சமீபத்திய பதிவுகள்

'உள்நோக்கம்' சரியில்லை!

>> Tuesday, December 22, 2009

 

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இப்படி ஓர் அதிசயம் நடந்தது இல்லை.​ தனக்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ஆட்சிக்காலம் ​(2004-2009) ரயில்வே துறையின் பொற்காலம் அல்ல என்று நிரூபிக்க வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இப்போதைய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி.

லாலு பிரசாதின் ஆட்சிக்காலத்தில் ரயில்வே நிர்வாகம்,​​ அதிலும் குறிப்பாக நிதி நிர்வாகம் எப்படி இருந்தது என்று அறிய "ஆலோசகர்' ஒருவரை நியமித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.​ அறிக்கை தெரிவிக்கும் சில முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?

லாலு ஆட்சிக் காலத்தில் வருவாய்க்கணக்கில் மொத்தமாக 96,000 கோடி ரூபாய் உபரி கிடைத்ததாகக் கூறப்பட்டது தவறான தகவல்.​ உண்மையில் அந்தத் தொகை 39,500 கோடி ரூபாய்தானாம்.

புதிய வகை கணக்கீட்டு முறையால்தான் இந்த உபரி கிடைத்திருக்கிறது என்றும் அத்துடன் ஆறாவது நிதிக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப ரயில்வே ஊழியர்களுக்குத் தர வேண்டிய ஊதியம்,​​ நிலுவை போன்றவை கழித்துக் காட்டப்படாததாலும்தான் உபரி அதிகமாகவே கணக்கில் வந்தது என்கிறது அறிக்கை.

லாலு பிரசாத் காலத்தில் போக்குவரத்து வளர்ச்சி வீதம் சராசரிக்கும் குறைவுதான்.​ அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருள் உற்பத்திக்கு ​(ஜி.டி.பி.)​ ரயில்வே துறையின் பங்களிப்பு வெறும் 1.15 சதவீதமாகத்தான் இருந்தது.

சரக்குப் போக்குவரத்து இனத்தில் வருவாய் அதிகரித்தது;​ சரக்கு ரயில் பெட்டிகளின் கொள்திறன் கூட்டப்பட்டதால் வருவாயும் உயர்ந்தது.​ சரக்கு ரயில் போய் நிற்கும் கடைசி நிலையத்தில் அதிக நாள்கள் அதைத் தங்கவிடாமல் பெட்டிகளைக் காலி செய்து உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததாலும் வருவாய் உயர்ந்தது.​ பராமரிப்புப் பணிகளை அதிகப்படுத்தியதும் அதற்கு ஒரு காரணம்.

பயணிகள் ரயில் பயன்பாடும் அதிகரித்தது,​​ ஆனால் சர்வதேச செயல்திறனுக்கு இணையாக இந்தியாவில் இது உயரவில்லை.​ பயணிகள் போக்குவரத்துக்கு நாட்டில் இருந்த தேவைக்கு ஏற்பவும் இது இல்லை.​ இதனால் பல்வேறு நீண்டதூர ரயில்களில் எல்லா பருவங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தபடியே இருக்கிறது.

சரக்கு,​​ பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றே தொடர்ந்து பட்ஜெட்டின்போது கூறப்பட்டாலும் சரக்குக் கட்டணம் சராசரியாக 37% உயர்ந்திருக்கிறது.​ உணவுப் பண்டங்களைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் 44%-ம்,​​ உரங்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணம் 35%-ம் இதே காலத்தில் ஏறியிருக்கிறது.

அத்துடன் பயணிகள் ரயில் கட்டணத்தில் முதல் வகுப்பு பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது.​ தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.​ வெறும் எக்ஸ்பிரஸ்,​​ மெயில் ரயில்கள் சூப்பர்-ஃபாஸ்ட் ரயில்களாக அறிவிக்கப்பட்டு உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது.​ இதனால் ரயில்வே துறைக்கு வருவாய் உயர்ந்தது.

அதாவது கட்டணங்களை உயர்த்தவில்லை என்பது உண்மையல்ல,​​ மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன,​​ அந்தச் சுமை பயணிகள் மீது விழுந்தது.

லாலு பிரசாத் ஆட்சிக் காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கையும் ரயில்களில் நடைபெறும் குற்றச் செயல்கள் எண்ணிக்கையும் குறைந்தன என்பது உண்மை.​ அதேபோல ரயில்வே பணியாளர்களின் உற்பத்தித் திறனும் கணிசமாக அதிகரித்தது.

குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் திட்டமிட்ட செலவு கணிசமாக அதிகரித்து 135% என்ற உயர் அளவை எட்டியது.​ இது ஆரோக்கியமான ஒரு குறியீடாகும்.

இவ்வாறு முந்தைய ஆட்சியில் ரயில்வே துறையின் நன்மை தீமைகளைப் பட்டியலிட்டிருக்கிறது வெள்ளை அறிக்கை.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்ததும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான்.​ எனவே முந்தைய ஆட்சியில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது,​​ மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்,​​ முந்தைய ரயில்வே அமைச்சர் தவறான தகவலை அளித்திருக்கிறார் என்று மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.​ நாடாளுமன்றத்துக்கே தவறான தகவலைத் தந்தார் லாலு பிரசாத் என்றுகூட உரிமைப் பிரச்னை கொண்டுவரப்படலாம்.

நம் கேள்வி அதுவல்ல;​ சிறந்த நிர்வாக நிபுணர் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாராட்டுப் பெற்று,​​ வெளிநாட்டு நிர்வாகவியல் மாணவர்களுக்கெல்லாம் பாடம் நடத்திய அளவுக்கு உயர்ந்த லாலு பிரசாதை நிர்வாகம் தெரியாதவர் என்று வெள்ளை அறிக்கை மூலம் தோல் உரிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?​ இந்தத் தவறுகளுக்கு எல்லாம் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டாமா?​ ​

பிரதமர் மன்மோகன் சிங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் நாட்டுக்கும் மக்களுக்கும் இதற்கு ​ விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டவர்கள்.​ கூட்டணிக் கட்சிகள் மாறினாலும் ஆட்சியில் தொடர்வது என்னவோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதானே?​ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது அதுதானே?

இதேபோல பிற துறைகளுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?​ சேற்றை வாரி இறைப்பதற்கு வெள்ளை அறிக்கை என்று பெயர் போலிருக்கிறது..

source:dinamani

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP