சமீபத்திய பதிவுகள்

"தம்பி உயிரோடு நலமாக இருக்கிறான்: என்னை வந்து பார்ப்பதாக சொல்லிச்சென்றான்"

>> Sunday, January 17, 2010

 

"தம்பி உயிரோட நலமாக இருக்கிறான். அவன் என்னை சந்திப்பதாக சொல்லியே சென்றான்" - என்று தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா தெரிவித்துள்ளார் என விடுதலை சிறுத்தைகள் அணி தலைவர் தொல் திருமாவளவன் விகடனுக்குத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் சஞ்சிகைக்கு திருமாவளவன் வழங்கியுள்ள விரிவான செவ்வி வருமாறு:-



தமிழகம் திரும்பியதும் கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினிக்கு ஒரு நண்பர் மூலம் தகவல் சொல்லிவிட்டு, விசா எடுப்பதற்கான வேலைகளில் தீவிரமானேன். அதற்குள்ளே என் கனவுத் தாழி உடைந்துபோய் விட்டது.

கடந்த ஆறாம் தேதி இரவு அய்யா வேலுப்பிள்ளை இறந்ததாகச் செய்தி வந்தது. ஒரு மாவீரனின் தந்தையை மீட்கவும் காப்பாற்றவும் முடியாத கையறு நிலையில் துடித்தேன். அவசரகதியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கல நாதன், ஆகியோரிடம் பேசி, 'வேலுப்பிள்ளையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டும். இலங்கை அரசிடம் பேசி ஏ-9 பாதையால் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்' எனச் சொன்னேன். ஒருவழியாக அனுமதி கிடைக்க, எட்டாம் தேதி இலங்கைக்கு பயணமானேன். வேலுப்பிள்ளைக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு இட்டிப்பான மன பாரத்தோடு திரும்பி இருக்கிறேன்!'' என்ற திருமாவளவனிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்.

''இலங்கை போய் இறங்கியவுடன் முதலில் எங்கு போனீர்கள்?''


''எம்.பி-யான செல்வம் அடைக்கலநாதன்தான் என்னை அழைக்க வந்திருந்தார். கொழும்பில் இருந்து வவுனியா 280 கிலோமீட்டர் தூரம். ஒன்பதாம் தேதி விடியற்காலை மூன்று மணிக்கு செல்வம் அடைக்கலநாதன், அரியனேந்திரன், தோமஸ் வில்லியம் ஆகிய எம்.பி-க்களோடு நானும் தமிழக வழக்கறிஞர்களான சந்திரசேகர், பிரபு ஆகியோரும் புறப்பட்டோம். வவுனியாவில் உள்ள 'ஸ்வர்கா' என்ற ஹோட்டலில் வேலுப்பிள்ளை அவர்களின் உடலை ராணுவப் பாதுகாப்போடு வைத்திருந்தார்கள். அங்கே பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவும் இருந்தார். முதலில் அவரைத்தான் பார்த்தோம். அங்கு வரும் வரை பார்வதி அம்மாவுக்கு தன் கணவர் இறந்தது தெரியவில்லை. முதுமையும் வேதனையும் அவரை ரொம்பவே சுகவீனமாக்கி இருந்தது.

அந்தத் தாயைப் பார்த்ததுமே என் கண்கள் பொங்கி நிறைந்துவிட்டன. அவர்களை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். ''ஐயா...'' என வேலுப்பிள்ளை குறித்து நான் வாய் திறந்ததுமே, ''அவர் சாமி கும்பிடப் போயிருக்கார், அல்லவா... சீக்கிரமே வந்திடுவார்...'' எனச் சொன்னார். அவரிடம் அந்த நிமிடம் வரை அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

''அம்மா... நீங்கள் என்னோடு இந்தியாவுக்கு வந்து விடுகிறீர்களா?'' எனக் கேட்டேன். ''ஐயா வந்ததும் அவரை கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...'' என்றார். கணவர் மீது அவர் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து என் கண்கள் குளமாகிவிட்டது!''

''வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறதே..?''

''தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கும் வழக்கமான அகதிகள் முகாம்களில் மேதகு பிரபாகரனின் பெற்றோர் தங்க வைக்கப்படவில்லை. ராணுவ முகாமான பனாகொடா முகாமில்தான் அய்யா வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிலநாட்களாகவே அய்யா வேலுப்பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையாம். உயர் ரத்த அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், உள்ளுக்குள்ளேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு வரை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் அருகருகேதான் வைக்கப்பட்டு இருந்தார்களாம். வேலுப்பிள்ளைக்கு சிகிச்சை அளிப்பதாகச் சொல்லி அவரை மட்டும் பிரித்து வேறெங்கேயோ தங்க வைத்திருக்கிறது ராணுவம்.

கடந்த ஆறாம் தேதி இரவே வேலுப்பிள்ளை இறந்து விட்டாராம். அந்தத் தகவலை ராணுவத் தரப்பு அடுத்த நாள் காலையில்தான் வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் சகோதரியான விநோதினியின் வேண்டுகோளை ஏற்று, வேலுப்பிள்ளையின் உடலை சிவாஜிலிங்கம் எம்.பி-யிடம் ஒப்படைக்க ராணுவம் முடிவெடுத்தது.

வேலுப்பிள்ளை இறந்த தகவல் பார்வதி அம்மாளிடம் சொல்லப்பட, அவர் அதை நம்பாமல் அழத் தொடங்கிவிட்டார். ''எங்க ஐயா செத்திருக்க மாட்டார்...'' எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். உடல் நிலை சரியில்லாததால், அவர் இறந்து விட்டதாக ராணுவத்தினர் பார்வதி அம்மாவிடம் சொல்லி இருக்கின்றனர். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராணுவத்தினர் ஏதோ செய்து விட்டதாகவே அவர் அஞ்சுவதாகத் தெரிகிறது. அய்யா வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டிருப்பாரோ என்கிற சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனால், அதை எப்படி உறுதிப்படுத்த முடியும்? முறையாக பிரேதப் பரிசோதனை செய்து, பாடம் பண்ணி, முகச் சவரம் செய்து, தலை வாரி, புது உடை உடுத்தி, வெண் பட்டுத் துணியால் போர்த்தி அவரை சவப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். அவருடைய நெற்றியையும் காலடிகளையும் தொட்டு வணங்கினேன்!''

''இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தன? அப்போது அங்கிருந்த தமிழ் மக்களின் மனநிலை எப்படி இருந்தது?''


''வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் என்னும் பகுதியில் புலேந்திரன், குமரப்பா ஆகிய 12 பேருக்கான நினைவிட மைதானம் உள்ளது. அய்யா வேலுப்பிள்ளையின் உடல் அங்குதான் கொண்டு வரப்பட்டது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த சதுக்கத்தில், வேலுப்பிள்ளையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்கள் ஏதோவொரு பயத்தோடு தூரத்தில் நின்றே வேலுப்பிள்ளையின் உடலை பார்த்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி-க்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஸ்ரீகாந்தா, வினோ உள்ளிட்டோர் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சைவ மரபுப்படி அய்யா வேலுப்பிள்ளைக்கு அனைத்து சடங்குகளும் நடக்கத் தொடங்கின. அவருடைய உடம்பு பாடம் செய்யப்பட்டிருந்ததால், அதன் மேல் தண்ணீர் பட்டுவிடாமல் அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வாழைப்பழம், தயிர், வெல்லம், பால் என பலவித அபிஷேகங்களும் அவரது உடலுக்கு அருகே செய்யப்பட்டது. ஒருபுறம் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது.

வேலுப்பிள்ளையின் மைத்துனர்களில் ஒருவரான (வேலுப்பிள்ளையின் தாத்தா வழி உறவான) ராமசாமி என்பவர்தான் இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார்.

ராணுவக் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும் வேலுப்பிள்ளையின் உடலை நோக்கி கண்ணீரோடு வந்த ஒரு தாய், ''மாவீரனை பெத்துக் கொடுத்த ராசாவே... என்னிக்கு இருந்தாலும் நாம நாடு அடையாம விடமாட்டோம்யா... நீங்கள் நிம்மதியாப் போய் வாருங்கோ!'' எனக் கதறினார். கொந்தளிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களாக தமிழ் இளைஞர்கள் பலரும் இறுக்கத்தோடு அங்கே நின்று கொண்டிருந்தார்கள். சில இளைஞர்கள் துக்கத்தை வெளிக்காட்டும் விதமாக வாண வெடிகளைக் கொளுத்தினார்கள். ஒன்பதாம் தேதி காலையில் நிறைய இளைஞர்கள் தைரியமாக வேலுப்பிள்ளையின் உடலைப் பார்வையிட வந்தார்கள். அவர்கள் உணர்ச்சி வேகத்தோடு, ''கண்டிப்பாக தமிழீழம் மலரும். தலைவரின் கனவு நனவாகும்!'' என சத்தமிட்டார்கள். காலை 10.40 மணிக்கு அந்த சதுக்கத்திலிருந்து, மூத்த மகள் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு வேலுப்பிள்ளையின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

பார்வதி அம்மாள் அடக்க முடியாத வேதனையில் கணவரின் சடலத்துக்கு அருகே அமர்ந்து குமுறிக் குமுறி அழுது கொண்டேயிருந்தார். 'என்னைய விட்டுட்டு எங்கேயும் போக மாட்டீங்களே... ஏன்யா எங்கிட்ட சொல்லாம போனீங்க..?' என அங்கே இருந்த நான்கு மணி நேரமும் அரற்றியபடியே இருந்தார். அவரைத் தேற்றுவதற்குள் தெம்பற்றுப் போய் நானும் குலுங்கத் தொடங்கிவிட்டேன்!''

''பிரபாகரனின் தாயாரோடு நீங்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தீர்களாமே... தன் மகன் பிரபாகரன் குறித்து அவர் ஏதாவது சொன்னாரா?''


''தலைவர் பிரபாகரன் குறித்து நான் கேட்டபோது, 'அவர் பத்திரமா இருக்கார்...' என்றே பார்வதி அம்மா திரும்பத் திரும்ப சொன்னார். போர்க் காலங்களில் பார்வதி அம்மா எங்கிருந்தார், யார் யாரெல்லாம் அவரை சந்தித்தனர் என்பது உள்ளிட்ட தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். வயதான நிலையிலும் மிகுந்த கவனத்தோடு பார்த்துப் பார்த்துப் பேசினார். 'தலைவர் பிரபாகரன் உங்களைப் பார்த்தாரா' என நான் கேட்டபோது, 'தம்பி உயிரோடு நலமாக இருக்கிறார். என்னை கனடாவில் வந்து சந்திப்பதாகச் சொல்லிச் சென்றார்' என்றார். அவருடைய உறவினர்கள் சிலருடைய பெயரைச் சொல்லி நான் சில விஷயங்கள் கேட்டபோதும், அவர்களின் பெயர்களை மிகத் திருத்தமாக, நல்ல சுவாதீனமாகவே சொன்னார். தற்போது சிவாஜிலிங்கத்தின் கவனிப்பில் இருக்கும் பார்வதி அம்மாவை கனடாவுக்கோ இந்தியாவுக்கோ அழைத்துக்கொள்ள அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்!'' என்ற திருமாவளவன், அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.



source:athirvu

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP