சமீபத்திய பதிவுகள்

சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடந்தது என்ன?

>> Sunday, November 15, 2009

 

இலங்கையின் போர் கதாநாயகனான ஜெனரல் சரத் பொன்சேகா என்ன காரணத்தால் தமது உயர் பதவியைத் துறந்து மக்களுக்காக (?) வேறு வழியில், பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதியாக சேவையாற்றப்போகிறார் என்பது பலருக்கும் தெரிந்ததே. சரத் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் தகவல்கள் கசிந்துள்ளதிலிருந்து என்ன தெரிய வந்துள்ளது என்றால், சரத் ராணுவத் சதித்திட்டம் ஏதும் தீட்டிவிடுவாரோ என அரசு கொண்ட பயமும் அதனால் இலங்கையின் முதலாவதும் சேவையிலுள்ளவருமான நான்கு-நட்சத்திர தரத்திலுள்ள ஜெனெரல் மீது அரசுக்கு ஏற்பட்ட தவறான நம்பிக்கையுமே இப்போது ராஜினாமா வரை கொண்டு சென்றுள்ளது என்பதாகும்.

'இங்கு ஒரு ராணுவ சதிப்புரட்சி வரலாம், அந்த நேரத்தில் உதவிக்கு வருவதற்காக இந்திய ராணுவத்தைத் தயாராக வைத்திருங்கள்' என்று இந்திய அரசை கடந்தமாதம் இலங்கையரசு விழிப்பூட்டியிருந்த செய்கையானது சரத்தை எவ்வளவு தூரத்துக்குக் குழப்பியுள்ளது என்பதை அவர் எழுதியுள்ள கடிதத்தின் தொனியிலிருந்தே தெரிகிறது. அந்தக் கடிதத்தில் சரத் 16 காரணங்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பீரங்கிக் குண்டுகள் போல மஹிந்த மீது எறிந்துள்ளார். இவ்வாறு எனக்குச் செய்துவிட்டீர்கள், என்னைக் காயப்படுத்திவிட்டீர்கள், என்மீது சந்தேகம் கொண்டுவிட்டீர்கள், ஒருவித கட்டளை அதிகாரமும் இல்லாத ஒரு உயர் பதவியில் என்னை இருத்திவிட்டீர்கள் என்று சரத்தின் குற்றச்சாட்டுகள் நீண்டு செல்கின்றன. 

மேலும் இதுவரை காலமும் ராணுவ தலைமைப்பீடத்தின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த சிங்க படையணியானது சரத் பொன்சேகாவிற்கு கீழ் இயங்கியவர்கள். அவர்கள் சரத் பொன்சேகாவுக்கு விசுவாசமானவர்கள் என்பதால் அவர்களை நீக்கிவிட்டு பாதுகாப்புச் செயலரும் மஹிந்தவின் சகோதரருமான கோத்தபாயவின் நம்பிக்கைக்கு பாத்திரமான நெருக்கமான ராணுவத்தினர் சேவையிலீடுபடுத்தியதையும் சரத் சுட்டிக் காட்டியுள்ளார்.

சரத் பொன்சேகா என்றாலே தமிழ் மக்கள் வெறுப்புக் காட்டுகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் இந்த சரத் பொன்சேகா தான் என அவர் மீது வெறுப்பை உமிழ்வதில் ஈழத் தமிழர்களுக்கு அளவுகடந்த பிரியம் உள்ளது. ஆனால் தமிழ் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற தொனியில் சரத் எழுதியுள்ள விடயங்கள் அவரது அரசியல் ஆதாயத்துக்காகும்.

தனது கட்டளை அதிகாரியான மஹிந்தவுக்காக தாம் போரை வெற்றியீட்டிக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தி சமாதானத்தைக் கட்டியெழுப்ப அவர் தவறிவிட்டதாகவும் மேலும் ஒரு கருத்து எழுதியுள்ளார் சரத். தமிழ் மக்களின் சிந்தனைகளையும், இதயங்களையும் கவருவதற்கான தெளிவான கொள்கை எதுவும் அரசிடம் இல்லை என்று கூறியுள்ள அவர், தமிழ் மக்களைத் தொடந்தும் தடுத்து வைப்பதானது போர் வெற்றியைச் சிதைத்து விடும் என்றும், இதுவே இன்னொரு காலத்தில் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு வழிசமைத்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவைத் தீர்த்துக்கட்ட 2006 இல் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தோல்வியடைந்த பின்னர், வன்னியில் நடந்த போரில் ராணுவம் வெற்றி மேல் வெற்றி ஈட்டி வந்ததால் சரத் பொன்சேகா ஒரு கதாநாயகனாக பிரபலமடையத் தொடங்கினார். அவருக்குரிய புகழ், அதிகாரம் அனைத்தும் மேலும் வளர்ந்து ஜனாதிபதி மஹிந்தவையே மிஞ்சும் நிலைக்கு வந்தது. எனவே சரத்தின் கோரிக்கைகளுக்கு மஹிந்த எதுவித மறுப்பும் கூறாத ஒரு நிலையில் நிறைவேற்றி இருந்தார்.

போர் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரை பாகிஸ்தானின் உயர் ராஜதந்திர பதவிக்கு நியமித்தார் மஹிந்த. குறித்த நபர் குடும்பத்துடன் இஸ்லாமபாத் சென்று பதவியை ஏற்ற கையுடனேயே காரணம் எதுவும் கூறாமல் அவரை மீண்டும் இலங்கை திரும்புமாறு அவசர உத்தரவிட்டார் மஹிந்த. இதற்கு சொல்லப்பட்ட காரணம் என்னவென்றால், தமக்காக பாதுகாப்புச் செய்திகளைச் சேகரித்தவரைக் கடத்திய ராணுவத்தை எழுத்தாளர் குற்றம் சாட்டியிருந்ததால், சரத் பொன்சேகா தான் உடனும் ஆசிரியரை பதவியிலிருந்து தூக்க வேண்டும் என மஹிந்தவைக் கேட்டார் என்பதாகும்.

சரத் பொன்சேகாவின் அதிகாரம் இவ்வாறாக மேலோங்கியிருந்ததால் பொதுமக்களின் தலமைத்துவமானது பெரும் அச்சத்தில் இருந்ததாக பலர் கூறினர். மஹிந்தவுக்கு நெருக்கமான பலரும், ஜனாதிபதியை விட ராணுவத்தளபதிக்கு அதிகாரம் கூடிக்கொண்டு செல்வதாக வெளிப்படையாகவே அவரிடம் கூறியுள்ளனர். ஆனால் மஹிந்தவோ சரத் பொன்சேகாவின் தாளத்துக்கு ஆடிக் கொண்டிருந்தாலும் தந்திரமாக நடந்து கொண்டார். சரத் பொன்சேகாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மிக அவதானமாகக் கவனித்து வந்த அவர், சரத்தைக் கழற்றிவிடும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்ததுடன், இரு மாதங்களில் சரத் பொன்சேகாவின் துருப்பினர் வெற்றிகரமாக போரை நிறைவு செய்ததும், கூட்டுப்படைத் தலைமையதிகாரி என்ற அதிகாரமற்ற பதவிக்கு அவரை மாற்றி தனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்.

தாம் தந்திரமாகத்தான் தப்பான பாதைக்கு வழி காட்டப்பட்டு, அதிகாரங்கள் அற்ற உயர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ள சரத் பொன்சேகாவுக்கு அதிக நாட்கள் செல்லவில்லை. அதோடு தமக்குக் கொடுத்த பதவியிலிருந்து கொண்டு மஹிந்தவின் சகோதரரும், ராணுவத்தில் தமக்கு கீழே உள்ளவருமான பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் சம்மதம் இல்லாமல் எதுவித ஆலோசனையும் வழங்கமுடியாது என்பதும் அவருக்கு மேலும் மனத்தாக்கத்தையே உருவாக்கியிருந்தது.

இந்த மனத்தாங்கலை தமது கடிதத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் சரத், "எனது புதிய பதவியில் நான் அமர முன்னர், அப்பதவியானது எனது முந்தைய பதவியை விட அதிகாரமும் பொறுப்பும் கூடியது எனக் கூறப்பட்டிருந்தேன். ஆனால் கூட்டுப்படைத் தலைமையதிகாரிக்கான பதவிக்கடிதம் கிடைத்தவுடன்தான், அப்பதவியானது ஒருவித கட்டளை அதிகாரமும் அற்ற வெறும் இணைப்பாளர் பதவி என்பது எனக்கு தெரிய வந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். "என்மீது கொண்ட அவநம்பிக்கை காரணமாக, போரை வெற்றிகொள்வதற்கான சகல செயற்பாடுகளும் முடிவடைந்த பின்னர் எனக்கு நீங்களும் (ஜனாதிபதி) அரசாங்கமும் கட்டளை அதிகாரமுள்ள பதவி தர தயாரில்லை என்பதையே இது காட்டுகிறது" என்று தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார் சரத்.

இதைத்தொடர்ந்து சேவை கட்டளைத் தளபதிகளுடனான கூட்டத்தில், 'கூட்டுப்படைத் தலைமை அதிகாரியிடம் முப்படைகளினதும் செயற்பாட்டு கட்டுப்பாட்டைக் கொடுத்தால் அது பெரிய ஆபத்தாக முடியும்' என்று கோத்தபாய அவசியமே இல்லாமல் அனைத்து கீழ்மட்ட படைத் தளபதிகள் முன்னிலையில் கோத்தபாய வெளிப்படையாகக் கூறி அவமானப்படுத்தியமையும் சரத் பொன்சேகாவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ சகோதரர்கள் கொண்ட ராணுவ சதித்திட்டப் பயம் காரணமாகவே சரத் வேறு பதவிக்கு உயர்த்தப்பட்டார் என ஆய்வாளர்கள் பலரும் நம்புகிறார்கள். சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவி கொடுப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் அரச பத்திரிகையான டெய்லி நியூஸில், ஜூன் 28 இல் ஹொண்டுராஸில் நடந்த ராணுவப் புரட்சி குறித்த கட்டுரை முன்பக்கத்தில் வெளியாகியிருந்தமை தற்செயலாக நடந்ததல்ல. ஹொண்டுராஸ் நாட்டுடன் இலங்கைக்குள்ள உறவுகள் மிக மிக சொற்பமானவை, ஆனால் ஏன் அந்நாட்டு வரலாற்றுக்கு அப்பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்தது? 

இவ்வாறான மறைமுக தாக்கங்கள் அரசின் போக்கு எவ்வாறு அமையப்போகிறது என்பதை சரத்துக்கு நன்கு உணர்த்தின. நாளாக நாளாக முறுகல் வலுத்து, ஜனாதிபதிக்கும் ஜெனெரலுக்கும் இடையிலான இடைவெளி வளர்ந்து அரச அமைச்சர்கள் வரை பரந்துபட்டுப் போனது. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவமே ராணுவ வெற்றிக்கு வழி சமைத்தது என அமைச்சர்கள் பொதுக் கூட்டங்களில் பேசினார்கள். இதன்பின்னர், கருத்து வெளியிட்ட சரத்தோ, போரில் வெற்றி கொண்டதற்கு 95 வீதமான பங்களிப்பும் அர்ப்பணமும் படையினரையே சாரும் எனக் கூறினார்.

இவ்வாறாக குழம்பிப் போயுள்ள குட்டையில் மீன்பிடித்தவர்கள் எதிர்க்கட்சியினர் ஆகும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அவர்கள் ஜெனெரல் சரத்தைத் தமது வலையில் விழ வைத்து ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும்போது அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரத் என எதிர்க்கட்சியினரின் இலக்கு அமைந்தது. 

இதேவேளை ஜெனெரல் சரத்பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளர் ஆகுவதைத் தாமும் வரவேற்பதாக மார்க்கிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனவும் சைகை காட்டியுள்ளது. இவற்றையடுத்து செய்திகளை அறிந்த மஹிந்த குழம்பிப் போய் அவரது கொழுகொழு முகம் பொலிவிழந்துவிட்டது. அவருக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன. மஹிந்த கவலைகளைச் சுமந்த மனிதராகிவிட்டார்.

சர்ச்சைக்குள்ளான அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த வாரம் வியாழக்கிழமை இலங்கை வந்த சரத் பாதுகாப்புச் செயலருடன் சொற்போரை ஆரம்பித்துள்ளதாக சண்டே டைம்ஸ் கூறுகிறது. இந்தச் சண்டையானது போர்க்குற்றங்கள் புரிந்த கோத்தபாயவை அடையாளம் காட்டும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்ட விசாரணைகள் குறித்து அல்லாமல், ராணுவத்தினரின் நடத்தைகள் குறித்த சந்தேகங்களுக்காக நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா மஹிந்தவுடனும், கோத்தபாயவுடனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களுடன் கொழும்பு சாலை முழுவதும் கட்டப்பட்டிருந்த பனர்கள், பதாகைகள் அனைத்தும் நீக்கப்பட்டன அல்லது கிழிக்கப்பட்டன. போர்க் கதாநாயகன் ஒரு வெற்று மனிதனாக அரசாங்கத்துக்குத் தெரியத் தொடங்கியுள்ளார். ஆனால் அரசியலில் நுழைவது குறித்து சரத் பொன்சேகா வரும் சில நாட்களில் அறிவித்த பின்னரே இவர்களுக்கிடையிலான உண்மையான போர் ஆரம்பமாக உள்ளது. 

அரசியல் நோக்கத்தையும் கூட சரத் தனது கடிதத்தின் இறுதிப் பந்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். "யுத்தம் முடிவடைந்து விட்டதால் சமாதானமானது நாடு முழுதும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மக்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளன இதேவேளை ஊழலும் விரயமும் அதன் எல்லையைக் கடந்து போகின்றன. ஊடக சுதந்திரமும் பிற ஜனநாயக உரிமைகளும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. எமது தாய்நாட்டுக்கு சமாதானத்தையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் எனில், போரை முடிவுக்குக் கொண்டுவர ராணுவம் செய்த பல தியாகங்கள் வீணாகிப் போகக் கூடாது' என உள்ளது அப்பந்தியில்.

சரத்துக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையிலான முறுகல் குறைவதற்கு சாத்தியங்கள் இல்லை. சரத் பொன்சேகா அரசியலில் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் தீவிர தேசியவாதிகள் முயன்றுள்ளனர். புத்த பிக்குமார் சரத் பொன்சேகாவும் அரசியல் பிரவேசத்தைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூட அவர்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது தேசியவாதியான சரத் பொன்சேகாவோ, ஐ.தே.க மற்றும் முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவின் இலங்கை சுதந்திர கட்சி மகாஜன அணி ஆகியவற்றோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்கள், இந்திய தமிழர்கள் தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியின் கூட்டணியில் இணையவுள்ளார் என பிற தேசியவாதிகளால் குற்றம் சாட்டப்படுகிறார்.

கனடியன் நஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு 2008 செப்ரம்பரில் பேட்டி கொடுத்தபோது "இலங்கை சிங்களவர்களுக்கு உரிய நாடு, ஆனால் அங்கு சிறுபான்மை இனத்தவர்களும் உள்ளனர், அவர்களை எங்கள் மக்கள் போலவே நாங்கள் நடத்துகிறோம். அவர்கள் எங்களுடன் இலங்கையில் வசிக்கலாம். ஆனால் சிறுபான்மையினத்தவர் என்பதையே காரணம் காட்டி அவர்கள் தமக்கு அளவுக்கு அதிகமான உரிமைகளைப் பெற முயற்சிக்க கூடாது" என சரத் பொன்சேகா கூறியிருந்தார். 

போரில் வெற்றிகொண்டதும் பெரும்பான்மை சிங்களவர்கள் தெருக்களில் நடத்திய அநாகரிகமான வெற்றிவிழாக்களால் அநேக தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மஹிந்தவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டையுமே காணவில்லை. கடைசிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இறந்ததால் கதிகலங்கிப் போயுள்ளதாலும், லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு முகாம்களில் இன்னல் பட்டுவரும் நிலையிலும் தமிழர்கள் சரத்துக்கும் சரி மஹிந்தவுக்கும் சரி ஆதரவு வழங்கும் நிலையும் இல்லை. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த குரலாக பாராளுமன்றத்துக்கு அனுப்பபட்ட த.தே.கூ ஐயும் தமது கூட்டணியில் இணைத்ததன் மூலமாக எதிர்க்கட்சியினர் தமிழர்களின் வாக்குகளைக் குறி வைக்கின்றனர்.

மேற்படி இருவருமே தமிழ் மக்களுக்குள்ள பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்பார்கள் என பெரும்பாலான தமிழர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இதேவேளை அரசின் சில குறிப்பிட்ட ரகசியங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்ற பயமும் இப்போது அரசாங்கத்துக்குத் தொற்றியுள்ளது. இந்த ரகசியங்கள் வெளிவரும்போது சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் விசாரணைகள் நடத்த விடுத்துள்ள அழைப்புக்கு தாம் இதுவரை கொடுத்துவரும் டிமிக்கி இனிச் செல்லாததாகிவிடுமே என்ற கவலையில் உள்ளனர் மஹிந்த தரப்பினர்.


source:athirvu


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP