சமீபத்திய பதிவுகள்

உயிரின் உயிரான மாவீரர்களே

>> Thursday, November 26, 2009

 

maaveerar_2009உயிரின் உயிரான மாவீரர்களே "நாங்கள் விடும் மூச்சு நீங்கள் தந்தது" "நாளைவரும் வாழ்வு உங்கள் உயிர்ப்பில் மலர்ந்தது"

எங்கள் பெருமை இந்த உலகறியும் நவம்பர் 27

* இன்றைய நாள் ஒரு புனித நாள். எமது இனத்தின் இருப்புக்காகத் தமது உயிரை ஈகையாகத் தந்தவர்களின் புனித நாள். நெஞ்சத்தின் நினைவாலயத்தில் அவர்களின் நினைவுகள். உயர்ந்த விடுதலையின் விழுமியத்தை இலட்சியமாக வகுத்து அதற்காகப் போராடி வாழ்ந்து மடிந்த மாவீரர்கள் மகத்தான மனிதப்பிறவிகள்! அவர்களது வாழ்வும் வரலாறும் எமது விடுதலைக் காவியத்தின் முகவரிகள்!

மாவீரர்களே!
தமிழ்த்தேசம் உங்களுக்குத் தலை வணங்குகின்றது!

வீரத்தின் அசைவே மனித குலத்தின் வரலாறாகின்றது. உலக வரலாற்றின் உயிரெழுத்துக்களாக இருப்பவர்கள் வீரர்களே!

வீரத்துக்கு மரணம் இல்லை

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்பது அவர்களின் ஆத்ம வீரம். மரணம் என்பது செய்யத் துடித்த பொதுத் தொண்டினை செய்து முடித்த வீரரின் சூரியோதயம் ஆகின்றது.

அழகிய எங்கள் தேசத்தின் நிலமும் வானும் எத்துணை அற்புதமாய் விரிந்து நிறைந்தது! ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் முன்னோர் தடம் பதித்த தமிழின் தேசப் பரப்பெல்லாம் எங்கள் வேர்கள் ஆழப் பதிந்துள்ளன.

எந்தையும் தாயும் இருந்து குலவிய எங்கள் தேசத்து வாழ்வில் ஆக்கிரமிப்புக் கொடுங் கரங்கள் ஆழப் பரவத் தொடங்கின. பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட அநீதியான செயற்பாடுகளால் எங்கள் பாரம்பரிய நிலங்கள் பறிபோயின. இனக் அழிப்புக்கள், இனப் படுகொலைகள் என எங்கள் இனிய வாழ்வில் இடிகள் விழுந்தன. ஆக்கிரமிப்பு அழித்தல்களுக்கு எதிராக அமைதியான முறையில் உரிமை கேட்டு நின்ற தமிழினத்தின் குரல்வளை மேலும் மேலும் நெரிக்கப்பட்டபோது ஜனநாயகத்தின் பேரால் ஏமாற்றப்பட்டபோது தான் எங்கள் ஆயுதப் போராட்டம் வடிவம் பெறுகிறது. இராணுவ மேல் நிலை கொண்ட ஒரு இயக்கத்தினால் மட்டும் தான் இனவெறி கொண்ட ஒரு அரசுக்குச் சரியான பாடத்தைப் புகட்ட முடியும்.

1986 இல் The Hindu நாளிதழுக்கு எங்கள் தலைவன் வழங்கிய செவ்வியில் தீர்க்கதரிசனமாக வெளியிடப்பட்ட வார்த்தைகள் இவை.

* புரட்சி நெருப்புக்களாய் எங்கள் விடுதலைப் புலிகளின் வீரம் விளைந்தது. புரட்சி வெப்பத்திலே தேசமே சிவந்தது. தேச விடுதலைப் போரிலே எங்கள் வாழ்வுக்காக, எங்களின் மூச்சுக்காக ஆயிரம் ஆயிரமாய் தம் வாழ்வையே தந்த மாவீரர்களின் நீங்கா நினைவுகளை எங்கள் நெஞ்சக் கோயிலிலே தீபங்களாய் ஏற்றி வைத்திருக்கிறோம். தெய்வங்களாய் அவர்களைப் போற்றுதல் செய்கின்றோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய எங்களின் வீர யுக நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாக எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்கு நடக்கும் நிகழ்வுகளையும் உலக மானுடவியலாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இன்று பதிந்து கொண்டிருக்கின்றார்கள். உலகமே வியந்து கொண்டிருக்கின்றது.

மாவீரர்களான எங்கள் தெய்வங்களுக்காய் நவம்பர் மாதத்தில் தேசமெல்லாம் திரண்டு தீப முகங்களுக்குள் அவர்களைத் தரிசிக்கும் அற்புத நிகழ்வினை ஆண்டுதோறும் தவமாகவே போற்றி நிற்கிறோம்.

மாவீரர் நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடுகின்றன. இந்த ஆண்டிலே மனித நாகரீகமே வெட்கித் தலைகுனிந்த கொடுஞ்செயலாகவே கருதப்படும் உன்னதமான கல்லறைகளை உழுது கொடும் கபளீகரம் செய்த செயலை நினைத்து நினைத்து அழும் வேதனைகளுடன் அவர்களுக்காய் ஆண்டாண்டாய் தீபமேற்றிய கல்லறைகளின் சாம்பல்மேட்டின் மேல் நிற்கும் சிங்கள சப்பாத்துக் கால்களுக்குள் எரிமலை வெடிக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சுடன் விம்மி விம்மி அழும் நெஞ்சங்களுடன் நெய் விளக்கு ஏற்றுகின்றோம்.

* மாற்றான் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை
மண்ணாய் நிலைக்குமய்யா
ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை
மண்ணில் அனலே முளைக்குமைய்யா
காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை
கல்லறையல்ல
உயிர் உள்ளவர் பாசறை

வீதிகள் தோறும் மகரதோரணங்கள், வீடுகள், முற்றங்கள் எல்லாம் நெய்விளக்கு ஏற்றப்பட்டு எங்கும் எங்கள் தெய்வங்களுக்கான வழிபாடுகள்
எங்கள் தாயகத்தில் மட்டுமா?

எங்கள் தேசத்து எல்லைகளைக் கடந்து எங்கள் மக்கள் வாழுகின்ற சர்வதேசப் புலங்களிலெல்லாம் மாவீரர் நாளின் வணக்க நிகழ்வுகள!; நினைவெழுச்சிப் பேரரங்குகள்!

வெளிமுற்றங்களில் மட்டுமா எங்கள் மனவெளி எங்கணும் மாவீரர்களுக்கான மாலைகள் நீள்கின்றன. கவிஞர்கள், கலைஞர்கள் எண்ணங்களில் எல்லாம் எங்கள் மாவீரர்களைப் பாடும் கவிதாமலர்கள் பூக்கின்றன.

* மனவெளி எங்கணும்
மாலைகள் நீளும்
மந்திரச் சொல் அர்த்தமாய்
மாவீரர் புகழ் பேசும்
தமிழின தேசச் சிற்பிகளே
உங்களை
தாயகக் கோயிலிலே போற்றுகின்றோம்
அன்புயர்ந்த கோபுரத்தின் உச்சியிலே
உங்கள் ஆத்மாவின் வல்லமையில்
நாம் நிமிர்ந்தோம்
அன்புடையார் என்றும் பிறர்க்குரியர்
எனும்
ஆன்றோர் சொல் அர்த்தங்கள் நாமுரைத்தோம்
சூழ்ந்த இருள் தொலைக்க வந்த
சூரியனின் பிள்ளைகளே!
சுதந்திர விடியலிலே
உயிர் கலந்த உறவுகளே! நீவீர்
வாழுகின்ற வயதினிலே
வான்கலந்து போனவரே
வரலாறு உள்ளவரை
வாழ்வீர்கள் செல்வங்களே!

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்ட எமது விடுதலைப் போராட்டம் இன்று பல வெற்றிகளைத் தனதாக்கித் திடமான தன் வலிமைத் துணிவோடு தமிழீழ விடுதலைக்கான சுதந்திரப் பிரகடனத்துக்காய் நிமிர்ந்து நிற்கின்றது.

* அச்சம் அறியா
அடங்கா உயிரோ
துச்சம் எதிரி
தூள் என
நெஞ்சம் நிரம்ப
நெருப்புச் சுமந்தாலும் – நாங்கள்
வன்முறை மீது மோகம் கொண்டவர்கள் அல்ல!

உண்மையில் ஆத்மரீதியாக உண்மையான சமாதானத்தை விரும்புகின்றவர்கள். சமாதானத்தை அடைவதற்காகவே போராடுகின்றவர்கள் உண்மையான உள்ளுணர்வோடு தமிழ் மக்களுக்கு சுதந்திரமான சமாதானம் ஏற்படவேண்டும் என்பதற்காக நாம் கொடுத்த விலைகள் பெரிது.

சிரித்த முகத்தோடு செந்தமிழ் வாய் இனிக்க… ஊன்று கோலோடு உலாவந்த உத்தமனை உலகமே விரும்பும் சமாதானத் தூதுவனை நாங்கள் தமிழ்தாய் முகம் மலரவேண்டும், அவள் சிரிக்க வேண்டும் என்பதற்காக இந்த சிரித்த முகத்தவனை களப்பலி கொடுத்தோம்!

எமது போராட்டம் உலகத்தின் மனச்சாட்சியைத் தொட்டதின் விளைவாகப் புதிய அரசியல் பரிமாணங்களை எடுத்து சுதந்திரப் பிரகடனத்துக்காய் துணிந்து நிற்கின்றது. இந்த உயர்வுக்கும் இந்த சுதந்திரமாதாவின் சுடர் ஒளிப் பிரவாகத்துக்கும் பின்புலமாகவும் உயிர் விசையாகவும் எங்கள் மாவீரர்களின் சுவாசமும் அவர்களின் கல்லறைகளுமே எமக்கு கருவறையாய் விளங்குகின்றன.

* அன்பிலார் எல்லாம் தமக்குரியர்-அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு
என்னும் குறள் வழி
நாங்கள் விடும் மூச்சு நீங்கள் தந்தது
நாளைவரும் வாழ்வு உங்கள் உயிர்ப்பில் மலர்ந்தது
உயிரின் உயிரான மாவீரர்களே
மாவீரரான எங்கள் மனிதத் தெய்வங்களே
யார் யாரோ எங்களுக்காய் என்று வந்தார்கள்
இங்கு உள்ள யாவையுமே
தங்களுக்காய் கொண்டு சென்றார்கள்
பேர் சொல்லப் பிள்ளைகளே நீங்கள் வந்தீர்கள்
எங்கள் பெருமை இந்த உலகறியும்
நாள் தந்தீர்கள்… அதற்காய்
உயிரின் உயிரான மாவீரர்களே
மாவீரரான மனிதத் தெய்வங்களே
எண்ணமுடியா வாழ்வின் எல்லை அழகாய் எங்கள்
எண்ணம் செயல் யாவும் உலகில்
விரிய வைத்தீர் – எங்கள்
மகத்தான சுதந்திரத்தை எழுதிவைக்கும் வடிவுமானீர்
மாவீரரான மனிதத் தெய்வங்களே
மனிதமுள்ள வரை இந்த உலகில்
உயர்ந்து வாழ்வீர்களே
மனிதமுள்ள வரை இந்த உலகில்
உயர்ந்து வாழ்வீர்கள் தெய்வங்களே!

தமிழீழப் போராட்டத்துக்காக தன் உயிரைக் காணிக்கையாக்கிய முதலாவது புலிவீரன் லெப்டினன்ட் சங்கர் சத்தியநாதனின் சுவடுகள் எங்கள் தேசத்தில் பதிந்த நாளே மாவீரர் திருநாளாகும்.

* உலகமே காத்திருக்கும் எங்கள் ஒப்பிலா வீரத் தலைவனின் மாவீரர்நாள் உரையும் அதைத் தொடர்ந்து மாலை 6.05 க்கு (தாயக நேரம்) ஓங்கி ஒலிக்கும் தேசத்து ஆலயங்களின் மணியோசை முழங்க எங்கள் தெய்வங்களான மாவீரர்களின் கல்லறைகளுக்கு நெய் விளக்கு ஏற்றப்படும்.

வானிலும் கடலிலும் தரையிலும் ஒரே நேரத்தில் நெய் விளக்குகள் எற்றப்படும் போது

* நெஞ்சம் கனக்கும்,
நினைவு தடுமாறும்
உணர்வற்ற உடல்களாகி – எமது
தேகம் சிலிர்த்துப் போகும்
காற்றோடு காற்றாகிக் கலந்து போனவர்கள்
கடலோடு கடலாகக் கரைந்து போனவர்கள்
வானோடு விடிவெள்ளியாய் ஆனவர்கள்
அதிகம் அணைத்தது
தாயைவிட – தமிழே
உன்னைத்தானே?
கடலலையே! கடலலையே
உரிமையோடு கேட்கின்றோம்
நீ கரையைத் தொடும்போது
எங்கள் மக்களுக்கு காதோடு சொல்லிவிடு
இந்த சமுத்திரத்தின்
ஏகாந்தப் பெருவெளியில் ஈழம் மலரும் என்று.

உறுதி குலையாதீர் மக்களே!
தலைவனுக்குப் பின்னால்
அணிதிரண்டு செல்லுங்கள்
தமிழீழம் தலை நிமிரும்
இது உறுதி
வழிகாட்டி எமை
உருவாக்கும் தலைவன்
வழி தொடர்வோம்
இழிவாக வாழோம் நாங்கள்
தமிழீழப் போரில் உறுதியது குலையோம்
இது திண்ணம்!
இதுவே
எங்கள் நெஞ்சத்தின் நெருப்பாய்
எழும் விஸ்வரூப தரிசனம்.

மாவீரரான எங்கள்
மாவீரத் தெய்வங்களே!
விடுதலை வேள்வியின் ஒளிச்சுடர்களே!
மலரும் எங்கள் தேசத்தில்
இலட்சிய மலர்களாய்
என்றும் பூத்திருப்பீர்கள்.
புலி வழி ஒளிரும் மக்கள்
புரட்சியில் ஈழ மண்ணினை மீட்பர்.

வெஞ்சிறைகள் கோடுங்கோன்மை வேரறுக்கும்
போர் முழக்கம் இவைகளெல்லாம்
நெஞ்சுரத்தை மாற்றுமெனில் நீதியெல்லாம்
சுடுகாடு நோக்கிச் செல்லும்!

அஞ்சுவதேன்? செந்தமிழர் அன்னியர்க்கு
நாமடிமையல்லோம்!

நவம்பர் 27 மாவீரர் நாள்! எம்மை நிமிரவைக்கும் பெருநாள்

தமிழரின் விடிவுக்கு வழிகாட்ட தீபங்களாய் ஒளிரும் தியாகிகள் எமக்கான தெய்வங்களாக உருப்பெற்ற நாள்
இது
தமிழர் வரலாற்றில் என்றுமே போற்றப்பட வேண்டிய நாள்!

1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவக் கெடுபிடிகள் நிறைந்த காலப்பகுதியில் மாவீரர்களை நினைவில் நிறுத்துவதற்காக இந்த நாள் பிரகடனம் செய்யப்பட்டது.
அதற்குப் பின்னர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இது தமிழீழ மக்களின் தேசியத் திருநாளாகி விட்டது.

நவம்பர் மாதம் என்றால் சிங்கள தேசத்துக்கு இயல்பாகவே ஒரு கிலி வருவது வழக்கம். காரணம், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புலிகள் எங்காவது பாய்ச்சல் நடத்தி விடுவார்களோ என்ற அச்சம். அந்தளவுக்கு மாவீரர் நாள் கனதியாக இருந்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் மாவீரர் நாள் பற்றிய சிந்தனைகள் இன்னும் அதிகரித்திருக்கின்றன.

இதற்குப் பல காரணங்கள் உண்டு.

* தாயகத்தில் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை நடத்த முடியாது போயுள்ள அவலம்.

மாவீரர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவாலயங்கள், துயிலுமில்லங்கள் நாசமாக்கப்பட்ட பின்னணி, வழக்கத்தில் உலகம் எங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தேசியத் தலைவரின் உரை இம்முறை நடைபெற வாய்ப்பில்லை என்ற சூழல் இப்படிப் பல காரணங்களுடன் இந்த வருட மாவீரர் நாள் புலம்பெயர் தேசங்களில் மையம் கொண்டிருக்கிறது.

முன்னர் மாவீரர் நாள் காலங்களில், இதுவரை காலமும் போரில் மடிந்த மாவீரர்;களின் பட்டியல் விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனையால் வெளியிடப்படுவது வழக்கம். 1982 நவம்பர் 27 இல் முதல் வித்தாகிய லெப்.சங்கர் தொடக்கம் விடுதலைப் போரில் வீரகாவியமான விடுதலைப் புலிகளையும், பொன். சிவகுமாரன், குட்டிமணி, தங்கத்துரை போன்ற புலிகள் இயக்கத்தைச் சாராத மாவீரர்களினது விபரங்களையும், உள்ளடக்கியதாக அந்தப் பட்டியல் விரியும். ஆனால் இந்தமுறை அப்படியான பட்டியல் வரப் போவதில்லை. எத்தனை மாவீரர்கள் மண்ணுக்காக மடிந்துள்ளனர் என்ற சரியான விபரம் கூட இல்லாதளவுக்கு எமது விடுதலைப் போராட்டம் சின்னா பின்னமாக்கப் பட்டிருக்கிறது.

2008 மாவீரர் நாளுக்கும் 2009 மாவீரர் நாளுக்கும் இடைப்பட்ட காலத்துக்குள் நிகழ்ந்து விட்ட பிரளயங்களால் தாயகத்தின் ஒட்டுமொத்த விடுதலைப் போருக்கான கட்டுமானங்களுமே சிதைக்கப்பட்டு விட்டன. எத்தனை மாவீரர்களை நாம் இந்த மண்ணுக்காக இழந்திருக்கிறோம் என்ற சரியான தகவல்களைக் கூடத் திரட்ட முடியாதளவுக்கு துர்பாக்கியசாலிகளாகி இருக்கின்றோம்.

* முள்ளிவாய்க்கால் மண்ணில் புதையுண்டு போனவர்கள் எத்தனை பேர்? சிங்களப் படைகளிடம் மண்டியிடாமல் மரணத்தை தழுவியோர் எத்தனை பேர்? ஆயுதங்களை மௌனிக்கும் முடிவை ஏற்று சரணடைந்த பின்னர் கொல்லப்பட்ட தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் எத்தனை பேர் என்ற எந்த விபரமுமே எம்மிடம் கிடையாது. மிகவும் நெருக்கடியானதொரு காலகட்டத்தில் கூட- அதாவது இராணுவம் எந்த நேரமும் உலா வந்து கொண்டிருந்த போது கூட முதல் மாவீரர் லெப். சங்கர், லெப். சீலன், ஆனந்தன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் சுவரொட்டிகள் தமிழர் தாயகம் எங்கும் ஒட்டப்பட்டன. ஆனால், எல்லா வசதிகளும் நிறைந்த இந்த நவீன யுகத்தில் எம்மால் மாவீரர்களின் முழுமையான விபரங்களை திரட்டிக் கொள்ள முடியாதளவுக்கு நாம் நிர்க்கதி நிலையில் இருக்கிறோம். கடந்த ஒரு வருடகாலத்தில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத வகையில் விடுதலைப் போருக்காக ஆயிரக் கணக்கான போராளிகள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.

சுமார் முப்பாதாயிரம் வரையில் இருக்கலாம் என்று மதிப்பிடப்படும் மாவீரர்களின் பட்டியலைக் கூட முழுமைபடுத்த நாம் நீண்டகாலத்துக்கு முயற்சிக்க வேண்டிய நிலை தோன்றியிருக்கிறது. ஆனாலும், இந்த மாவீரர்களின் பதிவுகள் பௌதிக ரீதியாக இல்லாவிட்டாலும், தமிழ் மக்களி;ன் மனங்களில் இருக்கவே செய்கின்றன.

துயிலுமில்லங்களையும், நினைவாலயங்களையும் அழிப்பதன் மூலம் மாவீரர்களின் நினைவுகளை அவர்களின் சுவடுகளை இல்லாதொழித்து விடலாம் என்று சிங்களப் படை கற்பனையில் மிதக்கிறது..

ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

மண்ணுக்காக தமது இன்னுயிர்களை இழந்த மாவீரர்கள் எவருமே விண்ணில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் எம்முடனேயே வாழ்ந்து – எமக்காகவே மரணித்தவர்கள். இந்த நினைப்புத் தான் ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.

* இப்படியிருக்கும் போது மாவீரர்களின் நினைப்பை அவர்களின் மனங்களில் இருந்து துடைத்தழிப்பதற்கு எத்தனை ராஜபக்ஸக்கள் – எத்தனை பொன்சேகாக்கள் வந்தாலும் முடியாது. மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரஞ்சீவிகள் என்ற வார்த்தை உயிர்த்துடிப்பு மிக்கது. ஒவ்வொரு மாவீரரின் வாழ்வுக்கும் தியாகத்துக்கும் பின்னால் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பதிவுகளாக்கப்பட வேண்டும். இதற்கான முயற்களில் ஒட்டு மொத்த தமிழினமும் இறங்க வேண்டும். அப்போது தான் எமது வரலாற்றையே புரட்டிப் போடும் முயற்சியில் இறங்கியுள்ள சிங்கள தேசத்துக்குச் சாட்டையடி கொடுக்க முடியும்.

விடுதலைப் போரில் ஏற்பட்ட பின்னடைவு தமிழரின் உரிமைக்கான போரின் முடிவாகாது.

* அப்படி முடிவு கட்டப்படுமாயின் அது முப்பதாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களுக்கு நாம் செய்யும் துரோகம்.

மறைந்து போன மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தத் தவறுவது அதைவிடத் துரோகம்.

வரலாறு தான் எமக்கு வழிகாட்டியாக நிற்கப் போகிறது.

கடந்த முப்பதாண்டு வரலாறும் எமக்குத் தந்துள்ள பாடங்கள் அதிகம். முப்பதாயிரம் மாவீரர்களும் தீபங்களாக எரிந்து எமக்கு ஒளிகொடுக்கிறார்கள். அந்த ஒளியின் வழியே நடந்து செல்வதற்கு இந்தத் திருநாள் உந்துசக்தியாக அமையும்



source:tamilspy

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP