம், எமது பாரம்பரியம், எமது வரலாறு ஆகியவற்றுக்கு உகந்ததாக அந்தச் சமுதாய அமைப்பு அமைய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு கனவு உண்டு. அதனைச் செயல்படுத்தவே சிந்திக்கிறோம்; போராடுகிறோம்.

எங்கள் சமுதாயத்திட்டத்தில் பெருமுதலாளிகள் இருக்கமாட்டார்கள்; நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பர்.

மலையகத் தமிழர் பற்றியும் கிழக்கு மாகாணம் குறித்தும் பிரபாகரன் குறிப்பிடுகையில்,

"தமிழ்த் தேசியம் என்று நாம் குறிப்பிடும்போது வடக்கு-கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்துவரும் பாட்டாளி மக்களையும் நாங்கள் குறிக்கிறோம்.

எங்களது தமிழ்த் தேசிய அமைப்பில் மலையகத் தமிழர், இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களைச் சார்ந்தவர்களும் மதச்சார்பு அற்றோருமான தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அடங்குவர். தமிழீழம் எனும்போது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான அமைப்பையே குறிக்கிறோம்'
(வே.பிரபாகரன்-சோசலிச தமிழீழத்தை நோக்கி – பக்.28-29/ ஆதாரம்"" பழ.நெடுமாறன்).

கேள்வி :
"உங்களது இயக்க ஆட்கள் சயனைட் குப்பியைக் கழுத்தில் அணிந்திருப்பதாகக் கூறுகிறார்களே?'

பிரபாகரன் :
"உண்மைதான். இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதுவே எங்களின் பலம். இதுவே எங்கள் உயிருமாகும். இந்தக் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும்வரை எங்களுக்கு வெற்றி ஒன்றே குறி. அதை அடையவே தீவிரம் காட்டுவோம். அதை அடைய முடியாத நிலை வரும்போது, அந்தப் போராளி மற்றவரைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்கிற நிலையில் – அந்தக் கட்டம் வரும்போதுதான் சயனைட் குப்பியைக் கடிப்பார். இல்லையென்றால் எமக்கு உறுதுணையாக இருந்த பலரும் அவர்களது குடும்பமும் சிங்களச் சிறைகளில் சிக்க வேண்டியிருக்கும்.

எங்கள் தோழர்கள் பலர் இவ்வகையில் தியாகிகளாய் உயிர்விட்டிருக்கிறார்கள். எங்களது இயக்க ஆட்களை நீங்கள் சிறைகளில் அதிகம் பார்க்க முடியாது. எதிரிகளிடையே ஊடறுத்து முன்னேறிக்கொண்டே இருப்பவன்தான் சயனைட் போராளி' என்றார்.

source:tamilspy
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP