சமீபத்திய பதிவுகள்

“தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”

>> Tuesday, October 13, 2009


 

Annaசுமார் நாலரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த ஜரோப்பியர்கள் இவ்விலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய பின்னர், ஆட்சியதிகாரத்தைத் தாம் கையகப்படுத்திய சிங்களவர்கள், தமிழர்களாகிய எம்மை இத்தீவிலிருந்து அழித்தொழிப்பதற்காகக் கையாண்ட வழிமுறைகள் எதுவுமே இரகசியமானவையல்ல.
பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வரும் எமது மரபுவழித் தாயகத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் வன்கவர் செய்து எமது மக்களைத் துப்பாக்கி முனையில் அவ்வாழ்விடங்களிலிருந்து விரட்டுதல், எமது கல்வி வளங்களை அழித்தல், 1956, 1958, 1965, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் அரச ஆதரவுடன் நடந்தேறிய தமிழருக்கெதிரான தமிழினப் படுகொலைகள் மூலம் குழந்தைகள், பெண்கள் உட்பட அனைத்துத் தமிழர்களையும் பால், அகவை வேறுபாடின்றி கொன்று குவித்து, அவர்களின் சொத்துக்களையும் அழித்தல் என்பன அவ்வின அழிப்பு முறைகளில் சிலவாகும்.

சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் காலத்துக்குக் காலம் எமது இனத்துக்கு வழங்கிய உறுதி மொழிகளையும் எம்மினத் தலைவர்களுடன்; செய்து கொள்ளப்பட்ட தமிழனத்தின் மிகச்சிறிதளவு உரிமைக்கான ஒப்பந்தங்களைக் கூடச் சிங்களப் பேரினவாதிகளினதும், பௌத்த மதத்தலைவர்களினதும் எதிர்ப்பினால் கிழித்தெறிந்ததும், அதனால் விரக்தியடைந்து மனம் நொந்து சத்தியாக்கிரகம் செய்த அகிம்சை வழிப்போராட்டங்களுக்குச் சிறிது கூட மதிப்பளிக்காது சத்தியாக்கிரகம் செய்த தமிழர்கள் மீது அடித்தும், உதைத்தும் மிகவும் இரக்கமற்ற கொடுஞ்செயல்களைப் புரிந்ததனையும் – சில கட்டங்களில் அச்சத்தியாக்கிரகம் செய்த தமிழர்களின் முகத்திலே காறித் துப்பியதனையும் – தமிழினம் இன்னமும் மறக்கவில்லை.

நன்கு திட்டமிடப்பட்ட வன்முறைகளினால் தமிழினம் அழிக்கப்படுதல் உறுதி என்றாகிவிட்ட ஒரு காலகட்டத்திலேதான், தமது இனத்தைப் பாதுகாக்க, அதன் இளந்தலைமுறையினர் ஆயுதம் ஏந்த வேண்டிய ஒரு தேவை உருவானது. தமது இனத்தின் விடிவுக்காகத் தமது இன்னுயிரையே ஈகம் செய்யத்துடித்த அந்த மானமா மறவர்களைப் பயங்கரவாதிகள் எனச் சிங்களப் பேரினவாத அரசு முத்திரை குத்தியது. தமிழரின் ஆயுதம் ஏந்திய போரை ஒரு சாட்டாக வைத்து ஒன்றுமறியாத அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததன் மூலம் பெருமளவிலான தமிழர்கள் தமது தாயகத்திலிருந்து நீங்கி வேற்று நாடுகளில் புலம்பெயரும்படியான ஒரு சூழலை இலங்கை அரசே உண்டுபண்ணியது.

அவ்வாறாகப் பெருமளவிலான தமிழர்களைப் புலம்பெயர வைத்ததன் மூலம், சிறு எண்ணிக்கையான தமிழ்ப்போராளிகளை இலகுவாக அழித்தொழித்து விடலாம் எனப் பேரினவாத அரசு பகற்கனவு கண்டது. ஆனால், பேரினவாத அரசின் செயல் அதற்கு எதிர்மறையான விளைவையே கொடுத்தது. இன்று பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் குடிப்பரம்பலும், தாம் குடிபெயர்ந்த நாடுகளில் அவர்கள் பெற்ற வெவ்வேறு மொழியறிவு, உயர்கல்வி, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றையும் எமது தமிழின விடுதலைப் போராட்டம் என்னும் மாளிகையைத் தாங்கி நிற்கும் கற்றூண்களாகவே ஆகிவிட்டன.

இன்று எமது இனத்தின் அவலங்களையும், நாம் செய்யும் விடுதலைப் போரின் நியாயத்தையும், நாம் நம்பிய சிங்களத்தலைமை எமக்குச் செய்த இரண்டகத்தையும் உலகறியச் செய்ததில் எமது புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளின் பங்கு காலத்தால் மறக்க முடியாததும், வரலாற்றில் மறைக்க முடியாததுமான அரிய முதன்மைச் செயலாகும். எமது உறவுகளைப் புலம்பெயர வைத்த தனது செயல், தனக்கே ஆபத்தாக – கிணறு வெட்டப் பூதம் வெளிக்கிளம்பிய கதை போல ஆகிவிட்டதனால், கடுஞ்சீற்றம் கொண்ட சிங்களப் பேரினவாத அரசு எமது புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளை அவமானப்படுத்துவதிலும், அவர்களுக்குச் சொல்லெணாத் துயரங்களை உண்டு பண்ணுவதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளது.

தனது தமிழின அழிப்புச் செயலுக்கு மாறான எவரையும் – அவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியிலிருந்தாலும் – பயங்கரவாதிகள் எனப்பட்டியலிடும் சிங்களப் பேரினவாத அரசு, புலம்பெயர் வாழ் தமிழர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது. நான் எதற்காக எமது புலம்பெயர்ந்த உறவுகளைப்பற்றியே அதிகம் எழுதுகின்றேன் என்று நீங்கள் யோசிக்கலாம். சமீபத்தில் மேற்கு நாடுகளில் அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளினால் அவர்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், வெளிநாடுகளில் அவர்கள் செய்யும் ஈகம் இங்கே தமிழீழப் போர்க்களத்தில் அவர்களின் உடன்பிறப்புக்கள் செய்யும் ஈகத்திற்கு எந்தவகையிலும் குறைவானதல்ல என்பதைப் புரிய வைப்பதற்காகவேயாகும்.

எமது தலைவர் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த தொடக்க நாட்களில்; எத்தனையோ பேர் எமது தலைவருக்கு உதவியாக இருந்து சேவை செய்திருக்கலாம். அவர்கள் எமது இயக்கத்தின் அடிமரமாக இருக்கலாம். இன்று எமது இனத்தையே அழிவிலிருந்து காக்கும் காவல் தெய்வங்களாகப் போர்க்களத்திலே கண்துஞ்சாது போரிடும் போராளி எமது இனவிடுதலையைத் தாங்கி வளர்க்கும் வேராக இருக்கலாம். ஆனால், அடிமரமும் வேரும் மட்டுமே முழு மரமாகிவிட்டது.

விரிந்து, பரந்து, விழுதுகள் விட்டு வளரும் பருத்த ஆலமரமாக எமது புலம் பெயர்ந்த உறவுகள் இருக்கிறார்கள். அதனால்தான் எமது புலம்பெயர்ந்த உறவுகளின் ஈகப்பங்களிப்பு மற்றைய எவரினதும் பங்களிப்புக்குச் சற்றும் குறைவான ஒன்றல்ல எனச் சொல்கிறேன். அடிமரத்திலோ, வேரிலோ பழம் பழுப்பதில்லை. நுனி மரத்திலேதான் பழம் பழுக்கும் என்று இயற்கை நியதியைச் சொல்லும் அதேசமயம், ஆர்வமாக வேரிலும் இனிய பலாப்பழங்கள் உருவாகும் என்ற உண்மையையும் நினைவூட்ட விரும்புகின்றேன்.

சிறீலங்கா அரசு சுமார் அரை நூற்றாண்டாகத் தனது பேரினவாதச் செயற்பாடுகளையும், இன அழிப்பையும் சர்வதேச சமூகத்தின் முன்பு மூடிமறைத்து தான் உலகின் மிகச்சிறந்த ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகளை மதிக்கும் பண்பாளனாகவும் வேடம் போட்டது. 1983 ஆம் ஆண்டின் பின்பு நாம் அடைந்த வளர்ச்சியினாலும், படைப்பலத்தினாலும் – தனக்குச் சிறிதளவேனும் விருப்பமில்லாது விடினும் – சர்வதேசத்தை நடுவராக அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

வேற்று நாட்டரசுகளைத் தனது கைக்குள் போட்டுக் கொண்டு, தனது தமிழின அழிப்பை முன்னெடுக்கப் படாதபாடுபட்ட சிங்களப் பேரினவாத அரசு தனது எண்ணத்தை அவ்வகையில் நிறைவேற்ற இயலாது என உணரத்தலைப்படவே தனது பொய்யான முகமூடியைத் தானே அகற்றித் தனது தமிழின அழிப்புச் செயலைப் பகிரங்கப்படுத்தியது. சர்வதேச சமூகமே மிகவும் கடுமையாக முயன்று, முன்னின்று உண்டுபண்ணிய "இடைக்கால அரசை" நீதிமன்றம் சென்று செயலிழக்கச் செய்தது.

இந்திய அரசின் முயற்சியினால் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தையும் நீதிமன்றம் சென்று இரண்டாகப் பிரித்தது. ஆழிப் பேரலையினால் ஏதிலிகளாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட தாய், தந்தை, குழந்தைகளை இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்கெனச் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட "சுனாமிப் பொதுக் கட்டமைப்பை"யும் நீதிமன்றம் சென்று செயலற்றதாக்கியது. அத்துடன் எண்ணுக்கணக்கற்ற ஆட்கடத்தல்கள், மனிதப்படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் என்பனவற்றோடு, நாள்தோறும் வானிலிருந்து குண்டுகளை வீசி எமது இனத்தையே கூண்டோடு அழித்தொழிக்கிறது.

இவ்வுண்மைகள் அனைத்தும் உலக நாடுகள் அறியாதவை அல்ல. உலகெங்கணும் பரந்துபட்ட எத்தனையோ மனித உரிமை அமைப்புகளும், மன்னிப்புச்சபைகளும், இலங்கை அரசை வெளிப்படையாகவே கண்டிக்கின்றன. சமீபத்தில் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவிலிருந்து சிறீலங்கா உலக நாடுகளால் வெளியேற்றப்பட்டது. இவ்வளவும் நடந்தேறிய பிறகும்; கூட தமிழினப் படுகொலைகளுக்கு ஊக்கமூட்டும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, ருசியா போன்ற பல நாடுகள் சிறீலங்கா அரசுக்கு போர் ஆயுதங்கள், போர்த்தளபாடங்கள், நாசகாரப் போர்க்கப்பல்கள், உலங்கு வானூர்திகள், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவற்றைத் தாராளமாகக் கொடுக்கின்றன.

சமீபத்தில் சில ஜரோப்பிய நாடுகள் தத்தம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகச் செயற்படும் எமது செயற்பாட்டாளர்களையும், அனுதாபிகளையும் கைது செய்தன. கனடா நாட்டிலே எமது மொழி, சமூக, பண்பாட்டு நிறுவனமாகிய உலகத்தமிழர் பேரவையையே பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டு அந்நாட்டு அரசினால் தடைசெய்யப்பட்டது. வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சியதைப் போன்ற இச்செயலானது உலகெங்கணும் பரந்து வாழும் அனைத்துத் தமிழ் மக்களையும் கொதிப்படைய வைத்தது.

சில உலக நாடுகளின் இச்செயல்கள் எமக்குத் தாங்கமுடியாத கோபத்தையும், வயிற்றெரிச்சலையும் உண்டுபண்ணினாலும்; உலக வரலாற்றிலே இச்செயல்கள் ஒன்றும் அதிசயமானவையல்ல. உலகின் பலவீன நாடுகள் தமது விடுதலைக்காகப் போராடும் பொழுது, ஆதரவு தெரிவிப்பதும், பின்பு அந்த வன்கவர் நாடுகளுடன் தமக்கு உறவு தேவைப்படும்பொழுது, தன்னை நம்பிய அந்தப் பலவீனமான நாட்டையோ, அதன் மக்களையோ திடீரெனக் கைவிடுவதும் வரலாற்று ஒழுங்கிலான நிகழ்வுகள்தான்.

இரண்டாம் உலகப் பெரும் போரிலே ஹிட்லரைத் திருப்தி செய்வதற்காகத் தம்மை நம்பி இருந்த செக்கோசெலவாக்கியாவின் சுடற்லண்ட்லாந்துப் பகுதியை அவன் கைப்பற்றிய பொழுது பிரித்தானியாவும், பிரான்சும் வாளாவிருந்தமை மட்டுமல்ல, மிãனிச் மாநாட்டில் ஹிட்லரின் வன்கவர் போருக்கு ஆதரவும் தெரிவித்தன. இதுபோலத்தான் 1950 ஆம் ஆண்டளவில் திபெத்தை சீனா வன்கவர் போர் செய்த பொழுது இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் நடந்து கொண்டன.

நாம் இவற்றைக் கூறுவது அந்நாடுகளைக் குறை கூறுவதற்காகவல்ல வரலாற்றிலுள்ள சில உண்மைகளை எடுத்துக் காட்டுவதற்காகத்தான். சீனாவுடனான தனது உறவைப் பேணுவதற்காக இந்தியா திபெத்தின் மீது சீனாவுக்கு உள்ள இறையாண்மையை அங்கீகரித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேருவின் சீன வரவுக்காக 1954 ஆம் ஆண்டில்; திபெத் தலைவர்களான தலாய்லாமாவும் பஞ்சன்லாமாவும் அவ்வாண்டு செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சீனாவிலே காத்திருந்தனர்.

ஆனால், திபெத்தின் நன்மை, அதன் அறுபது இலட்சம் திபெத்திய மக்களின் எதிர்காலம் ஆகியவற்றைவிட, திரு. நேரு அவர்கள் சீனாவுடனான தனது நாட்டின் உறவுபற்றியே அதிக ஆர்வம் காட்டினார். அதுபோலத்தான் சீனாவுடனான தமது உறவு சீரற்று இருந்த காலத்தில் பலமுறை திபெத்திய மக்களிடம் அனுதாபம் தெரிவித்த அமெரிக்காவும், பிரித்தானியாவும்; பின்பு தாம் சீனாவுடனான தமது உறவினைச் சீரமைக்கத் தொடங்கியவுடன் – அமெரிக்காவைப் பொறுத்தவரை நிக்சனின் சீன விஜயத்தின் பின்பும், பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஹொங்ஹொங் இணைப்பிற்காக இணக்கமான வார்த்தைகளை அந்நாட்டிடமிருந்து பெற்ற பொழுதும் – திபெத்தையும், அதன் மக்களையும் கைகழுவி விட்டனர்.

இன்னமும் பார்க்கப் போனால், பலமான எதிரியிடம் தான் பலமாக அடிவாங்கியதன் பின்னரும் அந்நாட்டுடன் தான் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதும், அதேசமயம் பலவீனமான நாடுகளுடனோ அல்லது சமூகப் பிரிவுகளுடனோ – அந்நாடுகளினால் தாம் பாதிக்கப்படாது இருந்தும் – மிகவும் கடுமையான அணுகு முறையைக் கையாள்வதும், தாம் பலவீனமானது என்று கருதிய நாடு பலமடைந்த பொழுது மென்மையான அணுகு முறையைக் கடைப்பிடிப்பதும் நம் வரலாற்றிலே காணும் நிகழ்வுதான்.

1962 ஆம் ஆண்டு சீனா, இந்தியாவைத் திடீரெனத் தாக்கி அதற்குச் சொந்தமான பல ஆயிரம் சதுர மைல் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னரும், சீனாவை ஜக்கிய நாடுகள் சபையில் சேர்த்துக் கொள்வதற்கு ஆதரவாக தனது வாக்கை இந்தியா சீனாவுக்கு வழங்கியது. அதற்கு இந்தியா சொன்ன காரணம் (அன்று) சீன மக்கள் தொகை 70 கோடி. அவ்வளவு பெருந்தொகையான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை ஜக்கிய நாடுகள் சபையில் சேர்ப்பது நியாயமான ஒன்றாகும்.

பாரதம் எப்பொழுதுமே நீதி, நியாயம், தர்மத்தின் பக்கம் நிற்குமாம். அதனால் நீதி, தர்மத்தின் அடிப்படையில் சீனாவுக்கு ஆதரவு அளித்ததாம். இது எப்படி இருக்கிறது? ஆனால் பாகிஸ்தான் விடயத்தில் ராஜாஜி உட்பட பல மூத்த தலைவர்கள் வற்புறுத்தியும், அதனுடன் உடன்பாட்டிற்கு வர இந்தியா மறுத்தது. 1965 ஆம் ஆண்டு ஒரு சில பாகிஸ்தானியப் படையினர் பொது மக்களின் உடையில் எல்லை தாண்டி இந்தியப் பகுதிக்குள் வந்ததாகப் போரே மூண்டது. பின்பு 1971 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு போர் நடைபெற்றது.

ஆனால், அதன்பின்பு பாகிஸ்தானும் இந்தியா போலவே அணுகுண்டு செய்த பின்பு – இந்திய நாடாளுமன்ற வளவினுள் பாகிஸ்தானியர் புகுந்து அநேகரைக் கொலை செய்த பின்பு இன்றுவரை போர் மூளவில்லை. எமது எதிரி எம்மைவிடப் பல மடங்கு பலமானவன். அவனது பலம் எங்கே? நாம் எங்கே என்று முடிவு செய்து அவனைத் திருப்திப்படுத்தி வாழ்வதே கொள்கையாக வரித்துக் கொண்டால் நாம் கேவலப்படுத்தப்பட்டு அழிக்கப்படுவது உறுதி. இதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

எமது பலத்தைக் கொண்டு நாம் நிமிர்ந்து நின்றால்தான் எதிரியே எம்மை மதித்து நம்மை வாழவிடுவான் என்பது மட்டுமல்ல, தீர்க்கப்படாத அநேக பிரச்சினைகளும் சுமுகமாகத் தீர்க்கப்படுவதற்கு வழியாகவும் அமையும் என்பதற்கு வரலாற்றின் நிகழ்வு ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். 1803 ஆம் ஆண்டில் அன்றைய உலக வல்லரசு நாடுகளான இங்கிலாந்து, பிரான்சும் மீண்டும் போர் செய்யத் தொடங்கிய பொழுது, அன்று புதிதாகப் பிறந்து பலவீனமான நிலையில் இருந்ததும் 29 அகவையுடையதுமான ஜக்கிய அமெரிக்க நாடு மிகவும் துயரங்களை அனுபவித்தது. (1783ஆம் ஆண்டுதான் பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் இங்கிலாந்து, அமெரிக்கா சுதந்திரத்தை அங்கீகரித்தது) தமது எதிரி நாட்டுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யக் கூடாது என இங்கிலாந்து, பிரான்சு ஆகிய இரு நாடுகளுமே கூறின.

அவ்விரு நாடுகளும் அமெரிக்காவைத் தனது எதிரியின் நண்பன் என அடையாளப்படுத்தி அமெரிக்கரின் கடற் பயணத்திற்கும், கடல் வர்த்தகத்திற்கும் பெரும் அச்சமூட்டுபவையாக இருந்தன. பிரான்சும், அமெரிக்கக் கப்பல்களுக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தாலும் இங்கிலாந்தின் மேலோங்கிய கடற்பலம் பிரான்சின் கடற்படையைவிட அமெரிக்காவுக்கு அதிக துன்பத்தைக் கொடுப்பதாகவே இருந்தது. நூற்றுக்கணக்கான அமெரிக்கக் கப்பல்களை வழிமறித்த இங்கிலாந்துக் கடற்படையினர் அதன் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். ஆயிரக்கணக்கான அமெரிக்க மாலுமிகள் இங்கிலாந்துப் போர்க்கப்பல்களில் பணியாற்றுவதற்கு வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து 21 அமெரிக்க மாலுமிகளை இங்கிலாந்துக் கடற்படை கொலை செய்தது. அதன் பின்பு அவ்வமெரிக்க கப்பலில் ஏறி, நான்கு அமெரிக்கர்களைப் பிடித்து இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றனர். நாட்டின் கௌரவமும், சுயமரியாதையும் வெகுவாகப் பாதிக்கப்படுவதையும், அமெரிக்க மக்களும் வர்த்தகமும் பெருமளவில் பாதிக்கப்படுவதையும் காணச்சகிக்க முடியாத அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மடிசன் 1812 ஆம் ஆண்டு பிரித்தானியாவுடன் போர்ப்பிரகடனம் செய்தார். அன்றைய உலகத்தில் மிகப்பெரும் கடற்படையைக் கொண்டிருந்த நாடான பிரித்தானியாவுடன் மிகச்சிறிய பதினாறு போர்க்கப்பல்களை மட்டும் கொண்டிருந்த அமெரிக்கா போர் செய்வது என்பது சிரிப்புக்கிடமான ஒன்றாக இருந்தது.

போர் தொடங்கிய பொழுது அமெரிக்க நாடு போருக்கு ஆயத்தமான நிலையில் இருக்கவில்லை. போரை நடாத்துவதற்கு நாட்டிலே பணம் இருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகப் போருக்கு அமெரிக்க மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்கவில்லை. வர்த்தகச் செயற்பாடுகளை முதன்மையாகக் கொண்ட வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக புதிய இங்கிலாந்து போரை எதிர்த்தன. இங்கிலாந்தின் வன்முறைகளினால் அவர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டுடனான வர்த்தகத்தினால் அவர்கள் ஈட்டிய பெரும் செல்வம் அவர்கள் அடைந்த நட்டத்தை ஈடு செய்யும் நிலையிலேயே இருந்தது. நிã இங்கிலாந்தினர் அப்போரை "மடிசனின் போர்" என ஏளனம் செய்தனர்.

இன்னும் சிலர் அமெரிக்கச் சமஸ்டியிலிருந்து பிரிந்து, தனியரசு அமைத்து இங்கிலாந்துடன் புதிய வர்த்தக உடன்படிக்கை செய்வது பற்றிக்கூடப் பேசினர். ஆனால் போர் தொடங்கியவுடன் பலரும் எதிர்பார்த்தமை போலல்லாது, அளவிலும் எண்ணிக்கையிலும் மிகச்சிறியதான அமெரிக்கக் கப்பல்கள், மிகப்பெரிய இங்கிலாந்துக் கடற்படைக்கு மிகப்பெரும் சேதங்களை உண்டு பண்ணின. அமெரிக்கர்கள் வீரத்துடன் போரிட்டனர். போர் தொடங்கிய இரண்டு வருடங்களின் பின்பு, அதாவது 1814 ஆம் ஆண்டு எந்தப்பக்கமும் வெற்றி தோல்வியின்றிப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போரிலே துணிந்து தலைநிமிர்ந்து நின்றதனால் அமெரிக்கா அடைந்த நன்மைகள் மிகப்பலவாகும்.

முதலாவதாகத் தனது உரிமையை – எந்தவொரு சக்திக்கும் விட்டுக்கொடாது – காப்பாற்றத்தான் உறுதியாக இருப்பதை உலகிற்குத் தெரியப்படுத்தியது. அப்போரின் பின்புதான் அமெரிக்கா, இங்கிலாந்தினதும், உலகின் ஏனைய நாடுகளினதும் நன்மதிப்பினைப் பெற்றது. அப்போரின் பின்புதான் இங்கிலாந்துடனான அமெரிக்க உறவு பெருமளவு அபிவிருத்தியடைந்தது. அதன்பின்புதான் இங்கிலாந்துடனான தீர்க்க முடியாத அநேக பிரச்சினைகள் நட்பு ஒழுங்கிலான கலந்துரையாடல்கள் மூலமோ, பேச்சு வார்த்தைகள் மூலமோ தீர்க்கப்பட்டன. தனது ஆட்சிக்குட்பட்ட கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே உள்ள பேரேரியில் இரு நாடுகளும் போர்க்கப்பல்களை வைத்திருக்கலாம் என்று எழுதப்பட்டது.

றொக்கி மலைத்தொடர் தொடர்பான எல்லைப் பிரச்சனையும், லபரடோர், நிãபவுண்லாந்துக் கரையோரங்களில் மீன் பிடிக்கும் அமெரிக்க உரிமையை இங்கிலாந்து மீண்டும் உறுதிப்படுத்தியது. மிகக் குறைந்தளவு போர் வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு உலகின் நாலாவது பெரும் தரைப்படையைக் கொண்ட இந்தியாவின் ஒன்றேகால் இலட்சம் படையினரை எமது தலைவர் எதிர்த்து நின்ற வரலாற்றையும் இவ்விடத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாம் பலவீனமாக இருக்கும் வரை எதிரி எம்மைக் குட்டத்தான் செய்வான். நாம் பலம் பெற்று எதிரியைக் குட்டத் தொடங்கியவுடன்தான் எதிரி நம்முடன் நட்புப் பூணுவான்.

நியாயம், நீதி என எண்ணி எந்த நாடுமே செயற்படுவனவல்ல. தமது அரசியல், பொருளாதார மற்றும் இராணுவத் தேவைகளை முன்னிறுத்தியே உலக நாடுகள்; தமது வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொள்கின்றன. சுட்டெரிக்கும் வெய்யிலிலும், கொட்டும் மழையிலும் கண்ணுறங்காது எதிரியுடன் சமராடும் புலிமறவனுக்குத் தாயகத்தின் மீட்சிக்காக தமது சாவிற்கே நாள் குறித்துக் களம் புகும் அக்கரும்புலி வீர, வீராங்கனைகளுக்கும் பல ஆயிரம் மைல் கடந்து சென்ற பின்பு, தமது உடன் பிறப்புக்களின் துயர் காணச்சகிக்க மாட்டாது பெரும் பணியாற்றி அதனால் பொருளிழந்து, துயரப்பட்டு அந்நிய நாட்டின் சிறைகளில் வாடும் எமது இனிய பாச உறவுகளுக்கும் நான் சொல்வது இதுதான்: நாம் நிமிர்ந்து நிற்போம் எத்தனை அலைகள் வந்து மோதியும் அசையாத கடற்பாறைகளென நாம் நிற்போம். துயரங்களைக்; கண்டு அஞ்ச வேண்டாம். நீங்கள் பூனைகளல்ல பாயும் வேங்கைப் புலிகள்.

எமது இனம் தோன்றிய பொழுதே வாழ்வு வேறு, வீரம் வேறு என்றில்லாமல் இரண்டும் கலந்தே வளர்ந்து வந்தன. தமிழர்களாகிய எமது வாழ்வையும், வீரத்தையும் தனித்தனியாகப் பிரிக்க இயலாது. எதிரியைக் கொல்லும் வேலையும், வாளையும் தெய்வமாக வழிபட்டது, வழிபடுவது எமது இனம். பிள்ளை இறந்து பிறந்தாலும், பிள்ளையாக உருவாகாத சதைப்பிண்டமே பிறந்தாலும் அவற்றைத் தருப்பையிற் கிடத்தி வாளினால் கீறிப் புதைப்பதுதான் எமது மரபு. ஏனெனில் விழுப்புண்படாமல் இறப்பவன் தமிழனாக கணிக்கப்பட்டதில்லை. அப்படி விழுப்புண்படாது இறந்தால், இறந்த பின்பு வாளினால் இறந்தவரின் உடலை வெட்டி, இரு கூறாக்கிப் புதைத்தனர்.

போர்க்களம் சென்று நெஞ்சில் தாம் பெற்ற விழுப்புண்களை, வாளினால் கீறி அதிலிருந்து வழியும் குருதியை அயிரைமலைக் கொற்றவைக் கோயிலுக்குச் சென்று பலியாகக் கொடுப்பது எமது தமிழ் மரபு. அப்பலியின் மூலம் போரிலே தாம் பெற்ற வெற்றி நிலைக்கவும், அரசன் நீண்ட காலம் உயிர் வாழவும் வேண்டுவர். காட்டின் வழியே தனியாகச் சென்ற ஒரு சிங்கக்குட்டி யானையொன்றைப் பார்த்தது. அதற்குப் பயம் வந்துவிட்டது. அதற்கு முன்பு அது யானையைப் பார்த்ததேயில்லை.

அச்சிங்கக் குட்டி தனது தாயிடம் ஓடிச்சென்று தான் மிகப்பெரிய அந்த மிருகத்தைக் கண்டு அச்சம் கொண்டதைக் கூறியது. அதற்கு அத்தாய்ச் சிங்கம் தனது குட்டியை ஒரு நீர் நிலைக்கு அழைத்துச் சென்று, அந்நீரிலே அதன் உருவத்தைக் காட்டி நீரிலே கண்ட அச்சிங்கக் குட்டி தான் யார் என்பதை அறிந்து, அச்சம் நீங்கி எந்தவொரு மிருகத்தையும் எதிர்த்து வெல்லும் துணிவு பெறறது.

அதுபோலத்தான் வரலாறு காணாத சரித்திர நாயகனான எம் தலைவன் எம்மை யார் என எமக்கு அடையாளம் காட்டியுள்ளான்.

மாவீரன் பண்டாரவன்னியன் முதல் பொங்கி எழுந்த புலித்தேவன் வரை அனைத்துத் தமிழர்களும் எந்தவொரு அந்நியனுக்கும் அஞ்சாமல் களத்திலே சமராடி விழுப்புண்பட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்களே தவிர, ஓடி ஒழித்து எதிரியால் கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டவர்களல்லர்.

Prabhakaran

அதனால்தான் சொல்கிறேன் உறுதி கொண்ட நெஞ்சையுடைய தமிழனாக நிமிர்ந்து நில் துணிந்து செயற்படு விரைந்து செல் எதற்காக? எமது அண்ணனின் காலத்திலேயே தமிழீழம் அமைப்பதற்காக

வெற்றி நமதே!

பொ. வேணுகோபால்

வரலாற்றுத் துறை ஆசிரியரான பொ. வேணுகோபால் அவர்கள் 03.07.2008 அன்று எழுதிய இக்கட்டுரையை காலத்தின் தேவை கருதி பிரசுரிக்கின்றோம்.


source:tamilspy

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP