சமீபத்திய பதிவுகள்

சூறையாடும் சிங்களம்: துணைபோகும் இராணுவம்

>> Wednesday, February 3, 2010

 

மீள் குடியேற்றத்தின் பின் வன்னி மக்கள் சுதந்திரமாக வாழப் போகிறார்களா? என்றால் அங்கேதான் சிங்களம் தனது சாதுரியமான காய்நகர்த்தல்களை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது வன்னி மக்களை முடிந்தளவு படிப்படியாக மீள்குடியேற்றுவது, இதனை நிறைவேற்றி உலகநாடுகளின் கண்டனங்கள், அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. மக்கள் மீள்குடியமர்ந்தவுடன் களை எடுப்பது. அதாவது இப்போது முகாங்களில் உள்ளவர்கள் காணாமல் போனால் அல்லது அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் வெளிநாடுகளின் ஊடகங்களின் கண்ணுக்கு பட்டுவிடும். எனவே புலிகள் ஆதரவாளர்களை குடியமர்த்திவிட்டு பின்னர் களை எடுக்க முயல்கிறது இலங்கை அரசு. 

மேலும் கடந்த மாதங்களில் மல்லாவி, கனகராயன்குளம், துணுக்காய் போன்ற கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் வீட்டு கதவுகள் யன்னல்கள் அதைவிட கொடுமையாக கழிப்பறையில் உள்ள மாபிள்கள் கூட களவாடப்பட்டிருக்கிறதாம். மேலும் தங்கள் கண்ணெதிரிலேயே தங்களின் உறவினர், நண்பர்கள், வீடுகளை உடைத்து யன்னல், கதவு, ஓடுகள் போன்றவற்றை ஏற்றிச் செல்கிறார்களாம் சிங்களவர்கள். வன்னித் தெருக்களெங்கும் சிங்களவர்களின் வாகனங்கள் சாமான்களை ஏற்றி நெடுங்கேணியூடாக, டொலர்பாம் மற்றும் கென்பாம் போன்ற சிங்கள கிராமங்களுக்கு கொண்டு செல்கிறதாம்.

வன்னியில் சமாதான காலப்பகுதிகளில் இது ஒரு நிரந்தர சமாதானம் என்று நம்பி மக்கள் பல லட்சம் பெறுமதியான வீடுகளையும், கடைகளையும் கட்டியெழுப்பினார்கள். மேலும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும் தொகை பணத்தை வீடுகள் கட்டியெழுப்ப அனுப்பியிருந்தார்கள். பொருளாதார வீழ்ச்சிகளால் மக்கள் அதிகவிலை கொடுத்தே தங்களின் வீடுகளை கட்டியிருந்தார்கள். ஒன்றரை கோடி இரண்டு கோடிக்குமேல் செலவு செய்துகூட வீடுகளை பலர் கட்டினார்கள். ஏறக்குறைய சமாதானகாலத்தில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கடைகள் கட்டப்பட்டன, சராசரியாக ஒரு வீட்டுக்கு ஏழு இலட்சம் ரூபா செலவு எனக் கணக்குப் போட்டாலும் சுமார் இருபத்தொரு பில்லியன் கோடிக்குமேல் வீட்டுக்குரிய சீமெந்து, கம்பி, ஓடு போன்ற மூலதனத்தை மக்கள் அரச கம்பனிகளுக்கு வழங்கினார்கள். இதனால் வெளிநாடுகளில் இருந்த தமிழ் மக்களின் பணம் அரச பொருளாதாரத்தை நிமிர்த்தியதோடு இராணுவ கட்டமைப்புக்கும் வன்னி மக்களின் அழிவிற்கும் பெரும் துணையாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம். எங்களின் விரலால் எங்கள் கண்ணை குத்திய கதையாக இது அமைந்ததோ என்ற அச்சமும் நிலவுகிறது.இரண்டாம் தடவையும் காக்கையை ஏமாற்றிய நரியார் போல புலம்பெயர் மக்களின் பணத்தை எப்படி மீண்டும் பிடுங்கலாம் என்றும், மீள்குடியேற்றத்துக்கென வெளிநாட்டில் உள்ளவர்கள் கொடுக்கும் பணத்தை வீடுகட்டுவதற்காக தங்களிடம் தானே மீண்டும் தருவார்கள் என்று கணக்கு போட்டும், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு தாங்கள் எவ்வளவு கொடுக்கிறோம் என்று வெளிநாடுகளுக்கு காட்டும் ஒரு முகத்தை வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் சொத்தை சிங்களவர்களை சூறையாட விடுவது மூலம் அவர்களிடத்தே ஒரு நல்லபெயரை பெற்று காலப்போக்கில் ஒரு இனகலவரத்தை வன்னி மக்களுக்கு எதிராக திருப்பிவிட ஒரு கொம்பு சீவும் நிலையையும் அரசு திட்டமிட்டு வருகிறது.

மேலும் புலிகளின் காலப்பகுதிகளில் அரச காரியாலயங்களிலோ தனியார் நிறுவனங்களிலோ சிங்களவர்கள் இருந்திருக்கவில்லை. நூறு வீதமும் தமிழர்கள்தான் கடைமையாற்றி வந்தார்கள். 1995 ம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து புலிகள் வன்னியை விட்டு செல்லும் வரை யாழில் கூட தமிழர்கள் தான் கடைமையாற்றி வந்தார்கள். ஆனால் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக காணும் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கம் வரும் 2010 மேமாத பாராளுமன்ற தேர்தல்களின் பின் படிப்படியாக கூட்டப்படும். அதாவது மகிந்தவின் ஆட்சி காலமான எதிர்வரும் ஐந்து வருடங்களில் வன்னி யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இந்த மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கும்.

அதன் அடிப்படையில் மாவட்ட அரச அதிபர்களோ கச்சேரி உயர் அதிகாரிகளோ சிங்களவர்களாக வரும்போதும், பாடசாலைகளிலும் சிங்கள ஆசிரியர்கள் கடைமையாற்றுவார்கள். இப்படி இவர்களைக் கலக்க விட இரண்டு காரணங்கள் இருகின்றன ஒன்று சகல காரியாலயங்களிலும் சிங்களவர் இருந்தால் புலிகளின் வருங்கால நடமாட்டங்களையும், ஊடுருவல்களையும் தவிர்கலாம் என்பது ஒன்று, மறு புறம் அரச உயர் அதிகாரிகளுடன் கதைப்பதற்கும் அவர்களிடம் அலுவல்கள் பெறவரும் சிங்களவர்களிடம் உரையாடுவதற்கும் சிங்களம் கற்பது அவசியமாகி விடும், அதனால் பாடசாலைகளிலும் சிங்கள பாடத்திட்டங்களும் ஏன் சிங்களபாடம் ஒரு கட்டாய பாடமாக கூட வர வாய்ப்புள்ளது. முப்பது வருடமாக தமிழர்களுக்கு படை பலம் இருந்ததால் இந்த கனவு சிங்கள அரசுக்கு சிம்ம சொற்பனமாகவே இருந்தது.

மேலும் வன்னியில் கணிசமான பலர் வெளிநாடுகளில் தங்கிவிட்டார்கள், இடம் பெயர்ந்த மக்கள் பலர் இந்தியா சென்றும் பலர் குடும்பமாக கொல்லப்பட்டும் உள்ளனர். இவர்களின் வீடுகள் நிலங்களில் இனி சிங்களவர் குடியமர்த்தபடுவார்கள், வன்னியில் கடமை புரியும் இராணுவத்தினர் குடும்பங்களும் உறவினரும் கூட வருவார்கள். இவர்களின் வருகையை ஒட்டித்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் புத்தவிகாரைகளும் இராணுவத்தினரின் நினைவுச்சின்னங்களும் நிறுவப்பட்டுள்ளன என்பதை நீங்கள் ஓரளவு அறிவீர்கள். இவை ஒரு வெள்ளோட்டம்தான். ஆனால் எங்களால் என்ன செய்யமுடிந்தது? இரண்டு எதிர்க்குரல் விட்டார்கள், அதோடு சரி. தமிழ்மக்கள் தான் குடியமர்த்தப்படவில்லை, ஆனால் சிங்கள மக்கள் வன்னியில் வாழத் தொடங்கிவிட்டார்கள் என்று எத்தனை பேர் அறிவார்கள்?

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற கரையோட மாவட்டங்களில் வாழும் பல இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் மீன்பிடியைத்தான் தங்களின் பிரதான தொழிலாக கொண்டிருகிறார்கள். இவர்களுக்கு இதைவிட்டால் வேறெந்த தொழிலும் தெரியாது. ஆனால் இப்போது நடப்பது என்ன? தமிழரை தாயகத்தில் இருந்து துரத்திவிட்டு தமிழீழக்கடலில், முல்லைத்தீவு கிழக்கு கடல்வழியாக நாயாறு, அளம்பில் பகுதிகளால் வரும் சிங்களவர் முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், பொக்கணை, மாத்தளன், சாலை பகுதிகளில் இரவுபகலாக மீன் பிடித்து செல்கிறார்கள். போதாதற்கு, இந்திய மீனவர்கள் ஒருபுறம், தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். ஆனால் இதன் சொந்தக்காரர்கள் வதைமுகாமிலும் முள்வேலி முகாமிலும் ஒரு நேர சோற்றுக்காக கையேந்தி நிற்கிறார்கள்.

மீள் குடியேற்றத்தின் பின் சாத்தியமா என்றால் அதுவும் எட்டாக் கனிதான். ஏனென்றால் இந்திய சினிமாவில் வரும் தாதாக்கள் போல் சிங்களவர் நடந்துகொள்வார்கள். அடிமைகளாக அவர்களின் சட்டத்துக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டுத்தான் நாம் நடக்கவேண்டும், எதிர்த்துக் கேட்டால் அவர்களுக்கு துணையாக இராணுவத்தினர் வருவார்கள், அவர்களையும் எதிர்த்தால் எதிர்ப்பவர்கள் இரவில் காணாமல் போவார்கள். எனவே அழிந்துபோன குடும்பங்கள் இனியும் அழிந்துபோக பயப்படுவார்கள், ஏனென்றால் பலர் குடும்பங்களில் ஆண்களே இல்லை. இது ஒரு புறம் இருக்க மன்னாரில் எண்ணெய் கிணறு என்னும் பெயரில், மன்னார் கடல் அந்நியர்களுக்கு விலைபேசப்படுகிறது. இதனால் தமிழரின் காணிகளும் கடலும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

1983 - 1984 வரையான காலப்பகுதிகளில் திருகோணமலையை குறிவைத்து இனக் கலவரங்கள் மூலம் பல தமிழர்களைகொன்றும் துரத்திவிட்டும் அவர்களின் பாரம்பரிய நிலங்களையும், உடமைகளையும் சிங்களவர் பிடித்தது மல்லாமல் இராணுவத்தின் துணையுடன் திருகோணமலையில் இருந்து புல்மோட்டை வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, மணலாற்றில் உள்ள தற்போது டொலர்பாம், கென்பாம் என்று அழைக்கப்படும் வவுனியாவின் வடகிழக்கு பகுதியையும் பிடித்தார்கள். இதனால் தமிழர் தாயகத்தின் இதயபூமி பறிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் முல்லைத்தீவின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து அகதிகளாக வந்தார்கள். இதை குள்ள நரி ஜே ஆர் நடத்தி முடித்தார்.

இனி வரும் காலங்களில் பதவியா, டொலர்பாம், கென்பாம் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்கள காடையர்கள் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள நெடுங்கேணி, மதியமடு, மரதோடை, ஆனந்த புளியங்குளம், பழம்பாசி தண்டுவான் போன்ற முத்து முத்தாக நெல்விளையும் குளக்காணிகளை அதுவும் மூன்று போக காணிகளை தமிழர்களுக்கு விட்டு வைக்க மாட்டார்கள். இனக் கலவரங்களை தூண்டிவிட்டு மீண்டும் வன்னி மக்கள் மீது இன அழிப்பு படுகொலையை இந்த அரசோ அல்லது வரப்போகும் வேறு அரசோ செய்யத்தான் போகிறது என்பதில் சந்தேகமில்லை. எங்களின் இனம் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருக்கப்போகிறது. இவற்றிக்கு கடந்தகால வரலாறே சாட்சியுமாகும்.

தமது பிள்ளைகளையும் தங்களின் போராளிகளையும் பறிகொடுத்த மண்ணில் இன்று தமிழரைக் கொன்றழித்த இராணுவ சிப்பாய்களினது உருவச்சிலைகள் கட்டப்படுகின்றன. சந்திகள் மூலை முடுக்குகளெங்கும் இனி அவர்கள் தூபிகள் தான் இருக்கும். இதற்கு ஒருபடி மேலேபோய், தூபிகள் முன் நாம் சைக்கிளை விட்டு இறங்கி மரியாதை செய்துவிட்டுத்தான் போகவேணும் என்று சிங்களவன் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. இதைவிட இனியென்ன அடிமை வாழ்க்கையை நாம் அனுபவிப்பது? புத்திஜீவிகளும் தமிழின துரோகிகளும் இந்த தமிழ் மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? பதவி, பணம் என்னும் எலும்பை விட்டெறிந்தால் சாப்பிட்டுவிட்டு படுப்பார்கள். இல்லாவிட்டால் இந்தியாவிடமும், நோர்வேயிடமும்தான் முறையிடுவார்கள்.

மேலும் படையினரிடம் சரணடைந்த பல நூற்றுகணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகளுக்கு சிங்கள பிக்குமார்கள் மறுவாழ்வு என்றபெயரில் பௌத்தத்தையும், சிங்களத்தையும் போதித்து வருகின்றனர். மாலைவேளையில் தடுப்பு முகாம்களுக்குச் செல்லும் இந்த புத்தபிக்குகள் பல போதனைகளில் ஈடுபட்டுவருவதாக அறியப்படுகிறது. இனி என்னதான் நடந்தாலும் தமிழனுக்காகத் தட்டிகேட்க நாதியில்லை என்ற நிலைக்கு எங்கள் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இதில் இருந்து எப்படி மீள்வது என்பது போர் வடுக்களையும், போரின் கொடுமையையும் உணர்ந்த தமிழ் இளைஞர்களினதும், புலம் பெயர் தமிழர்களின் தாயக விடுதலைக்கான பங்களிப்பிலும்தான் உள்ளது. இன்னும் சில வருடங்களில் அழியப்போகும் எம் தமிழ் இனத்தை காப்பதும் எம் மொழியைக் காப்பதும் உணர்ச்சியுள்ள தமிழர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

புலத்தில் பங்களிப்பும், களத்தில் ஒரு புதிய போராட்டமும் அவசியம். வெறுமனே நாம் புலத்தில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதால் எமது விடுதலையை வென்றெடுக்கப் போவது இல்லை. வேற்றின மக்களுக்கு இலங்கையில் உள்ள நிலை தெரியவேண்டும். ஒரு புதுப் போராட்டம் வெடிக்கவேண்டும், அதனால் தமிழீழம் மலரவேண்டும்.

ஆக்கம்: தர்மி--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP