சமீபத்திய பதிவுகள்

ரத்த வெறி யுத்ததில் கிச்சன் கேபினெட்

>> Wednesday, November 11, 2009


த்தனையோ உயிர்களை இரக்கமின்றி அழித்துமுடித்த இலங்கை மண்ணில், அதிகாரத்தில் இருந்தவர்களே மோதிக்கொள்ளும் காட்சிகளில்கூட நெஞ்சதிர வைக்கும் திருப்பங்கள்..! நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்... இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது. எல்லாமே பதவி மற்றும் உயிர் பயத்தில் அரங்கேறும் திருப்பங்கள்தான்!

அமெரிக்க அரசின் 'போர்க்குற்ற விசாரணை'க்குப் போகாமல் இலங்கைக்கே திரும்பிவிட்ட ஃபொன்சேகா... ஏர்போர்ட்டில் குழுமியிருந்த மீடியாக்களிடம்,

'நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்த விதமான மோசமான நிகழ்வுகளையும் நான் செய்ய மாட்டேன்!' என வீரா வேசமாகப் பேசியிருந்தார். ''இதுவே ஒருவகை அரசியல் அறைகூவல்தான்!'' என்று விளக்கம் கொடுக்கிறார்கள், இலங்கைப் பத்திரிகையாளர்கள். அவர்களிடத்தில் பேசினோம்.

''ஃபொன்சேகா, அமெரிக்கா விசாரணைகளில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்பிட்டார்னு தெரிஞ்சதும், இலங்கை அதிபர் தரப்பு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால், அந்தத் தரப்புக்கேதெரியாமல் அமெரிக்காவிடம் சில வாக்குமூலங்களைக் கொடுத்து விட்டுத்தான் திரும்பியிருக்கிறார் ஃபொன்சேகா. அவர் அமெரிக்காவிலிருந்து கிளம்புவதற்கு முதல் நாள்... நவம்பர் 3-ம் தேதி, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் அவரை சந்திச்சிருக்காங்க. அப்போது ஒரு டேப்பை அவருக்குப் போட்டுக் காட்டி னார்கள். இலங்கையின் அம்பலாங்கொடையில் நடந்த ஒரு விழாவில் ஃபொன்சேகா பேசிய உரை அதில் இருந்தது. புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது உலக ராணுவச் சட்டங்களை மீறி செயல்பட வேண்டியிருந் ததாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த ஆயிரத்துக்கும் அதிகமான புலி உறுப்பினர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதாகவும் ஃபொன்சேகா அதில் கூறியிருந்தார்.

'ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கைப் பதிய இந்த டேப் ஆதாரம் ஒன்றே போதும்...' என அமெரிக்க அதிகாரிகள் ஃபொன் சேகாவுக்கு கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார்கள். உடனே, 'முப்படைகளின் தளபதி என்ற முறையில் அதிபர் இடும் உத்தரவுகளை நான் நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். அந்த வகையில் அதிபரின் உத்தரவுப்படிதான் எல்லாமே நடந்தது!' என்ற ரீதியில் ஒரு வாக்குமூலத்தைக் கொடுத்த ஃபொன்சேகா, சில ஆதாரங்களையும் அளித்திருக்கிறார். அதோடு, இலங்கையின் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராய் தான் களமிறங்க நினைப்பதையும் கூறியிருக்கிறார். 'உங்களின் அதிகாரபூர்வமான விசா ரணையில் நான் கலந்துகொண்டால், என் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை இலங்கையில் பாய்ச்சுவார்கள். அதன்பிறகு நான் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும்!' என்று தன் நிலையை விளக்கியிருக்கிறார்.

தேவைப்படும்போது வேறு வழிகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றநிபந்தனையோடுதான் அவர்திரும்பிப் போக, அமெரிக்காவும் சம்மதித்தது. தற்போது, வாக்குமூலத்தோடு அவர் அளித் திருக்கும் சில ஆதாரங்களை வைத்து வருகிற 24-ம் தேதிக்குள் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிய அமெரிக்கா முயற்சி செய்தது. இதெல்லாம் தாமதமாகத்தான் அதிபர் தரப்புக்குத் தெரிந்திருக்கிறது. உடனே அலரி மாளிகைக்கு வந்து அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபயவையும் சந்தித்து விளக்கங்களை அளிக்கும்படி ஃபொன்சேகாவுக்கு உத்தரவு அனுப்பியிருக்கிறார், அதிபரின் முதன்மைச் செயலர் லலித் வீரதுங்க. கிட்டத்தட்ட ஐந்து முறை உத்தரவு அனுப்பியும் அலரி மாளிகைக்கு செல் வதையே தவிர்த்திருக்கிறார் ஃபொன்சேகா. அதிபர் ராஜபக்ஷேவே ஒரு முறை தொடர்புகொண்டும், பேசுவதைத் தவிர்த்திருந்திருக் கிறார்.

இதில் கோபத்தோடு பதற்றமும் அடைந்துவிட்டது அதிபர் தரப்பு. ஃபொன்சேகாவை எந்த வகையிலும் நம்பமுடியாது என்று முடிவெடுத்து, அதிரடியாகச் சில காரியங்களைச் செய்துள்ளது. இலங்கையில் அதிபர் மற்றும் அரசு பாதுகாப்பு விஷயங்களை, ஃபொன்சேகா கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள ரெஜிமென்ட்தான் இவ்வளவு காலமாகச் செய்து வந்தது. தற்போது, அந்த ரெஜிமென்ட்டை அந்தப் பணியிலிருந்து விலக்கி, கஜபா ரெஜிமென்ட்டிடம் அந்தப் பணியைக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு, கொழும்பில் முக்கியப் பணிகளில் இருந்த ஃபொன்சேகாவின் நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளையும் தலைநகரிலிருந்து உஷாராக பணியிட மாற்றம் செய்து, வடக்குப் பிரதேசத்துக்கு அனுப்பிவிட்டனர். கூடவே, ஃபொன்சேகாவின் பாது காப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த ராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் உட்பட 28 பேரை வேறு பணியிடங்களுக்கு கோத்தபயவின் உத்தரவுப்படி மாற்றியிருக்கிறார், அந்தப் பிரிவின் பொறுப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர. ஒருவேளை, நாட்டில் ராணுவப் புரட்சியை ஏற்படுத்தவும், அதிபர் குடும்பத்தைச் சிறைப்பிடிக்கவும் ஃபொன் சேகா திட்டமிட்டால்... அதை சமாளிக்கவே இந்த நடவடிக்கைகள் என்று அதிபரின் அலரி மாளிகையிலிருந்தே தகவல் கசிகிறது.'' என்று கூறுகிறார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள்.

இதற்கிடையே, தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய, 'ஃபொன்சேகாவுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பது தவறு. வன்னி வெற்றிக்காகவே கூட்டுப்படைகளின் ராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுவு மில்லாமல் அதிபர் மகிந்தாவின் அரசியல் தலைமையே இந்த ராணுவ வெற்றிக்குக் காரணமேயன்றி, வேறு யாரும் இந்த ராணுவ வெற்றிக்கு சொந்தம் கொண்டாட முடியாது' என மீடியாக்களிடம் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதில், ஃபொன்சேகா தரப்பும் ரொம்ப சூடாகி, 'இலங்கையில் அரசியலில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இதுதொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமை யாருக்கும் இல்லை' என பதிலடி கொடுத்திருக்கிறது. இதனிடையே, 'இப்படியே இந்த விவகாரங்களை நீடிக்க விடமுடியாது... கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உள்ளிட்ட எல்லாப் பதவிகளையும் ஃபொன்சேகா ராஜினாமா செய்துவிட்டு, தன் பலத்தை உடனடி யாக அதிபர் குடும்பத்துக்குக் காட்டவேண்டும்' என்று அவருடைய ஆதரவாளர்களும் உசுப்பத் தொடங்கியிருக்கிறார்களாம். ஃபொன்சேகாவோ, 'என் பதவி முடியும் டிசம்பர் 18-ம் தேதிக்குப் பிறகு அதிரடியைப் பாருங்கள்' என்று அவர்களை சமாதானப்படுத்தி வருகிறாராம். இந்தக் கூத்துகளுக்கு நடுவில்தான் ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே புதிய புயல் வீசத் தொடங்கியிருக்கிறது! ராஜபக்ஷேவின் மனைவி சிராந்தியும், ஃபொன்சேகாவின் மனைவி அனோமாவும் ரொம்ப நெருக்கமானவர்கள். அதிபருக்கும் ஃபொன்சேகாவுக்கும் மோதல்கள் உச்சத்தை அடைந்தாலும்... இவர்களுக்குள் நட்பு இழை இன்னும் அறுபடவில்லையாம். அண்மையில் அதிபர் மனைவி சிராந்தியை தொடர்புகொண்ட அனோமா, 'நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் பாதுகாப்புச் செயலரான கோத்தபயவின் அவசர முடிவுகள்தான் காரணம்' என குற்றம்சாட்டி இருக்கிறாராம். இதனால் பிரச்னையை சுமுகமாக்க நினைக்கும் சிராந்தி, 'கோத்தபயவை பதவியிலிருந்து நீக்கி விட்டால் ஃபொன்சேகாவை சமாதானப்படுத்தி அரசியல் களத்தில் இறங்கவிடாமல் தடுக்கலாம்' என ராஜபக்ஷேவிடம் கூறியதோடு, 'உங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொண்டு, ஃபொன்சேகாவையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதுவே வழி' என்றும் கூறத் தொடங்கியிருக்கிறாராம். கோத்தபயவை நீக்கிவிட்டு முன்னாள் ராணுவத் தளபதி ஜயலத் வீரக்கொடியை பாதுகாப்பு செயலராக நியமிக்கவேண்டும் என அதிபர் ராஜபக்ஷேவை நெருக்குகிறாராம் அவர் மனைவி.

ஆனால், மற்றொரு சகோதரான பசில் ராஜபக்ஷே உள்ளிட்டோர், 'எக்காரணம் கொண்டும் கோத்தபயவுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துவதை ஏற்க முடியாது' என்று அதிபரின் குடும்பத்துக்கு எதிராகத் திரும்பும் முடிவில் இருக்கிறார்களாம். நாட்டுப் பிரச்னை இப்படி வீட்டுக்குள்ளும் புயல் கிளப்புவதால் திண்டாடுகிறாராம் அதிபர். ஆனால் சிராந்தியோ, கோத்தபய பாதுகாப்பு செயலர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற உறுதிமொழியுடன் முதல் கட்டமாக சமாதானத் தூதராக அனோமாவை நேரில் அழைத்து சந்திக்கப் போவதாக பலமான ஒரு பேச்சு உலவுகிறது.

கொலைவெறி அரசியலோடு இப்போது குடும்ப அரசியலும் சேர்ந்துகொள்ள... இலங் கையில் பரபரப்புக்குப் பஞ்சமேயில்லை!

இதற்கிடையில், 'ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் நிற்கும் பட்சத்தில் தமிழர் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நாங்கள் கூறும் நான்கு விஷயங்களை ஏற்றுக்கொண்டால் அவரை ஆதரிக்கத் தயார்!' என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், தமிழ் கட்சிகளில் ஒன்றான 'ஜனநாயக மக்கள் முன்னணி'யின் தலைவரும் எம்.பி-யுமான மனோ கணேசன்.

அவரிடம் பேசினோம். ''வவுனியாவில் முள்வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் மக்களை அவர்களது சொந்த இடத்தில் மீள் குடியமர்த்துவது, தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுத்துக் குடியேற்றத்தைச் சிதைக்காமல் செய்வது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது, இலங்கையில் நிகழும் தேசிய இனப்படுகொலையைத் தடுக்க முயல்வது போன்ற விஷயங்களில் சரத் ஃபொன்சேகா சாதகமாக பதிலளித்தால்... அவரைப் பொது வேட்பாளராக ஆதரிக்க நாங்கள் தயார்!'' என்றார்.  

இலங்கை அரசியல் நோக்கர்களோ, ''வரப்போகும் அதிபர் தேர்தலில் ராஜ பக்ஷேவை தோற்கடிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, சிஹகய உறும, தமிழ்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட 20 கட்சிகள் ஒன்றிணைந்துதான் இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இலங்கையில் தமிழர்களிடம் பெரும்பான்மை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் சாத்தியம். அதோடு ஃபொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் தாங்களும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயார் என ஜே.வி.பி-யும் கூறியுள்ளது. இந்தக் கூட்டணியின் சார்பாகத்தான் பொது வேட்பாளராக ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் முன்னிறுத்தப்படவிருக்கிறார். மிக வலுவான இந்தக் கூட்டணியின் பலத்தோடு சிங்கள மக்களிடம் தற்போது ஃபொன்சேகாவுக்கு இருக்கும் ஆதரவும் வெளிப்படும் பட்சத்தில், ராஜபக்ஷேவை மிக எளிதில் ஃபொன்சேகா தோற்கடித்து விடுவார். அதிபர் தேர்தலில் அவர் வெற்றியடைந்ததும் அமையப் போகும் தற்காலிக அரசின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாகத்தான் அவர்களுக்குள் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது...'' என்கிறார்கள்.

இந்நிலையில் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்த பத்திரிகையாளர்கள், ஃபொன்சேகா பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்துக் கேட்டனர். ''பொதுவேட்பாளரை களத்தில் நிறுத்துவதில் எனக்கு சம்மதம்தான். ஃபொன்சேகா பொதுவேட்பாளராக வேண்டுமென்றால், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி-பியும் ஒத்துழைக்க வேண்டும். அதுவுமில்லாமல் ஃபொன்சேகா தமிழ் மக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை விளக்குவதோடு, அவர்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும்!'' என்று சொல்லியிருக்கிறார்.

- மு.தாமரைக்கண்ணன்   
 

source:vikatan
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP