சமீபத்திய பதிவுகள்

வன்னி :ஒற்றுமை இல்லாத எந்த இனத்துக்கும் அடிமை வாழ்க்கைதான் தண்டனை!'

>> Monday, October 5, 2009

தீராத புலி வேட்டை... மாறாதா இந்த வாழ்க்கை?

'எங்களை வீட்டுக்குப் போகவிடுங்கள் அல்லது, கொன்றுபோடுங்கள்' - மரண வேலிக்கு மத்தியில் இருக்கும் ஈழத் தமிழன் மன்றாடிவைக்கும் கோரிக்கை இதுதான்!

'எங்கள் உறவுகள் வீடு திரும்ப வேண்டும் அல்லது, எங்கள் உறவுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டும்' - உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழ்ச் சொந்தங்கள் கண்ணீர் மல்கக் கேட்கும் கேள்வி இதுதான்!

'நாம் அனுப்பிய பணம் தமிழர்களுக்குக் கிடைத்ததா? அல்லது, அவர்களைப் பார்க்கத் தமிழக எம்.பி-க்கள் குழுவை விடுவீரா?' - தமிழக முதலமைச்சர் வைக்கும் கோரிக்கை இதுதான்!

இவை எதுவும் ராஜபக்ஷேவுக்குப் பொருட்டல்ல. கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் சிங்களம் மாறிப்போய் பல காலம் ஆகிவிட்டது. ஐ.நா. சபை அதிகாரியையே அங்கிருந்து விரட்டுகிறார்கள். தொண்டு நிறுவனங்களைத் துரத்துகிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட மெகா நாடுகளையே 'வரட்டும் பார்க்கலாம்' என்று சவடால் விடுகிறார். அகில உலகத்தில் யாருக்கும் அடங்காத தனித் தீவாக இலங்கை மாறியதற்கு மறைமுகத் தைரியத்தை யார் கொடுப்பது? சீனாவைச் சொல்கிறது ஒரு பக்கம். இந்தியாவின் ஆசி இருப்பதான சந்தேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பாகிஸ்தான் வெற்றி விழா விருந்து வைக்கிறது. சுற்றியுள்ள நாடுகள் செய்வது ராஜதந்திரம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், மூன்று லட்சம் மக்களை முள்வேலிக்குள் பூட்டிவைப்பது அரக்கத் தந்திரமாக மட்டுமே இருக்க முடியும்!

''வன்னி மக்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பாவிட்டால் ராஜபக்ஷே மீது பல்வேறு சந்தேகங்கள் விழும்'' என்று ஐ.நா-வின் பான் கி மூன் சொன்னதும், ''யாரும் எங்களை நிர்பந்தப்படுத்த முடியாது'' என்று தட்டிக்கழித்துவிட்டார் ராஜபக்ஷே. அவரைச் சந்திக்க வந்தார் ஐ.நா-வின் அரசியல் பிரதிநிதி லின் பாஸ்கோ. ''யுத்தம் முடிந்ததும் அந்த இடத்தில் பொதுமக்களைக் குடியமர்த்த முடியாது. குரேஷியாவில் 16 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி முடியவில்லை' என்று ஞாபகப் படுத்தியிருக்கிறார் ராஜபக்ஷே. மரண ஓலம் ஓய்ந்த பாடில்லை. சர்வதேச மன்னிப்பு சபை, இது குறித்த தனது கவலையைத் தெரியப்படுத்தியுள்ளது.

''1.62 லட்சம் மக்களிடம் மட்டும்தான் இதுவரை சோதனை நடத்தியுள்ளேன். இன்னும் ஒரு லட்சம் பேரிடம் சோதனை நடத்திய பிறகுதான் இறுதி முடிவெடுப்போம்'' என்று அமைச்சர் ராகித போகல்லகாம அறிவித்துள்ளார்.

''முகாமில் 20 ஆயிரம் புலிகள் இருப்பதாகச் சொல்லி, தினமும் சுமார் 40 பேரைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள்'' என்று இலங்கை நாடாளு மன்றத்தின் ஸ்ரீலங்கா சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த மங்கள சமரவீரா சொன்னபோது, ஆளும் தரப்பில் இருந்து பதில் இல்லை.

''கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஐந்து ஆயிரம் புலிகள் இருப்பதாக ஃபொன்சேகா சொன்னார். செப்டம்பர் மாதம் 16 ஆயிரம் புலிகளைக் கொன்றதாகச் சொன்னார். இப்போது இன்னும் 20 ஆயிரம் புலிகள் இருப்பதாகச் சொல்கிறார். அவர் சொன்னதில் எது உண்மை?'' என்று இன்னொரு எம்.பி-யான மனோ கணேசன் கேட்டார். அதற்கு அமைச்சர் அனுர பிரியதர்ஷன் அடித்த கிண்டல் நம்முடைய கன்னத்தில் ஓங்கி அறைகிறது. ''எல்லாரும் போய்ப் பார்க்க அது மிருகக்காட்சி சாலை அல்ல. யாருக்காவது சுற்றுலா போக வேண்டும் என்று நினைத்தால், மிருகக்காட்சி சாலைக்குப் போங்கள்'' என்கிறது சிங்கள அரசு.

வன்னி மக்களைத்தான் முகாமுக்குள் அடைத்திருக்கிறார்கள் என்றில்லாமல் கடந்த வாரத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 74 பேரைக் கொண்டுவந்து முகாமில் வைத்திருக்கிறார்கள். 15 வயதுக்கு மேற்பட்ட அத்தனை இளைஞர் களையும் புலிகள் என்று சந்தேகப்பட்டு வவுனி யாவில் உள்ள காமினி மகாவித்யாலயம் பள்ளி முகாமில் அடைத்துவைத்திருக்கிறார்கள்.

அதே போல் பம்பமடு பல்கலைக்கழக முகாமில் இளம் பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களில் சிலர் நிர்வாணப்படுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு, இரண்டு மூன்று பேர்களாகக் கை கால்கள் இணைத்து கட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உலுக்குகின்றன.

உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகச் சிலரை மட்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதாகச் செய்திகள் பரவின. யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு 10 ஆயிரம் பேரைக் கடந்த 11-ம் தேதி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ''அவர்கள் யாரும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. வவுனியாவில் இருந்து தென்மராட்சியில் உள்ள கச்சாய் ராமாவில் தடுப்பு முகாமுக்குத்தான் கொண்டுபோகப்படுகிறார்கள்'' என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, யாழ்ப்பாணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அகதிகள் முகாம்கள் இருக்கின்றன. அதில், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். இன்று ஈழத்தின் வடக்குப் பகுதி முழுவதும் அகதிகள் முகாமாக மாறிவிட்டது. விலகி விலகி இருக்கின்றன. கதிர்காமம், ஆனந்தகுமாரசாமி, ராமநாதன்,அருணாசலம் ஆகிய பெயர்களில் முகாம்கள். 600 ஏக்கர் நிலத்தைச் சமப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள டென்ட் கூடாரங்கள் ஒரு வாரம் மட்டும்தான் தாங்கக்கூடியவை என்பது அனைவருக்கும் தெரியும். லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடாரங்கள், சாப்பாடு, மருத்துவம் மற்றும் வசதிகள் தரும் பொறுப்பு ஐ.நா. அமைப்புக்கு இருக்கிறதா அல்லது இலங்கை அரசாங்கத்துக்கா என்ற விவாதமே இன்று வரை முடிந்தபாடில்லை. செம்மண் தரை வெயிலில் கொதிக்கிறது. மழையில் சகதியாகிறது. கழிவறை இருக்கிறது. அது போய்ச் சேரும் வசதிகள் இல்லாததால், அத்தனை முகாம்களும் மலஜலத்தால் நாற்றமெடுத்து, நோய்களை விதைத்துக்கொண்டு இருக்கின்றன.

ஏற்கெனவே பொருளாதாரத் தடையால் தகிக்கும் பூமியாக இருந்தது ஈழம். அரிசி, பருப்பு, மருந்துகள், தடுப்பூசிகள், ஆன்டிபயாட்டிக், வலிநிவாரணிகள் எதுவும் அங்கு கிடைப்பது இல்லை. முக்கியத் தொழிலாக அதுவரை இருந்தது விவசாயமும் மீன்பிடித் தொழிலும். இப்போது கடலோரம் சும்மாகூடப் போக முடியாது. மீன்பிடித் தொழில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை மொத்தமாக போர் கீறிப் போட்டுச் சிதைத்துள்ளது.

மின்சாரம் கிடையாது. பால் கிடையாது. ரேடியோ கிடையாது. பேட்டரி கிடையாது எனத் துக்கங்களை மட்டுமே கையிருப்பாக வைத்திருக்கிறது ஈழத் தமிழினம்.

அடுத்த மாதம் மழைக் காலம் ஆரம்பிக்க இருக்கிறது. இரண்டு நாள் மழைக்கே சகதிக்காடாக மாறிய முகாம்கள், அக்டோபரில் மொத்தமாக ரணகளமாகும்.

நம்முடைய கைக்கு ஒரு ஈழத் தமிழ்ச் சகோதரியின் கடிதம் கிடைத்தது. அவள் எழுதி இருந்தாள்... 'ஒற்றுமை இல்லாத எந்த இனத்துக்கும் அடிமை வாழ்க்கைதான் கடவுளால் அருளப்படும் தண்டனை!'

source:vikatan
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP