சமீபத்திய பதிவுகள்

நாடு கடந்த ஈழம்............ நடந்து முடிந்த தேர்தல்

>> Tuesday, May 11, 2010


 

மெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்திட வேட்பாளர்களை தேர்வு செய்ய முதற்கட்டமாக தமிழீழ செயற்குழு தேர்தல்களை நடத்தியது. நியூயார்க் மாநகரில் இரண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. நியூ ஹைட் பார்க்கில் உள்ள வைஷ்ணவ கோயிலிலும்,

ஸ்டேடன் ஐலண்டு எனும் தீவிலும் காலை 12 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மே 17, 18 தேதிகளில் இங்கிலாந்தில் கூடி, நாடு கடந்த ஈழ அரசுக்கான அரசியல் நிர்ணய சபையைத் தேர்வு செய்வார்கள்.

தேசிய அவைக்கு அமெரிக்காவில் இருந்து விசுவநாதன் ருத்ரகுமாரன் மற்றும் பென்சில்வேனியாவைச் சேர்ந்த மனநல நிபுணர் மருத்துவர் ஜெரார்ட் பிரான்சிஸ் ஆகியோர் போட்டியிட்டனர். நியூயார்க் மாநில உறுப்பினர் பதவிக்கு மருத்துவர் செல்லத்துரை தயாபரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம் என்ற வழக்கறிஞர் போட்டியிட்டனர். இந்த வேட்பாளரின் தந்தை ஜெயலிங்கமும், ருத்ரகுமாரனும் நீண்டகாலமாக புலிகள் இயக்கத்தில் இருந்து பிரபாகரனின் பேரன்பைப் பெற்றவர்கள்.

ஒரு ஜனநாயக நாட்டின் பொதுத் தேர்தலைப் போல மிகவும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் ருத்ரகுமாரன் தேர்தலை நடத்தினார். அமெரிக்க அரசாங்கத்தில் அவருக்குள்ள தொடர்புகளை வைத்து ராம்சே கிளார்க் என்கிற ஓய்வுபெற்ற அட்டார்னி-ஜெனரலை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமித்தார். இதில் உறுப்பினர்களாக முன்னாள் ஃபெட்னா தலைவர் (வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை) சிகாகோவைச் சேர்ந்த டாக்டர் இளங்கோவன், பேராசிரியை ஜூடித் லின்ச், பத்திரிகையாளர் பிரேம் ஷான், முன்னாள் யாழ் மாநகர மேயர் நடராசாவின் மனைவி இந்திராணி போன்றோர் உள்ளனர்.

வாக்காளர்கள் ஈழத் தமிழர்களே... ஈழம் மலர உறுதி எடுத்துக்கொண்ட பல இந்திய தமிழர்களும் வாக்களித்தனர். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிம அட்டை, டிராவல் டாகு மெண்ட்களை சரிபார்த்து வாக்குச் சீட்டு தரப்பட்டது. கையில் மைக்கு பதிலாக ரப்பர் ஸ்டாம்ப் பேடில் ஆள்காட்டி விரல் பதித்து எடுக்கப்பட்டது. தமிழே தெரியாத இரு இளைஞர்கள் - பீட்டர் பிரசாத் (கயானா) மற்றும் பாஹீத் முகம்மது (பங்களாதேசம்) ஆகியோர் தேர்தல் கமிஷன் பார்வையாளர்களாக இருந்தனர். இவர்கள் முன்னிலையில் ஓட்டுப் பெட்டிகள் சரிபார்க்கப்பட்டு, வாக்குகள் சோதனை செய்யப்பட்டு அதன்பிறகே தேர்தல் தொடங்கியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராம்ஸே கிளர்க் அலுவலகத்துக்கு அனைத்து வாக்குச் சீட்டுகளும் கூரியரில் அன்று இரவே அனுப்பப்பட்டன. தனி ஈழத்துக்கான அரசாங்கம் அமைத்து, அங்கே தமிழ்த் தலைவர்களுக்குள் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தும் காலத்தைக் கனவில் தேக்கி... இன்றைய நிலையால் சோர்ந்துவிட்ட பல ஈழத் தமிழர்களுக்கு, இந்த நாடு கடந்த ஈழ அரசுக்கான தேர்தல் புத்துணர்ச்சி தந்த அனுபவம். இலங்கையில் இருந்தபோது தேர்தலையே சந்தித்திராத பலரும் வாக்களிக்க ஆர்வத்தோடு வந்தனர். ஆயினும், பதிவான மொத்த வாக்குகள் 600-ஐக்கூட தாண்டவில்லை.

வலைத்தளத்தின் வழியாகவேகூட மின் அஞ்சலில் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டதால், பலர் ஆன்லைனில் வாக்குகளைப் போட்டனர். பிரசாரமும் தீவிரமாகவே இருந்தது. ருத்ரகுமாரன் யார் பக்கமும் சேராமல் ஒதுங்கியிருந்தார். குயின்ஸ் பகுதியில் ஒரு விளையாட்டு அரங்கில் வாக்கு சேகரிக்கப்போன இரு கோஷ்டிகள் (நம்மூர் தேர்தல் பிரசாரங்கள் போல!) சூடாக பதிலடி கொடுத்து மோதிக்கொண்டன. தயாபரன் கோஷ்டியினர், ''ஜெயப்பிரகாஷ§க்கு தமிழே தெரியாது; ஈழப் போராட்டம் பற்றிய விவரங்களும் தெரியாது. அவர் குழந்தைப் பருவத்திலிருந்தே அமெரிக்காவில் வசிக்கிறவர். அதேபோல்... ஜெயலிங்கம் பெயரை வைத்து, அவர் மகன் வாக்குகளைப் பெற நினைக்கிறார். மேலும், அவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக இலங்கை அரசு தீட்டிவரும் சதித் திட்டத்துக்கு இசைகிறார்கள். தமிழீழம் இல்லாவிடில் வடக்கு-கிழக்கு இணைந்த தனி மாநிலமே எங்கள் விருப்பம். சின்னப் பையன்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியும்?'' என்று பொருமித் தள்ளிவிட்டார்கள்.

ஜெயப்பிரகாஷ் ஆதரவாளர்களோ, ''எங்களவர் இளைஞர், வழக்கறிஞர், புதிய சிந்தனை உள்ளவர். தேசியத் தலைவரின் கனவு அதிகளவு இளைஞர்கள் இயக்கத்துக்கு வரவேண்டும் என்பதே. தன் தந்தையுடன் இணைந்து ஈழப் போராட்டத்தைப்பற்றி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார். அவரை சாதாரணமாக எடை போட வேண்டாம்!'' என்று பதிலடி கொடுத்தார்கள்.

தேசிய அளவில் ருத்ராவுடன் மோதும் டாக்டர் ஜெரார்ட் பிரான்சிஸ், ருத்ராவைப் போல் அல்லாது ஒரு தீவிர ஈழப் போராளி. யூதப் பெண்மணியாக டாக்டர் எலைன் ஷாண்டருடன் இணைந்து கடந்த ஆண்டு,USTPAC - UNITED STATES TAMIL POLITICAL ACTION COMMITTEE என்பதைத் துவக்கி அமெரிக்க அரசியலை கலக்கி வருகிறவர். எந்தப் போராட்டம் என்றாலும் முதல் ஆளாக நிற்பவர். இந்தியாவை நட்பு நாடாகப் பார்க்காதவர். சர்வதேச அளவில் பிரபலம் ஆகாதவர். ருத்ரகுமாரன், அமெரிக்காவில் தமிழ் ஈழ ஆர்வலர்கள் மத்தியில் பிரபல முகம். ஆண்டன் பாலசிங்கத்தின் பிரதான சிஷ்யர். வழக்கறிஞர்.

நாடு கடந்த ஈழத்தின் தலைநகராகவே மாறிவரும் கனடாவிலோ, இந்தத் தேர்தல் பெரும் களேபரம் ஆகி இருக்கிறது. அங்கு ஈழத் தமிழர்கள் 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். கனடா தேர்தலில் ஜோ அந்தோணி, எம்.கே.ஈழவேந்தன், தாரணி பிரபாகரன், பொன் பாலராஜன், எஸ்.திருச்செல்வம் ஆகியோர் டொரன்டோவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஒன்டாரியோவில் இருந்து ஈசன் குலசேகரம், வனிதா ராஜேந்திரன், சுரேஷ் ரத்னபாலன் ஆகியோர் வென்றனர். அங்குள்ள முக்கிய ஈழத் தமிழ்த் தலைவர் களான கனேடிய தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாலபிள்ளை மற்றும் நேரு குணரத்னம் ஆகிய இருவருமே நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைய ஆதரவு தந்ததால் அதிக பிரச்னைகள் இயக்க அளவில் ஏற்படவில்லை. இருப்பினும்... ரெகி, சேரமான் போன்ற போராளிகள் இந்தத் தேர்தலை விரும்பவில்லை.

எப்படியோ... வாஷிங்டன் வாழ் ஈழத் தமிழ்த் தலைவர் ஒருவர், ''அவசரமாக நடத்தப்பட்ட தேர்தல் என்பதால், வாக்காளர் பட்டியல் சரியாக எடுக்கப்படவில்லை. எந்தவொரு ஈழத்தமிழரும் வந்து வாக்களிக்கலாம் என்ற விதிமுறை சரியானதாகப் படவில்லை இதில், பல ஈழத் தமிழர்கள் ஆர்வமும் காட்டவில்லை. பிரசாரம் செய்ய போதிய நேரம் இல்லை! இதுபோன்ற குறைபாடுகள் இருந்தாலும், உண்மையாக ஜனநாயக வழித் தேர்தல் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தத் தேர்தல் ருத்ராவின் கரங்களை வலுப்படுத்தும்!'' என்றார்.

ஜூலை மாதம் கனக்டிகட் மாநிலம் வாட்டர்பரி நகரில் நடக்கவிருக்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் 23-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழீழத் தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் முயற்சிகளுக்கு இந்தியத் தமிழர்களின் ஆதரவை கோர இருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் - பாரதிராஜா, கவிஞர் தாமரை, பர்வீன் சுல்தானா, நடிகர் விக்ரம், திரிஷா ஆகியோரிடம் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துவைத்து அதை தமிழக மக்களிடம் கொண்டுசெல்ல உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30 வருடங்களாகத் தொடரும் இனப் படுகொலைக் கோர நிகழ்வுகளால் பரிதாப நிலைக்கு ஆளாகிப் போன ஈழத் தமிழர்கள் உலக அளவில் சுய உரிமை அரசு ஒன்றை நிறுவும் முயற்சியில் முதல் அடி எடுத்து வைத்துவிட்டார்கள். இப்போது இவர்கள் கவனமெல்லாம் - இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதில்தான்

source:vikatan

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP