சமீபத்திய பதிவுகள்

காலை வாரும் தமிழ் அமைப்புகளும் – தாயக தாகத்தில் ஒன்றுபட்ட தமிழரும்

>> Friday, December 11, 2009

 

  •  

தமிழர் தாயகத்தின் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் ஏறக்குறைய இந்த உலகப் பந்தை கடந்து சென்றுள்ளன. ஆயினும் மாவீரர் நாள் என்ற வரலாற்று பதிவு உருவான நாள் முதல் எனது அன்பார்ந்த தமிழீழ மக்களே என ஒலிக்கும் அந்த மெல்லிய குரல் இம்முறை நேரடியாக ஒலிக்காமை என்னவென்று விபரிக்கமுடியாத ஒரு உணர்ச்சியையும் கிளப்பியதையும் மறுக்கமுடியாது. இந்த நிலையில் தமது தேசியப் புதல்வர்களுக்கு வணக்கத்தை செலுத்த வந்த புலம்பெயர் தமிழ் மக்களின் தொகையும், உணர்ச்சியும் ஒரு தீர்மானமாக மாறி இருந்தமை இங்கு நோக்கத்தக்கது.

புலம் பெயர் நாடுகளில் தற்போது பேசப்படும் நாடுகடந்த அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம், மற்றும் மக்களவை போன்ற விடயங்களை விட கடந்த 27, 28, 29 ஆகிய நாட்களில் புலம் பெயர் மக்கள் மாவீரர் என்ற புனித வாக்குப் பெட்டிகளுக்கு முன்னால் நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் வலுவுள்ளது. கனடா முதல் ஒஸ்ரேலியா வரை பரந்து கிடக்கும் இந்த மக்கள் சக்தி ஏகமனதாக நிறைவேற்றிய மாவீரர் தீர்மானம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட ஆயிரம், ஆயிரம் மடங்கு வீரியமுள்ளது. அது மட்டுமல்ல இந்த முறை மாவீரர் தினத்திற்கு வழக்கத்திற்கு மாறாக இரண்டு மாவீரர்தின செய்திகள் வெளிவந்த கசப்பு போன்ற நிலமை இனிமேல் உருவாகக் கூடது என்ற ஒரு எழுதப்படாத தேசிய நலன் சார்ந்த தீர்மானத்தையும் மக்கள் கூட்டம் நிறைவேற்றியதையும் இங்கு சுட்டிக்காட்டப் படவேண்டும்.

விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி ராம் ஆகியோரின் ஊடாக வெளிவந்த இந்த மாவீரர்தின செய்திகள் குறித்து இனி ஆய்வு செய்வதற்கு பதிலாக புலம் பெயர் மக்களின் இந்த மாவீரர்தின தீர்மானத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டியது ஒரு தார்மீகக் கடமையாகிறது.

கடந்த 27 ஆம் திகதியன்று ஐரோப்பிய நகரங்கள் மற்றும் கனடாவின் ஆங்காங்கே ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் மெளனமாக நிறைவேற்றிய இந்த மாவீரர் தீர்மானம் அரசியல் அடிப்படையில், வரிவடிவில், கடதாசிகளில் பொறிக்கப்படும் வாசகங்களைக்கொண்ட தீர்மானத்தைவிட வலுவானது என்பது உறுதி. தேசிய நலனை முன்னிறுத்தி தமிழர் தாயகம் நடத்திய விடுதலைப் போராட்டம் பெரும் வேதனையான பல கட்டங்களைத்தாண்டி இன்று ஒரு உறைநிலைக்கு வந்தாலும் அந்த தேசிய நலனை கைவிடுவதற்கோ அல்லது அதனுடன் சமரசம் செய்துகொள்வதற்கோ தமிழினம் இன்னும் தயாரகவில்லை என்பதையும் இந்த நகர்வு எடுத்துக் காட்டியுள்ளதையும் நினைவில் நிறுத்தவேண்டும்.

கடந்த 27ஆம் திகதியன்று புகழிடமக்கள் சக்தி வெளிப்படுத்திய இந்த அபிலாசையை உள்வாங்கி அதற்கான செயற்திட்டத்தை வகுக்க வேண்டியதற்கான காலம் இன்னும் 12 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் நினைவுறுத்தவேண்டும். இதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டின் மாவீரர் நாளில் தமிழர் தாயகத்தின் சுதந்திர வாழ்வுக்காக என்ன செய்தீர்கள் என அசரீதியாக ஒலிக்கப்போகும் மாவீரர் குரலுக்கு ஒற்றுமையாக நின்று பதிலளிக்க வேண்டியதும் அனைத்து தமிழ் அரசியல் இயந்திரங்களின் பொறுப்பாக சுமத்தப்பட்டுள்ளது. வேடிக்கையாக குறிப்பிடப்படும் தமிழ் நண்டுக்கதை போல ஒருவர் காலை ஒருவர் வாரிவிடும் போக்கும் பனிப்போர் போன்ற உறைநிலை விரோதமும் இன்னமும் தொடர முனைவதும், மக்களின் இந்த மாவீரர் தீர்மானத்திற்கு முறனானது.

இலங்கைத்தீவில் தமிழ்த்தேசியத்தின் இருப்பு நிலைக்கு பெரும் ஆப்படிக்கும் வேலைகள் சிங்கள தேசத்தின் அரசதலைவர் தேர்தலை மும்முரப்படும் நிலையில் நான் பெரிது, எமது செயற்பாடு பெரிது, எமது தீர்மானம் பெரிது என செயற்படாமல் எம் தேசத்தின் இருப்பு பெரிது, அந்த மக்களின் சுதந்திர வாழ்வியல் பெரிது என செயற்படுவதையே இந்த மெளனமான மாவீரர் தீர்மானத்தினூடாக புலம் பெயர் மக்கள் வெளிப்படுத்தியமை உள்வாங்கப்படவும் வேண்டும். இந்த நிலையில் இந்த முறை எம்மை தொடர்ந்து சென்ற மாவீரர் தினம் என்பது வெறுமனவே தேசத்தை நினைவுறுத்தும் நாள் மட்டுமல்ல எம் தேசத்தை இனிவரும் காலத்தில் நிலையாக இருத்த வேண்டியதற்கான உறுத்தலையும் கொடுத்த ஒரு நாள் என்பது சந்தேகமில்லை.

anna-seatigerகடந்த 30 ஆண்டு காலமாக எமது தேசவிடுதலைக்காக போராடி வித்துக்களாய் மண்ணில் வீழ்ந்து விடுதலைக்கு உரம் சேர்த்து மண்ணினுள் உறங்கும் மாவீரர்களின் தியாகங்களை புரம்தள்ளியோ அல்லது தன்னலம் கருதாது தன் இனம் வாழவேண்டி விடுதலைப் போரை ஆரம்பித்து அதை முன்னின்று நடாத்தி அளப்பரிய சாதனைகளை நிலைநாட்டி தமிழர்களுக்கென்றோர் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்து நடமுறை அரசாட்சி செய்துவந்த முப்படை கண்ட முதல் தமிழன் தமிழீழத் தேசியத் தலைவர்  மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை புறம்தள்ளியோ, அன்றி ஒட்டுமொத்த தமிழர்களின் கனவான தமிழீழக் கோரிக்கையை புறம்தள்ளியோ செயற்படும் எந்த அமைப்புக்கோ, அவைகளின் செயற்திட்டங்களுக்கோ தமிழினம் இனி ஒருபோதும் ஆதரவு வழங்கத் தயாரில்லை என்பதையே இந்த மாவீரர் தீர்மானமும், அங்கு கூடிய மக்களின் தொகையும், அவர்களின் உணர்வுகளும் வெளிப்படுத்திநிற்கின்றன.

ஆகவே மக்களின் இந்த எழுச்சியும், உறுதியும் இன்னும் தாம் ஏமாறத்தயார் இல்லை என்பதையே எடுத்தியம்புகிறது. ஆதலால் அதற்கமைய மக்களி வெறுப்பை சம்பாதிக்காது, மக்களின் நேரங்களை வீணடிக்காது, மக்களின் வளங்களை வீண்விரயமாக்காது அவை அனைத்தையும் தகுந்த முறையில் தமிழ்த்தேசியத்தை கட்டியெழுப்புவதற்கு பயன் படுத்துவதையே தமிழர்கள் விரும்புகின்றனர் என்பது இந்த மாவீரர் தீர்மானத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவும் கொள்ளலாம்.

இதற்கமைய பல குழுக்களாக பிரிந்து ஆளுக்கொரு துருப்புச்சீட்டை கையில் எடுத்தவாறு தமிழரின் பிரதிநிகள் நாங்கள் என பேச்சளவில் சொல்லித்திரிவதை தவிர்த்து இதய சுத்தியுடன் தமிழர் தரப்பு பிரச்சனைகளை கையாண்டு மக்களின் விருப்பிற்கேற்ப எவை எவை எந்த எந்த நேரத்தில் செய்யப்பட வேண்டுமோ அவற்றை அந்தந்த நேரத்தில் செய்வது அவசியமாகிறது. இதைத் தவிர்த்து தொடர்ந்தும் தமது பதவி ஆசைகொண்டு சுயனலமாக தமது இருப்பையும், தமது அமைப்பையும் தக்கவைக்கும் நோக்கில் செயற்பட்டு தமிழ்த் தேசியத்தை புறந்தள்ளி நடப்பவர்கள் காலப்போக்கில் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்பட்டுச்செல்வார்கள் என்பதையே இன்றைய காலம் உணர்த்தி நிற்கிறது.

- தமிழ்மாறன்

source:nerudal
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP