சமீபத்திய பதிவுகள்

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் - 1

>> Sunday, January 17, 2010

 

 
ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்
 
 
முன்னுரை: என் பெயர் உமர் (புனைப் பெயர்), நான் ஈஸா குர்ஆன் என்ற பிளாக்கரில் இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை மறுப்புக்களை எழுதிக்கொண்டு வருகிறேன். 2008ம் ஆண்டிலிருந்து இதர நண்பர்களின் உதவி கொண்டு ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள்என்ற தளத்திலும் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. எழுத்து விவாதத்திற்கு இஸ்லாமியர்கள் விரும்பினால், அதற்கு தயார் என்றுச் சொல்லி, 2007ம் ஆண்டில் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பதித்தேன் (அவ்வுரையாடலை இங்கு காணலாம்).


கடந்த வாரம் (ஜனவரி 7ம் தேதி) அர்ஷத் ரஹ்மான் என்ற பெயரிலிருந்து ஒரு மெயில் வந்தது, அதாவது பீஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா? என்று கேள்வி கேட்டு வந்தது, மற்றும் ஆன்லைன் பீஜே தளத்திலும் இக்கேள்வியைக் கேட்டு பீஜே அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார்கள். 

முதலில் எனக்கு மெயில் அனுப்பிய சகோதரருக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பீஜே அவர்கள் எழுதியவைகளுக்கு பதிலை தருகிறேன். 

எனக்கு மெயில் அனுப்பிய அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு பதில்:
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

\\ஈசா குரான் உமர் அவர்களுக்கு! உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!//
 
உமர் எழுதியது:

அன்பான சகோதரர் அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு, உங்கள் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாவதாக.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளராக இருந்தால் முஸ்லிம்களுடன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும்.//
 
உமர் எழுதியது:

இதைத் தான் நானும் கேட்கிறேன், இஸ்லாம் மீதும் அதன் கொள்கைகள் மீதும் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது? 

நேரடி விவாதம் செய்தால் தான், ஒருவரின் நம்பிக்கை உண்மையானது என்று நிருபிக்கப்படும் என்பது சரியான வாதமல்ல, அதற்கு பதிலாக எழுத்து வடிவத்தில் எடுத்துவைக்கும் விவரங்கள் உண்மையானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் இருக்கின்றதா என்பதைத் தான் கவனிக்கவேண்டும், இதனை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது: 

//அதை விடுத்து எழுத்து விவாதத்துக்கு மட்டும் தான் நான் வருவேன் என்று நீங்கள் கூறுவது கோழைத்தனமானது.//
 
உமர் எழுதியது: 

நேரடி விவாதத்தை மட்டும் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம் என்றுச் சொல்வதும் கோழைத்தனம் தானே! உங்கள் மார்க்கம் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை தானே! வீரர்களுக்கு புல்லும் ஆயுதம் என்ற சொற்றடருக்கு இணங்க, நீங்கள் வீரர்களாக உங்களை கருதிக்கொண்டால், கிறிஸ்தவர்களுடன் எழுத்து விவாதத்தையும் செய்யலாமே!
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது: 

//மக்கள் மத்தியில் விவாதம் செய்வதுதான் அதிக மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல உதவும். எழுத்து வடிவ விவாதத்தின் மூலம் பாமர மக்களை சென்றடைய முடியாது.//
 
உமர் எழுதியது: 

உங்களின் இந்த வாதத்தை முழுவதுமாக நான் அங்கீகரிக்க முடியாது. நேரடி விவாதத்திற்கும் எழுத்து விவாதத்திற்கும் அதற்குரிய நன்மைகள் உண்டு. ஏனென்றால், ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்படும் விவாதத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்கள் தான் காணமுடியும், மற்றும் மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் காணவேண்டுமானால், அதன் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கவேண்டும், இதற்கு அதிகபடியான நேரம் எடுத்துக்கொள்ளும். அல்லது சீடிக்களை வாங்கி பார்க்கவேண்டும் இதே எழுத்து விவாதமென்றால், இணையத்தில் பதித்தால் அதனை ஒரு சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து படிக்கமுடியும். ஒரு நபர் ஒரு எழுத்துவிவாத கட்டுரையை பிரிண்ட் எடுத்து அனேகருக்கு தரலாம், அதனை படிக்க சாதாரண மக்களுக்கு கணினியோ, வீடியோ பிளேயரோ தேவையில்லை. பேருந்தில் பிரயாணம் செய்யும் போதும், வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்திலும் பகலின் வெளிச்சத்திலும் படித்துக்கொள்ளமுடியும். அதாவது, மனது இருந்தால் மார்க்கமுண்டு. இரண்டு வகையான விவாத முறையிலும் அதற்குரிய பயன்பாடுகள் உண்டு. எனவே, ஒருவகை தான் சரியானது என்பது ஏற்க முடியாது.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//கிருஸ்தவ மதமானது அதிக மக்கள் கடைபிடிக்கும் ஓன்று. எனவே எழுத்து விவாதம் என்பது இந்த உலகளாவிய சர்ச்சைக்கு பெரிய தீர்வாக அமையாது.//
 
உமர் எழுதியது: 

தீர்வு உங்கள் கையில், என் கையில் இல்லை. இந்தியாவில் எத்தனை சதவிகித கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் எத்தனை சதவிகித மக்களுக்கு தமிழ் தெரியும், இவர்களில் எத்தனை சதவிகித மக்கள் நேரடி விவாதத்தை பார்ப்பார்கள்? இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்? ஆக, அதிக மக்கள் தொகை இருப்பதால் நேரடி விவாதம் தான் சரியானது என்பதும் ஏற்பதற்கில்லை.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//பீ.ஜைனுலாபிதீன் அவர்கள் உங்களை போன்று ஒளிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு தன்னுடைய இணையதளத்தில் பகிரங்க விவாத அழைப்பு விடுத்துள்ளார் (www.onlinepj.com).//
 
 
உமர் எழுதியது: 

 
ஒளிந்துக்கொள்ளாமல் பகிரங்கமாக பொய்களையும், தங்கள் சொந்த யூகங்களையும் முன்வைத்து ஆதாரமில்லாமல் கட்டுரைகளை புத்தகங்களை எழுதும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களுக்கும் 2007ம் ஆண்டே, நானும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். விரும்புகிறவர்கள் என் கட்டுரைகளுக்கு பதில்களை எழுதலாம், எழுத்து விவாதத்தில் ஈடுபடலாம். பீஜே அவர்களின் விவாத அழைப்பிற்கு இக்கட்டுரையில் பதிலை நான் கீழே கொடுத்துள்ளேன்.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//உங்களுக்கு உண்மையில் உங்கள் கொள்கையில் உறுதி இருந்தால்,கிருஸ்தவத்தின் மீது எள் முனையளவாவது ஈடுபாடு இருந்தால்,சத்தியத்தை நீருபிக்க திராணி இருந்தால் இந்த விவாத அழைப்பை ஏற்று விவாதத்துக்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.பிரச்சினை வரும் என்றெல்லாம் போலி சாக்குகளை கூறி நழுவாதீர்கள். காவல்துறையின் பாதுகாப்பை வேண்டுமானாலும் நாடலாம்.\\
 
உமர் எழுதியது: 

அப்படியானால், எழுத்து விவாதத்திற்கு வரமாட்டீர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறார்கள் என்று மக்கள் கருதலாமா? இஸ்லாமிய அறிஞர்கள் நேரடி விவாதத்திற்கு வீரர்கள், எழுத்து விவாதத்திற்கு கோழைகள் என்று மக்கள் கருதிக்கொள்ளலாமா? 

எங்களிடம் உண்மை இருக்கிறது என்பதால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து பதில்களை கொடுத்துக்கொண்டு கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறோம். 

உங்களுக்கும் இஸ்லாம் மீது அணு அளவாவது நம்பிக்கை இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள், அப்படி வரவில்லையானாலும் சரி, நான் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. காவல் துறைப்பற்றி சொல்லிய விஷயம் பற்றி பீஜே அவர்களின் பதிலில் எழுதுவேன். 

முடிவாக, அர்ஷத் அவர்களே, எழுத்து விவாதம் என்றால் தான் என்னால் வரமுடியும், நேரடி விவாதம் என்றால் முடியாது. 

இணையத்தில் எழுதினால் என்ன, ஒளிந்துகொண்டு எழுதினால் என்ன? சொல்லப்படும் செய்தி உண்மையா? ஆதாரமுண்டா? என்று பார்க்கவேண்டுமே தவிர, இவன் (உமர்) நேரடி விவாதத்திற்கு வரமாட்டான் என்பதை தெரிந்துக்கொண்டே "இஸ்லாமிய அறிஞர்கள் விவாதத்திற்கு அழைத்தால், உமர் வரவில்லை" இதனால், இஸ்லாம் தான் உண்மையானது என்ற கிளிப்பிள்ளைப் பேச்சை சொல்வதை நிறுத்திக்கொண்டு, என் கட்டுரைகளுக்கு உங்களால் இயன்ற பதிலை எழுதி, என் கட்டுரையின் தொடுப்பையும் கொடுத்து (உங்களுக்கு பயமில்லையென்றால்) உங்கள் தளத்தில் பதித்தால், படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். இது என் தாழ்மையான வேண்டுகோள். இதைச் செய்வீர்களா?

 
 
இப்போது, ஆன்லைன் பீஜே தளத்தில் பீஜே அவர்களின் வரிகளுக்கு என் பதிலைத் தருகிறேன் 
(http://onlinepj.com/vimarsanangal/vivathakalam/).
 
பீஜே அவர்கள் எழுதியவை: 

//கிறித்தவர்களின் அழைப்பு 

இயேசு இறைமகனா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலவர் பி.ஜைனூல் ஆபிதீன் புத்தகத்திற்கு பதில் 1 தமிழ் உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஈசா குரான் உமர் எழுத்து வடிவ விவாததுக்கு பகிரங்க அழைப்பு 

என்று ஈஸா குரான் உமர் என்பவர் அழைப்பு விடுகிறார். இதற்கு என்ன பதில் என்று ஒரு சகோதரர் கேடிருந்தார். 

அதற்கு நாம் அளித்த பதில்

விவாதம் என்றால் நேருக்கு நேராக இருக்க வேண்டும். அது குறித்து ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்போது தான் யார் கூறுவது தவறு என்று மக்களுக்குத் தெரியும்.//
 
உமர் எழுதியது 

கட்டுரைகளில் அல்லது எழுத்துக்களில் பதில்களைச் சொன்னாலோ அல்லது கேள்விகளை கேட்டாலோ அது விவாதமாக இருக்காதா? ஒப்பந்தம் என்பது இன்ன இன்ன தலைப்புக்களில் எழுதலாம், கேள்விகளை கேட்கலாம் என்று கூட போட்டுக்கொள்ளலாமே. 

பீஜே அவர்களே! யார் சொல்வது தவறு என்று மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், சொல்லப்பட்ட விவரத்திற்கு ஆதாரமாக வசனங்களையோ, ஹதீஸ்களையோ கொடுத்தார்களா? என்று மக்கள் கவனித்தால் போதுமே! அதை விட்டுவிட்டு, நேரடி விவாதம் செய்தால் தான் யார் சொன்னது தவறு, சரி என்று மக்கள் தெரிந்துக் கொள்வார்கள் என்பது ஒரு வரட்டு வாதமாகும். உங்களைப் போல நிலையில் இருக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் இப்படிப்பட்டவைகளைச் சொல்வது உங்கள் தகுதிக்கு சரியானதல்ல என்பது என் கருத்து. 

உதாரணத்திற்கு, உங்களின் ஆன்லைன் பீஜே தளத்தில் வெறும் விவாதம் புரிந்த வீடியோக்களை மட்டுமா நீங்கள் பதிக்கிறீர்கள்? எழுத்து வடிவில் கட்டுரைகள் பதிக்கவில்லையா? எழுத்து வடியில் உங்கள் பதில்கள் இல்லையா? சொல்லப்பட்ட செய்திக்கு ஆதாரமாக விவரங்களை எழுத்துவடிவில் கொடுத்தாலே போதுமே...படிக்கும் வாசகர்கள் அவைகள் சரியானவையா என்பதை சோதித்துப் பார்த்து தெரிந்துக்கொள்வார்கள். அவ்வளவு ஏன், இன்னும் சில முக்கியமான விடியோ விவாதங்கள் அதிகபடியான மக்களை சென்று அடையவேண்டும் என்பதற்காக, மாதாந்திர பத்திரிக்கையில் எழுத்துவடிவில் பதிப்பதில்லையா? அவைகளை எழுத்துவடியில் மாற்றி கட்டுரைகளாக தளங்களில் பதிப்பதில்லையா? எனவே, நேரடி விவாதம் புரிந்தால் தான் மக்களுக்கு சத்தியம் சென்று அடையும் என்பது பொருந்தாத விஷயம். இவைகள் எழுத்து விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளக்கூடாது என்று பயப்படும் இஸ்லாமிய அறிஞர்களின் வார்த்தைகளாகும். (ஏன் ஒட்டுமொத்த இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் அனைவரும் பீஜே உட்பட எழுத்து விவாதத்திற்கு தயங்குகிறார்கள் என்பதை ஒருமுறை குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் தனக்கு புரியும் மொழியில் படிக்கும் சராசரி மனிதன் புரிந்துகொள்வான்).
 
பீஜே அவர்கள் எழுதியவை: 

மேலும் இயேசு இறை மகனா என்ற் தலைப்பில் நாம் எடுத்து வைக்கவுள்ள வாதங்கள் அனைத்தும் நூல் வடிவில் அவர்களிடம் உள்ளது. எனவே நாத்திகர்களுடன் நடந்தது போல், ஜெபமனி என்ற கிறித்தவ பாதிரியாருடன் நடந்தது போல் அவர்கள் விவாதத்துக்கு தயாரா என்று கேட்டு எழுதுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.
 
உமர் எழுதியது: 

எங்களிடம் இயேசு இறைமகனா என்ற உங்களின் புத்தகம் உள்ளது என்பதை தெரிந்து வைத்திருக்கும் நீங்கள், அப்புத்தகத்திற்கு நாங்கள் கொடுத்த ஒரு சில பதில் கட்டுரைகளை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அக்கட்டுரைகளுக்கு ஏதாவது பதிலை நீங்கள் (பீஜே அவர்கள்) கொடுத்துள்ளீர்களா? மட்டுமல்ல, இவ்வாண்டு முக்கியமாக உங்களின் ஒவ்வொரு கிறிஸ்தவ விமர்சனத்திற்கும் பதிலை தர நான் விரும்புகிறேன். 

நேரடி விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு பீஜே அவர்கள் தயார் என்றால் நானும் தயார்.
 
பீஜே அவர்கள் எழுதியவை: 

ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்று பொருந்தாக் காரணம் சொல்வார்களானால் அதனால் ஏற்படும் எந்த விளைவுக்கும் நான் பொறுப்பு என்று எழுதித் தருகிறேன், தேவைப்பட்டால் காவல் துறை பாதுகாப்பையும் பெறுவோம்.
 
உமர் எழுதியது: 

எழுத்து விவாதத்தில் ஈடுபட்டால், இஸ்லாமியர்களுக்கு என்ன அசம்பாவிதம் நடந்துவிடும்? ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது? 

காவல் துறையின் பாதுகாப்பை நாடலாம் என்று நீங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையானது. நான் இங்கு காவல் துறையை அவமதிக்கவில்லை, ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறேன். இந்தியாவில் இலட்சக்கணக்கில் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள், கோடிக்கணக்கான பணம் இராணுவத்திற்கும், புலனாய்வு துறைக்கும் செலவிடப்படுகிறது. இப்படி இருந்தும், இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைவரிசை தொடர்ந்து காட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது, மும்பை தாக்குதல், இதற்கு ஒரு உதாரணம். மதபாகுபாடு இன்றி திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு என்று அனைத்து வித சமுதாய கேடுகளும் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கின்றன. பாதுகாப்பு துறையில் நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருந்த அமெரிக்காவிலேயே அனேக இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடந்துள்ளன. நான் சொல்ல வருவது என்னவென்றால், கோடிக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில், பாதுகாவலர்கள் என்ன தான் பாதுகாப்பு அளித்தாலும் எல்லாருக்கும், எல்லா நேரத்திலும் பாதுகாப்பு அளிக்கமுடியுமா? அது முடியாத காரியம். ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் கார்ட்டூன் வரைந்தான் என்பதற்காக, வேறு நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம் சம்மந்தமே இல்லாத மக்களை கொல்லும் கொடூரம் நடந்துக்கொண்டு இருக்கும் போது, பாதுகாப்பு பற்றி அதுவும் இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என்பது பற்றி பேசுவது வேடிக்கையானது. எப்போது தனி மனிதன் குற்றம் இழைக்கமாட்டேன் என்று முடிவு எடுத்து வாழ்வானோ அன்று தான் குற்றங்கள் முழுவதுமாக குறையுமே தவிர, இந்தியா போன்ற ஜனத்தொகை உள்ள நாட்டில் பாதுகாலவர்களினால் 100% குற்றங்களை குறைக்கமுடியாது. 

நான் பீஜே அவர்களிடம் சொல்ல விரும்புவது, நீங்கள் எழுத்துவிவாதத்திற்கு தயார் என்றால், நானும் தயார்.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

பொருளாதாரச் செலவு குறித்து அவர்களுக்குத் தயக்கம் என்றால் அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி பகிரங்க விவாதத்துக்கு தொடர்ந்து அழைப்பு கொடுங்கள்.
 
உமர் எழுதியது

பொருளாதார செலவு ஒரு பிரச்சனை இல்லை.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்.
 
உமர் எழுதியது: 

2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது. 

நாங்கள் ஒரு குழுவாக ஒரு சில நண்பர்கள் சேர்ந்து இந்த மொழியாக்க வேலையைச் செய்கிறோம். நாங்கள் ஒரு சங்கத்தை ஸ்தாபனத்தை அமைத்து செயல்படவில்லை. 

தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவிட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது. 

எழுத்துவிவாதத்திற்கு வந்தால், நாங்கள் ஒப்புக்கொள்வோம். நேரடி விவாதத்திற்கு மட்டும் வரமுடியாது. இது தான் எங்கள் பதில்.
 
 
நான் நேரடி விவாதத்திற்கு வர மறுத்துவிட்டேன், இனி பீஜே அவர்கள் ஈஸா குர்ஆன் கட்டுரைகள் பற்றி என்ன முடிவு எடுக்கப்போகிறீரக்ள்? 

பீஜே அவர்களே, எழுத்து மூலமாகவும் இஸ்லாம் பதிலைத் தரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், இதுவரை நாங்கள் (ஈஸா குர்ஆன், மற்றும் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்) பதித்த தமிழ் கட்டுரைகளை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு, அவற்றிற்கு பதிலைக் கொடுப்பீர்களானால், தமிழ் பேசும் மக்கள் இஸ்லாம் பற்றி ஒரு நல்ல முடிவிற்கு வருவார்கள். இப்படி செய்யாமல், வெறும் சொல்லிய விஷயத்தை கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டு இருந்தால், "இஸ்லாமியர்கள் மேடையில் தான் பேசுவார்கள், எழுத்துக்களில் இவர்களால் பதிலைத் தரமுடியவில்லை" என்று மக்கள் நினைத்துக்கொள்வார்கள். 

நேரடி விவாதத்திற்கு ஒப்புக்கொள்பவர்களிடம் நேரடியாக விவாதம் புரியுங்கள், எழுத்து மூலம் விவாதம் புரிபவர்களிடம் எழுத்து மூலமாக விவாதம் புரியுங்கள். 

நீங்கள் எங்கள் தள தொடுப்புக்களை கொடுப்பீர்களோ இல்லையோ, நாங்கள் மட்டும் உங்கள் விமர்சனங்களை எழுதி அதற்கு பதிலை கொடுத்துக்கொண்டே இருப்போம். 

இன்னும் அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பீஜே அவர்களின் விவாதத்திற்கு வரமுடியுமா என்று கேட்டு மெயில்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் "ரிமைன்டர் 1" என்று ரிமைன்டரும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார், அவரிடம் நான் கேட்கிறேன், 2007ம் ஆண்டிலிருந்து எத்தனை ரிமைன்டர்களை நீங்கள் பீஜே அவர்களுக்கு அனுப்பியிருக்கிறீரக்ள்? எழுத்துவிவாதத்திற்கு ஏன் ஒப்புக்கொள்ளும் படி அவருக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறீர்களா? இனியாவது கொடுங்கள், எழுத்துவிவாதத்திற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்று அவருக்கு சொல்லுங்கள்.
 
 
Umar



--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Unknown January 18, 2010 at 3:26 AM  

Those how r believe Allah they are only the Muslim. If u believe Jesus why u r not using the word cristan here Muslim means only we flow with our Nabi (sal) Only not jesus ok

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP