சமீபத்திய பதிவுகள்

அரசு- பொன்சேகா மோதலால் வெளியே வரும் இரகசியங்கள்

>> Saturday, December 5, 2009

 

sarath_mahindaஜெனரல் சரத் பொன்சேகா தனக்குரிய பாதுகாப்பு வசதிகளை அரசாங்கம் குறைத்து விட்டதாகவும், அதனால் தனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறத்தில் அரசாங்கமோ இவர் சட்டவிரோதமான முறையில் அதிகளவு படையினரையும் வாகனங்களை வைத்திருப்பதாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு தரப்புகளும் சொல்லும் தகவல்களிலும் நிறையவே முரண்பாடுகள் இருப்பதையும், அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதையும் எளிதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது- இராணுவ நடைமுறைகளுக்கு மாறாக எதையெதையெல்லாம் செய்தாரோ- அவையெல்லாம் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பத் தொடங்கியிருக்கிறது. இப்படியான ஒரு நிலை வரும் என்று அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றி தனக்கேயுரியது என்று கூறிவந்த அவரது வாயை அடைக்க அரசாங்கம் பெரும் முயற்சி செய்து வருகிறது. சிறந்த அரசியல் தலைமைத்துவத்தினால் தான் அதைச் சாதிக்க முடிந்ததாவும், அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. அதுமட்டுமன்றி இராணுவத் தளபதியை வைத்தே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான பிரசாரங்களையும் முடுக்கி விட்டிருக்கிறது.


ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முறுகல்நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, முன்னர் இராணுவப் பேச்சாளர்களாக இருந்த மேஜர் ஜெனரல் தயா இரத்னாயக்க, மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க போன்றோரும்; ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். போர்முனையில் சிறப்பாகச் செயற்படும் அதிகாரிகளுக்கே பதவி உயர்வு என்று கூறி ஜெனரல ஜெனரல் சரத் பொன்சேகா சேவைமூப்பு வரிசையில் முன்னால் இருந்தவர்களைப் பின்தள்ளினார் அல்லது ஒதுக்கினார். அவரது அதே பாணியில் இப்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் செயற்பட ஆரம்பித்துள்ளார்.

இது ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் நெருக்கமாகச் செயற்பட்ட அதிகாரிகளுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் பணியாற்றிய 9 அதிகாரிகள் உள்ளிட்ட 47 இராணுவ உயரதிகாரிகள் இராணுவத் தளபதியினால் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது வழக்கமானதொன்று அல்ல. ஜெனரல் சரத் பொன்சேகா விவகாரத்தின் எதிரொலியாக இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வரணி 52வது டிவிசனின் பொதுக் கட்டளை அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். விசேட படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது- இராணுவத் தலைமையக திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் பணியாற்றிய- பயிற்சி மற்றும் தந்திரோபாய வகுப்பு பணிப்பாளர் பிரிகேடியர் மைத்ரி டயஸ் வன்னிப் படைத் தலைமையகத்துக்கும்- ஜெனரல் சரத் பொன்சேகாவின் இணைப்புச் செயலாளராக இருந்த பிரிகேடியர் விமல் டயஸ் முல்லைத்தீவு படைத் தலைமையக நிர்வாகப் பிரிவுக்கும்- நடவடிக்கைப் பணிப்பாளர் பிரிகேடியர் டம்பத் பெர்னான்டோ மாதுறு ஓயா இராணுவப் பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரியாகவும்- சிரேஷ்ட பாதுகாப்பு இணைப்பதிகாரி பிரிகேடியர் குலதுங்க திருகோணமலை இராணுவ இடைத்தங்கல் முகாமின் கட்டளை அதிகாரியாகவும்- பாதுகாப்பு இணைப்பாதிகாரியாக இருந்த பிரிகேடியர் ஜனக மகோற்றி 55வது டிவிசனின் இணைப்பதிகாரியாகவும், போர் உதவியாளராக இருந்த பிரிகேடியர் அத்துல சில்வா அம்பாறை இராணுவ தளபதியாகவும், சிரேஸ்ட பாதுகாப்பு இணைப்பதிகாரியாக இருந்த பிரிகேடியர் ஹெனடிகே புனானை 23-2 பிரிகேட் தளபதியாகவும், கேணல் கபில உடலுப்பொல ஒட்டுசுட்டான் 64வது டிவிசன் நிர்வாக அதிகாரியாகவும்- 59வது டிவிசன் தலைமை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் துமிந்த கெப்பிடிவலன அம்பாறை இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்க, தனது பாதுகாப்புக்காக 600 இராணுவத்தினரையும், 10 வாகனங்களைம், 2 குண்டு துளைக்காத வாகனங்களையும் வழங்குமாறு அரசாங்கத்துக்குக் கட்டளையிடுமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதிக்கு 2 ஆயிரம் படையினரும், பாதுகாப்பு செயலாளருக்கு 500 படையினரும், இராணுவத் தளபதிக்கு 600 படையினரும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு 120 படையினரும் பாதுகாப்பு வழங்குகின்றனர். ஆனால தனக்கு 72 படையினர் மட்டுமே பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது மனுவில் கூறியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா. தற்போது 62 படையினர் பாதுகாப்புக்காக அனுமதிக்கப்பட்டிருப்பினும் அவர்களில் இருபது பேர் மட்டுமே சுழற்சி முறையில் ஒரே நேரத்தில் கடமையில் இருக்க முடியும். இது தனது பாதுகாப்புக்கு போதுமானதல்ல என்பது அவரது நிலைப்பாடு.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பை செய்த தனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் 600 படையினரைப் பாதுகாப்புக்கு அனுமதிக்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு கட்டளையிடுமாறும் உயர்நீதிமன்றிடம் கோரியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா. அதேவேளை அரசாங்கமோ சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டதைவிட அதிகப்படியான படையினரையும் வாகனங்களையும் வைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளரைக் கொண்டே சொல்ல வைத்திருக்கிறது. பதவியில் இருந்து விலக முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்புத் தொடர்பான கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். அதில் கப்டன் அல்லது லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 21 கொமாண்டோ படையினர், சிங்க றெஜிமென்ட்டின் ஒரு மேஜர் மற்றும் இரு கப்டன் அல்லது லெப்டினன்ட் தர அதிகாரிகள் உள்ளிட்ட 53 படையினர், 10 சாரதிகள், 5 பெண் படையினர், ஒரு குண்டு துளைக்காத வாகனம், 3 லான்ட்றோவர்கள், ஒரு கனரக வாகனம். ஒரு வான், ஒரு 26 ஆசன பஸ் என்பன தேவை என்று பட்டியலிட்டிருந்தார். அத்துடன் 10 பிஸ்டல்கள், மினியுசி அல்லது எச்கேஎம்பி-5 ரகத் துப்பாக்கிள் 10, ரி56 துப்பாக்கிகள் 72, பத்து வோக்கி ரோக்கிகள் ஒரு தொடர்பாடல் தள இணைப்பு என்பனவும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார் அவர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் இருந்து விலகியதும் ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு அணி 25 படையினராகக் குறைக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அது 72 பேராக அதிகரிக்கப்பட்டது. இதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் 5 பெண் படையினர் தவிர்ந்த 103 படையினரை அவர் தற்போதும் பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்- இது சட்டவிரோமானது என்கிறது அரசாங்கம்

4 அதிகாரிகள் உள்ளிட்ட 28 கொமாண்டோக்கள், 3 அதிகாரிகள் உள்ளிட்ட 20 படையினர், 55 பாதுகாப்பு வீரர்கள், சமையற்காரர்கள், சாரதிகள், மருத்துவப் படைப்பிரிவைச் சேர்ந்த 7 படையினர், 3 கார்கள், 7 லான்ட் றோவர்கள், ஒரு டபிள்கப், ஒரு பஸ,; ஒரு அம்புலன்ஸ், 4 வான், 9 மோட்டார் சைக்கிள்கள் என்று 103 படையினரையும் அளவுக்கதிகமான வாகனங்;களையும் சரத் பொன்சேகா வைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் குற்றம்சாட்டியிருக்கிறார். அதேவேளை, முன்;னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு 120 படையினர் பாதுகாப்பு வழங்குவதாக சரத் பொன்சேகா கூறிய குற்றச்சாட்டை கடற்படையின் பேச்சாளர் கப்டன் சேனாரத் மறுத்துள்ளார். அடமிரல் வசந்த கரன்னகொடவுக்கு 2 அதிகாரிகள் உள்ளிட்ட 42 கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவதாகவும், குண்டுதுளைக்காத வாகனம் ஒன்று, டிபென்டர் வாகனங்கள் 4, மோட்டார் சைக்கிள்கள் 4, வான்கள் 4 என்பனவே வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இரு தரப்பில் இரந்தும வெளியாகி வருகின்றன.

இந்த மோதல்களால் இதுவரை வெளிவராமல் மறைந்திருந்த பல உண்மைகளும் வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. கிளிநொச்சிக்கு போவதற்கு சரத் பொன்சேகா அச்சமடைந்திருந்ததாகவும், ஜனாதிபதியே தைரியமூட்டி அவரை அழைத்துச் சென்றதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்த வெளியாகியுள்ள தகவல் சரத் பொன்சேகாவின் ஆளுமையைச் சிறுமைப்படுத்தும் நோக்குடையதாகவே தெரிகிறது. அத்துடன் தான் எப்போதும் தோல்வியடையாத ஒருவர் என்று கூறியிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காலத்தில் மூன்று தடவைகள் முகமாலையில் படையினர் படுதோல்வி கண்டு 600 படையினரை இழக்க நேரந்ததாகவும பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. இவையெல்லாம் போர்க்காலத்தில் நடந்த பல இரகசியங்கள் அம்பலப்படுத்துக்கு வரப் போகின்றன எனபதையே காட்டுகின்றன.

இராணுவத்தில் ஊழல்களை ஒழித்தது தானே என்று கூறிக் கொள்ளும் சரத் பொன்சேகாவே இப்போது அப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை முகம் கொடுக்கக் கூடிய நிலையும் தோன்றி வருகிறது. சரத் பொன்சேகாவின் இரர்ணுவத் தளபதியாக இருந்த போது அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் பதிவு செய்யப்பட்ட ஹிகோப் என்ற நிறுவனத்தின் ஊடாகப் பெருமளவு ஆயுத தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இந்த நிறுவனம் சரத் பொன்சேகாவின் மருமகனான திலுன திலகரட்ணவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இது பற்றிய பூரண விசாரணை ஒன்றுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் நடக்கப் போகின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இது இன்னொரு புதிய பிரச்சினையைக் கிளப்பலாம். இப்படியாக இருதரப்பும் மோதிக் கொள்;வது போர்க்களத்தல் மறைக்கபட்ட பல உண்மைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரக் கூடும். இந்த உண்மைகள் இரு தரப்புக்குமே நிச்சயம் சாதகமான விளைவுகளைக் கொடுக்காது.

நன்றி சுபத்ரா வீரகேசரி


source:tamilspy


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP