சமீபத்திய பதிவுகள்

தமிழ் மக்களின் தமிழீழமும், மூன்று எதிரிகளும்

>> Sunday, November 8, 2009

"என் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று" என்றொரு வேண்டுதல் வழக்கு உண்டு, அதன் சாரம் முழுதும் தமிழீழச் சிக்கலில் குளிர்காய நினைக்கும் சில தமிழக அரசியல்வாதிகளுக்காக எழுதப்பட்டது போலவே எனக்குத் தோன்றுகிறது, உலகமெங்கும் பெருகி வரும் தமிழீழ ஆதரவுக் குரலை நெறிக்கும் வகையில் இந்தியப் பேரரசால் திட்டமிடப்படும் பல்வேறு தந்திர வித்தைகளை முறியடிக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. இந்த வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்வி ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனின் உள்ளக் குமுறலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்??? என்று முடிவு செய்வதற்கு முன்னாள், நம் எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசரம் மிகுந்த ஒரு தேவையாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வமான தமிழீழ எதிரிகளாக மூன்று பிரிவுகளை அடையாளம் காண இயலும், முதல் எதிரி நேரிடையான இன எதிரி, உன்னுடைய அடையாளங்களை நான் எதிர்க்கிறேன் என்று தொடர்ந்து கடந்த அறுபது ஆண்டுகளாக தன்னுடைய சிங்கள மேலாண்மையை நம் மீது திணிக்கும் நேரடி எதிரி, இந்த எதிரியை எதிர் கொள்வதும் அடையாளம் காணுவதும் நமக்கு அப்படி ஒன்றும் கடினமான செயலாக இல்லை, இருக்கப் போவதும் இல்லை,

இரண்டாவது எதிரி, தமிழ் இனம் என்கிற சொல்லாடலையே வெறுக்கும் அல்லது கருவறுக்க நினைக்கும் இந்திய தேசப் பார்ப்பனீயம், இந்த எதிரியை நமக்கு நீண்ட காலமாகவே தெரியும் என்றாலும், கடந்த நான்கைந்து மாதங்களில் அதன் கோர முகத்தை நம்மால் நன்றாகவே உணர முடிந்தது, இயன்ற வகைகளில் எல்லாம் தன்னுடைய பிராந்திய வல்லரசுப் போர்வையைப் போர்த்தியபடி தமிழின அழிப்பில் மறைமுகமாக ஈடுபட்ட இந்திய தேசியம் நமது இரண்டாவது எதிரி என்பதில் நமக்கு அய்யம் இல்லை. இந்த எதிரியை மேற்குலகின் ஆதரவோடுதான் நம்மால் வெல்ல முடியும், அதற்கான அனைத்து முயற்சிகளிலும் நமது புலம் பெயர்ந்த இளைஞர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது எதிரி தான் கண்டறிய முடியாத அளவிற்கு நாடகங்களையும், புனைவுகளையும் புரிந்து நம்மில் இருந்து கொண்டே நம்மைக் கருவறுக்கும் செயல்களை மிகத் தீவிரமாக இந்திய தேசியத்திற்காகச் செய்து விடத் துடிப்பவன். இந்த எதிரியை எதிர் கொள்ளத் தகுந்த மாற்று இயக்கங்களை, அரசியல் ஒருங்கிணைவுகளை நமது தமிழக மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள் உருவாக்க வேண்டிய தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

விடுதலைப்புலிகளை ஒடுக்கி, அழித்து விட்டால் தமிழர்களின் ஒட்டு மொத்த விடுதலை உணர்வையும், தமிழர்களின் தனி அடையாளத்தையும் அழித்து ஒழித்து விடலாம் என்கிற ராஜபக்சே சகோதரர்களின் கனவில் இடி விழுந்தாற்போல உலகெங்கும் தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து இலங்கை அரசிற்கு எதிராக அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள், "தமிழீழம்" என்கிற ஒரு கோட்பாட்டின் அடிப்படை எதிரியான சிங்களம், தன் மேல் குத்தப்பட்ட மனித உரிமை மீறல் அடையாளங்களை அழிக்க இயலாமல் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கும் சூழல் உருவாகி வருவதை நம்மால் காண முடிகிறது. முதல் எதிரியான சிங்களம் தலை குனியும் நேரத்தில், இரண்டாவது எதிரி அதனைச் சரி செய்யும் வேளையில் ஈடுபடுவதையும் நாம் உணர்கிறோம், ஆம், இந்திய தேசியம் வரிந்து கட்டிக் கொண்டு இலங்கைக்குத் தொடர்ந்து சரிவுகள் நிகழாமல் காக்கும் அளப்பரிய பணியைச் செய்து வருகிறது.rm

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில நாட்களுக்கு முன்னர் உலக வங்கிக்கு ஒரு மறைமுக மிரட்டல் விடுத்தார், உலக வங்கி இலங்கைக்குக் கடன் வழங்க மறுக்கும் சூழலில், இந்திய தேசியம் 2.6 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்கும் என்பது தான் அந்த மறைமுக மிரட்டல், உலக வங்கியின் மிகப்பெரிய பயனாளரான இந்திய தேசியம் விடுக்கும் மிரட்டலுக்கு, செவி சாய்க்க வேண்டிய நிலையில் தான் உலக வங்கி இருக்கிறது, ஏனென்றால் உலக வங்கி நடைபெறுவதற்கு ஒரு மிக முக்கியக் காரணி இந்திய தேசியம் தான், அதிக அளவில் வட்டியும் முதலும் செலுத்தும் நாடாகவும், உலக வங்கியின் மிகப் பெரிய பயனாளியாகவும் இந்திய தேசியம் இருப்பது தான் இதற்குக் காரணம் (The most valuable Customer).

வல்லரசு, புல்லரசு என்றெல்லாம் கதைகள் சொல்லிக் கொண்டு, உழைக்கும் மக்களின் பணத்தில் உண்டு கொழுக்கும் இந்திய தேசியம் உலக வங்கியின் படியளப்பில் தான் இன்னும் உயிரோடு இருக்கிறது. பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகள் உலக வங்கியின் பிடியில் இருந்து விடுபட்டுத் தங்கள் பொருளாதாரத்தைச் சீரமைக்க ஆர்வம் காட்டும் நேரத்திலும், உலக வங்கியின் முன்னாள் அதிகாரியான அலுவாலியாவுடன் இணைந்து இந்திய தேசியத்தை ஒட்டு மொத்தமாக உலக வங்கியிடம் அடகு வைக்கும் ஆர்வம் இந்தியப் பிரதமரிடம் அளவற்றுக் கிடப்பது விந்தையான ஒன்றாகும்.eu

ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி பிளஸ் (GSP-PLUS) வரிச்சலுகைகளை இலங்கைக்குக் கொடுப்பதை நிறுத்தப் போவதாகச் சொல்லும் சூழலில், ஏனைய நாடுகள் இலங்கையுடனான தங்கள் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவிப்புகள் வெளியாகும் வேளையில், ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது கட்டமைக்கப் போகிற பிராந்திய வல்லரசு வெறியை இந்தியப் பார்ப்பனீய தேசியம் வெளிப்படுத்தத் துடிக்கிறது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுத் தான் இந்த உலக வங்கிக்கான மிரட்டல்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகாம்களைப் பார்வையிடும் நாடகம் முடிந்து இலங்கைக்கு நற்சான்று கொடுக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட தமிழக முதல்வர் திருவாய் மலர்ந்து, தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமான வர்த்தக உறவுகள் மலர்ந்து செழிக்கப் போவதாகச் சொன்னதும், புதிய திட்டங்களில் இலங்கையுடன் இணைந்து செயல்படப் போவதாகச் சொன்னதும் தான் மிகக் கொடுமையானது மட்டுமன்றி மன்னிக்க முடியாததும் ஆகும். உலகம் முழுதும் வர்த்தகத் தடையை எதிர் நோக்கும் இலங்கையுடன், தொப்புள் கொடி உறவுகளாகிய நாம் வர்த்தகம் செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பு எத்தனை சூழ்ச்சிகள் நிறைந்தது, எத்தனை வலியைத் தரக் கூடியது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மாநில முதல்வருக்குத் தெரியாமல் போனதும், கொஞ்சமும் நெருடாமல் இருந்ததும் வெட்கக் கேடானது. கண்டனத்திற்குரியது.mahinda_mps

தமிழக முதல்வரும் அவரது பரிவாரங்களும் தமிழீழச் சிக்கலில் என்ன செய்கிறார்கள் என்றால், கூடவே இருந்து குழி பறிக்கிறார்கள் என்பது தான் விடையாகிறது. இலங்கைக்கு உலக அரங்கில் உருவாகி இருக்கிற அவப்பெயரைத் துடைக்கும் சீரிய பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரும், அவரது பரிவாரங்களும் ராஜபக்சே சகோதரர்களின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளர்களாகி இருக்கிறார்கள், உலகம் இலங்கையைப் புறக்கணிக்கத் தயாராகி வரும் சூழலில், இலங்கையின் ஆட்சியாளர்களைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் உலகெங்கும் வலுப்பெறும் நிலையில், ஐக்கிய நாடுகள் அவையையே தனது கொடுங்கோன்மையின் எல்லைகளுக்குள் அனுமதிக்காத ராஜபக்சே, எப்படி தமிழக நாடாளுமன்றக் குழுவை அனுமதித்தார்???,

இது முற்றிலும் இந்திய தேசியத்தின் உளவுத் துறையினர் ஆலோசனைப்படி நடத்தப்பட்ட நாடகமாக இருக்குமோ??? என்ற மிகப் பெரிய ஐயம் நமக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. உலக நாடுகளின் அழுத்தத்தில் இருந்தும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்புகளிடமும் கொடுப்பதற்கு ஒரு நற்சான்றிதழ் தேவைப்பட்ட நேரத்தில், மிகச் சரியாகத் தனது காய்களை நகர்த்தி தமிழக நாடாளுமன்றக் குழுவை ராஜபக்சே வரவழைத்திருக்கிறார், குழுவினரும் மிகச் சிறப்பாகக் கொலைகாரர்களின் தோளுக்குப் பொன்னாடை எல்லாம் போர்த்தி, கட்டித் தழுவித் தங்கள் தேசிய அடையாளத்தைக் காட்டி வந்திருக்கிறார்கள்.gaza

இப்படி ஒருபுறம் நமது எதிரிகள் தமிழினத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பல்வேறு சாதகமான விளைவுகளும் "தமிழீழம்" என்கிற கோட்பாட்டை வலுப்படுத்தும் வகையில் நகர்வது ஒன்று தான் சற்று ஆறுதல் தரக்கூடியது,

அவற்றில் சில இன்றியமையாதவை:

1) அமெரிக்க வெளியுறவுத் துறையால், அமெரிக்கக் காங்கிரசுக்குக் கையளிக்கப்பட்ட 67 பக்க அறிக்கையும் அது உருவாக்கும் தாக்கமும்.

2) ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி – பிளஸ் (GSP-PLUS) வரிச்சலுகை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதும் அதன் விளைவுகளும்.

3) இலங்கையின் அரசியலில் நிகழ்ந்து வரும் குழப்ப நிலை.

4) தமிழீழம் தவிர்த்த எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குரல்

மேற்கண்ட யாவும் தானாக நிகழவில்லை என்பதையும், உலகெங்கும் வாழுகின்ற தமிழ்ச் சமூகம் தனது குரலை விடாமல் ஒலித்துக் கொண்டே, பல்வேறு போராட்டங்களையும், அரசியல் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டதன் விளைவுதான் இத்தகைய மாற்றங்கள் என்ற உண்மையை நாம் உணரும் போதும், நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விக்கான விடை தானாகத் கிடைக்கும்.tamil_nadu

தமிழக இளைஞர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய மாற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன.இன்னும் வீரியமான அரசியல் மற்றும் ராஜதந்திர நகர்வுகளை ஒருங்கிணைந்து நாம் நிகழ்த்தினால் நமது "தமிழீழம்" என்கிற நீண்ட நெடிய பயணத்தின் தொடுபொருளை நம்மால் விரைந்து அடைய முடியும். தங்கள் அரசியல் நலன்களையும், தனி மனித வளர்வு வணிகத்தையும் ஈழத் தமிழ் மக்களின் குருதியின் ஊடாகக் காப்பாற்றிக் கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் பயன்படுத்தும் கபட வேடதாரிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பதும் இன்றைய தேவையாகி இருக்கிறது. ஆழமான பயன்களைத் தரக்கூடிய ஊடகப் பரப்புரைகள், உலகளாவிய ஒருங்கிணைந்த தமிழ் இளையோர் கூட்டமைப்பு போன்ற திட்டங்களில் இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். மேலும், "நாடு கடந்த தமிழீழ அரசு", உலகத் தமிழர் பேரவை" போன்ற உலகளாவிய அமைப்புகளின் குறைபாடுகளைக் களைந்து அவற்றை மென்மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ, மேற்குலக நாடுகள் தமிழீழம் தொடர்பாகத் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க அறிக்கையே கூட, தெற்காசியாவில் இலங்கை போன்ற ஒரு கடல் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்டைத் தன் கீழ்ப்படிதலுக்குக் கொண்டு வருகிற முயற்சியாக இருக்கலாம், ஆனால், இவற்றில் இருந்து நாம் பெற வேண்டியவற்றைப் பெற்று நமது இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக எப்படிப் பயணிக்கப் போகிறோம் என்பது தான் நமக்கு முன்னிருக்கிற மிகப் பெரிய கேள்வி.

எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியுடன் கூடிய வாழ்க்கை நெறிகளை நாங்கள் மேற்கொள்வதைத் தடை செய்து, இன மற்றும் மொழி ஒடுக்குமுறைகளில் நம்மைச் சிறுமைப்படுத்திய சிங்களச் சிறு நரிகளுக்கும், தமிழினத்தின் தனி அடையாளம் கண்டு எப்போதும் குலை நடுங்கித் தங்கள் "புதிய தலைமுறைகளில்" ஒப்பாரி வைக்கும் பார்ப்பனீய இந்திய தேசத்திற்கும் பாடம் கற்பிக்க வேண்டிய வரலாற்றுத் தேவையைக் காலம் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மொழிக்காகவும், இனத்தின் விடுதலைக்காகவும் இறந்து போன அந்த உயிர்களின் மதிப்பை தமிழ் இளைஞர்களாகிய நாம் மீட்டு எடுப்போமா? இந்தக் கேள்விக்கான காலத்தின் பதிலில் ஒளிந்து கிடக்கிறது நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும்.

pulam

வெட்ட வெட்டத் தழைப்போம்!

பிடுங்கப் பிடுங்க நடுவோம்!!

அடிக்க அடிக்க அடிப்போம்!!!

அடைக்க அடைக்க உடைப்போம்!!!!

அழிக்க அழிக்க எழுதுவோம்!!!!

விழ விழ எழுவோம்!!!!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்

நன்றி: அறிவழகன்


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP