சமீபத்திய பதிவுகள்

சீனா... விழுமா? எழுமா?

>> Tuesday, February 2, 2010

 

 

ன்று உலகம் முழுக்க உள்ள பொருளாதார நிபுணர்கள் ஒரே ஒரு கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது, சீனா விழுமா, எழுமா என்பதே!

சீனாவின் பொருளாதாரம் அசைக்க முடியாத அளவுக்கு பலமாக இருக்கிறது என்கின்றனர் பலர். இன்னும் சிலர், இதில் கொஞ்சம்கூட உண்மை இல்லை. சீன பலூனை அளவுக்கு அதிகமாகவே ஊதிவிட்டார்கள். இன்னும் ஊதினால் அது வெடிக்கத்தான் செய்யும் என்று சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் சீனாவின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்கிற கேள்விக்கு யாராலும் அவ்வளவு எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது!

ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியரும் பொருளாதார வரலாற்று ஆய்வாளருமான நியல் ஃபெர்குசன் (Niall Ferguson) எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அண்மையில் ஒரு பேட்டி கொடுத்தார். அவர் சொன்ன விஷயத்தை ஒரே வரியில் சுருக்கிச் சொன்னால், நீண்டகால அடிப்படையில் சீனாவைவிட இந்தியாதான் நன்றாக இருக்கும். இதைப் படிக்கும் நமக்கு முயல், ஆமை கதைதான் நினைவுக்கு வரும். வேகமாக ஓடிய முயல் (சீனா) களைத்துப் போய் நிற்க, மெதுவாக வந்த ஆமை (இந்தியா) கடைசியில் ஜெயித்த கதையை நினைத்து நாம் மகிழ்ச்சி அடையலாம்.

ஆனால் நிஜத்தில் சீனாவுக்கும் நமக்கும் நடக்கும் போட்டி முயல், ஆமை மாதிரி அவ்வளவு எளிதான விஷயமில்லை. காரணம், சர்வாதிகார முதலாளித்துவ நாடான சீனாவின் எழுச்சி பற்றியோ அல்லது பல இனங்களும் மதங்களும் மொழிகள் அடிப்படையில் அமைந்த மாநிலங்களும் ஒன்று சேர்ந்து உருவான இந்தியாவின் எழுச்சி பற்றியோ விளக்குவதற்கான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை. 

சீனாவைப் பொறுத்தவரை, ஏற்றுமதியில் காட்டும் அக்கறையைக் குறைத்துக் கொண்டு, உள்நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் அதிக அக்கறை காட்டலாம். சீனா அப்படிச் செய்யும் பட்சத்தில் கடந்த 25 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி இனிவரும் ஆண்டுகளில் அடையாது என்றாலும், இப்படிச் செய்வதுதான் அந்த நாட்டின் எதிர்காலப் பொருளாதாரத்துக்கு நல்லது.

இதற்காக சீனாவில் செய்யப்படும் முதலீடு நல்ல லாபம் கொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதற்குப் பதில் சீன மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களை விற்கும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த கம்பெனி களில் முதலீடு செய்தால் இன்னும் அதிக லாபம் கிடைக்கும்.

சீனாவின் வளர்ச்சியை கவனமாகப் பார்த்து வருகிறவர் கள் ஒரு விஷயத்தைப் பற்றி நிறையவே கவலைப்படுகிறார்கள். கடந்த ஆண்டு அந்த நாட்டு வங்கிகள் அளவுக்கதிகமாகவே கடனை அள்ளி வழங்கியது. இந்தக் கடன் பணம் மீண்டும் திரும்ப வருமா என்பது கவலைக்குரிய பிரச்னையாக இப்போது மாறியிருக்கிறது. ஆனால் சீனப் பொருளாதாரம் மிகப் பெரியது. அந்த நாட்டு வங்கிகள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் அதிகம். எனவே கொடுத்த கடன் திரும்ப வருமா, வராதா என்பது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்கின்றனர் சிலர்.

தவிர, உற்பத்தியைப் பெருக்கவே சீன வங்கிகள் கடன் வழங்கி இருக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத வேலைக்கு ஒரு பைசாகூட கடன் அளிக்கப்படவில்லை. எனவே, 1980-ல் ஜப்பான் பொருளாதாரம் சிதறியதைப் போல சீனப் பொருளாதாரமும் சிதறும் என்று சொல்லவே முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம், வங்கிக் கடன் பிரச்னை பூதாகாரமாக வெடிக்கலாம் என்கிற தகவல் தெரிந்தவுடன் பொருளாதாரத்தை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பை சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கியிடம் கொடுத்துவிட்டது அந்த நாட்டு அரசாங்கம். கடந்த ஆண்டில் அரசியல் காரணங்களுக்காக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்த சீனா, அடுத்து வரும் சில ஆண்டுகளில் பொருளாதார நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பல நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது.

இதுநாள் வரை சீன அரசாங்கம் தன்னுடைய பணமான யுவானின் மதிப்பை அதிகரிக்க விடாமல் வைத்திருந்தது உண்மைதான். அதன் மூலம் ஏற்றுமதியைப் பெருக்கி, நல்ல வளர்ச்சி காணவும் செய்தது. உலக அளவில் சீனா மட்டுமே இப்படிச் செய்தது என்று சொல்ல முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கெனவே இப்படிச் செய்தன. அதைப் பின்பற்றித்தான் சீனாவும் செய்தது என்றாலும், அதைச் சரி என்று சொல்லிவிட முடியாது.

சீனாவின் உள்நாட்டுத் தேவை சீராகப் பெருகி வருகிறது என்கிற உண்மை அதற்கே தெரியும். இனிவரும் ஆண்டுகளில் உள்நாட்டுத் தேவையைப் பெருக்க சீன அரசாங்கம் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், அது வளரவே செய்யும். அந்த சமயத்தில் அதன் ஏற்றுமதியும் குறையும். தவிர, சீனாவின் தயாரிப்புகளை இறக்குமதி செய்துவந்த வளர்ந்த நாடுகள் இன்று பலவீனமான நிலையில்தான் இருக்கின்றன. எனவே சீனாவின் ஏற்றுமதி அடுத்துவரும் காலங்களில் கணிசமாகக் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை.

பலமான உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் ஆண்டொன்றுக்கு 7 முதல் 8 சதவிகித வளர்ச்சி போன்றவை சீனா யுவானின் மதிப்பை அதிகரிக்க சுலபமாக இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இப்போது பேசப்படும் பல பிரச்னைகள் காணாமலே போய்விடும்.

இப்போதைக்கு மிக முக்கியமான கேள்வி, சீனாவில் முதலீடு செய்யப்படும் பணமோ, சீனப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பணமோ அதிக லாபம் சம்பாதித்துக் கொடுக்குமா என்பதே. சீனா விரைவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும். அதற்கடுத்து இருபது, முப்பது வருடங்களில் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறவும் செய்யலாம். என்றாலும் சீனாவில் பணத்தை முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஏன்?

இங்கேதான் சீனாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் அம்சங்கள் இருக்கின்றன. சீனாவில் நேர்மையாக நடந்துகொள்ளும் தனியார் கம்பெனிகளின் எண்ணிக்கை குறைவு. அளவுக்கதிகமான கட்டுப்பாடு, அதனால் ஏற்படும் பயத்தின் காரணமாக சர்வாதிகாரமாகச் செயல்படவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். தனிமனிதன், அமைப்பு, அரசாங்கம் என எல்லா இடங்களிலும் இதைத் தெளிவாகப் பார்க்கமுடியும். பயத்தாலும் பாதுகாப்பின்மை என்கிற உணர்வாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகக்கூட அளவுக்கதிகமாக அவர்கள் கவலைப்படுகிறார்கள். அதனால்தான் நிதித் துறைகளில்கூட அரசாங்கத்தின் கட்டுப்பாடு மற்றும் தலையீடு அதிகமாகவே இருக்கிறது. அப்படி இருக்கும்போது சிறிய தவறு நடந்தாலும் அது மூடி மறைக்கப்படுகிறது. பிற்பாடு அது பெரிதாகி அதற்கொரு முடிவு காணவேண்டும் என்கிறபோது பூதாகாரமாக வளர்ந்துவிடுகிறது.

சீனப் பொருளாதாரத்தையும் அரசியலையும் சமூகத்தையும் அழிக்கிற மாதிரியான ஒரு வீழ்ச்சி வருமா, இல்லையா என்பதை பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. இப்போது நடக்கும் விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது சீனாவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சி எதுவும் வராது என்றே தோன்றுகிறது. இரண்டு உலகப் போர்களைச் சந்தித்தபிறகும் அமெரிக்கா உலகின் நம்பர் ஒன் பொருளாதாரமாக இருப்பது

போல, ஏதாவது ஒரு வீழ்ச்சி வந்தாலும் சீனா நிலைகுலையாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

எதிர்காலத்தில் சீனா எப்படி இருக்கும் என்பது அந்த நாட்டுத் தலைவர்கள் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்தே இருக்கும். தேவையில்லாத பயம் தேவையில்லாத கட்டுபாட்டையே உருவாக்கும். அது பல தவறுகளைச் செய்யவே உதவும்.

எனவே, உலகின் 'சூப்பர்பவர்' என்கிற போட்டியில் சீனா தோற்றுப் போகவும் வாய்ப்புண்டு. 'எதைப் பெறவேண்டும் என்பதில் தெளிவாக இரு. இல்லாவிட்டால் உன்னால் எதையும் பெறமுடியாது' என்பது சீனப் பழமொழி. எதைப் பெறவேண்டும் என்பதை சீனாதான் முடிவு செய்யவேண்டும்



source:vikatan


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP