சமீபத்திய பதிவுகள்

ஆக்ஸ்போர்டில் உறங்கும் தமிழ் மாணவர்!

>> Tuesday, December 8, 2009

 

ஜே.எம்.சாலி

யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினார், பல மொழி கற்ற பாரதியார். அதற்கு முன்பே, அந்தச் சிறப்பை பறை சாற்றினார், ஓர் ஆங்கிலேயப் பாதிரியார். தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உலகறியச் செய்தார், இங்கிலாந்து நாட்டில் பிறந்த அவர். பல மொழி கற்றவர்களால் தான், ஒரு மொழியின் உயர்வையும், தனிச் சிறப்பையும் எடுத்துரைக்க முடியும். ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர், லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளும் கற்றவர். எனினும், தமிழ் மீது அவருக்கு தணியாத காதல். 66 ஆண்டு, தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்காக, வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ் இலக்கியங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்காக, சொந்த சேமிப்பு அனைத்தையும் செலவிட்டார்.

"தேமதுரத் தமிழோசை, உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று பாரதியார் பாடுவதற்கு முன்பே, அந்தப் பணியைச் செய்தார் அவர். யார் அவர் என்ற கேள்விக்கு விடை தேவையா? டாக்டர். ஜி.யூ.போப். எந்தத் தமிழனும் சொல்லாத ஒன்றைச் சொல்லி, அதை நிறைவேறச் செய்தவர் அவர். "நான் காலமானதும், தமிழ் மாணவனின் கல்லறை இது என்று எழுதி வைக்கப்பட வேண்டும்!' என்றார்.

"ஒரு தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்...' என்று, நினைவுச் சின்னத்தில் வரையப்பட வேண்டும் என்று விரும்பினார்.

ஆக்ஸ்போர்டில், அந்த நினைவுச் சின்னத்தைக் கண்டு நெகிழும் அரிய வாய்ப்பு கிடைத்தது. தென்னிந்தியாவின் எஸ்.எம்.ஜார்ஜ் உக்லோ போப், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தேவாலய கல்லூரியின் தமிழ், தெலுங்கு விரிவுரையாளர்.

பிறப்பு: ஏப்ரல் 24, 1820. மறைவு: பிப்ரவரி 11, 1908. வாழ்நாள் முழுவதும், அவர் ஆற்றிய கீழ்த்திசை இலக்கிய, தத்துவ ஆய்வுப் பணிகளின் நினைவாக, அவருடைய குடும்பத்தினரும், தென்னக தமிழ் நண்பர்களும் நாட்டி வைத்த நினைவுச் சின்னம்.

தமிழ் மாணவர் எனும் பெருமிதத்துடன், இறுதி வரை தொண்டாற்றி மறைந்த ஜி.யூ.போப்பின் கல்லறையை, ஆங்கில வாசகங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அமைதி தவழும் அந்த இடத்தில் மரியாதை செலுத்திய நேரத்தில், மாணவப் பருவத்திலும், அதற்குப் பிறகும், அவரைப் பற்றி படித்தறிந்தவை நினைவில் திரை விரித்தன.

தஞ்சையில் ஜி.யூ.போப்பை அறியாத தமிழ் மாணவர்கள் அன்று இருந்ததில்லை; அறியாத தலைமுறையினருக்கு, அவரைப் பற்றிய அறிமுகம் அவசியம் தான். ஜான் போப் - கேத்தரின் உக்லோ தம்பதியரின் இரண்டாம் மகனாக, 1820ல் பிறந்தார் ஜார்ஜ் உக்லோ போப். கிறிஸ்தவ சமயப் பணிபுரிய, 19 வயதில் சென்னைக்குப் பயணமானார். தமிழும், சமஸ்கிருதமும் கற்கத் துவங்கினார். இங்கிலாந்து திருச்சபையில் இணைந்து பாதிரியார் ஆன அவர், தஞ்சாவூரில், 1845ல் பணியைத் துவங்கினார்.

தமிழக மக்களிடம், சமய போதனை செய்வதற்கு, தமிழ்ப் பயிற்சி தேவை என்பதை உணர்ந்தார்.உரையாடுவதற்காக தமிழ் கற்கத் துவங்கியவர், அது ஒரு இலக்கியக் கடல் என்பதை உணர்ந்தார். தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைக்கத் துவங்கினார். தஞ்சையில், ஒரு தொடக்கப் பள்ளியை சீரமைத்தார். உயர்நிலைப் பள்ளியாக மேம்படுத்தி, அதன் முதல்வர் பொறுப்பையும் ஏற்றார். 1884ல், கல்லூரியாக அதை மாற்றி, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில், ஊட்டியில் ஆங்கிலப் பள்ளியையும், பெங்களூரூவில் ஒரு பள்ளியையும் நிறுவினார்.
ஜி.யூ.போப், தன் 62ம் வயதில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இங்கிலாந்துக்குத் திரும்பினார். மான்செஸ்டரிலும், ஆக்ஸ்போர்டிலும், கல்விப் பணி தொடர்ந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், 1890 வரை, தமிழ், தெலுங்கு மொழி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அந்த காலக் கட்டத்தில் தான், 1886ல், சிலருடன் சேர்ந்து, திருக்குறளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த நூலுக்கு அவர் வழங்கிய முன்னுரை, திருக்குறள் விளக்கவுரைகள், வியப்பில் ஆழ்த்துகின்றன.

அடுத்து, நாலடியார் ஆங்கில மொழிபெயர்ப்பை, 1893ல் வெளியிட்டார். திருவாசகத்துக்கு உருகியவர் போப். மாணிக்க வாசகர் மீது, அவருக்கு அதிக மதிப்பு. திருவாசக மொழி பெயர்ப்பும், ஆய்வும், அவருக்கு சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

ஜி.யூ.போப், அந்த ஆய்வை 1903ல் வெளியிட்ட போது, "ராயல் ஏஷியாடிக் சொசைட்டி' எனும் அரச ஆசியக் கழகம், அவருடைய கீழ்த்திசை மொழி அறிவாற்றலைப் பாராட்டி, தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது.

பிப்., 11, 1908ல், தன் 88வது வயதில் இறப்பெய்தினார் போப். ஆக்ஸ்போர்டு நகரில், அவர் உலா வந்த இடங்களைக் காணவும், அவரைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்டு அறியவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நகரின் தமிழ்ச் சங்கம், பல குறிப்புகளைத் தந்தது. அவரைப் போன்ற கடின உழைப்பாளியைக் காண்பது அரிது. முழு நேர போதனையுடன், தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், பிரிட்டிஷ் அரும்பொருளக நூலகத்திற்காக, தமிழ் இலக்கியங்களின் அட்டவணைப் பட்டியலைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். கல்வி நிதி திரட்டி உதவுவதற்காக, ஆக்ஸ்போர்டில் சொற் பொழிவுகளை நடத்தி வந்தார்.

போப்பின் பேத்தி டோரத்தி போப் அவரைப்பற்றி விவரிக்கிறார்...

கிறிஸ்துவத்தைச் சார்ந்த அவர், சைவம், வைணவம், புத்தம், சமணம், யூதம், இஸ்லாம் அனைத்தையும் ஆய்ந்து தெளிந்தவர். எண்பது வயதை எட்டிய பிறகு, திருவாசகத்தை மொழி பெயர்க்கத் துவங்கி, ஆய்வுக் கட்டுரை வரைந்தார்.

போப், தமிழ் ஆய்வுப் பணிகளைப் பார்த்த பிறகு, படித்தறிந்த பிறகு தமிழக அறிஞர்கள் புத்தெழுச்சி பெற்று, ஆய்வுப் பணிகளில் இறங்கினர் என்று திராவிட மொழி அறிஞர் கால்டுவெல் கூறுகிறார்.

சைவ சித்தாந்த ஆய்வில், போப் துறைபோனவர் என எழுதுகிறார் ஆங்கில அறிஞர் பிரேசர். ஆசிரியர், சமய போதகர், ஆய்வாளர் என பல துறை ஈடுபாடுடையவர் ஜி.யூ.போப். ஆங்கிலம் பேசும் உலகில், குறிப்பாக, ஐரோப்பாவில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும் பரப்பிய முன்னோடி அறிஞர் அவர்.


source:nakkeran-- 

www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP