சமீபத்திய பதிவுகள்

இளமை 20 : 36 வயதிலும் அசைக்க முடியாத ஹீரோ சச்சின்

>> Sunday, November 15, 2009


 
 

Front page news and headlines today


சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 16வயதில் இந்திய அணிக்காக "பேட்' பிடித்த இவர், 36 வயதிலும் அசைக்க முடியாத "ஹீரோவாக' ஜொலிக் கிறார்.



சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 175 ரன்களை விளாசிய இவர், தனது ஆட்டத்தில் இன்னும் இளமை மாறவில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்தார். மிக நீண்ட காலமாக அசத்தி வரும் இவரது சாதனை பயணத்தை பார்ப்போம். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இளம் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். அண்ணன் அஜித் ஊக்கம் அளிக்க, உள்ளூர் போட்டிகளில் தூள் கிளப்பினார். முதலில் பள்ளி அளவிலான "ஹாரிஸ் ஷீல்டு' போட்டியில் சாதித்து காட்டினார். சிரத்தாஸ்ரமம் பள்ளி அணிக்காக ஆடிய இவர் வினோத் காம்ப்ளியுடன் (349) சேர்ந்து 664 ரன்கள் சேர்த்தார். இதில் சச்சின் மட்டும் 329 ரன்கள் விளாசினார். தியோதர், துலீப், இரானி டிராபி தொடரில் அசத்திய இவர், ஒரு நாள் வலை பயிற்சியின் போது கபில் தேவ் பந்துவீச்சைசுலபமாக சமாளித்தார். இதைகவனித்த மும்பை அணியின் கேப்டன் வெங்சர்க்கார், இவரை தேர்வு செய்தார். இந்த சீசனில் மும்பை அணி சார்பில் அதிக ரன் எடுத்து சாதித்தார் சச்சின். இதையடுத்து இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.



டெஸ்ட் அறிமுகம் : கடந்த 1989, நவ. 15ம் தேதி கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சச்சின் அறிமுகமானார். அப் போது அவருக்கு வயது 16 தான். இப்போட்டியில் பாகிஸ்தான் "வேகங்களை' மிக எளிதாக சமாளித்த இவர் 15 ரன்கள் எடுத்தார். சியால் கோட்டில் நடந்த கடைசி டெஸ்டில் வக்கார் யூனஸ் வீசிய பந்து சச்சினின் வாயில் பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்த கேப்டன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் "இளம் கன்று பயமறியாது' என்பதற்கேற்ப சிகிச்சை கூட எடுத்துக் கொள் ளாமல் தொடர்ந்து துணிச்சலாக ஆடினார். தனது 17வது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் சதம் விளாசினார். தொடர்ந்து கலக்கிய இவர் டெஸ்டில் அதிக சதம், அதிக ரன் எடுத்து சாதித்தார்.



ஒரு நாள் போட்டியில் : கடந்த 1989, டிச., 18ம் தேதி குஜ்ரன்வாலாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சச்சின் அறிமுகமானார். இதில் வக்கார் யூனஸ் பந்தில் "டக்' அவுட்டானார். முதல் போட்டி ஏமாற்றம் அளித்த போதும், பின்னர் துவக்க வீரராக களமிறங்கி திறமை நிரூபித்தார். 78வது ஒரு நாள் போட்டி வரை சதம் அடிக்காதஇவர், இன்றைக்கு அதிக சதம்,அதிக ரன் அடித்து மகத்தானசாதனையாளராக உள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 175 ரன்களளை விளாசிய இவர், ஒரு நாள் அரங்கில் 17 ஆயிரம் ரன்களை கடந்து, மற்ற வீரர்களால் எட்ட முடியாத சாதனையை நிகழ்த்தினார். இவர் மைதானத்தில் களமிறங்கினாலே ஏதாவது ஒரு சாதனை அரங்கேறிவிடும் என வர்ணிக்கப்படும் அளவுக்கு தொடர்ந்து சாதித்து வருகிறார். "இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால்; சச்சின் தான் கடவுள்' என்று கூறலாம். நாட்டில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இவர், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். இதனால் தான் இவரது பெயரில் "காமிக்ஸ்' புத்தகங்கள் கூட எழுதப்பட்டன.



சில சர்ச்சைகள் : கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் சச்சின் பெரிய அளவில் சர்ச்சை எதிலும் சிக்கவில்லை. 2001ல் நடந்த தென் ஆப்ரிக்க தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக இவர் மீது புகார் எழுந்தது. பின்னர் இதிலிருந்து விடுபட்டார். டெஸ்ட் அரங்கில் 29வது சதம் அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பான் பிராட்மேன் சாதனையை சமன் செய்ததற்காக, இவருக்கு "பெராரி' கார் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை இந்தியாவுக்கு கொண்டு வர வரிவிலக்கு கோரியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின்னர் பெராரி கார் நிறுவனமே வரியை செலுத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டது.



ஒழுக்கமானவர் :  கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ள சச்சின், சொந்த வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமானவர். களத்தில் எதிரணி வீரருடன் வீணாக மோதிக் கொள்ளாத இவர், மிகவும் பணிவானவர். புகழின் உச்சியில் இருந்த போதும் அடக்கத்துடன் நடந்து கொள்வார். இதனால் தான் அடுத்த தலைமுறை வீரர்களின் "ரோல் மாடலாக' உள்ளார். தனது குழந்தை சச்சின் போல வரவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கும் அளவுக்கு மிகச் சிறந்த வீரராக உள்ளார்.



அடுத்த இலக்கு : வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க காத்திருப்பதாக சச்சினே அறிவித்துள்ளார். இவர் 2015, உலக கோப்பை தொடரிலும் விளையாடுவார் என கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர், கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் கடக்க வேண்டும், உலக கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். இதனை மனதில் வைத்து இன்னும் பல ஆண்டுகள் விளையாடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார் என நம்புவோம்.



நிரந்தர முதல்வன் : ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்துள்ளார் சச்சின். இதுவரை 436 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள இவர் 45 சதம், 91 அரைசதம் உட்பட 17178 ரன்கள் எடுத்துள்ளார். 154 விக்கெட், 132 கேட்ச் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (13377 ரன்கள்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (12311 ரன்கள்) உள்ளனர்.



சத நாயகன்: ஒருநாள் போட்டியில் இதுவரை 45 சதம் பதிவு செய்துள்ள சச்சின், அதிக சதம் கடந்தவர்கள் வரிசையில் முதலிடத்தில்நீடிக்கிறார். இவரை தொடர்ந்து பாண்டிங் மற்றும் ஜெயசூர்யா(இலங்கை)இருவரும் தலா 28 சதம் பதிவு செய்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.



டெஸ்டிலும் "ஹீரோ' : டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை சச்சின் தன்வசப்படுத்தியுள்ளார். இவர் இதுவரை 159 டெஸ்ட் போட்டியில் விளையாடி 42 சதம், 53 அரைசதம் உட்பட 12773 ரன்கள் எடுத்துள்ளார். 44 விக்கெட், 102 கேட்ச் பிடித்துள்ளார்.



* டெஸ்ட் போட்டியில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின்முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 42 சதம் பதிவு செய்துள்ளார்.



தொடர் நாயகன் : ஒருநாள் போட்டியில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இவர் 14 தொடரில் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (11 முறை), தென் ஆப்ரிக்காவின் போலக் (9 முறை) உள்ளனர்.



சகவீரர்கள் யாருமில்லை : கடந்த 1989,நவ., 15ல் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார் சச்சின். அப்போது முதல் டெஸ்டில் இவருடன் விளையாடிய இந்திய வீரர்கள் யாரும் இப்போது அணியில் இல்லை. இவர் மட்டும் இன்னும் நீடிக்கிறார். அந்த அணி விபரம்:ஸ்ரீகாந்த் (கேப்டன்), சித்து, மஞ்ச்ரேக்கர், அசார், மனோஜ் பிரபாகர், சச்சின், ரவி சாஸ்திரி, கபில் தேவ், கிரண் மோரே, அர்ஷத் அயூப், சலீல் அங்கோலா.



தவறான தீர்ப்புகள் : அம்பயர்களின் தவறான தீர்ப்புகளால் கிரிக்கெட் அரங்கில் அதிகம் பாதிக்கப் பட்ட வீரர் சச்சின் தான். கடந்த 1997 ம் ஆண்டு முதல் இது வரை சுமார் 63 முறை அம்பயர்கள் சச்சினுக்கு தவறாக தீர்ப்புஅளித்துள்ளனர்.



இது உண்மை... :



* சச்சின் சதம் அடித்த போட்டிகளில் இந்திய அணியின் நிலைமை?
சச்சின் ஒரு நாள் போட்டிகளில் 45 சதம் அடித்துள்ளார். இதில், 32 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி "சேஸ்' செய்த போட்டிகளில் சச்சின் 14 சதம், 28 அரை சதம் உட்பட 5033 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 56. 55 சதவீதம். ஒரு நாள் தொடரில் 39 பைனல்களில் சச்சின் விளையாடி உள்ளார். இவற்றில் 6 சதம் 10 அரை சதம் உட்பட 1833 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 55.54 சதவீதம். இது ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை (40 போட்டி, 1344 ரன்கள்) விட அதிகம்.



* சச்சின் பலவீனமான அணிகளுக்கு எதிராக அதிக ரன் குவித்துள்ளாரா?
இந்தக் கருத்தும் பொய் தான். சச்சின் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகம் சாதித்துள்ளார். டெஸ்டில் 7, ஒரு நாள் போட்டிகளில் 9 சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்துள்ளார். இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட உலகின் தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிராகவும் அதிக ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.



* நெருக்கடியான நேரங்களில் சச்சின் சொதப்புகிறார் என்ற கருத்து உண்மையா?
இல்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த 5 வது ஒரு நாள் போட்டியில் தனி ஆளாக இந்திய அணியின் வெற்றிக்குப் போராடிய சச்சின் 175 ரன்கள் குவித்தார். பைனல் போட்டிகளில் 6 சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் தான். வெற்றி இலக்கை "சேஸ்' செய்த போட்டிகளில் சச்சின் 17 சதங்களை கடந்துள்ளார். இதில் 14 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.



* அந்நிய மண்ணைக் காட்டிலும் இந்திய மண்ணில் அதிகம் சாதித் துள்ளாரா? 
இந்தியாவை காட்டிலும் அந்நிய மண்ணில் தான் சச்சின் அதிகம் சாதித் துள்ளார். டெஸ்ட் அரங்கில் சச்சின் பதிவு செய்த 42 சதங்களில் 24 அந்நியமண்ணில் அடித்தவை. இந்தியாவில் அடித்தவை 18 சதம். ஒரு நாள் அரங்கில் அடித்த 45 சதங்களில் அந்நிய மண்ணில் அடித்தவை 28. இந்தியாவில் 17 சதங்கள்.



சச்சின் வாழ்க்கையில் "மறக்க முடியாத 20' : 1. சச்சின் டெண்டுல்கரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்திய மொழியில் நாவல்கள் பல எழுதியுள்ளார். பிரபல இசை அமைப்பாளர் சச்சின் தேவ் வர்மன் மீதான ஈர்ப்பின் காரணமாக, தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் என பெயரிட்டார். 
2. தனது சிறு வயதில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று தான் சச்சின் விரும்பினார். போதிய உயரம் இல்லாததால்,ஆஸ்திரேலிய பவுலர் டெனிஸ் லில்லி, சச்சினை பேட்டிங்கில் கவனம் செலுத்தும்படி ஆலோசனை வழங்கினார். 
3. சச்சினின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேகர் "ஸ்டெம்பின்' மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, சச்சினை அவுட்டாக்கும்பவுலர்களுக்கு அது பரிசு என்பார்.பவுலர்கள் தோல்வி அடைய, சச்சின் 13 நாணயங்களை பரிசாகப் பெற்றார். 
4. தன்னை விட 5 வயது மூத்த அஞ்சலியை கடந்த 1995 ம் ஆண்டு காதலித்து மணந்தார் சச்சின். இவர்களுக்கு சாரா(12 வயது) என்ற மகளும், அர்ஜூன்(10 வயது) என்ற மகனும் உள்ளனர். 
5. அடுத்தவர்களுக்கு உதவும் குணம்சச்சினுக்கு அதிகம் உண்டு. "அப்னாலயா' என்ற என்.ஜி.ஓ., மூலம் 200 ஏழைக் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் "ஸ்பான்சர்' செய்து வருகிறார். 
6. பேட்டிங், பவுலிங், பீல்டிங் எனஅனைத்திலும் வலது கை பழக்கம்கொண்டவர் சச்சின். ஆனால் எழுதுவதும், ரசிகர்களுக்கு "ஆட்டோ கிராப்'வழங்குவதும் இடது கையில் தான். 
7. சச்சின் 14 வயதில் இருக்கும் போது, கவாஸ்கர் தனது கால் "பேடுகளை' அவருக்குப் பரிசாக வழங்கினார். தவிர, ரஞ்சிக் கோப்பையில் முதன் முதலாக களமிறங்கும் போது, திலீப் வெங்சர்க்கார் தனது "பேட்டை' சச்சினுக்கு பரிசளித்தார். 
8. கடந்த 1999 ம் ஆண்டு உலககோப்பை தொடரின் போது, சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மரணமடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின், மீண்டும் இங்கிலாந்து திரும்பினார் சச்சின். கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அதனை தந்தைக்கு சமர்ப்பித்தார். 
9. ராஜிவ் கேல் ரத்னா (1997-98), அர்ஜூனா விருது (1994), பத்ம ஸ்ரீ (1999), விஸ்டன் சிறந்த வீரர் விருது (1997), பத்ம விபூஷன் (2008) ஆகிய விருதுகளை சச்சின் பெற்றுள்ளார்.
10. "ஆல்-டைம்' சிறந்த டெஸ்ட், ஒருநாள் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 2 வது இடம் வழங்கி சச்சினை கவுரவித்துள்ளது பிரபல விஸ்டன் இதழ். 
11. நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 1994 ம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியில், காயம் காரணமாக துவக்க வீரர் சித்து விலகினார். இதனால் சச்சின் முதன் முதலாக துவக்க வீரராக களமிறங்கினார்.
12. பிராட்மேன், சுனில் கவாஸ்கர், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், சனத் ஜெயசூர்யா, பிரையன் லாரா ஆகியோரது ஆட்டங்கள் சச்சினை மிகவும் கவர்ந்தவை. 
13. திருமணத்துக்குப் பின் தீபாவளி திருநாளை தனது குடும்பத்தாருடன் சச்சின் இதுவரை கொண்டாட வில்லை. இடைவிடாத போட்டிகள் தான் இதற்கு காரணம். 
14. ஒரு முறை பி.பி.சி., தொலைக்காட்சியில் பேட்டி அளித்த சச்சினிடம், உங்கள் கனவுப் பெண் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சச்சின்,எனது மனைவி அஞ்சலி தான் என்றுபதிலளித்தார். 
15. ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் "50' சிறந்த கிரிக்கெட் வீரர்கள்பட்டியலை கடந்த 2007 ம் ஆண்டு வெளியிட்டார். அதில் சச்சினுக்கு முதலிடம் அளித்து பெருமைப் படுத்தினார்.
16. உலக பிரபலங்களை கவுரப்படுத்தி வரும் லண்டனை சேர்ந்த "மேடம் டுஸாட்ஸ்' மியூசியம், சச்சினுக்கு மெழுகுச் சிலை தயாரித்து அவரை பெருமைப்படுத்தியது. 
17. 1992 ம் ஆண்டு முதல் இதுவரை 5 உலககோப்பை (50 ஓவர்) தொடர்களில் விளையாடியுள்ள சச்சின், வரும் 2011 ம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை தொடரில் விளையாட காத்திருக்கிறார்.
18. தொடர்ந்து அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனைக்கும் சச்சின் தான் சொந்தக்காரர். இவர் 185 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.
19. ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் (8,227) சேர்த்த ஜோடி (176 இன்னிங்ஸ்) என்ற பெருமையை சச்சின், கங்குலி ஜோடி பெற்றுள்ளது. 
20. ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 17 முறை 90 ரன்களுக்கு மேல் எடுத்து சதத்தை நழுவ விட்டுள்ளார் சச்சின். இப்பட்டியலிலும் இவர் தான் முதலிடம்.



சரியாத சச்சின் "மார்க்கெட்' : கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்த வீரர் என்ற பெருமை பெற்றவர் சச்சின்.தவிர, விளம்பர தூதராக அதிக பணம் சம்பாதித்த கிரிக்கெட் வீரரும் இவர் தான். 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்தி வரும் சச்சின், முதன் முதலாக "பூஸ்ட்' விளம்பரத்தில் சக வீரர் வினோத் காம்ப்ளியுடன் தோன்றினார். அதற்குப் பின் 100 விளம்பரங்களுக்கு மேல் தோன்றியுள்ளார். 20 ஆண்டுகளாக விளம்பர மார்க் கெட்டில் நீடிக்கும் அவரது மதிப்பு குறையவில்லை. கடந்த 1995 ம் ஆண்டு சர்வதேச தொலைதொடர்பு நிறுவனமான "வேர்ல்டு டெல்', சச்சினை ரூ. 30 கோடிக்கு விளம்பர தூதராக நியமித்தது. இதே நிறுவனம் 2001 ம் ஆண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 80 கோடிக்கு சச்சினுடன் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டது.



ரூ. 180 கோடி ஒப்பந்தம் : இதனையடுத்து ஷாட்சி அண்டு ஷாட்சி விளம்பர நிறுவனம், சச்சினை ரூ. 180 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. "பாலிவுட்' சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாருக் கானுக்கு நிகராக விளம்பர உலகில் கொடிகட்டிப் பறக்கிறார்.



மூன்று ஓட்டல்கள் : இவற்றை தவிர, சச்சின், "டெண்டுல்கர்ஸ்', "சச்சின்ஸ்' என்ற பெயர்களில் மும்பையிலும் "சச்சின்ஸ்' என்ற பெயரில் பெங்களூருவிலும் ஓட்டல்களை நடத்தி வருகிறார்.



தற்போது சச்சினிடம் உள்ள விளம்பர ஒப்பந்தங்கள்:பெப்சி (1992 முதல்), கேனான் (2006-2009), சன்பீஸ்ட் (2007-2014), பூஸ்ட் (2002 முதல்), அடிடாஸ் (2000-2010), ரெனால்ட்ஸ் (2007 முதல்), ஈ.ஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (2002 முதல்), சான்யோ பி.பி.எல்.,(2007 முதல்). இவைகள் தவிர்த்து கோல்கேட் பாமோலிவ், எம்.ஆர்.எப், பிலிப்ஸ், விசா, அவிவா, ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து ஆகிய நிறுவனங்களும் சச்சினை ஒப்பந்தம் செய்துள்ளன.



பிராட்மேன் பாராட்டு : சச்சின் ஆட்டம் குறித்து கருத்து மறைந்தஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட் மேன் கூறுகையில்,"" சச்சின் ஆட்டத்தை நேரில் பார்த்ததில்லை. பலமுறை"டிவி'யில் பார்த்துள்ளேன். அவர் என்னைப்போலவே விளையாடுகிறார். தற்போது நான் விளையாடவில்லை என்றாலும் எனது ஆட்டத்தை சச்சினிடம் பார்க்கிறேன்,'' என்றார்.



கனவுத் தொல்லை : ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவான்வார்ன் கூறுகையில்,"" நான் தூங்கும் போதுகனவில் கூட, எனது பந்தை இறங்கி வந்து சிக்சர் அடிப்பது போல உள்ளது. எனது தூக்கத்தில் கூட தொல்லை தரும்வீரர் இவர் தான்.பிராட்மேனுக்கு அடுத்து சிறந்த வீரர் சச்சின் தான்,'' என்றார்.



இரண்டாவது இடம் : அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சச்சின் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 436 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார். முதலிடத்தில் இலங்கையில்ஜெயசூர்யா (441 போட்டி) நீடிக்கிறார்.



ஆட்ட நாயகன் : ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் இதுவரை 60 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (48 முறை), வெஸ்ட்இண்டீசின் ரிச்சர்ட்ஸ் மற்றும் இந்தியாவின் கங்குலி தலா 31 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர்.



கிரிக்கெட் கடவுள் : கிரண்மோரே (முன்னாள் இந்திய வீரர்): பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அவரை கவனித்தேன். அச்சுறுத்தும் பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை துணிச்சலாக எதிர்கொண்டார். அப்போதே, இவர் இந்திய அணிக்காக மிக நீண்ட காலம் விளையாடுவார் என எனக்குத் தோன்றியது. முதல் போட்டியில் இருந்த அவரது துணிச்சலான திறன் தான், காயம் காரணமாக சிறிது காலம் ஓய்வு எடுத்தாலும், மீண்டும் வெற்றிகரமாக திரும்பி வரச் செய்கிறது. அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் கடவுள்.



சூப்பர் ஜோடி ; ஒருநாள் போட்டியில் எந்த ஒரு விக்கெட் டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் சச்சின்,டிராவிட்முதலிடத்தில்உள்ளனர். இந்த ஜோடி (1999, எதிரணி நியூசி.,) 2வது விக்கெட் டுக்கு அதிகபட்சமாக 331 ரன்கள் சேர்த்தது.



கிரிக்கெட்டின் "சூப்பர் மேன்' : அஜித் வடேகர் (முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர்): என்னைப்பொறுத்த வரையில் கிரிக்கெட்டின் "சூப்பர் மேன்' சச்சின் தான். ஏனெனில் நீண்ட காலமாக வெற்றிகரமாக தொடர்ந்து இருந்து வருகிறார்.சச்சினை கடந்த 1989ல் இருந்தும், அதற்கு முன்பும் பார்த்து வருகிறேன். அவர்கடவுளால் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டஅதிசயம்.20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தாலும்அவரது ரன் எடுக்கும் வேட்கை இன்னும் குறையவில்லை என்பதற்கு, ஐதராபாத்தில் அவர் எடுத்த ரன்களே சாட்சி.



source:dinamalar
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP