சமீபத்திய பதிவுகள்

தமிழ்தேசிய இனத்தின் இறைமை

>> Monday, January 18, 2010

 

தீவின் எஞ்சிய பிரதேசங்களைப் போன்றே தமிழ்ப் பிரதேசங்களும் போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தருக்கும் பின்னர் ஆங்கிலேயருக்கும் கைமாறின. 1948 பெப்ருவரி நான்காந் தேதியன்று இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

1802இல் இலங்கைத் தீவு அவ்வாண்டின் ஏமியன்ஸ் ஒப்பந்தத்தின்மூலம் ஆங்கில முடியரசிடம் ஒப்புவிக்கப்பட்டது. ஏமியன்ஸ் ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்ட அறோசிமித்தின் இலங்கைத் தேசப்படம் இத்தீவை இரு வேறு நாடுகளாக – வடக்கையும் கிழக்கையும் கொண்ட ஒரு தமிழ் நாடாகவும், தென்மேற்கையும் மத்திய பகுதிகளையும் கொண்ட ஒரு சிங்கள நாடாகவும் – காட்டுகின்றது. அடிக்கடி எடுத்துக்காட்டப்படும் ஒரு குறிப்பேட்டில் சேர் ஹியு கிளெக்ஹோர்ன் 1799 யூனில் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துக்கு எழுதியதாவது மிகப் புராதன காலந்தொட்டு இரு வேறு தேசிய இனங்கள் இத்தீவின் உடைமையைத் தமக்கிடையில் பிரித்துக்கொண்டுள்ளன.

முதலாவது அதன் தென்மேற்குப் பகுதிகளில் நாட்டின் உட்புறத்தில் குடியிருக்கின்ற சிங்களவர், இரண்டாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உடைமையாகக் கொண்டுள்ள மலபார்கள் (அதாவது தமிழர்). இவ்விரு தேசிய இனங்களும் அவற்றின் சமயம், மொழி, பழக்கவழக்கங்கள் என்பவற்றில் முழுமையாக வேறுபடுகின்றன. (தமிழ்த் தகவல் நிலையத்திலிருந்து எடுத்துக்காட்டு 1997:2).மேலும், புகழ்பெற்ற பிரதம நீதியரசர் சேர் அலெக்சான்டர் ஜோன்ஸ்ரன் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் றோயல் ஏசியாடிக் சொசைட்டிக்கு 1827 யூலை 1ஆந் தேதியன்று எழுதியதாவது ஆகக்கூடிய கமத்தொழில் சுபிட்சம் நிலவிய காலப்பகுதியில் இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதிலும் வசித்த மக்கள் இனம் அதேகாலப்பகுதியில் இந்தியாவின் தென்குடாநாட்டில் வசித்த மக்கள் இனத்தைப் போன்று அதே மொழியைப் பேசினரென்பதையும், அதே எழுத்து வரிவடிவத்தைப் பயன்படுத்தினரென்பதையும், அதே தோற்றுமூலத்தையும் சமயத்தையும் சாதிகளையும் சட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்டிருந்தனரென்பதையும் அவர்களிடமுள்ள மற்றும் எனது கைவசமுள்ள வெவ்வேறு வரலாறுகள் எல்லாவற்றிலிருந்தும் நிச்சயமாக முடிவுசெய்யலாமென்று நான் நினைக்கின்றேன். (ஈழத்தின் இறைமை பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து எடுத்துக்காட்டு, www.tamilnationorg@history06a=d;2000.

இலங்கைத் தீவு இரு தனிவேறான பிராந்தியங்களைக் கொண்டிருந்ததென்பதற்கு 1799இன் கிளெக்ஹோர்ன் குறிப்பேட்டையும் 1802இன் அறோசிமித் தேசப்படத்தையும் அதிகாரபூர்வமான சான்றுகளாகக் கொள்ளலாம். பிரதம நீதியரசர் சேர் அலெக்சான்டர் ஜோன்ஸ்ரனின் கடிதம் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது. 1815இல் கண்டி இராச்சியமும் 1818இல் வன்னிப் பிரதானிகளும் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் மட்டும்தான் ஆங்கிலேய அரசாங்கம் முழுத் தீவையும் ஒருங்கிணைத்ததென்பதை நினைவில் கொள்ளவேண்டியது முக்கியமானதாகும். அவர்கள் அதனை ஒரு புவியியல் அலகாக உணர்ந்தனரேயன்றி அரசியல் அல்லது தேசிய அரசுகளாக அல்ல. ஆங்கிலேய அரசாங்கம் 1833இல் நிருவாகத்தை ஒருங்கிணைத்தபோதிலும், அது அறிமுகப்படுத்திய கச்சேரி முறைமையுடன் முன்னர் நடைமுறையிலிருந்த வெவ்வேறு சுதேச நிருவாகக் கட்டமைப்புக்களையும் அது ஒருங்கிணைத்தது. அவர்கள் கடந்த காலத்தை முறித்துக் கொள்ள விரும்பவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. உள்நாட்டு மற்றும் மரபுவழக்கான சட்டங்கள் தொடர்ந்தும் நடப்பிலிருந்தன.

ஒல்லாந்தரால் கடலோரப் பிரதேசங்களில் அறிமுகப் படுத்தப்பட்டிருந்த ரோமன் டச்சுச் சட்டம் (RDL), நாட்டின் பொதுச் சட்டமாகத் தொடர்ந்தது. முன்னைய சட்ட முறைமை முழுத் தீவையும் அளாவியதாக இருக்கமுடியவில்லை. அவ்வாறே ஆங்கிலக் கல்வி கற்ற புதிய உயர்குடி வகுப்பினரால் இத்தீவின் இரு மக்களுக்குமிடையிலான வேறுபாடுகளைக் களைந்து அவர்களை ஒரே தேசமாகக் கொண்டுவரவும் முடியவில்லை. இது சாத்தியமற்ற ஒரு பொறுப்பாகத் தோன்றுகிறது. டொனமூர் மற்றும் சோல்பரி ஆணைக்குழுக்கள் முன்னிலையிலான நடவடிக்கைகள் தனியார் இலங்கைத் தேசமொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளின் தோல்விக்குச் சிறந்த சான்று பகர்கின்றன. எனவே 1948இல் ஆங்கிலேயர் வெளியேறியதைத் தொடர்ந்து கைக்கொள்ளப்பட்ட அடாத அரசியலமைப்பின் பயனால் இத்தீவிலுள்ள தமிழர் சிங்களவரின் தயவில் விடப்பட்டனரென்பதைச் சொல்லத் தேவையில்லை.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றிய கடைசியான ரோயல் கமிசனுக்குத் தலைமைதாங்கிய சோல்பரி பிரபு, இலங்கையின் விவகாரங்கள் தொடர்பில் பின்னர் தாம் பெற்றுக்கொண்ட அனுபவம் முன்னர் இருந்திருக்குமாயின் தமது விதப்புரைகள் வேறுபட்டிருக்குமென்று மனம் வருந்திக் கூறியதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாகும்). கச்சேரி முறைமையினுள் வெவ்வேறு பிரதேசங்களின் சுதேச நிருவாக முறைமையை ஒருங்கிணைத்தலைத் தவிர வெவ்வேறு இனக் குழுக்களுக்கிடையில் நடைமுறையிலிருந்த அதிகாரச் சமநிலையைக் குழப்பாதிருத்தலிலும் கவனஞ்செலுத்தப்பட்டது. சட்ட சபையில் உறுப்பாண்மை இனப் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைந்ததாகச் சிங்களவருக்கும் தமிழருக்குமிடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விகிதாசாரத்தைக் கொண்டிருந்தது. காலப்போக்கில் இது மாற்றப்பட்டதைத் தொடர்ந்து 1924இற்கும் 1931இற்குமிடையில் சிங்களவருக்கும் தமிழருக்குமிடையிலான விகிதாசாரம் 2 : 1 என்றாகியது. சட்ட சபையில் 16 சிங்கள உறுப்பினர்களுக்கு எட்டுத் தமிழர் இருந்தனர். மேலும் சட்ட சபையில் பிரதிநிதித்துவம், தனியொரு சமூகம் எதுவும் கூட்டாக ஏனைய எல்லாச் சமூகங்களையும் வாக்களித்து வெல்லக்கூடிய நிலையில் இருத்தலாகாதென்ற டெவொன்சயர் சூத்திரத்துக்கு உட்பட்டதாயிருந்தது.

டொனமூர் அரசியலமைப்பு, அதனை ஆக்கியவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக, பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் தேசிய சிந்தனையை ஊக்குவிக்குமென்றும் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவம் இன ரீதியான சிந்தனையை ஊக்குவிக்குமென்றும், வெளிப்படுத்தியது. பெரிதும் வியக்கத்தக்கதாக ஆளுநர் அன்ட்று கல்டெகொட் பிரபுவும் சோல்பரி ஆணையாளரும் காலனித்துவ அலுவலகத்தினரும் அவ்வாறே எண்ணினர். பல்லினக் குடியேற்ற நாடுகளிலிருந்து கைக்கொள்ளப்பட்ட டெவொன்சயர் சூத்திரம் விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் சேர்த்துக் கைவிடப்பட்டது. எனினும் 1948இல் சுதந்திரம் வழங்கப்பட்டபோது ஆங்கிலேய அரசாங்கம் அரசியலமைப்பிலுள்ள பாகுபாடின்மை வாசகக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும்படி சிங்களவரை மட்டும் கொண்ட அமைச்சர்களின் சபையை உண்மையில் தூண்டியது. சோல்பரி அரசியலமைப்பின் 29ஆம் உறுப்புரையின்படி சமாதானம், பாதுகாப்பு, நல்ல ஆட்சிமுறை என்பவற்றுக்கான சட்டங்களை ஆக்குவதற்குப் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டபோதிலும், ஏனைய சமூகங்களுக்குச் சமமான முறையில் பிரயோகிக்கப்படாமல் ஏதேனும் ஒரு சமூகத்துக்குச் சாதகமான அல்லது பாதகமான பாகுபாடான சட்டங்களை ஆக்குவதற்கான ஆற்றல் பாராளுமன்றத்துக்குக் குறிப்பாக மறுக்கப்பட்டது. அரசியலமைப்பிலுள்ள இந்த ஏற்பாட்டுடன் சேர்த்து, அன்று வாதத்துக்கிடமின்றிச் சிங்களவரின் தன்னிகரற்ற தலைவராயிருந்த அதிகௌரவ டி.எஸ்.சேனாநாயக்க அவர்களால், அரசியலமைப்பைச் செயற்படுத்துவதில் சிங்களவருடன் தமிழர் இணைந்துகொள்வதன் மூலம் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாதென்ற திட்டவட்டமான உத்தரவாதமும் பாராளுமன்றச் சபையில் வைத்து வழங்கப்பட்டது (ஹன்சாட் 8 நவம்பர் 1945: பத்தி 6931).

உறுப்புரை 29 பாராளுமன்றத்தையன்றி அரசியலமைப்பையே இறைமையுடையதாக்குகின்ற வலிமையுடைய ஒரு வாசகமெனப் பிரிவி கவுன்சில் தீர்ப்பளித்துள்ளது. இந்த ஏற்பாடு, அதிகௌரவ டி.எஸ்.சேனாநாயக்கவின் உத்தரவாதத்துடன் சேர்ந்து, இலங்கை டொமினியனின் அரசியற் சமுதாயத்தை நிபந்தனைக்குட்பட்ட ஓர் அரசியற் சமுதாயமாக்குகின்றது. தெளிவாக இந்நிபந்தனை, தமிழருக்கெதிராகப் பாகுபாடு காட்டுவதற்கு இனப்பெரும்பான்மை அதன் எண்ணிக்கைப் பலத்தைப் பயன்படுத்தாதென்ற உத்தரவாதமாகும். எனினும் இந்நிபந்தனை திரும்பத் திரும்ப மீறப்பட்டுள்ளமையும் கடுமையான பாகுபாடான நடவடிக்கைகள் உண்மையில் இடம்பெற்றுள்ளமையும் தமிழர் அந்த அரசியற் சமுதாயத்திலிருந்து விருப்பப்படி வெளியேறுவதற்கான உரிமையை அவர்களுக்கு அளிக்கின்றன. தமிழரின் ஆதரவற்றதும் அவர்களின் பிரதிநிதிகள் அதிலிருந்து வெளிநடப்புச் செய்ததுமான ஓர் அரசியலமைப்புச் சபைதான் 1972இன் தொல்குடிசார்ந்த குடியரசு அரசியலமைப்பை ஆக்கியது. அது கடந்த காலத்துடன் சட்டத் தொடர்ச்சியைக் கொண்டிராத ஓர் அரசியலமைப்பு. தமிழ்த் தேசிய இனம் அதனை ஆக்குவதற்கு ஒப்புதலளிக்கவில்லை.

எனவே அங்கு ஓர் பிளவு இருந்தது. இரு வேறுபட்ட தேசிய இனங்களென்பதை மீண்டுமொரு தடவை தெளிவாகக் காட்டுகின்றதாகக் குடியிருந்தவர்களின் இறைமைகள் தோன்றின. வடக்கையும் கிழக்கையும் உள்ளடக்குவதற்கான இலங்கையின் கோரிக்கையிலுள்ள சட்ட மற்றும் அரசியலமைப்புக் குறைபாடுகள் இப்போது எளிதில் உணரத்தக்கனவாயிருக்கும். இலங்கை வடக்கிலும் கிழக்கிலுமுள்ள மக்களின் அதிகாரமின்றி அமைக்கப்பட்டதனால் அது ஆங்கிலேய டொமீனியனின் முன்னைய அரசியற் சமுதாயங்களின் பின்னுரித்தாளியல்ல. அரசியல் அதிகாரம் இந்நாட்டு மக்களுக்குக் கைமாற்றப்பட்டபோதிலும் அவர்களின் இறைமையின் கருவூலமாக ஆங்கிலேய அரசியே தொடர்ந்துமிருந்தார்). அரசியலமைப்புச் சபை அங்கீகரித்ததைத் தொடர்ந்து 1972 மே 22ஆந் தேதியன்று அமுலுக்கு வந்த குடியரசு அரசியலமைப்பு இச்சட்டத் தொடர்ச்சியை அறுத்துக்கொண்டதுடன், இந்த இறைமையின் கருவூலம் மக்கள்தாமேயென்று பிரகடனப்படுத்தியதன் மூலம் மக்களின் இறைமைக்கும் உத்தரவாதமளித்தது.

ஆனால், தமிழ்த் தேசிய இனத்தின் பிரதிநிதிகள் இந்த அரசியலமைப்புக்குத் தமது ஒப்புதலைக் கொடுக்க மறுத்ததுடன், அதனை நிராகரித்தும் விட்டனர். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 19 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பேர் 1972 மே 22ஆந் தேதிய முடிவுக்கட்டமான இக்கூட்டத்தைப் பகிஸ்கரித்து அதனை நிராகரித்தனர். எனவே இந்த அரசியலமைப்புக்குச் சட்டத் தொடர்ச்சியோ தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்புதலோ இல்லையென்பது தெளிவாகின்றது. முன்னர் கூறியவாறு தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையும் அதன் அரசுரிமையும் முதலில் 1619இல் கைப்பற்றல் உரிமையின் மூலம் பறிக்கப்பட்டன. ஆனால் அதன் இறைமையைச் சட்டத் தொடர்ச்சியின் மூலமாகவோ ஒப்புதல் மூலமாகவோ அல்லது கைப்பற்றல் உரிமையின் மூலமாகவோ பறித்துக்கொண்டது சிங்களத் தேசிய இனம்.

தமிழ்த் தேசிய இனம் சர்வதேசச் சட்டத் தரங்களின்படி, சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில், அதன் இறைமையையும் அரசுரிமையையும் மீளத் தாபிப்பதற்கான உரிமையை உண்மையில் கொண்டுள்ளதெனத் தமிழ்த் தேசியவாதிகள் வாதிடுகின்றனர். சிங்களத் தேசிய இனம் அதன் ஆட்சியைத் தமிழ்த் தேசிய இனத்தின்மீது திணிக்க முடியாதென்றும் ஈழத்தைச் சிங்கள அரசின் ஒரு குடியேற்ற நாடாக மாற்ற முடியாதென்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டலாம். தற்போதைய அரசியலமைப்பு சிங்களத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அந்நோக்கத்துக்காக, அத்தேசிய இனத்தினால் வழங்கப்பட்ட ஆணையின்பேரில் வரைவு செய்யப்பட்டதொன்றாகும். ஒரு தனிவேறான தமிழ் அரசை (ஈழம்) தாபிப்பதற்கான ஆணையைக் கோரி 1977இன் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) வடக்கிலும் கிழக்கிலுமுள்ள 26 ஆசனங்களில் 18ஐ வென்றது. தமிழ் மொழியையே பேசுகின்ற முஸ்லிம்கள் ஐ.தே.கட்சியை (UNP) ஆதரித்து 6 ஆசனங்களை வென்றனர். ஆனால் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழர் ஈழ அரசின் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஆணையை த.ஐ.வி. முன்னணிக்கு வழங்கினர்.

தமிழ்த் தேசியவாதிகள் இவ்வாதத்தை மேலும் முன்னெடுத்து இலங்கை அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்மீது சட்டப்படியான உரிமை இல்லாமையின்பேரில் வருந்துகின்றதென்றும் நடைபெறுகின்ற யுத்தம் சட்டப்படியான நிலை பற்றிய நெருக்கடிகளில் ஒன்றென்றும் கூறத் துணியலாம். இதன் தொடர் முடிவுதான் சர்வதேச சமூகத்தின் சில பிரிவினரால் இலங்கையின் ஐக்கியம் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு பற்றிய வற்புறுத்தல், ஏற்றுக்கொள்ளத் தகாததும் தமிழ்த் தேசிய இனத்தின் சட்டப்படியான அபிலாசைகளுக்கு எதிராகச் செயற்படுகின்றதென்பதுமாகும்.


source:tamilspy
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP