சமீபத்திய பதிவுகள்

பிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாற‌ன் க‌ண்டன‌ம்

>> Thursday, November 19, 2009


 
விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகு‌றி‌த்து இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ. நெடுமாற‌ன் இ‌ன்று ‌அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில், ''‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீது மு‌ற்‌றிலு‌ம் உ‌ண்மை‌யி‌ல்லாத கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்களை‌க் கூ‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌நீ‌ண்ட அ‌றி‌க்கை ஒ‌ன்‌றினை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர். 

1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். 

ஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா, 

பிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார். 

அந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்ற முறையில் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார். 

2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறியுள்ள பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார். 

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது. 

இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை. 

இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இத்திட்டத்தை பரிசீலனை செய்து ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை அளிக்க ஒப்புக்கொண்டனர். 

அதற்காக உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் பிறநாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்பின்னரே மாற்றுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமென பிரபாகரன் கருதினார். 

அதற்கிணங்க புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது. 

பிறகு டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறைப்பற்றி நேரில் கண்டறிந்தது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார். 

இந்த உண்மையை ரணில் அடியோடு மறைத்து கூறிய பொய்யையே கருணாநிதி திரும்பவும் கூறியுள்ளார். புலிகள் அளித்த மாற்றுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கள அரசு ஏற்க மறுத்த காரணத்தினால்தான் பேச்சுவார்த்தை முறிந்தது. 

பேச்சுவார்த்தை தொடங்கியபோதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக கூட்டாட்சி முறையை பரிசீலிக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விட்டுக்கொடுத்தல் ஆகும். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணமே தவிர பிரபாகரன் காரணம் அல்ல. 

2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன் நின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால் விடுதலைப்புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. 

அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப்போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது. பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஒஸ்லோ ஆகிய நான்கு இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

ஆனால் இரண்டாம் முறையாக டோக்கியாவில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைக்காதது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும். 

1989ஆம் ஆண்டில் ராசீவ் காந்தி கருணாநிதியையும் மாறனையும் அழைத்துப் பேசி பிரபாகரனுடன் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசி முடிவு காண வழிகாணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார். 

அதற்கிணங்க இவர் செய்தது என்ன? இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியதற்காக வைகோ அவர்கள் மீது அடாத பழியை இவர் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்யச் சதி நடைபெறுவதாகவும் புலம்பினார். இத்தகையவரா அப்பிரச்சினை தீருவதற்கு வழிகாணுபவர்? 

பிரதமராக வி.பி.சிங் இருக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப இந்திய அரசு நடந்துகொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது இவர் செய்தது என்ன? 

ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு அதைச் சீர்குலைத்தவர் கருணாநிதியே ஆவார். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர். 

ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார். 

இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார். 

உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. 

சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்த‌ப் பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். 

தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை. திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப்போனப் பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார். 

அவருடைய சொந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டையைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர். 


இலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளை அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன்வராமல் மறைப்பதற்கு துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. 

உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப் போவதுமில்லை''என்று தெரிவித்துள்ளார்.

source:tamilwin
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP